செவ்வாய், ஜனவரி 31, 2023

சுந்தரத் தமிழ் 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 17
   செவ்வாய்க்கிழமை

-:நன்றி:-
தலவரலாறு/திருப்பதிகம்: 
பன்னிரு திருமுறை
படங்கள்: விக்கி..

அன்பின் நெஞ்சங்கள் 
அனைவருக்கும் வணக்கம்..

நோவுளார் வாயுளான்.. - என்பது ஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்கு..

அப்படியான இறைவனின்  திருவருளால் அனைவரும் சகல நோய் நலிவில் இருந்தும் விடுபட வேண்டும் என , வேண்டிக் கொண்டு பிணிகள் தீர்வதற்கான பிரார்த்தனைத் திருப் பதிகங்களை - அடுத்து வரும்  
பதிவுகளாகத் தங்கள் முன்பாக 
அன்புடன் சமர்ப்பிக்கின்றேன்..


சென்னையில் அம்பத்தூர் ஆவடியை அடுத்து அமைந்துள்ள தலம் - திருமுல்லைவாயில்..

கிருத யுகத்தில் ரத்தின புரமாகவும் திரேதா யுகத்தில் வில்வ வனமாகவும் துவாபர யுகத்தில் சண்பக  வனமாகவும் கலி யுகத்தில் முல்லை வனமாகவும் விளங்குகின்ற தலம்..

இத்தலத்தில் -
தனது யானையின் கால்களில் முல்லைக்கொடி சிக்கிக் கொண்டதனால் மன்னன் தொண்டைமான் வாளெடுத்து வீசினான்.. 

அப்போது பூமிக்குள்ளிருந்து பொங்கும் குருதியுடன் சுயம்பு லிங்கம் வெளிப்பட்டது.. பதறித் துடித்து தன்னை மாய்த்துக் கொள்ள முயன்ற மன்னனுக்கு இறைவன் திருக்காட்சி நல்கினன்..

வெட்டப்பட்ட இடத்தில் சந்தனக்காப்பு இட்டு வழிபட்டனர்.. 

இன்று வரை நாளும் சந்தனக் காப்புடனே திகழும் ஈசன் இத்தலத்தில் தான்..

நித்திய அபிஷேகங்கள்  ஆவுடையாருக்கு மட்டுமே.
வருடத்திற்கு ஒருமுறை - சித்திரை சதயத்தில் சந்தனக் காப்பு களையப்பட்டு மீண்டும் புதிய சந்தனம் பூசப் படுகின்றது.

இத்தலத்தில்  கிழக்கு நோக்கியதாக நந்தி..


திரு ஆரூரில் பரவை நாச்சியாரது கைத்தலம் பற்றிய சுந்தரர் தொண்டை மண்டலத்திற்குச் சென்ற போது மேலை விதியானது -  அவருக்கு திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணம் முடித்து வைத்தது..

திரு ஒற்றியூர் கோயிலில் மகிழ மரத்தின் கீழிருந்து
சங்கிலி நாச்சியாருக்கு சுந்தரர் சத்தியம் செய்து கொடுத்தார் - உன்னைப் பிரியேன்!.. - என்று..

செய்து கொடுத்த சத்தியத்தை மீறி,
நாச்சியாரைப் பிரிந்து  திரு ஆரூர் பெருமானைத்  தரிசிக்கும் ஆவலுடன் சுந்தரர் புறப்பட்ட வேளையில் - இரு கண்களிலும் பார்வையை இழந்தார்..

திடுக்கிட்ட சுந்தரர், ஒற்றியூர்ப் பெருமானை நினைந்து, திருப்பதிகம் பாடித் துதித்தார். 

திரு ஆரூர் சென்றே வேண்டும்  - என்ற உறுதியுடன் நடந்தார்.. சாலையில் செல்வோர்  வழி காட்ட திருமுல்லை வாயிலை அடைந்தார்..

தட்டுத் தடுமாறி இங்கு வந்து சேர்ந்த சுந்தரர்
மாசிலாமணி நாதரையும் கொடியிடை நாயகியையும் பதிகம் பாடித் துதித்தார்..

தனது குறைதனைச் சொல்லி மனமுருகி வணங்கினார்..

