சனி, மார்ச் 25, 2023

நமஸ்காரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 10
   வெள்ளிக்கிழமை

நமஸ்காரம் - சமஸ்கிருத வார்த்தை..

நமஸ்காரங்கள் ஐந்து வகை. 

அவை, 
ஓரங்க நமஸ்காரம், திரியங்க நமஸ்காரம், (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் என்பன..


ஓரங்க நமஸ்காரம்:
தலை குனிந்து வணக்கம் செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது. 

திரியங்க நமஸ்காரம்:
தலைமேல் இரு கைகளையும் கூப்பி வணங்குவது.

பஞ்ச அங்க நமஸ்காரம்
தலை, கைகள் மற்றும் முழந்தாள்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் தரையில் படுமாறு வணங்குவது பஞ்ச அங்க (பஞ்சாங்க) நமஸ்காரம் . பஞ்சாங்க நமஸ்காரம், பெண்கள் மட்டுமே செய்ய வேண்டியது..  

சாஷ்டாங்க நமஸ்காரம்:  
நெற்றி, கைகள், மார்பு மற்றும் முழந்தாள்கள் முதலான ஆறு அங்கங்களும் பூமியில் படும்படி வழிபாடு செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும். 


அஷ்டாங்க நமஸ்காரம்
நெற்றி, மார்பு, கைகள், முழங்கால்கள் மற்றும் பாதங்கள் - ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகிறது..

சாஷ்டாங்க நமஸ்காரம், அஷ்டாங்க நமஸ்காரம் - இவ்விரண்டும் ஆண்களுக்கு மட்டுமே உரியன.. 

பெண்கள் ஒருபோதும் செய்யக்கூடாதவை..

நமஸ்காரத்தின் தத்துவம்  இறைவனை சரணாகதி அடைவதே..

திருக்கோயிலில் நமஸ்காரம்
செய்வதெப்படி?..


சில தலங்களில் ராஜ கோபுரத்திற்கு எதிரே மூலஸ்தானத்தை நோக்கியவாறு பிள்ளையார் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார்.. அப்படியான நிலைகளில் விநாயகரை முறைப்படி வணங்கி விட்டு  
தலைக்கு மேலாகக் கை கூப்பியவாறு கோயிலினுள் நுழைய வேண்டும்.. 

கொடி மரத்தருகில் நின்று தியானிக்க வேண்டும்.. பலி பீடத்தில் நமது ஆணவத்தை பலியிட்ட பாவனையுடன் நந்தியம்பெருமானை வணங்கி அவரிடம் அனுமதி கேட்க வேண்டும்.. அதற்கு அவர் ஜலங்.. ஜலங்.. என்று தலையாட்டுவாரா.. என்ன.. எல்லாம் மானசீகமாகத் தான்!..

கோயிலுக்குள் எல்லா சந்நிதிகளிலும் விழுந்து வணங்குதல் கூடாது.. 

கோயிலில் கர்ப்ப கிரகத்தில் எழுந்தருளியுள்ள மூர்த்தியை தலைக்கு மேல் கரங்களை உயர்த்தி (துவாத சாந்த நமஸ்காரம்) வணங்க வேண்டும்..

திருச்சுற்று மூர்த்திகளை கூப்பிய கரங்களுடன் உச்சந்தலையில் வைத்து (பிரம்மரந்திர நமஸ்காரம்) வணங்க வேண்டும்..

திருச்சுற்று மூர்த்திகளை 
உச்சந்தலைக்கு மேல்
கைகளை உயர்த்தி வனங்கினாலும் பாதகம் ஏதும் இல்லை..

புண்ணியம் தான் கூடும்..

பெண்கள் முகத்துக்கு மேல்  கைகளை உயர்த்தி வனங்குவதற்கு அனுமதி இல்லை..

அபிஷேக ஆராதனை நேரங்களில் மூலஸ்தானத்தில் விழுந்து வணங்கவே கூடாது..  நிவேதனம் செய்யப்படும் நேரங்களிலும் தண்டனிட்டு 
வணங்கக் கூடாது.. 
கோயிலை வலம் செய்தபின் கொடி மரத்தின் அருகில்
ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்..
பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் மட்டுமே செய்ய வேண்டும்.. 

