வியாழன், மார்ச் 09, 2023

வில் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மாசி 25
 வியாழக்கிழமை

Violence என்றொரு ஆங்கில வார்த்தை..

இதிலிருந்து  உருவாக்கப்பட்ட வார்த்தைகளே - வில்லன் வில்லி என்பன..

இவை சினிமாவுக்குள் எப்போது வந்தன?.. எப்படி வந்தன?..

தெரியவில்லை..

வில்லை உடையவன் வில்லன் என்று திரையுலகிற்குள் எவரோ தவறாக எழுதி வைத்திருக்கின்றனர்..

அது போகட்டும். சரியான சொல்?..

வில்லி, வில்லான், வில்லாளி..

ஓ!..


திருக்குறளில் காணப்படும் வில், அக நானூற்றிலும் புற நானூற்றிலும் 
பேசப்படுகின்றது.. 

நாமும் நமக்குத் தெரிந்ததை இன்றைக்குப்  பார்ப்போம்..

வில்லை உடைய சிவபெருமானை வில்லி என்றும் வில்லான் என்றும் புகழ்கின்றது தேவாரம்.. 

திரிபுர சம்ஹாரத்தின் போது ஈசன் மேரு மலையை வில்லாகத் தாங்கி வாசுகி எனும் நாகத்தை நாணாகப் பூட்டினான் என்பது சிவ புராணம்.. 

ஆனால்,
அதன்வழியே எந்த ஒரு கணையும் எய்யப்படவில்லை..

ஈசனின் மந்தகாசப் புன்னகையில் தெறித்த நெருப்பே திரிபுரங்களை சாம்பலாக்கியது - என்பது தனிக்கதை..

எல்லாம் வல்ல எம்பெருமானை பிநாகபாணி
- பிநாகம் எனும் வில்லை உடையவர் என்று புராணங்கள் கூறுகின்றன..

திருக்கரத்தில் கரும்பு வில்லுடன் விளங்குகின்ற ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி துர்கை என,வில்லுடன் 
வருகின்றாள்..


பாஞ்ச ஜன்யம் எனும் சங்கு, சுதர்சனம் எனும் சக்கரம், கௌமோதகீ எனும் கதை, நந்தகம் எனும் வாள் - இவை நான்குடன் சார்ங்கம் எனும் வில்லையும் 
(பஞ்சாயுதங்கள்) ஸ்ரீமந் நாராயணன் தாங்கியிருக்கின்றார்..


ஸ்ரீ ராம பிரானது வில் கோதண்டம்..

ஸ்ரீகிருஷ்ணருடைய வில்லின் பெயரும் சார்ங்கம் தான்..


சத்யபாமா வில்வித்தையில் தேர்ச்சி பெற்றவள் என்பது கூடுதல் செய்தி..

அது மட்டுமல்ல..

சிகண்டி..
முற்பிறவியில் காசி ராஜனின் மகள் அம்பா.. அப்பிறவியில் பீஷ்மரால் மரணத்தைத் தழுவியவள்.. 

மறுபிறவியில் துருபதன் மகளாகப் பிறந்து வில் வித்தையில் தேர்ச்சி பெற்றாள்.. கந்தர்வன் ஒருவனால் ஆணாக மாறி நின்ற சிகண்டியை முன் நிறுத்தியே பத்தாம் நாள் யுத்தம் நடந்தது..

முருகப்பெருமானிடம் பெற்றிருந்த வரத்தின் படி பீஷ்மரைக் கணைகளால் வீழ்த்தினாள்..


அர்ஜுனனுடைய காண்டீபம் வெகு பிரசித்தம்..

கீழுள்ள வீர வில்களின் பெயர் விவரங்கள் இணையத்தில் இருந்து பெற்றவை..

கர்ணனின் வில் விஜயம்.
தர்மரின் வில் மகேந்திரன்..
பீமசேனனின் வில் வயவ்யா.
நகுலனின் வில் வைஷ்ணவ்.
சகாதேவனின் வில் அஸ்வினா.
கடோத்கஜனின் வில்  பவுலஸ்தியா..

" தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல் .. "

- மேகங்கள் பொழிதல் வேண்டும்  - என்பது கோதை நாச்சியாரின் பிரார்த்தனை..

" திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய்.. "

- என்று ஐயனின் திருமேனி அகலாத எம்பிராட்டியின் திருப்புருவங்களை வில்லாக  விளித்துப் பாடுகின்றார் மாணிக்கவாசகர்..


எல்லாவற்றையும் விட வெகுபிரசித்தமானது மலரம்புகளை எய்யும் மன்மதனின் கரும்பு வில்..

வெண்ணிலவைக் குடை பிடித்து வீசு தென்றல் தேரேறி
மென்குயில் தான் இசை முழங்க மீன் வரைந்த கொடியசைய
கண்கவரும் பேரழகி  கனகமணிப் பொற் பாவை
அன்னநடை ரதியுடனே அழகு மதன் வில்லேந்தி
தண்முல்லை தாமரை மா தனிநீலம்  அசோகம் எனும்
வண்ண மலர்க் கணை தொடுத்தான் வையமெல்லாம் வாழ்கவென்றே!..
(கவிஞர் K.D.சந்தானம்)

வாழ்க வையகம்..

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

8 கருத்துகள்:

  1. மறுபடியும் ஒரு விளக்கம்.  வில்லையுடையவன் வில்லன் என்பது நகைச்சுவை.  திரையில் வந்த நகைச்சுவை.  வில்லைப் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. வில் பற்றிய தகவல்கள் அருமை...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
  3. வில்லைப் பற்றிய அரிய தகவல்களுக்கு நன்றி. இவற்றில் கர்ணன், சகாதேவன் போன்றோரின் வில்லின் பெயரை இன்றே அறிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. வில் பற்றிய தகவல்கள் சிறப்பு.

    காலை தரிசனம் நன்று
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  5. வில் குறித்த தகவல்கள் அனைத்தும் சிறப்பு. பல வில் வீரர்களில் வில்லின் பெயரை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வில் பற்றி நல்ல நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டீர்கள், படங்கள் எல்லாம் அருமை.
    நம் பக்கத்தில் அவள் வில்லி என்றால் நல்ல திறமையானவள், வேலைகள் எல்லாம் சிறப்பாக செய்து முடிக்க வல்லவள் என்று சொல்வார்கள்.
    கவிஞர் கே.டி சந்தானம் அவர்கள் நல்ல நடிகர், நல்ல குரல்வளம்
    சினிமாவுக்கு பாட்டு , கதைவசனம் எல்லாம் எழுதுவார்.
    திருமலை தென்குமரி படத்தில் இவர் நடிப்பு எனக்கு பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  7. வில்லுக்கு இத்தனை இருக்கா அதாவது பெயர்கள்...காண்டீபம் மட்டுமே இதுவரை அறிவேன், மற்றதெல்லாம் இப்போதுதான் அதுவும் பீமன் எல்லாம் கூட வில் பயன்படுத்தியிருக்காங்க போன்ற தகவல் எல்லாம் இப்போதுதான் அறிகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வில் பற்றிய விளக்கங்கள் அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..