வெள்ளி, ஏப்ரல் 21, 2023

சோலைக் கரும்பு 1

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 8
 வெள்ளிக்கிழமை

கரும்பைப் பற்றிய பதிவுகள் தொடரும் நிலையில் வழக்கம் போல தேவாரத்தில் கரும்பு பேசப்படும் அழகினைக் காண்போம்..

இந்தப் பதிவில் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த திருப்பாடல்கள் சிலவற்றை சிந்திப்போம்..

யாழைப் பழித்த மொழியாள் என்பது அம்பிகையின் திருப் பெயர்களுள் ஒன்று..

அதற்கும் மேல், அம்பிகையை
கரும்பின் மொழியாள் என்று  திரு அதிகைப் திருப் பதிகத்தில் புகழும் ஞானசம்பந்தர்

கரும்பொடு படுஞ்சொலின் மடந்தை - என்று திருப்புறம்பியத் திருப்பதிகத்திலும்

கரும்பன்ன மென் மொழியாள்.. - என்று  பூந்தராய் (சீர்காழி)
திருப்பதிகத்திலும் புகழ்ந்து பாடுகின்றார் ..

கருப்பஞ்சோலைகளைப் பாடுகின்ற ஞானசம்பந்தர் கரும்பு ஆலையையும் அங்கே கருப்பஞ்சாற்றைக்  காய்ச்சும் போது மூளுகின்ற புகை மேலெழுந்து மேகங்களில் தோய்ந்து வானுலகத்தில் பர்வியதையும்  குறிக்கின்றார்..

தென்றல் அடிவருட செழுங்கரும்பு கண்வளரும் திரு ஐயாறு.. - எனும்போது ஆகா!.. என்றிருக்கின்றது..

கரும்பும் செந்நெல்லும் காய் கமுகின் வளம் நெருங்கும்.. - என்று புகழப்பட்ட அந்த வளங்கள் எல்லாம் இன்று எங்கே போயின என்று தெரிய வில்லை.. 

ஆலையைச் சென்று சேர வேண்டிய கருப்பங் கொல்லையின் குளிர்ச்சியினுள் புகுந்த வண்டினங்கள் அங்கே தேனை உண்டு மகிழ்ந்தபடி பூஞ்சோலைக்குள்ளும் புகுந்து இசை பாடித் திரிந்தன.. என்று  வர்ணிக்கின்றார்..

திருப்பாடல்கள்: நன்றி பன்னிரு திருமுறை
கோயில் படங்கள் விக்கி

திரு ஐயாறு

திரு ஐயாறு

வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே
வானை ஊடறுக்கும் மதி சூடிய மைந்தனார்
தேன் நெய் பால் தயிர் தெங்கிள நீர் கரும்பின் தெளி
ஆன் அஞ்சாடு முடியானும் ஐயாறுடை ஐயனே.. 2/6/5

(மேற்குறித்த திருப்பாடலில் அபிஷேகப் பொருள்கள் குறிக்கப்பட்டுள்ளன )

திரு அதிகை வீரட்டானம்

திரு அதிகை வீரட்டானம்

அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக்
கரும்பின் மொழியாளோடு உடன்கை அனல்வீசிச்
சுரும்புண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ
விரும்பும் அதிகையுள் ஆடும்வீரட் டானத்தே.. 1/46/2

காழி - சீர்காழி

காழி - சீர்காழி

மழையார்சாரல் செம்புனல் வந்தங்கு அடிவருடக்
கழையார்கரும்பு கண்வளர் சோலைக் கலிக்காழி
உழையார்கரவா உமையாள் கணவா ஒளிர்சங்கக்
குழையா என்று கூறவல்லார்கள் குணவோரே.. 1/102/5

திரு புகலி
(சீர்காழி)

ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று
சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய
ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று நல்ல
மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே...  1/104/2

திரு ஆரூர்

திரு ஆரூர்

சோலையில் வண்டினங்கள் சுரும்போடு இசைமுரலச் சூழ்ந்த
ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூரில்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம்
காலையு மாலையும்போய்ப் பணிதல் கருமமே..
 1/105/2

