செவ்வாய், பிப்ரவரி 28, 2023

செவ்வாய்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று - மாசி 16
  செவ்வாய்க்கிழமை

அம்மாவுக்கு எழுதி நாளாயிற்று 
என்று இன்றொரு பாட்டு..

Fb ல் கிடைத்த
காணொளிக்கு
பின்னணி இசை
சேர்த்துள்ளேன்..

சேலம் மாநகரிலுள்ள
சமயபுரம
 மாரியம்மன் சந்நிதி இது..


செவ்வாயில் சிரிப்பழகி
சேர்ந்த சிவப்பு முகத்தழகி
பூவாகிப் புவியாகி
பூத்திருக்கும் வடிவழகி..
தாயாகித் தயவாகி
தாங்கி நிற்கும் பேரழகி
சங்கடங்கள் தீர்த்தருளும்
சமயபுரத் தாயழகி..

நில்லாத உலகத்திலே 
நின்று அருளும் முத்தழகி..
காணாத கடுவினையை
கடுத்தெறியும் பொட்டழகி
பொல்லாத பிணி நோயை
புறத்தெரிக்கும் பொன்னழகி
அல்லாத மானுடர்க்கும்
அறம் காட்டும் சொல்லழகி..


அம்மா என்றழைத்தாலே
ஆடிவரும் அன்னமம்மா
அஞ்சாதே என் மகனே
என்றுரைக்கும் வண்ணமம்மா
நோயாகி நலிந்தாலும்
நலங்கூட்டும் அருந்துணையே
ஆறாத துயரினிலும்
அரவணைக்க வருந்துணையே..

சொல்லாகப் பொருளாக
சூட்சுமங்கள் அருள்வாயே
கல்லாத கடையனுக்கும்
வழித்துணையாய் வருவாயே..
நன்றாக நடையெனக்கு
என்தாயே தருவாயே
பொல்லாத நாவினிலும்
பொன்னாக அமர்வாயே!..


பொன்னாகப் பூவாகப்
 பொலிந்தாலும் மலர்ந்தாலும்
 கண்ணாகக் கருத்தாகக்
காத்தருள வேணுமம்மா..
கை நழுவி சோராமல்
கடுவினையில் சேராமல்
கண்ணெடுத்து முகம்பார்க்க
முன்னெடுத்து வாருமம்மா..

வந்தார்கள் வளர்ந்தார்கள்
வாழ்ந்தார்கள் இருந்தார்கள்
வாழாமல் வாழ்ந்தவர்கள்
வல்வினையில் வீழ்ந்தார்கள்..
சொன்னார்கள் பெரியோர்கள்
சோதி முத்து மாரி உன்னை
சொன்னபடி கேட்டு நானும்
சொல்லி விட்டேன் தேவி உன்னை..


காலமெல்லாம் கை தொழவே
கண்ணிரண்டில் ஒளி கூட்டு
காலமெல்லாம் கால் நடக்க
கனிவுடனே வழி காட்டு..
நேரமெல்லாம்
நெஞ்சத்திலே நினைத்திட
 அருள் கூட்டு
நிம்மதியில் எல்லாரும்
வாழ்ந்திடவே நலங்கூட்டு!..

ஆதரிக்க வேணுமென்று
அடியேனும் பாட்டெடுத்தேன்
அம்மா உன் வாசலிலே
அணி விளக்கு ஏற்றி வைத்தேன்..
ஏற்றுகின்ற விளக்கு எல்லாம்
என்குறையைக் கூறாதோ
போற்றுகின்ற வார்த்தை எல்லாம்
பூக்களெனச் சேராதோ..


மனைவாழ மங்கலங்கள் 
மகிழ்வாகித் தந்தவளே..
தாயாகித் தமிழாகித்
தாங்கி நலம் புரிபவளே..
கடையவன் என்று சொல்லி
கை விடுத்துப் போகாமல்
கண் பார்த்து குறை தீர்த்து
நலம் சேர்க்க வேணுமம்மா!..

ஊரெல்லாம் உன்பாட்டு
ஓங்கிடவே வேணுமம்மா..
உயிரோடு உயிராக
உறவாட வேணுமம்மா..
கண்கலங்கும் வேளையிலே
காத்திடவும் வேணுமம்மா
கைகூப்பி உன்வாசல்
கும்பிடவும் வேணுமம்மா!..
***

ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
***

11 கருத்துகள்:

  1. காலை வணக்கம். சிறப்பான துதியுடன் இன்றைய காலைப் பொழுது இனிதாக அமைந்தது. மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தாயே ஓம் சக்தி.. ஓம் சக்தி... சக்தி ஓம் சக்தி ஓம்..

    பதிலளிநீக்கு
  3. அம்மா உங்கள் மனதினில், நாவில், விரல்களில் நற்கலையை நன்றாக அருளி இருக்கிறார்கள்.  மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. படங்களும் அருமை பாடலும் இனிமை

    பதிலளிநீக்கு
  5. மாரியம்மனுக்கு அருமையான பாமாலை.
    காணொளி மிக அருமை.
    ஆயி மகமாயி அனைவரையும் காக்க வேண்டும்.

    //கண்பார்த்து குறைதீர்த்து
    நலம் சேர்க்க வேணுமம்மா//

    நலம் தந்து அரவணைப்பள் முத்துமாரி.

    ஓம் சக்தி ! ஓம் சக்தி ஓம் !

    பதிலளிநீக்கு
  6. காலையில் அம்மன் தரிசனம் நன்று வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  7. அண்ணா உங்கள் பாமாலையாலேயே அம்மாவுக்கு அர்ச்சித்துவிட்டீங்க. அருமையா இருக்கு. உங்களுக்கு உடனுக்குடன் எழுத வந்துவிடுகிறது இறை அருள்!

    அம்மன் படம் வெகு அழகு. முதல் படமே ஈர்க்கிறது,. காணொளியில் நீங்க சேர்த்திருக்கும் பின்னணி இசை செமையா இருக்கு அதுவும் ரொம்பப் பொருத்தமாக...ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. செவ்வாய் நாளில் அம்மனை போற்றிப் பாடும் துதி அருமை.

    பதிலளிநீக்கு
  9. அம்பிகை அருளாலேயே இப்படி எல்லாம் கவி மழை பொழிய முடிகிறது. மிக நன்றாய்ச் சரளமாகவும் அதே சமயம் எளிமையாகவும் வார்த்தைகளால் கோர்த்தெடுத்த பூமாலை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..