திங்கள், பிப்ரவரி 27, 2023

திருக்கோழம்பம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 15
   திங்கட்கிழமை


அம்பிகை பசுவாகி காவிரியின் தென்கரையில் உலவிய இடங்களுள் இதுவும் ஒன்று.. 

பசு தனது - மடி கொண்ட பாலை சிவலிங்கத்தின் மீது சுரந்து வழிபட்ட தலம்.. 

ஈசனின் திருமுடியைப் பார்த்து விட்டதாக தாழம்பூவினை சாட்சியாகக் காட்டிப்  பொய்யுரைத்த பிரம்மன் வழிபட்டு பழி தீர்ந்தது இத்தலத்தில்..

இந்திர சாபத்தினால்
குயிலாகிய சந்தன் என்ற வித்யாதரன் வழிபட்டு சாப விமோசனம் எய்தியதும் இத்தலத்தில் தான்..


திருக்கோழம்பம்
(குளம்பியம்)

இறைவன் - 
ஸ்ரீ கோகிலேஸ்வரர் 

அம்பிகை - 
ஸ்ரீ சௌந்தர்ய நாயகி

தீர்த்தம் பிரம்ம திருத்தமான
தலவிருட்சம் வில்வம்

அது ஒரு கல்பம்..

அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்த மேகங்களை வேடிக்கை பார்த்தபடி - ஆனந்தமான பொழுது என்று நினைத்தவாறே - அமர லோகத்தின் உப்பரிகையில் நின்றிருந்தான்
தேவேந்திரன்..

அன்றைய பொழுது நல்லபடியாகச்
செல்வதாகவே தோன்றியது - அவனுக்கு...

அந்த வேளையில் மேகக் கூட்டங்களின்
ஊடாக வித்யாதரன் ஒருவன் தென்பட்டான்..

அவன் பெயர் சந்தன்..
 
உண்மையில் சந்தனுக்குத் தான் நேரம் சரியாக இல்லை..

இவனும் அவனைப் பார்த்தான்..  அவனும் இவனைப் பார்த்தான்.. இருவரையும் ஒருசேரப் பார்த்துக் கொண்டிருந்தான் 
இன்னொருவன்.. யாரென்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை..

தன்னைக் கண்டதும் வித்யாதரன் ஓடி வந்து
வணங்கி பணிந்து நிற்பான் -  என்று இறுமாந்திருந்த
இந்திரன் அதிர்ந்து போனான்...

வித்யாதரன் இந்திரனைக் கண்டு கொள்ளவேயில்லை..

" நீ யாராக இருந்தால் எனக்கென்ன?.. " - என்ற மனோபாவம் அவனுக்கு!..

' இவனை இப்படியே விட்டு விடக்கூடாது!.. ' -  என்று  நினைத்த இந்திரன் -
வித்யாதரனை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தான்...

" நீ என்னைக் கண்டும் காணாத மாதிரி சென்றது எதற்கு?.. "

இந்திரனிடமிருந்து
ஆத்திரத்துடன் கேள்வி பிறந்தது..

" நீர் என்னைக் கண்டீர்.. நான் உம்மைக் கண்டேன்!.. அது போதாதா!.. "
வித்யாதரனிடமிருந்து பதில் வந்தது...

" நெஞ்சழுத்தம் உனக்கு!.. "

" தேவேந்திரனாகிய தாங்கள் மேகக் கூட்டத்தின் ஊடாக தேவகன்னியருடன்
விளையாடுவதாக நினைத்தேன்.. ஒதுங்கிச் சென்று விட்டேன்!.. "

" மேகத்துடன் நின்றதன்றி
மோகத்துடன் நின்றேனில்லை!.. "

" எனது மனதில் தோன்றியதைச் சொன்னேன்!.. தங்களது இயல்பு அவ்வாறாயிற்றே!.. " 

" நல்ல பொழுதென்று நினைத்திருந்தேன்..
அவ்வாறு அல்ல என்று நிரூபித்து விட்டது உன் பேச்சு!.. விபரீதத்தை விளைத்து விட்டாய் வித்யாதரா!.. அதன் விளைவு என்ன என்று தெரியுமா?.. பொறுப்பற்ற உனது பேச்சினால் வெறுப்புற்றது என் மனம்!.. " - 

தேவேந்திரன் குமுறினான்..

" எல்லாருக்கும் விருப்புற்றது குயில்.. ஆனால், அதுவோ பொறுப்பற்றது.. நீ அதுவாகக் கடவாய்!.. அங்குமிங்கும் அலைந்து திரிவாய்!.. "

சாபத்தினைக் கேட்டு
அதிர்ந்து நின்றான் வித்யாதரன்..

அச்சமயத்தில் அவ்வழியாக வந்த முனிவர்கள் விஷயத்தை உணர்ந்து
வித்யாதரனை ஆறுதல் படுத்தினர்..

" அஞ்ச வேண்டாம்.. காவிரிக்குத் தென்கரையில்
பராசக்தி பசு வடிவம் கொண்டு ஈசனை வழிபட்ட திருத்தலம் ஒன்றுண்டு.. அங்கே சென்று சிவ வழிபாடு செய்வாக.. அனைத்தும் நலமாகும்!.. " 

வித்யாதரன் மனம் கலங்கினாலும் ஆறுதல் கொண்டான்..

ஆருயிர் காதலிக்கு என்ன பதில் சொல்வதென்று
தெரியவில்லை..

