திங்கள், அக்டோபர் 16, 2023

சக்தி லீலை 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 29
திங்கட்கிழமை

நவராத்திரி நாட்களில்
இரண்டாம் நாள்..

சக்தி லீலை 2


சக்தி லீலை என்று அம்பிகையை மட்டும் போற்றுவதை அவள் விரும்புவதில்லையாம்..

சிவசக்தி ஐக்ய ஸ்வரூபிணி - என்றழைக்கப்படுவதே அவளுக்கு இஷ்டமானதென்று அறியப்படுகின்றது.. 

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் விளங்குகின்ற இத்திருப்பெயர் அபிராமி அந்தாதியின் நூறாவது பாடலிலும் பயின்று வருவதையும் நினைவில் கொள்க..

ஈசனோடு இணைந்து அம்பிகை நிகழ்த்திய அருஞ்செயல்கள் பற்பல..

மகா வைத்யநாதன் என்று ஈசன் வரும் போது அம்பிகை தையல்நாயகி என தைல பாத்திரம் ஏந்தி வருகின்றாள்..

திருமாகாளத்தில்
சோமாசி மாறனார் யாகத்துக்கு எம்பிரான் சுடலையாளன் திருக்கோலத்தில் எழுந்தபோது - கள் குடத்தை தலையில் சுமந்து வந்தவளும் ராஜராஜேஸ்வரியாகிய அம்பிகையே..

அப்போது அவளது திருப்பெயர் பயஷாம்பிகை.. அச்சங்கள் அனைத்தையும் நீக்குபவள் என்று அர்த்தம்..

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..
- என்பது முதுமொழி..

அரிசியை உடைத்து எடுத்தால் நொய்..

மனிதரை நொய்ய வைத்து நோக அடித்தால் நோய்..

நோய்க்கு மற்றொரு பெயராக பிணி என்று சொல்லப்பட்டாலும் -

நம்முடைய பிறவியும் அதற்குக் காரணமான வினையுமே பிணி, நோய் - என்று தேவாரத்தில் பேசப்படுகின்றது..

இதன் பொருட்டாகவே நம்மை ஆறுதல் படுத்துதற்கு - பற்பல தலங்களில் இறைவனுக்கு - வைத்தியநாதன், மருந்தீசன் என்ற பெயர்கள் அமைந்தன..

நோவுளார் வாயுளான் ..  - என்பது ஞானசம்பந்தப் பெருமானின் அருள் வாக்கு..

நுண்ணியான் மிகப் பெரியான் நோவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான் நம் தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங் குடியான் செஞ்சடை மதியக்
கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே.. 1/61/7


புள்ளிருக்கு வேளூர் தலத்தில் இறைவன் வைத்தீஸ்வரன் அம்பிகை தையல்நாயகி..

தஞ்சை கீழவாசலில் பூமாலை வைத்தியநாதர் -  பாலாம்பிகை..

இக் கோயிலைத் தொட்டு - வைத்திய தொடர்புடன் இந்த வட்டாரத்தில் மேலும் ஐந்து கோயில்கள் திகழ்கின்றதாக சித்தர் வாக்கு.. 

அந்தக் கோயில்கள் கண்டறியப்பட்டுள்ளன

தஞ்சைக்கு அருகில் மாத்தூர் எனும் திருத் தலத்தில் மருந்தீசர் என்ற பெயர் இறைவனுக்கு..

அம்பிகை ஔஷத நாயகி என்று அருள்கின்றாள்..

கும்பகோணத்திற்கு அருகில் திருந்துதேவன்குடி எனும் கோயிலில் அம்பிகை அருமருந்து நாயகி எனத் திகழ்கின்றனள்.. 

திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீசர் என்பது ஈசனின் திருப்பெயர். அம்பிகை பெரியநாயகி..

திவ்ய திருப்பெயர்களுடன்
இன்னும் பற்பல தலங்கள் தமிழகம் எங்கும் .. 

இத் திருக்கோயில்களைப் பற்றி இனிவரும் நாட்களில் இயன்றவரை  காண்பதற்கு - அம்பிகையுடன் வந்து 
இறைவன் நின்றருள் புரிவானாக!..


ஓம் சக்தி ஓம் 

ஓம் சிவாய
திருச்சிற்றம்பலம்
***

7 கருத்துகள்:

  1. சக்தி தேவி துணையுடன்

    சிவபெருமான் கிருபை வேண்டும் - அவன்
    திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. மிக அருமை. நோயற்ற வாழ்வு தரும் சிவசக்தியை வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
  3. அம்மையும், அப்பனும் வந்து அருள்புரியவேண்டும்.
    மருந்தீசர், ஒளஷத நாயகி இருவரும் பிணிகளை போக்கி நலங்களை அருள வேண்டும். சம்பந்தர் தேவாரம் பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  4. 'சிவசக்தி ஐக்ய ஸ்வரூபிணி " கண்டுகொண்டோம்.அவள் பாதம் பணிந்து வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
  5. நவராத்திரி இரண்டாம் நாள் பதிவு அருமை. அந்த சக்தி எல்லோருக்கும் நல்ல ஆரோக்கியத்தைத் தந்திடட்டும்,

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நொய்/நோய் சிறப்பான விளக்கம். சமீபத்தில் தான் பல வருஷங்கள் கழிச்சுத் தையல் நாயகி தரிசம் கிடைச்சது. சிறப்பாகப் பதிவுகள் வித்தியாசமாக வருவது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..