காஞ்சியை நோக்கி நடந்தார்.. 

அம்பிகை அவரைப் பின் தொடர்ந்தாள்..

ஏன்?.. எதற்கு!..

அதனை அடுத்த பதிவில் காண்போம். 
***

சுந்தரர் இத்திருப் பதிகம் முழுவதும் -
படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே!.. - என்று முறையிடுவதால் துயர்  களையும் பதிகம் என்று போற்றப்படுகின்றது..

சங்கிலிக்காக எனது கண் கொண்ட பண்பனே!.. - என்று இறைவனிடம் குறைபாட்டுக் கொள்ளும் சுந்தரர் திருப்பதிகத்தில் தலபுராணத்தையும் குறித்தருள்கின்றார்..
***
சோழ நாட்டில் சீர்காழிக்கு அருகில் திருமுல்லை வாயில் என்று மற்றுமொரு தலம் இருப்பதால், தொண்டை நாட்டுத் தலமாகிய இது - வட திரு முல்லை வாயில் எனவும் 
சோழ நாட்டுத் தலம் தென் திரு முல்லை வாயில்
எனவும் குறிக்கப் படுகின்றன..

சீர்காழிக்கு அருகிலுள்ள  திருமுல்லை வாயில்
திருஞானசம்பந்தப் பெருமானால் பாடப் பெற்றுள்ளது..
***
தலம்
வட திருமுல்லைவாயில


இறைவன்
ஸ்ரீ மாசிலாமணி நாதர்

அம்பிகை
ஸ்ரீ கொடியிடை நாயகி

தலவிருட்சம் முல்லை
தீர்த்தம்
கல்யாண தீர்த்தம்

ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் 69

கஜ பிருஷ்ட மூலஸ்தானம்
திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்கு உன்
சீருடைக் கழல்கள் என்று எண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்தும்
ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 1

கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 2


விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
வெருவிட வேழம்அன் றுரித்தாய்
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் தேவர்தம் அரசே
தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்
சங்கிலிக்கா என்கண் கொண்ட
பண்பநின் அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே..3

பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்
பொறிவரி வண்டு இசை பாட
அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்
அலவன்வந் துலவிட அள்ளற்
செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 4

சந்தன வேருங் காரகிற் குறடுந்
தண்மயிற் பீலியுங் கரியின்
தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
வந்திழி பாலி வடகரை முல்லை
வாயிலாய் மாசிலா மணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 5


மற்றுநான் பெற்றது ஆர்பெற வல்லார்
வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
கொள்கையான் மிகைபல செய்தேன்
செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 6

மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
வார்குழல் மாமயிற் சாயல்
அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
அருநடம் ஆடல்அ றாத
திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்
செல்வனே எல்லியும் பகலும்
பணியது செய்வேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 7

நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
நாயினேன் தன்னைஆட் கொண்ட
சம்புவே உம்பரார் தொழு தேத்துந்
தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
தேடியான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 8


மட்டுலா மலர்கொண்டு அடியிணை வணங்கும்
மாணிதன் மேல்மதி யாதே
கட்டுவான் வந்த காலனை மாளக்
காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
செல்வனே செழுமறை பகர்ந்த
பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 9

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்
டருளிய இறைவனே என்றும்
நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்
நாதனே நரைவிடை ஏறீ
பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 10

விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்ட எம்மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
செல்வனை நாவல் ஆரூரன்
உரைதரு மாலைஓர் அஞ்சினோ டஞ்சும்
உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி
நண்ணுவர் விண்ணவர்க் கரசே.. 11

திருச்சிற்றம்பலம்

சுந்தரர் திருவடிகள் 
போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், ஜனவரி 30, 2023

தை கிருத்திகை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 16 
 திங்கட்கிழமை
கார்த்திகை நன்னாள்..

தட்சிணாயண புண்ணிய காலத்தில் 
ஆடிக் கிருத்திகையும் 
உத்தராயண புண்ணிய காலத்தில் 
தை கிருத்திகையும் 
மிகச் சிறப்பானவை..

அந்த அளவில் இன்று 
தை கிருத்திகையை முன்னிட்டு 
இன்றைய பதிவில் 
ஸ்ரீ அருணகிரி நாதர் அருளிச் செய்த 
கந்தர் அலங்காரத்தின் 
சில பாடல்கள்..