நமஸ்காரம் எதுவாயினும் மூன்று முறை செய்வது உத்தமம்..

பெண்கள் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கக் கூடாது  என்பது ஏனெனில் மங்கையரின் தனங்களையும் நாபியையும்  புனிதமாக வகுத்திருக்கின்றனர்.. எனவே தரையில் படுதல் ஆகாது..


மேலும் பெண்கள் கூப்பிய கரங்களை முகத்துக்கு மேல் உயர்த்தி வணங்கவும் கூடாது.. ஏனென்பதை அவரவரும் உணர்ந்து கொள்க..

மேலும் 
பெண்களுக்கு அங்கப் பிரதட்சிணமும் அனுமதிக்கப்படவில்லை.. கேரளத்தின் அம்பலங்களில் எந்தப் பெண்ணும் உருள முடியாது.. 

இதற்கெல்லாம் நேர்மாறு தமிழ் சினிமாக்களும் ஊடகதாரிகளும்.. அம்மன் கோயில் கதை என்றால் நாலு பெண்களையாவது
மஞ்சள் சேலையுடன் தரையில் உருட்டி விடுவார்கள்.. 

இன்னொன்று 
சுமங்கலிப் பெண்கள் தங்களது கூந்தலை நீக்கிக் கொள்ளக் கூடாது என்றும் இருக்கின்றது..

தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் கிழக்கு நோக்கியவை..

மயிலை கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடவூர், கண்டியூர் வீரட்டானங்கள், தஞ்சை தஞ்சபுரீஸ்வரர் கோயில் குடந்தை காசி விஸ்வநாதர் கோயில், திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில், பழனியம்பதி ஆகிய கோயில்களும் வேறு சில் கோயில்களும் மேற்கு நோக்கியவை..

பொதுவாக  காளியம்மன் கோயில்கள் எல்லாமே வடக்கு நோக்கி விளங்குபவையே..


கிழக்கு நோக்கிய கோயிலானாலும்  மேற்கு நோக்கிய கோயிலானாலும்  
கொடி மரத்தின் அருகே வடக்கு நோக்கித் தலை வைத்து தண்டனிட்டு வணங்க வேண்டும்.. 

வடக்கு அல்லது தெற்கு நோக்கிய கோயில்களில் கிழக்கே தலை வைத்து மேற்காக கால்களை நீட்டி வணங்க வேண்டும்..

ஒருபோதும் (மேற்கே தலை வைத்து) கிழக்காக கால்களை நீட்டி  வணங்கக் கூடாது..

கோயிலுக்குள் 
இறைவனைத் தவிர வேறு எவரையும் வணங்குவது என்பதும் கூடவே கூடாது..

ஆலயம் தொழுவது சாலவும் நன்று..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. அறிந்தவை, அறியாதவை என எத்தனை விவரங்கள் நமஸ்காரம் செய்வது பற்றி....   அறிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. சமீபத்தில் வயதில் மூத்த ஒருவர் எனக்கு நமஸ்காரம் என்று தகவல் அனுப்பத்தொடங்கினார்.  நான் சிறியவன் நீங்கள் எனக்கு நமஸ்காரம் என்று சொல்லக்கூடாது.  நான்தான் உங்களுக்கு சொல்லவேண்டும் என்றேன்.  அது பொதுவான வார்த்தை. யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் சொல்லலாம் என்றார் அவர்..

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு. முன்பே அறிந்திருந்தாலும் இதற்கு ஒரு பதிவு அவசியம்தான்.

    பதிலளிநீக்கு
  4. சொல்லிய விதம் அருமை ஜி.

    பல தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நமஸ்காரம் பற்றிய விஷயங்கள் நன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
    தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
    சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
    வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.//

    என்ற பாடலும்

    வணக்கம் பலமுறை சொன்னேன் , என்ற பாட்டு நினைவுக்கு வந்தது.

    கோவில்களில் வணங்கும் முறை மட்டும் பல செய்திகளை விரிவாக சொன்னீர்கள். கைகூப்பி நெஞ்சுக்கு நேரே வணக்கும் முத்திரை உண்டு யோகாவில்.
    பயனுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..