வியாழன், ஆகஸ்ட் 31, 2023

சுந்தரத் தமிழ் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 14 
வியாழக்கிழமை


தேவாரத் திருப் பதிகங்களுக்குள் காட்டப்பட்டிருக்கும் 
இயற்கைக் காட்சிகள்  நம்மை மயக்குவன.. 

இப்படியெல்லாம் இந்த ஊர்கள் இருந்திருக்கின்றன  ஒரு காலத்தில்!.. - என்ற ஆதங்கமும் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியாது..

அவ்வப்போது
அவற்றைக் கண்டு தளத்தில் தருவதற்கு முயற்சிக்கின்றேன்..

தொகுப்பிற்குத் துணை :- 
பன்னிரு திருமுறை, தருமபுர ஆதீனம்..

இன்றைய பதிவில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் நமக்குக் காட்டுகின்ற இயற்கைக் காட்சி..


அங்குமிங்குமாக அலை பாய்ந்து கொண்டு வந்த - குரங்குக் கூட்டம் அந்தத் தோட்டத்தைக் கண்டது..  

அது வாழைத் தோட்டம்.. 

பசி மிகுத்திருந்த  வேளையில் 
வாழைத் தோட்டம் அமிர்தக் கடல் போலக் காட்சியளித்தது.. 

குரங்குகளின் அதிரஷ்டம்  அருகிருந்த  பலாத் தோப்பில் இருந்து கனிந்த பழங்களின் வாசம்..


வாழைத் தார்களையும் , பலாப் பழங்களையும் கண்ட குரங்குகளுக்கு அதற்கு மேல் அடக்க ஒடுக்கமாய் இருக்க முடியவில்லை.. ஒருசேரப் பாய்ந்தன - உண்டு களிப்பதற்கு..

தலைமைப் பொறுப்பில் இருந்த குரங்கு சொன்னது - " இப்படியான முயற்சி சரியல்ல நண்பர்களே.. ஒரு சிலர் சென்று கனிந்த பலாப் பழத்தை அங்கிருந்து கொண்டு வாருங்கள்.. இங்கே வாழைக் கனிகளைப் பறித்துக் கொள்ளலாம். காவல் இல்லை  என்றாலும் தோட்டங்களுக்கு சேதம் விளைத்தல் சரியில்லை!.. " -

' பசிக்கிற நேரத்தில இவன் வேற தொந்தரவு செஞ்சுக்கிட்டு.. ' - என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாலும் இளம் பெண் குரங்குகளை நோட்டமிட்டபடி   - பலாப்பழம் பறிப்பதற்குக் குதித்தோடின வாலிபக் குரங்குகள்..

அடுத்த சில நொடிகளில் கூட்டத்துக்குத் தேவையானதை விடவும் அதிகமான பழங்கள் சேர்க்கப்பட்டு விட்டன.. 

கொண்டு வரப்பட்ட பலாப் பழங்களை
சாமார்த்தியக் குரங்குகள் ஒன்று சேர்ந்து பிய்த்தன.. உள்ளிருக்கும் சுளைகளைப் பிடுங்கி எடுத்து வெளியே பரப்பி வைத்தன.. 

ஆயிற்று.. இனி பங்கீடு தான்.. 

கிழடான இரு குரங்குகள் பலாச் சுளைகளையும் வாழைப் பழங்களையும் தக்க முறையில் பங்கிட்டு முன் வைத்தன.. 

ஆரம்பமாயிற்று பிரச்னை..

" எனக்கு வைத்த பங்கு  கொஞ்சமாக இருக்கின்றதே!.. " என்றது - வானரம் ஒன்று..

" எனக்கான பங்குதான் கொஞ்சம்.. " - என்றது மற்றொன்று.. 

" நீ பார்த்த வேலைக்கு இதுவே அதிகம்!.. கொடுத்ததைப்  பேசாமல் எடுத்துக் கொண்டு போ!.. " - என்றது வேறொன்று.. 

" அதை நீ சொல்லக்கூடாது!.. " -  மூலையில் இருந்த வானரம் கூச்சலிட்டது..

" இனி பொறுப்பதற்கு ஒன்றும் இல்லை.. எரிதழல் கொண்டு வாடா த்ம்பி!... " - என்று குதித்தது பிறிதொன்று..

அவ்வளவு தான் அங்கே மூண்டது கலவரம்.. கூச்சலும் குழப்பமும் எழுந்தன.. 

ஒரு வானரம் ஓடிப் போய் தாழை மடல்களைப் பிய்த்துக் கொண்டு வந்தது.. வாழை மட்டைகளுடன் ஓடி வந்தது வேறொன்று.. இன்னொன்று ஓடிப்போய் பலா மரத்தில் இருந்து குச்சிகளை ஒடித்துக் கொண்டு வந்தது..

அறிவு நிறைந்ததாய் தம்மை நினைத்துத் தருக்கிக் கொண்ட குரங்குகள் - தாழை மடல்களாலும் வாழை மட்டைகளாலும் பலாக் குச்சிகளாலும் தமக்குள் அடித்துக் கொண்டன.. 

அவ்விடத்தில்
கூச்சலும் குழப்பமும் மேலோங்கியிருந்தது

சச்சரவின் முடிவு என்ன என்பது தெரிய வில்லை.

இப்படியான கூத்து நிகழ்ந்த இடம் திருவாஞ்சியம்..

