வியாழன், ஆகஸ்ட் 24, 2023

அன்னபூரணி 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 7 
 வியாழக்கிழமை


காசித் திருநகரில் புனித  கங்கை ஆற்றின் கரையில் 
ஸ்ரீ விஸ்வநாத ஸ்வாமியுடன் அருளாட்சி செய்து கொண்டிருப்பவள் ஸ்ரீ விசாலாட்சி..

ஸ்ரீ விசாலாட்சி அம்மன் நான்கு திருக்கரங்களுடன் பொலிபவள்..
வலப்புற கீழ்கரத்தில் ருத்ராட்ச மாலையும் இடப்புற கீழ்கரத்தில் கங்கா தீர்த்தம் நிரம்பிய கமண்டலமும் திகழும்.. வலப்புற மேல்கரத்தில் தாமரையில் சிவலிங்கமும் இடப்புற மேல்கரத்தில் தாமரையில் கணபதியும் விளங்க நின்ற திருக்கோலத்தினள்..

இங்கே ஆன்மாக்கள் அனைத்தையும் தன் மடியில் கிடத்தி - வையத்தில் வாழ்ந்த களைப்பின் வாட்டம் தீரும்படிக்கு தனது முந்தானை கொண்டு ஸ்ரீ விசாலாட்சி விசிறி விடுகின்றாள் என்பது ஆன்றோர் வாக்கு..

சக்தி பீடங்கள் ஐம்பத்தொன்றில் இத்தலமும் ஒன்று..

தாட்சாயணியின்
கண்களும், காது வளையங்களும் இவ்விடத்தில்
விழுந்ததாக ஐதீகம்..


தேவியின் மூலத் திருமேனிக்கு என்ன நேர்ந்ததோ தெரியாது..

பற்பல இன்னல்களுக்குப் பிறகு - காசியில் விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே நாட்டுக்கோட்டை நகரத்தார் விலை கொடுத்து வாங்கிய இடத்தில் விசாலாட்சி அம்மனுக்குப் புதிதாக கோயில் எழுப்பிய ஆண்டு 1893.. 

விஜயதசமி அன்று அம்பிகை வேலேந்திய வண்ணம் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பானது..

இன்றளவும் இக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வாகத்தில் உள்ளது..


காசியின் இன்னொரு சிறப்பு  ஸ்ரீ அன்னபூரணி..

காசியில் கடும் பஞ்சம் நிலவிய ஏதோ ஒரு காலத்தில் ஆருயிர்களின் பசிப்பிணி தீர்ப்பதற்கு என்று எழுந்தருளியவள் அன்னபூரணி என்பது பொதுவான நம்பிக்கை..

திருக்கரத்தில் தங்கக் 
கிண்ணத்தைத்  தாங்கி இருக்கும் அன்னை கிண்ணத்திலுள்ள
பால் சோற்றை தங்கக் கரண்டியால்  எடுத்து அனைவருக்கும் அளிப்பதாக ஐதீகம்.. 

தங்கக் குடையின் கீழ் அறம் எனும் செங்கோல் செலுத்தும் அன்னை வலக் கரத்தில் தங்க அகப்பையும் இடக் கரத்தில் தங்கக் கிண்ணமும் கொண்டிருக்கின்றாள்..
நவரத்ன கிரீடம் இலங்க மார்பிலும் கழுத்திலும் நவரத்ன ஆபரணங்கள் ஒளி வீச - ஸ்வர்ண மயமான 
வஸ்திரத்துடன் பத்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலம்..

தலைமைத்துவம்  பெரும்புகழ் -  இவற்றுக்கு அகந்தையுடன் ஆசைப்பட்ட பிரம்மனது தலையைக் கொய்தார் ஈசன்.. 

பிரம்ம கபாலம் அவரது உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதாக நாடகம்..


இதனாலேயே  மனிதர்களிடத்தில் அகந்தை அகம்பாவத்தை யாசகமாகப் பெறும் பொருட்டு பிட்க்ஷாடனராக கோலம் கொண்டார் எம்பெருமான்..

எவர் இட்ட பிச்சையாலும் பிரம்ம கபாலம் நிறையவே இல்லை..

ஆசை அடங்காததால் நிறையாதிருந்த  பிரம்ம கபாலம்  அன்னபூரணி இட்ட பிச்சையினால் நிறைந்து கங்கை நதிக்குள் கழன்று விழுந்தது என்பது புராணம்..

ஸ்ரீ அன்னபூரணி இட்ட உணவினால் பிரம்ம கபாலத்தின் - ஆசை ஆணவம் அனைத்தும் அழிந்து போயின என்பதே நீதி..

ஈசனுக்கு மட்டுமின்றி சகல ஜீவன்களுக்கும் படியளக்கின்றாள் தேவி..

காசியில் தங்க அன்ன பூரணியின் தரிசனம், தீபாவளியை ஒட்டிய மூன்று நாட்கள் மட்டுமே கிட்டும்..

அன்னபூரணியைக் குறித்து ஏராளமான சம்பவங்கள் சொல்லப்படுகின்றன..

உலகின் அனைத்து
 உயிர்களுக்கும் பொதுவானது பசிப்பிணி..

அதனைத் தீர்த்து வைப்பவள் ஸ்ரீ அன்னபூரணி..
நம் இல்லத்தில் பூஜை மாடத்தில் விளக்கேற்றி வைப்பது போல சமையற்கட்டிலும் கிழக்கு முகமாக விளக்கேற்றி வைப்பது நல்லது.. 

அரிசி இருக்கும் பாத்திரத்தில் அரிசியுடன் மஞ்சள் கிழங்கையும் வெள்ளி  நாணயம் ஒன்றையும் சேர்த்து வைப்பது சாலச் சிறந்தது..

அன்னபூர்ணே ஸதா பூர்ணே ஸங்கர ப்ராணவல்லபே ஞான வைராக்ய ஸித்தி யர்த்தம் 
பிக்ஷாம் தேஹி ச பார்வதீ
***
 
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

  1. விசாலாட்சி அம்மன் தரிசனம் கிடைத்தது நினைவிருக்கிறது.  அன்னபூரணியை தரிசித்தேனா என்பது நினைவில் இல்லை.  அழைத்துச் சென்றிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. உலகில் உள்ள அனைவரது பசிப் பிணியை போக்கும் அன்னை அன்னபூரணேஷ்வரியை தொழுது வணங்கி கொண்டேன். படங்கள் விபரங்களின் தொகுப்பு அனைத்தும் அருமை. இறைவன், இறைவி அனைவருக்கும் நல்லதாகவே நடத்திக் கொடுக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் நல்லதாகவே நடத்திக் கொடுக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  3. தகவல்கள் சிறப்பு...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
  4. விசாலாட்சி, அன்னபூரணி தரிசனம் சிறப்பு.

    பசி பிணி இன்றி உலகம் மகிழ்வுடன் இருக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ ..

      நீக்கு
  5. பதிவு அருமை. விசாலாட்சி, அன்னபூரணி வரலாறுகள் அருமை. படங்கள் எல்லாம் நல்ல தேர்வு. அன்னபூரணி அனைவருக்கும் நித்தம் நல்லபடியாக படியளக்க வேண்டும். பசிப்பிணி இல்லா உலகம் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. அன்னபூரணி அனைவருக்கும் நித்தம் நல்லபடி அளக்க வேண்டும்.

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  7. தீபாவளி சமயம் போக ஆசைப்பட்டேன். நடக்கவில்லை. ஆனால் விசாலாக்ஷி, அன்னபூரணி இருவரையுமே தரிசித்திருக்கேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..