திங்கள், ஜூலை 10, 2023

காயாரோகணம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 25
 திங்கட்கிழமை

ஸ்ரீ காசியம்பதி
சிவ நெறியில் குறிப்பிடப்படும் மயானங்கள் ஐந்து..

காசி மயானம்
கச்சி மயானம் (காஞ்சிபுரம்)
காழி மயானம் (சீர்காழி)
கடவூர் மயானம்
நாலூர் மயானம் 

கடந்த (2/7) ஞாயிறன்று அன்பின் நெல்லை அவர்களது பதிவினைப் படித்து விட்டு நினைவிடம் அது இது - பற்றி கருத்துகள் எழுதிய பின் இந்தக் குறிப்புகளையும் எழுதினேன்..  

மனதில் பயம் வந்து விட்டது.. நெஞ்சுக்குள் ஏகப்பட்ட இரைச்சல்..  

மெய் என்று இருப்பது பொய். அதுதான் மெய். 
என்றாலும் மனம் அமைதி கொள்ளும் நிலையில் இல்லை..   

மறு நாள் பௌர்ணமி.. நாகத்தி கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற குறிப்பு.. 

ஆயுள் ஆரோக்ய ஐஸ்வர்யம் தேஹி.. என்ற பிரார்த்தனையுடன் அன்றிரவு  மூன்றரைக்கு மேல் தான் உறக்கம்.. 

பொழுது விடிந்து - நாகத்தி ஸ்ரீ வேம்பு ஐயனார் ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்து விட்டு அவ்வூரில் இருக்கும் புராதனமான சிவாலயத்தையும் தரிசித்து விட்டு அம்மன் பேட்டை ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயிலிலும் அர்ச்சனை செய்தபின் இல்லம் திரும்பினோம்..

ஞாயிறன்று - நான் எழுதியதும் அன்றிரவு கிடைத்த காணொளியும் தான் இன்றைய பதிவில்!..


அருளுரை
சிவாக்கர தேசிக சுவாமிகள்..
ஸ்ரீ சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம்

காசி மயானம் 
முத்தித் திருத்தலம்.. எல்லையில்லாப் புகழுடையது..

கச்சி மயானம் 
(காஞ்சிபுரம்)
கச்சிப் பலதளியும் - என, அப்பர் பெருமான் 
திருவாக்கினுள் பொதிந்துள்ளதாகக கருகின்றனர்.. கோயில் இதென்று அடையாளம் காண இயலவில்லை..

சகல ஜீவன்களிலும் விரவி நின்ற பண்டாசுரனை சங்கரிக்கும் பொருட்டு  வேள்வித் தீ மூட்டப்பட்டதே  கச்சி மயானம்..

காழி மயானம் (சீர்காழி)
ஏதோ ஒரு ஊழியுள் பிரம்மன் நீறாகிய தலம் என்பர்..

கடவூர் மயானம்
கடவூர் மயானம் (திருக்கடவூர்)
சிவபெருமான் பிரம்மனை நீறாக்கி மீண்டும் உயிர்ப்பித்த தலம்..

இத்தலத்திலிருந்து தான் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரருக்கு  அபிஷேக தீர்த்தம் கொண்டு செல்லப்படுகின்றது. 

இத்தலத்தை தரிசித்து அன்புக்குரிய கோமதி அரசு அவர்கள் பதிவில் வழங்கி இருக்கின்றார்கள்..

நாலூர் மயானம்
திருச்சேறையை அடுத்துள்ளது .. 
மெய்ஞானம் அருளும் திருத்தலம்.. 
ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஞானபரமேஸ்வரர்.. 

பற்றுகளை விட்டொழித்த ஜீவன்களுக்கு உண்மை நிலையினை உணர்த்தி மெய்ஞானம் நல்கக் கூடிய தலம் என்பர்..


ஈசன் எம்பெருமானை காயாரோகணேஸ்வரர்  என்று புராணங்கள் போற்றுகின்றன.. 

அவ்வண்ணம் அடையாளம் காட்டப்படும் தலங்கள் மூன்றனுள் வழிபாட்டில் உள்ளவை இரண்டு மட்டுமே...

அவை - 
1.நாகைக்காரோணம்
2.குடந்தைக்காரோணம்
3.கச்சிக்காரோணம்

நாகைக் காரோணம்
1. நாகைக்காரோணம்
(காயாரோகணம்)
இறைவன் புண்டரீக முனிவரைத் தனது திருமேனியில் ஆரோகணம் செய்து ஐக்கியமாக்கிக் கொண்டதால்..