திரு ஐயாறு

நின்றுலாநெடுவிசும்பு 
நெருக்கிவரு புரமூன்று நீள்வாய் அம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி 
மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் 
கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலார் அடிவருடச் செழுங்கரும்பு 
கண்வளருந் திரு ஐயாறே..
1/130/7

வேணுபுரம் சீர்காழி

வேணுபுரம்
(சீர்காழி)

தண்கழனி யழகாக நறவுண்டு
சோலைசேர் வண்டினங்க ளிசைபாடத் தூமொழியார்
காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே..2/81/5

பிரம்மபுரம்
(சீர்காழி)

தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் 
துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து 
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து 
நலியாத வண்ணம் உரைசெய் 
ஆனசொல் மாலை யோதும் அடியார்கள் 
வானில் அரசாள்வர் ஆணை நமதே.. 2/85/10

திருக்காளத்தி

திருக்காளத்தி

கரும்புதேன் கட்டியுங் கதலியின் கனிகளும்
அரும்புநீர் முகலியின் கரையினில் அணிமதி
ஒருங்குவார் சடையினன் காளத்தி ஒருவனை
விரும்புவாரவர்கள் தாம் விண்ணுலகு ஆள்வரே..3/36/4

ஸ்ரீ நீணெறி நாதர் தண்டலஞ்சேரி

திருதண்டலை நீணெறி
( தண்டலஞ்சேரி)

விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே
சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடம்
கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம்
நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே.. 3/50/1


திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி.. போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

13 கருத்துகள்:

  1. இதுபோன்ற தமிழை அவர்கள் படைப்பதற்கு இறைவனிடம் வரம் வாங்கி வந்திருக்கிறார்கள். நாமும் கொடுத்து வைத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. மிக அருமை. ப்ரபந்தத,தில் கரும்பு வரும் இடங்களை யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் வருடப் பிறப்பன்று பதிவில் பிரபந்தத்தின் வரிகள் சிலவற்றைக் குறித்துள்ளேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நலம் வாழ்க..
      ஓம் நம சிவாய...

      நீக்கு
  4. அருமையான பதிவு.பதிகங்களை பாடி வணங்கி கொண்டேன். சீர்காழி தோணியப்பரை மனதில் நினைத்து கொண்டேன்.
    சீர்காழி படத்தை பார்த்தவுடன் தோணியப்பர், சட்டைநாதர் நினைவுக்கு வந்து விட்டார்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. மிக அருமை. பிரபந்தத்திலும் குறிப்பிட்டிருப்பதையும் போட்டிருப்பதாகச் சொல்லி இருக்கீங்க. அன்றைய பதிவையும் போய்ப் பார்த்து விடுகிறேன். பதிகங்களை நீங்கள் போட, பாசுரங்களை நெல்லை நினைவூட்ட அருமையானதொரு ஆரோக்கியமான மனதுக்கு நிறைவைத் தந்த பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா ..
      நலம் வாழ்க..

      நீக்கு
  6. கோயில் படங்கள் அனைத்தும் அழகு. துரை அண்ணா பெயர்கள் என்ன அழகு இல்லையா? கரும்பின் மொழியாள், யாழைப் பழித்த மொழியள் என்று...

    இப்படி ஒவ்வொரு ஊரின் கதைகளோடு பொருந்திப் போகும் பெயர்கள் இருந்தால் எத்தனை சுகமாக கேட்பதற்கும் சொல்வதற்கும் இனிய தமிழாக ஒலிக்கும்!

    இதை இப்போதைய என் பதிவிலும் சொல்லியிருக்கிறேன்..

    பதிவு அருமை..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. /// இப்படி ஒவ்வொரு ஊரின் கதைகளோடு பொருந்திப் போகும் பெயர்கள் இருந்தால் எத்தனை சுகமாக கேட்பதற்கும் சொல்வதற்கும் இனிய தமிழாக ஒலிக்கும்!..///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. அருமையான பகிர்வு படித்து வணங்கினோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..