நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 14
ஞாயிற்றுக்கிழமை
அமுதத் தமிழ்
கடந்த வியாழனன்று எபியில் - அன்பின் ஸ்ரீராம் அவர்கள் வெளியிட்டிருந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் அது பற்றிய கருத்துரைகளையும் கண்ட பின் - ஒதுக்கி வைக்கப்பட்ட அந்தப் பாடலைத் தேடினேன்..
கரந்தைக் கவியரசு |
கரந்தைக் கவியரசு அரங்க வெங்கடாசலம் பிள்ளை அவர்களுடையதாகிய அந்தப் பாடல் - 1911 எனும் கால கட்டத்தில் எழுதப்பட்டிருக்கலாம்..
தேடலின் போது
மதிப்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்களது பதிவைக் காட்டியது கூகுள்.. உடன் தொலைபேசி வழி அவருடன் அன்பின் நலன் விசாரிப்பு.. அதன் பின்,
கரந்தைக் கவியரசு அவர்களது பாடலின் பொருள் எழுத முயன்றேன்..
பாடல் முழுதும் இனிய தமிழ் வார்த்தைகள்..
ஆயினும் அக்கட் புலம், ஆனாத - இரண்டிற்கும் புரியவில்லை..
கட்செவி என்பது பாம்பின் பெயர்.. அதன் வழியே - கட்புலம் என்றால் கண்கள் என்பது புலனாயிற்று..
அடுத்து - ஆனாத என்பதற்கு திவ்யத் திருப்பாசுரம் வழி காட்டிற்று..
அளவில்லாத - என்ற பொருளை கைக்கொண்டு என்னளவில் உரை செய்திருக்கின்றேன்...
எந்த ஒரு ஆரியச் சொல்லையும் சொல்லாத நெறியில் - நிறையாகிய இப்பாடல் எமதென்று
கொள்ளப்படாதது குறைதான்!..
என் செய்வோம் இதற்கு..
நின்றுவளர் நெடுந்தமிழை
நெஞ்சகத்தில் கொள்வதொன்றே
இலக்கு!..
கரந்தைக் கவியரசு அவர்களது திரு உருவப் படத்திற்கும் மேல் விவரங்களுக்கும் நன்றி : (இணைப்பு)
வாழ்க தமிழ்!.
**
வானார்ந்த பொதியின் மிசை வளர்கின்ற மதியே..
மன்னிய மூவேந்தர்கள் தம் மடி வளர்ந்த மகளே..
தேனார்ந்த தீஞ்சுனை சால் திருமாலின் குன்றம்
தென்குமரி ஆயிடை நற் செங்கோல் கொள் செல்வி..
கானார்ந்த தேனே கற்கண்டே நற்கனியே கண்ணே கண்மணியே அக் கட்புலம் சேர் தேவி..
ஆனாத நூற் கடலை அளித்து அருளும் அமிழ்தே..
அம்மே நின் சீர் முழுதும் அறைதல் யார்க்கு எளிதே!..
**
பாடலை இயற்றியவர
கரந்தைக் கவியரசு
அரங்க. வேங்கடாசலம் பிள்ளை
கரந்தைத் தமிழ்ச் சங்கம்
கரந்தை - தஞ்சாவூர்..
வானுயர்ந்து
விளங்கும் பொதிகை மலையில் தோன்றி வளர்கின்ற நிலவு போன்றவளே!..
பெருமை மிக்க மூவேந்தர்களின் மடியில் வளர்ந்த செல்வ மகளே!..
தேன் ததும்புகின்ற மலர்களால் இனித்திருக்கும் சுனைகள் நிறைந்திருக்கின்ற குன்றமாகிய திரு வேங்கட மலைக்கும் தென்கடல் குமரி முனைக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் செங்கோல் செலுத்தி ஆள்கின்ற அருட்செல்வியே!..
காட்டு மலர்களில் வழிகின்ற தேன் ஆனவளே!..
கற்கண்டு போல சொற்கொண்டு பொலிபவளே!..
நலந் தருகின்ற கனி எனக் கனிந்தவளே!..
கண்ணாக கண்ணின் மணியாக மலர்பவளே!. கண்மணிக்குள் அறிவெனும் ஒளியாக ஒளிர்கின்ற தேவியானவளே!..
குறைவில்லாத கடல் என, நல்லறிவு பொங்கும் நூல்களை
அளவற்ற வண்ணம்
அளித்தருளும் அமிழ்தானவளே!..
நினது பெருமைகளை
முழுதாகச் சொல்லுதல்
யாருக்கும் எளிதல்ல அம்மா!..
**
வாழ்க தமிழ்
தமிழ் வாழ்க!..
***
1900 களின் ஆரம்பத்தில் அறைதல் என்கிற வார்த்தைக்கு சொல்லுதல், எடுத்து இயம்புதல் என்கிற பொருள் இருக்கிறது பாருங்கள். இப்போது ஒரே பொருள்தான் சப்பென கன்னத்தில் ஒரு அறை!
பதிலளிநீக்குஅறைதலும் பறைதலும் இயல்பாய் இருந்தது அக்காலத்தில்..
நீக்குபறைதல் கேரளத்தில் இன்றும் புழக்கத்தில் உள்ளது..
இன்றைய தமிழகத்தில் அப்படி முடியுமா..
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
சிறப்பான பதிவு ஜி
பதிலளிநீக்குவருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி..
ஆகா...! சிறப்பு...
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
பாடலும் பாடலுக்கு விளக்கமும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபாடலுக்கு தமிழ் தாயின் அருளால் பொருள் நன்றாக எழுதி விட்டீர்கள்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ...
நல்ல பகிர்வு.
பதிலளிநீக்கு