தாவடி ஓட்டு மயிலிலும் தேவர் தலையிலும் என் 
பாவடி ஏட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே.. 15

பால் என்பதுமொழி பஞ்சென்பது பதம் பாவையற் கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டைக் 
கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே.. 30


நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடிவந்த
கோள் என் செயுங் கொடுங் கூற்று என் செயுங் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமுந்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.. 38

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்
கால்பட் டழிந்தது இங்கு என்தலை மேல் அயன் கையெழுத்தே..40


ஆலுக்கு அணிகலம் வெண்தலை மாலை அகிலம் உண்ட
மாலுக்கு அணிகலம் தண்ணந் துழாய் மயில் ஏறும் ஐயன்
காலுக்கு அணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே.. 62


விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுருகா எனும் நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலும் செங் கோடன் மயூரமுமே.. 70
-: கந்தர் அலங்காரம் :-

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
வீரவேல் முருகனுக்கு அரோகரா..
***

ஞாயிறு, ஜனவரி 29, 2023

அன்பின் வழி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 15
 ஞாயிற்றுக்கிழமை


இன்றொரு காணொளி.
(நன்றி:Fb)


இதுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப 
நல்ல மனசு வேணுங்க!..

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு 
என்புதோல் போர்த்த உடம்பு.. (80)

வாழ்க வையகம்
வாழ்க அன்புடன்..
***

சனி, ஜனவரி 28, 2023

குழந்தையும்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 14
சனிக்கிழமை


இன்று
Fb ல் கிடைத்த 
அழகிய காணொளிகள்..



நலம் எங்கும் நிறையட்டும்..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..

ஓம் ஹரி ஓம்
***

வெள்ளி, ஜனவரி 27, 2023

தை வெள்ளி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 13
  இரண்டாவது
வெள்ளிக்கிழமை

அன்னையிடம் ஒரு முறையீடு..


தெரிந்தோ அலாது தெரியாமலோ இவ்வடிமை
செய்திட்ட பிழை இருந்தால் சினம் கொண்டு அது ஓர்
கணக்காக வையாது நின் திருஉளம் இரங்கி மிகவும்
பரிந்து வந்து இனியேனும் பாழ் வினையில் ஆழ்ந்து
இன்னல் படாது நல்வரம் அளித்துப் பாதுகாத்து அருள் செய்ய
வேண்டும் அண்டாண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி
புரந்தரன் போதன் மாதவன் ஆகியோர்கள் துதி புரியும்
பதாம்புய மலர்ப் புங்கவி புராந்தகி புரந்தரி 
புராதனி புராணி திரிபுவனேசுவரி
மருந்தினும் நயந்த சொல் பைங்கிளி வராகி எழில்
வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி
சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே!..


பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சமு தாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே... 5


சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத் தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.. 8


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்ப துன்னை
என்றும் வணங்குவ துன்மலர்த் தாள் எழு தாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்
தன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே.. 10


கண்ணியது உன்புகழ், கற்பது உன் நாமம்
கசிந்து பத்தி பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்
பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து
நான் முன்செய்த புண்ணியம் ஏது? என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.. 12
-: அபிராம பட்டர் :-
-::-
ஓம் சக்தி ஓம் 
சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***


வியாழன், ஜனவரி 26, 2023

எந்தையும் தாயும்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 12
 வியாழக்கிழமை
26 ஜனவரி 2023

தாய்த் 
திரு நாட்டின் குடியரசு நாள்..

அனைவருக்கும்
குடியரசு தின
நல்வாழ்த்துகள்..


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!..


இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னியராகி நிலவினிலாடிக்
களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்
போந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!..


மங்கையராய் அவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்ற முதூட்டித்
தழுவிய திந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடல் பூந் துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!..
-: மகாகவி :-

வாழ்க பாரதம்
வளர்க தமிழகம்..
***

புதன், ஜனவரி 25, 2023

சிந்தனைக்கு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று தை 11 
புதன்கிழமை


Whatsapp ல் கிடைத்த செய்தி இது.. 


இப்படியும் தமிழகத்தில்
நடந்திருக்கின்றது..