குடந்தைக் காரோணம்
2. குடந்தைக் காரோணம்
(காயாரோகணம்)
வியாழ சோமேசர் கோயில்.
அம்பிகை, இறைவனின் திருமேனியில்  ஆரோகணித்து ஐக்கியமானதால்..

மகாசங்கார காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கிக் கொண்டனன் என்பதுவும் தலபுராணம்..

3. கச்சிக்காரோணம் [காயாரோகணம்] 
மகாபிரளய காலத்தில் பிரம்மாவும் விஷ்ணுவும் பரமசிவத்தின் திருமேனியில் ஐக்கியமாகினர் என்பது கச்சிக் காரோணத் தலபுராணம்..

கச்சிக் காரோணம் எனும் தலத்தின் கோயில் இன்று அறிதற்கு இல்லை.. 

அப்பர் பெருமான் அருளிச் செய்யும் கச்சிப் பலதளியும்  - எனும் திருவாக்கிற்குள் பொதிந்து இருக்கின்றது 
என - உரைக்கின்றனர் சான்றோர்..

குடந்தைக் காரோணம்
நாகைக் காரோணம் இரு கோயில்களும் பாடல் பெற்றவை..

குடந்தைக் காரோணம் திருஞானசம்பந்தரால் பதிகம் பெற்றதாகும்..

நாகைக் காரோணத்தை ஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் சுந்தரரும் பாடியுள்ளனர்.. சுந்தரருக்கு குதிரை அருளப்பெற்ற தலமும் இதுவே..

இக்கோயில்களுக்குப் பதிகங்கள் அருளிய 
திருஞானசம்பந்தர், திருக்கடைக்காப்பு அருளும் போது - இப்பதிகங்களைப் பாடுவோர் கரையா உடலோடு வானடைவர் (நாகைக் காரோணம்) என்றும், கருவார் இடும்பைப் பிறப்பு அறுப்பர் (குடந்தைக் காரோணம்) என்றும் அருள்கின்றார்...
**

கருவார்பொழில்சூழ்ந் தழகார் செல்வக் காரோணத்தாரைத்
திருவார்செல்வ மல்கு சண்பைத் திகழுஞ் சம்பந்தன்
உருவார் செஞ்சொன் மாலையிவைபத் துரைப்பார் உலகத்துக்
கருவார் இடும்பைப் பிறப்பதறுத்துக் கவலை கழிவாரே..1/72/11

கரையார் கடல் நாகைக் காரோ ணம்மேய
நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன்
உரையார் தமிழ்மாலை பாடும் அவரெல்லாம்
கரையா உருவாகிக் கலி வான் அடைவாரே..1/84/11
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான விவரங்கள்.  காணொலி பின்னர் மொபைலில் காணவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இவ்வளவு விஷயங்களைத் தெரிந்துகொண்டு தல தரிசனம் செய்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.

    குடந்தைப் பகுதிக்கு இந்த வருடம் இரண்டுமுறை வரவேண்டியுள்ளது. இங்கு குறிப்பிட்டுள்ள தலங்களைத் தரிசிக்க வாய்ப்பு கிடைக்குமா? தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான அறியாத அரிய தகவல்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. விளக்கங்கள் அற்புதம்...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
  5. மயானங்கள் ஐந்து பற்றி அருமையாக பதிவு செய்து விட்டீர்கள். காணொளி கேட்டேன் அருமை.திருஞானசம்பந்தர் பதிகம் பாடி இறைவனை வேண்டிக் கொண்டேன். எல்லோர் வாழ்விலும் அமைதியும் மன நிறைவும் கிடைக்க வேண்டுமென்று.

    என் பதிவை குறிப்பிட்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள், கோவிலின் கோபுர படங்கள் என யாவையும் அருமை. புகழ் பெற்ற கோவில்களைப் பற்றி நல்ல விபரமான தகவல்களாக தருகிறீர்கள். இந்தக் கோவிலெல்லாம் இந்தப் பிறவியில் எப்போது காண கிடைக்கிறதோ. ? ஈசன் செயல். ஆனால், தங்கள் பதிவில் குறைவற படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறதே....! அந்த செயலுக்கு இறைவனுக்கும், இறைவன் அருளால் பகிரும் தங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி. 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..