இந்த நிகழ்வினைக் கண்ணுற்ற சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் -

வாழைப் பழங்களுக்காக (அற்ப விஷயங்களுக்காக)  குரங்குகள் அடித்துக் கொள்ளும் வளம் மிக்க திருவாஞ்சியத்தில்  மாதொருபாகன் எழுந்தருளியிருக்கின்றான்.. அவனை அல்லாது வேறொரு கதி உண்டோ.. வேறொருவரை, இறைவன - என, யாம் நினைக்கக் கடவோமோ!.. 

-  என்று, மேலான பரம் பொருளைப் போற்றித் திருப்பதிகத்தினுள் பாடியருள்கின்றார்..

இன்றைய மக்களும் இப்படித்தான் இருக்கின்றார்கள் - என்பது அடிக்குறிப்பு..


வாழையின் கனி தானும்
மது விம்மு வருக்கையின் சுளையும்
கூழை வானரம் தம்மிற்
கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையந் தண்டாற்
செருச்செய்து தருக்கு வாஞ் சியத்துள்
ஏழை பாகனை அல்லால்
இறையெனக் கருதுதல் இலமே.. 7/76/9.
***

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

19 கருத்துகள்:

  1. உண்மை.  படித்துக் கொண்டே வரும்போதே இன்றைய ஜனநாயகம் போல இருந்தது எனக்கும்!

    குற்றாலக்குறவஞ்சியும் லேசாக நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குற்றாலக் குறவஞ்சி க்கு பல நூற்றாண்டுகள் முந்தையது தேவாரம்..

      தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்திற்கும் மகிழ்ச்சி.
      நன்றி ஸ்ரீராம்....

      நீக்கு
    2. அதனால் அது நினைவுக்கு வரக்கூடாதா என்ன!!

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் நமக்குக் காட்டுகின்ற இயற்கைக் காட்சி பாடலும், வானரங்களின் சீற்றத்தையும், சண்டைகளையும் நேரில் கண்டது போன்ற அதன் பொருள் விளக்கம் மிக அருமையாக உள்ளது. இவையனைத்தையும் ஒரு பொருட்டாக்காது திருவாஞ்சியத்திலுள்ள ஈசனை கண் நிறைய கண்டு அவனையே தஞ்சமென நினைத்து மனதார பணிந்து வணங்க வேண்டுமென அவர் சொல்வதை போல் நாமும் நற்கதியடைய வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// திருவாஞ்சியத்தில் உள்ள ஈசனை கண் நிறைய கண்டு அவனையே தஞ்சமென நினைத்து மனதார பணிந்து வணங்க வேண்டுமென அவர் சொல்வதை போல் நாமும் நற்கதியடைய வேண்டும். ///

      தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்திற்கும் மகிழ்ச்சி.
      நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. நெல்லை..
      தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்திற்கும் மகிழ்ச்சி.
      நன்றி ..

      நீக்கு
  4. பதில்கள்
    1. ஓம் சிவாய நம

      தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்திற்கும் மகிழ்ச்சி.
      நன்றி தனபாலன். ..

      நீக்கு
  5. குரங்கார்களின் பிரச்சனையை வாசிக்கும் போது இப்போதும் அப்படித்தானே இருக்கிறது என்று தோன்றியது.

    திருவாஞ்சியம் நிகழ்வும் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் பதிகமும் சிறப்பு. வேறு கதி உண்டோ!?

    கீதா

    பதிலளிநீக்கு
  6. எனக்கும் "வானரங்கள் கனி கொடுத்து" என்ற குற்றால குறவஞ்சி பாடல் நினைவுக்கு வந்தது.

    தேவார பாடல்களில் இயற்கை வளம், காட்சிகளாக விரியும் பாடல்கள் நிறைய இருக்கிறது. பகிர்ந்த பாடலும் , விளக்கமும் அருமை.
    இறைவனை தவிர கதி ஏது நமக்கு?
    திருச்செந்தூர் போய் வந்து விட்டீர்களா? நல்ல தரிசனம் ஆச்சா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. இறைவனைத் தவிர கதி ஏது நமக்கு?..

      தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்திற்கும் மகிழ்ச்சி.
      நன்றி ..

      நீக்கு
    2. முருகன் அருளால் பயணம் இனிமை..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. சுந்தரமூர்த்தி நாயனாரின் பதிகம் சிறப்பாக உள்ளது. இதைப் பற்றிக் கேட்டதில்லை. இங்கேயும் இப்போது இப்படித்தான் குரங்குகள் சுற்றுகின்றன. நல்லவேளையாக வலைக்கதவைத் திறப்பதில்லை. இல்லைனா சாப்பாட்டு மேஜையின் மேலே எடுக்கிறாப்போல் வைச்சிருக்கும் பழங்கள், வறுவல் வகைகளுக்கு ஆபத்து வந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் வீட்டிலும் இப்படித்தான்.

      சமையல் அறை ஜன்னலில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குரங்குகள் சில நாட்களில் வீட்டுக்குள் புகுந்து முந்திரிப் பருப்பு இருந்த பிளாஸ்டிக் டப்பாவை தூக்கிக் கொண்டு போய் விட்டன..

      தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்திற்கும் மகிழ்ச்சி.
      நன்றி அக்கா ..

      நீக்கு
  8. இயற்கை வளம் நிறைந்திருந்த திருவாஞ்சியம் ஈசனை கண்குளிரக் கண்டு வணங்கினோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்திற்கும் மகிழ்ச்சி.
      நன்றி ..

      நீக்கு
  9. சொல்லிய விதம் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு
      மகிழ்ச்சி.
      நன்றி ஜி ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..