பலரும் அறிந்து கொள்ளும்படிக்கு 
பதிவு செய்தவருக்கு நன்றி..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..
***

செவ்வாய், ஜனவரி 24, 2023

ஸ்ரீ வைத்ய நாதம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று தை 10
செவ்வாய்க்கிழமை.

இன்றைய பதிவில்
ஸ்ரீ வைத்யநாத 
 அஷ்டகம்..

இணையத்தில் இருந்து பெற்ற இதனை - பல நிலைகளில் பொருள் கண்டு பதிவு செய்துள்ளேன்..


ஸ்ரீ வைத்யநாத அஷ்டகம்

ஸ்ரீராம சௌமித்ரி ஜடாயு வேத
ஷடாந நாதித்ய குஜார்ச்சிதாய
ஸ்ரீ நீலகண்டாய  தயாமயாய
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய.. 1

ஸ்ரீ ராம லக்ஷ்மணன்,  ஜடாயு, ஸ்ரீ சுப்ரமணியன், சூரியன், அங்காரகன் ஆகியோரால் வணங்கப்படுபவர். வேதங்களால் போற்றப்படுபவர். நீல கண்டனும்  கருணையின் வடிவமுங் கொண்டு வைத்யர்களின்  தலைவனாகவும் விளங்கும் சிவபெருமானை  வணங்குகிறேன்.. 
 
கங்கா ப்ரவாஹேந்து ஜடா தராய
த்ரிலோசநாய ஸ்மரகால ஹந்த்ரே
ஸமஸ்த தேவைரபி பூஜிதாய
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய.. 2

கங்கையுடன் சந்திரனைத் 
தலையில் அணிந்தவராகவும், மூன்று கண்களை உடையவராகவும்  காலனை  அழித்தவராகவும், சகல தேவர்களாலும் வணங்கப்படுபவராகவும் வைத்யர்களின்  தலைவனாகவும் விளங்கும் சிவபெருமானை  வணங்குகிறேன்..

பக்த ப்ரியாய த்ரிபுராந்தகாய
பிநாகிநே துஷ்டஹராய நித்யம்
ப்ரத்யக்ஷ லீலாய மநுஷ்ய லோகே
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய.. 3

தனது பக்தர்களிடம் விருப்பம் உடையவரும், திரிபுர அசுரர்களை  அழித்தவரும் பிநாகம் எனும் வில்லை ஏந்தியவரும்  தீயவர்களை  அழிப்பவரும் நாளும்
உலகில் பல திருவிளையாடல்களை நிகழ்த்துபவரும் வைத்யர்களின் தலைவனாகத் திகழ்பவரும் ஆகிய சிவபெருமானை வணங்குகிறேன்..


ப்ரபூத வாதாதி ஸமஸ்தரோக
ப்ரணாச கர்த்ரே முநிவந்திதாய
ப்ரபாகரேந்த் வக்நி விலோச நாய
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய.. 4

வாதம், மூட்டுவலி  போன்ற பெரும் நோய்களைக் குணப்படுத்துபவர் , மகா முனிவர்களால் வணங்கப்படுபவர். 
சூரிய, சந்திர, அக்னி மூன்றையும் கண்களாகக் கொண்டிருப்பவர். வைத்யர்களின் தலைவனாகத் திகழ்பவர் ஆகிய சிவபெருமானை வணங்குகிறேன்..

வாக் ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீநஜந்தோ
வாக் ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி முகப்ரதாய
குஷ்டாதி சர்வோன் னத ரோக ஹந்த்ரே
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய.. 5

பேசுதற்கு கேட்பதற்கு பார்ப்பதற்கு நடப்பதற்கு ஆசிர்வதிப்பவரும் , தொழுநோய் போன்ற பெரு நோய்களைக் குணப்படுத்துபவரும் 
வைத்யர்களின் தலைவரும் ஆகிய சிவபெருமானை வணங்குகிறேன்..