" சிவனே..  என்று சென்று கொண்டிருந்த என்னை வம்புக்கு இழுத்து சாபம் கொடுத்தனை.. மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி.. ஆனால், "

" தேவேந்திரா!.. 
நான் சிவபூஜை செய்யும் தலத்திற்கு நீயும் வந்து
கும்பிட்டு எழுந்து குறையிரந்து நிற்பாய்!..
இதனை நினைவில் வைத்துக் கொள்வாயாக!.. "

மறுமொழி உரைத்த
வித்யாதரன் குயில் வடிவானான்.. அங்கிருந்து பறந்து விட்டான்..

குயிலாக மாறிய வித்யாதரன் வழிபட்டதனால்
குயிலேஸ்வரர் என்றும் கோகிலேஸ்வரர் என்றும்
எம்பெருமானுக்குத் திருப்பெயர் வழங்கலாயிற்று..

அம்பாள் பசுவாகி வழிபட்ட திருத்தலங்களுள்
திருக்கோழம்பமும் ஒன்று எனக் கண்டோம்..

எம்பெருமானின் ஆணைப்படி
பூமிக்கு வந்த பசு  அங்கு இங்கு என்று மேய்ந்து கொண்டிருந்த வேளையில் புற்று ஒன்றினைக் கண்டு உள்ளுணர்வினால் உந்தப்பட்டு தினமும் அதில் பாலைப் பொழிந்தது.. 

ஒருநாள் புற்றுக்குள் பாலைப் பொழிந்து கொண்டிருந்த போது பூமியினுள்ளிருந்து சுயம்புவாக சிவலிங்கம் வெளிப்பட்டது.. மேலைத் தொடர்பு இருந்த போதிலும்  பசு பதற்றமடைந்து
துள்ளியது.. அப்போது பசுவின் குளம்பு சிவலிங்கத்தின் மீது பட்டதால் தழும்பு ஏற்பட்டது..

சிவலிங்கத்தின் மேல்
பசுவின் குளம்பு தெரிவதாகச் சொல்கின்றனர்...

பின்னாளில்,
அகலிகையின் பாவத்தைக் கொட்டிக் கொண்ட இந்திரன்
கௌதம முனிவரது கடும் சாபத்தினால் காணச் சகிக்காத கோலத்துடன்
இத்தலத்திற்கு வந்தான்.. 

கோகிலேஸ்வரர் திருமுன்பு கண்ணீர் விட்டுக் கதறி அநுக்கிரகம் பெற்றதாகத் 
தல புராணம்..


ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும் திருப்பதிகம் அருளியுள்ளனர்..

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னால் -
செம்பியன் மாதேவியார் அவர்களால் எடுப்பிக்கப்பட்ட திருக்கோயில்..

அன்றைக்கு ,
பொன்னும் பொருளும் நிலமும் புலமுமாக - எத்தனை எத்தனை கோலாகலமாக
இருந்திருக்கும் - இந்தக் கோயில்!.. 

ஆனால் - இன்றைக்கு இங்கே
ஒரு கால பூஜை மட்டுமே நிகழ்வதாகத் தெரிகின்றது..

கோழம்பம் எனும் இத்தலம் - இன்றைய நாளில்
குழம்பியம், கொளம்பியம் என்றெல்லாம்  மருவி விட்டது..

கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநீலக்குடியில் இருந்து 2 கி.மீ.
திருவாவடுதுறையில் இருந்து 2 கி.மீ..

கும்பகோணம் - மயிலாடுதுறை இரயில் தடத்தில் நரசிங்கன் பேட்டை நிலையத்திலிருந்து 5 கி.மீ.

சோழ நாட்டின் காவிரி தென்கரையில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் முப்பத்தைந்தாவது சிவத்தலமாக விளங்குகின்ற -
திருக்கோழம்பத்தின் அருகில் உள்ள சிவாலயங்கள்..

திருநீலக்குடி (2 கிமீ) 
திருவாவடுதுறை (2 கிமீ) 
தென்குரங்காடுதுறை
(ஆடுதுறை - 3 கிமீ) 
திருவைகல் மாடக் கோயில் 
(4 கிமீ) 
தேரழுந்தூர் (5 கிமீ) 
திருகோடிக்கா (5 கிமீ)
திருகஞ்சனூர் (6 கிமீ) 
திருமங்கலக்குடி (7 கிமீ) 
திருத்துருத்தி (குத்தாலம் 6 கிமீ) 
திருவேள்விக்குடி  (8 கிமீ) 

எனினும், திருக்கோழம்பம் உள்ளடங்கிய கிராமம் என்பதால் சாலைகள் எப்படி இருக்கின்றன என்று தெரியவில்லை..


மையான கண்டனை மான்மறி ஏந்திய
கையானைக் கடிபொழிற் கோழம்ப மேவிய
செய்யானைத் தேனெய் பாலுந்திகழ்ந் தாடிய
மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே!..(2/13)
-: திருஞானசம்பந்தர் :-

சமர சூரபன் மாவைத் தடிந்தவேற்
குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய
அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள்
அமர லோகம தாளுடை யார்களே.. (5/64)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான அறிமுகம்.  தமிழ்நாட்டில்தான் எத்தனை எத்தனை திருத்தலங்கள்....

    பதிலளிநீக்கு
  2. ஓம் நம சிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  3. திருக்கோழம்பம் வரலாறு அறிந்தோம். வணங்குகின்றோம் இறை பாதம்.

    பதிலளிநீக்கு
  4. சுவாரஸ்யமான பெயர்க்காரணக் கதை. இது வரை அறியாத கதை. மற்றும் அறிந்திராத தலம் திருக்கோழம்பம் அதன் தலவராறும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. திருக்கோழம்பம் தலவரலாறை மிக அழகாய் சொன்னீர்கள், கோவில் படங்கள் எல்லாம் அருமை.
    முன்பு பார்த்த இடங்கள். திருத்தலத்தை நினைத்து வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  6. கேட்டறியாத கோயில்களில் இதுவும். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..