வியாழன், மார்ச் 30, 2023

ஸ்ரீராமநவமி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 16
வியாழக்கிழமை
ஸ்ரீராமநவமி


ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் உவந்துறையும்
திவ்யக்ஷேத்திரமாகிய திருக்கண்ணபுரத்தில் 
ஸ்ரீ குலசேகராழ்வார் அருளிச்செய்தது..

 ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் காட்சி தருகின்ற க்ஷேத்திரம் இது..

பதிவில் 
வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர்..

 நன்றி :
நாலாயிர திவ்யப்ரபந்தம்


மன்னு புகழ்க் கௌசலைதன்  மணிவயிறு வாய்த்தவனே
தென் இலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர் 
கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்தென் கருமணியே 
என்னுடைய இன்னமுதே  இராகவனே தாலேலோ.. 719

புண்டரிக மலரதன்மேல்  புவனி எல்லாம் படைத்தவனே
திண் திறலாள் தாடகைதன்  உரம் உருவச் சிலை வளைத்தாய்
கண்டவர்தம் மனம் வழங்கும்  கணபுரத்தென் கருமணியே
எண் திசையும் ஆளுடையாய்  இராகவனே தாலேலோ.. 720


கொங்கு மலி கருங்குழலாள்  கௌசலைதன் குல மதலாய்
தங்கு பெரும் புகழ்ச்சனகன்  திரு மருகா தாசரதீ
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே
எங்கள் குலத்து இன்னமுதே  இராகவனே தாலேலோ.. 721

தாமரை மேல் அயனவனைப்  படைத்தவனே தயரதன்தன்
மாமதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்- 
காமரங்கள் இசைபாடும்  கணபுரத்தென் கருமணியே
ஏமருவும் சிலை வலவா  ராகவனே தாலேலோ.. 722


பாராளும் படர் செல்வம்  பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு  அருங்கானம் அடைந்தவனே
சீராளும் வரை மார்பா  திருக் கண்ணபுரத்து அரசே
தாராரும் நீண் முடி என் தாசரதீ தாலேலோ.. 723

சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே
அற்றவர்கட்கு அருமருந்தே  அயோத்தி நகர்க் கதிபதியே
கற்றவர்கள்தாம் வாழும்  கணபுரத்தென் கருமணியே
சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா தாலேலோ.. 724


ஆலின் இலைப் பாலகனாய்  அன்று உலகம் உண்டவனே
வாலியைக் கொன்று அரசு  இளைய வானரத்துக்கு அளித்தவனே 
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்தென் கருமணியே
ஆலி நகர்க்கு அதிபதியே  அயோத்திமனே தாலேலோ.. 725


மலையதனால் அணை கட்டி  மதில் இலங்கை அழித்தவனே
அலை கடலைக் கடைந்து  அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே
கலை வலவர்தாம் வாழும்  கணபுரத்தென் கருமணியே
சிலை வலவா சேவகனே  சீராமா தாலேலோ.. 726


தளை அவிழும் நறுங் குஞ்சித் தயரதன்தன் குல மதலாய்
வளைய ஒரு சிலையதனால்  மதில் இலங்கை யழித்தவனே
களை கழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே
இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ.. 727

தேவரையும் அசுரரையும்  திசைகளையும் படைத்தவனே
யாவரும் வந்தடி வணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரி நன்னதி பாயும்  கணபுரத்தென் கருமணியே
ஏவரி வெஞ்சிலை வலவா  இராகவனே தாலேலோ.. 728


கன்னி நன் மாமதில் புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த  தமிழ்மாலை
கொன்னவிலும் வேல் வலவன் குடைக் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே.. 729

ஸ்ரீராம் ஜெய்ராம்
ஜெய் ஜெய் ராம்
***

12 கருத்துகள்:

  1. மிகவும் பிடித்த பாடல்.  அதுவும் BV  ராமன் BV லக்ஷ்மணன் குரல்களில் கேட்க ரொம்பப் பிடிக்கும்.  சிலை வளவா சேவகனே ஸ்ரீராமா தாலேலோ வரி வரும் இடம் ரொம்ப நன்றாய் இருக்கும். ஸ்ரீராமஜெயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஹைஃபைவ்!!

      கீதா

      நீக்கு
    2. அதே! அதே! எனக்கும் ஹைதரபாத் சகோதரர்கள் குரலில் இந்தப் பாடல் மிகவும் பிடித்தமானது. அறுபதுகளில் வானொலியில் ஸ்ரீராமநவமி அன்று ஸ்ரீராம நவமணிமாலா என்றொரு நிகழ்ச்சி வரும். அநேகமாக இந்தப் பாடலுடன் தான் ஆரம்பிக்கும். இப்போல்லாம் வானொலிப் பாடல்களே கேட்க முடியலை! ::(

      நீக்கு
  2. ஸ்ரீராம் ஜெய்ராம்.
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  3. ஆஹா!!! ரொம்பப் பிடித்த பாடல். கற்றுக் கொண்டு பாடுவதுண்டு. நான் ஏகலைவியாக பிவி ராமன் லக்ஷ்மண் அவர்கள் பாடியதிலிருந்து கற்றுக் கொண்டேன். ராகமாலிகை.

    கடைசிப்படம் ஆஞ்சு ஆஹா!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அருமையான பகிர்வு. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீராம ஜயந்தி நாளில் அருமையான பாடல் பகிர்வு கண்டோம்.
    ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்

    பதிலளிநீக்கு
  6. அருமையான பாடலுடன் பதிவு அருமை.
    ஸ்ரீராம்! ஜெய ராம்! ஜெய ஜெய ராம்!

    பதிலளிநீக்கு
  7. பாடலை பாடி தரிசனம் செய்து கொண்டேன் ராமரை.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    அருமையான பாடல். இந்த நன்னாளில் வடுவூர் கோதண்டராமரை தரிசித்துக் கொண்டேன். ராம பக்த ஆஞ்சநேயரின் தரிசனமும் பெற்றுக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் தங்கள் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..