வேதாந்த வேத்யாய ஜகன்மயாய
யோகீச்வரத்யேய பதாம்பு ஜாய
த்ரிமூர்த்தி ரூபாய ஸஹஸ்ர நாம்நே
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய.. 6

வேதங்களின் மூலம் அறியக் கூடியவர்,  
பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பவர்.
தாமரைப் பாதங்களை உடையவர். மகா முனிவர்களால் தியானிக்கப்படுபவர். மும்மூர்த்திகளின்
வடிவானவர். ஆயிரம் திருப்பெயர்களை உடையவர். வைத்யர்களின் தலைவர் ஆகிய சிவபெருமானை வணங்குகிறேன்..

ஸ்வதீர்த்த ம்ருத் பஸ்ம ப்ருதங்க பாஜாம்
பிசாச துக்கார்தி பயாபஹாய
ஆத்மஸ்வரூபாய சரீர பாஜாம் 
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய.. 7

 கோயிலான உடலில்
ஆத்ம ஸ்வரூபமாக குடிகொண்டிருந்து
பிசாசுகள், துன்மார்க்க துக்கங்கள் இவற்றால் ஏற்படும் பயம் மற்றும் துன்பங்களை நீக்குபவராக
விளங்கும் சிவபெருமானின்,  திருக்கோயில் புனித திருநீற்றையும்,  வேப்ப மரத்தினடியில் உள்ள மண்ணையும் வணங்குவதோடு வைத்யர்களின் தலைவர் ஆகிய சிவபெருமானையும் வணங்குகிறேன்..

ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷ த்வஜாய
ஸ்ரக் கந்த பஸ்மாத்ய பி சோபிதாய
ஸூபுத்ர தாராதி ஸூபாக்ய தாய
ஸ்ரீ வைத்யநாதாய நம சிவாய.. 8

திருநீறு, நறுமணம் மிக்க மலர்களுடன் திகழும் காளைக் கொடி உடைய ஸ்ரீ நீலகண்டனாகிய வைத்யநாதர் நல்ல மனைவி, சந்ததி மற்றும் பிற பாக்கியங்களை அருள்பவர்.
வைத்யர்களின் தலைவர் ஆகிய பெருமானை எனது மனதார வணங்குகின்றேன்..


பாலாம்பிகே ஸ வைத்யே ஸ பவரோக ஹரேதி ச
ஜபேந் நாம த்ரயம் நித்யம் மஹாரோக நிவாரணம்..

பிறவிப் பிணியைத் தீர்த்தருளும்
ஸ்ரீ பாலாம்பிகை உடனாகிய ஸ்ரீ வைத்ய நாதப் பெருமானை தினமும் மூன்று வேளையும் துதித்து வணங்குபவர் எல்லா நோய்களில் இருந்தும் நலம் பெறுவர்..

ஸ்ரீ வைத்யநாத அஷ்டகம் நிறைவு..
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், ஜனவரி 23, 2023

திருப்பதிகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 9  
திங்கட்கிழமை

ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் 
அருளிச் செய்த திருத்துருத்தி
திருப்பதிகம்

திருத்தலம்
திருத்துருத்தி
திருவேள்விக்குடி
(குத்தாலம்)


இறைவன்
ஸ்ரீ உத்தாலவேதீஸ்வரர்
சொன்னவாறு அறிவார்


அம்பிகை
ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி
அரும்பன்ன வனமுலையாள்

தலவிருட்சம்
உத்தால மரம்

தீர்த்தம்
காவிரி, 
சுந்தர தீர்த்தம்
பத்ம தீர்த்தம்

ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் 74

தோல் நோய் தீர்ந்த
திருப்பதிகம்

நன்றி:
பன்னிரு திருமுறை
படங்கள்: திருத்துருத்தி Fb


மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக் கரையொடும் திரை கொணர்ந்து எற்றும்
அன்னமாம் காவிரி அகன் கரை உறைவார் அடி இணை தொழுதெழும் அன்பராம்  அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக் குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
என்னை நான் மறக்குமாறு எம் பெருமானை என்னுடம்படும் பிணி இடர் கெடுத்தானை.. 1

மின்னலுடன் கூடிய கரிய மேகங்கள் பொழிந்த மழை நீர்
ஓசையுடன் அருவிகளாகப்  பாய்ந்து வழிய -  அலைகளைக் கொணர்ந்து கரையோடு மோதியபடி ஓடி வருகின்ற அன்னமாம் காவிரி நதியின், அகன்ற கரையில் திருத்துருத்தியிலும் திருவேள்விக் குடியிலும்  வீற்றிருப்பவராகிய தலைவனும் தமது அடியிணையைத் தொழுது எழுகின்ற அன்பின் அடியார்கள் வேண்டிக் கொண்ட வகைகளை எல்லாம்    நிறைவேற்றி
அருள்கின்றவரும் என்னை வருத்திய பிணியைப் போக்கியவரும் ஆகிய எம்பெருமானை குற்றமுடையேனும் நாயினும் கடையேனும் ஆகிய யான் மறப்பதற்குக் காரணம் யாது!..

கூடுமாறுள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி
மாடு மாகோங்கமே மருதமே பொருது மலை எனக் குலைகளை மறிக்குமா றுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
பாடுமாற றிகிலேன் எம்பெருமானை பழவினை உள்ளன பற்றறுத் தானை.. 2

கூடத் தக்க  ஆறுகளோடு கூடியும் , அவை வேறாகக் காணப்படாதவாறு கோத்தும் கொய்யும் பருவத்தை அடைந்த கொல்லைத் தினைக் கதிர்களையும் நெற் கதிர்களையும் சிதற அடித்துக் கொண்டு இரு பக்கங்களிலும் கோங்கு மருது முதலிய மரங்களை முறித்தும்,  மலை தகர்ந்தாற் போல பழக் குலைகளை வாரிக் கொண்டும்
கரைகளைத் தகர்த்துக் கொண்டும் பாய்கின்ற  காவிரி ஆற்றின் அகன்ற கரையில் உள்ள திருத்துருத்தியிலும் திருவேள்விக் குடியிலும்
வீற்றிருப்பவராகிய தலைவரும் , எனது பழவினைகளை அடியோடு தொலைத்தவருமாகிய எம்பெருமானைப் பாடும் வகையினைக் குற்றம் உடையேனும் நாயினும் கடையேனும் ஆகிய யான்   அறிகிலேன்!.. 


கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பார் கொழுங் கனிச் செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி
புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
செல்லு மா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
சொல்லுமாற றிகிலேன் எம்பெருமானை தொடர்ந்தடும் 
கடும்பிணித் தொடர்வ றுத்தானை.. 3

பகைவரைக் கொல்லுகின்ற பெரிய யானையின்
தந்தங்களையும் , மணம் பொருந்திய செழுமையான கனிகளையும் வாரிக் கொண்டு, அவற்றின் இயல்பினைப் பொருந்தி வந்து வலம் செய்து வணங்கித் தவம் புரிகின்ற இல்லறத்தாரும் துறவறத்தாரும் விடியற் காலையில் வந்து மூழ்குமாறு ஓடுகின்ற காவிரி ஆற்றின் பெரிய கரையில் உள்ள திருத்துருத்தியிலும் திருவேள்விக் குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் என்னைத் தொடர்ந்து வருத்திய கடும் பிணியினை  அறுத்தவரும் ஆகிய எம்பெருமானை , குற்றமுடையேனும் நாயினும் கடையேனும் ஆகிய யான் சொல்லும் வகையை அறிகிலேன்!..

பொறியும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொழிந்திழிந்த ருவிகள் புன்புலம் கவர
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடலுற விளைப்பதே கருதி தன்கை போய்
எறியும் மா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
அறியுமாற றிகிலேன் எம்பெருமானை அருவினை உள்ளன ஆசு அறுத்தானை.. 4

அருவிகள் கொண்டு வந்து  போட்ட சந்தனக் கட்டைகளாலும் , அகிற் கட்டைகளாலும்  புன்செய் நிலம் மூடிக் கொள்ள, சிறந்த மிளகு வாழை இவற்றை தள்ளிக் கொண்டு சென்று கடலில்  சேர்ப்பதையே கருத்தாகக் கொண்டு தன் இரு கரைகளிலும் அலை வீசியபடிச் செல்கின்ற காவிரியாற்றின் கரையில் உள்ள திருத்துருத்தியிலும் திருவேள்விக் குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவனும் எனது அரு வினைகளாகிய  குற்றங்களைப் போக்கினவரும் ஆகிய எம்பெருமானை குற்றமுடையேனும் நாயினும் கடையேனும் ஆகிய யான் அறியும் வகையை அறிகிலேன்!..


பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும் பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
இழிந்திழிந் தருவிகள் கடும் புனல் ஈண்டி, எண்திசை யோர்களும் ஆட வந்திங்கே
சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெருமானை உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை.. 5

 மும்மதங்களைப் பொழிகின்ற  யானையின் தந்தங்களையும்  வேங்கை மரத்தில்
பொன் போல மலர்கின்ற நல்ல மலர்களையும் தள்ளிக் கொண்டு அருவிகள் பலவும் வீழ்வதலால் மிக்க நீர் நிரம்பி எட்டுத் திக்கில் உள்ளவர்களும் வந்து மூழ்கிக் களிக்குமாறு  சுழித்துக் கொண்டு பாய்கின்ற காவிரியாற்றின் கரையினில் உள்ள திருத்துருத்தியிலும்  திரு வேள்விக் குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவனும், என்னைப் பற்றியிருந்த நோயை இன்றே முற்றாக நீக்கியவனும் ஆகிய எம்பெருமானை, குற்றமுடையேனும் நாயினும் கடையேனும் ஆகிய யான் பிதற்றுதலை ஒழிந்திலேன்!..

புகழும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும் நன் மலர் உந்தி
அகழும் மா அருங்கரை வளம்படப் பெருகி ஆடுவார் பாவந் தீர்த்தஞ்சனம் அலம்பி,
திகழும் மா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
இகழுமாறறிகிலேன் எம்பெருமானை இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை.. 6

புகழ்தற்குரிய சந்தனம் அகிற் கட்டைகள் பொன், மணி ஆகிய இவைகளை வாரிக் கொண்டும் நல்ல மலர்களை அள்ளிக் கொண்டும் தன்னால் அகழப்படுகின்ற பெருங் கரைகளில் செல்வம் பெருகுமாறு  செய்தும் தன்னில்
முழுகுகின்றவர்களது பாவங்களைப் போக்கியும் மங்கையர் கண்களில் தீட்டிய மையைக் கழுவியும் செல்கின்ற காவிரி ஆற்றின் கரையில் விளங்குகின்ற 
திருத்துருத்தியிலும்  திருவேள்விக் குடியிலும்
வீற்றிருப்பவராகிய தலைவனும் என்னை இழிவடையச் செய்த நோயை இப்பிறப்பில் தானே ஒழிக்க வல்லவனும் ஆகிய எம் பெருமானை குற்றமுடையேனும்
 நாயினும் கடையேனும்
 ஆகிய யான் இகழும்படிக்கு நினைய மாட்டேன்!..


வரையின் மாங்கனி யொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது
கரையும் மா கருங்கடல் காண்பதே கருத்தாய் காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்
விரையும் மா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
உரையுமா றறிகிலேன் எம்பெருமானை உலகறி பழவினை அற ஒழித்தானை.. 7

அளவில்லாதபடிக்கு  - மா, வாழைப் பழங்களை வீழ்த்தியும் கிளைகளோடு சாய்த்தும் , மரா மரங்களை முறித்தும்  கரைகளை அரித்தும் கரு நிறக் கடலைக் காண்பதையே கருத்தாகக் கொண்டு மூங்கில்களையும் மயில் தோகைகளையும் சுமந்து கொண்டு ஒளி மிக்க முத்துக்கள் இரு பக்கங்களிலும் தெறிக்கும்படி விரைந்து ஓடுகின்ற  காவிரியாற்றின் கரையில் உள்ள
திருத்துருத்தியிலும்  திருவேள்விக் குடியிலும்
  வீற்றிருப்பவராகிய தலைவனும் உலகறிந்த எனது பழவினைகளை முற்றிலும் நீக்கினவரும் ஆகிய எம்பெருமானை  குற்றமுடையேனும்  நாயினும் கடையேனும் ஆகிய யான் துதிக்கும் வழியை அறிகின்றிலேன்!..

ஊருமா தேசமே மனம் உகந்து உள்ளி புள்ளினம் பல படிந்தொண் கரை உகள
காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்தொண் பளிங்கு இடறி
தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
ஆருமாற றிகிலேன் எம்பெருமானை அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை.. 8

பற்பல ஊர்களில் உள்ள மக்களோடு இந்த நாடு முழுதிலும் உள்ளவர்களும்  மனம் விரும்பி நினைக்கும் படியும்  பறவைகள் கூட்டமாக மூழ்கி எழுந்து அழகிய கரைகளிலுள்ள சோலைகளில் பறந்து திரியவும் நீர் நிறைந்த கருங் கடலைக் காண்பதையே கருத்தாகக் கொண்டு கவரி மானின் முடிகளைச் சுமந்தபடி ஒளி மிகுந்த பளிங்குக் கற்களை உடைத்துத் தள்ளியும் நானிலங்களிலும் உள்ள பலவித பொருள்களையும் கண்டு செல்கின்ற  காவிரியாற்றின் கரையில் உள்ள
திருத்துருத்தியிலும்  திருவேள்விக் குடியிலும்
  வீற்றிருப்பவராகிய தலைவனும் எனக்கு இனிவரும் பிறவியில் வரக் கூடியதாகிய துன்பத்தை இப்பிறப்பில் தானே களைந்து ஒழித்தவரும் ஆகிய எம்பெருமானை  குற்றமுடையேனும் , நாயினும் கடையேனும் ஆகிய யான் துய்க்கும் வழியினை அறிகிலேன்!..


புலங்களை வளம்படப் போக்கறப் பெருகி பொன்களே சுமந்தெங்கும் பூசல் செய்தார்ப்ப
இலங்குமார் முத்தினோடு இனமணி இடறி இருகரைப் பெரு மரம் பீழ்ந்து கொண் டெற்றி
கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் விலங்குமாற றிகிலேன் எம்பெருமானை மேலை நோய் இம்மையே வீடு வித்தானை.. 9

வயல்கள் வளம்பட  நீர் பெருக்கி அதனால் எல்லாக் குற்றங்களும் நீங்கவும்  பொற் கட்டிகளை  உருட்டிக் கொண்டும் ஒளி மிக்க  முத்துக்களையும் பலவகை மணிகளையும் வாரி எறிந்தபடி இருகரைகளிலும் உள்ள பெரிய மரங்களை முறித்துத் தள்ளி கரையைத் தாக்கி அவ்விடத்தில் உள்ளவர்கள் ஆரவாரம் செய்யும்படிக்கு  கலங்கி ஓடுகின்ற காவிரியாற்றின் கரையில் உள்ள
திருத்துருத்தியிலும்  திருவேள்விக் குடியிலும்
  வீற்றிருக்கும் தலைவனும் இனிவரும் பிறப்பில் எனக்கு வரக்கூடியதாகிய துன்பத்தை இப்பிறப்பில் தானே நீக்கியவரும் ஆகிய எம்பெருமானை குற்றமுடையேனும்  நாயினும் கடையேனும் ஆகிய யான் நீங்கிச் செல்லும் வழியினை நினைய மாட்டேன்..


மங்கை ஓர்கூறு கந்து ஏறு கந்தேறி மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற
அங்கையான் கழலடி அன்றி மற்றறியான் அடியவர்க் கடியவன் தொழுவன் ஆரூரன்
கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளைச் சேர்த்திய பாடல்
தங்கையால் தொழுது தம் நாவின் மலர் கொள்வார் தவநெறி சென்றம ருலகம் ஆள்பவரே.. 10

மங்கையாகிய உமாதேவியை ஒருபாகத்தில் வைத்து இடப வாகனத்தில் விரும்பி வருபவரும் மாறுதலை  உடைய முப்புர அசுரர்களை நீறுபட அழித்த கரங்களை உடையராகிய எம்பெருமானது கழலடிகளையன்றி வேறொன்றை அறியாதவன் ஆகியும் அவனுக்கு அடியவனாகியதுடன்
அவன் அடியார்க்கும் அடியவன் ஆகிய நம்பி ஆரூரன் கங்கையைப் போன்ற  காவிரியாற்றின் கரையில் உள்ள
திருத்துருத்தியிலும்  திருவேள்விக் குடியிலும்
  வீற்றிருக்கின்ற தலைவனுக்குச் செய்வித்த இப்பாடல்களை - தங்கள் கையால் தொழுது  நாவிற் கொள்பவர்கள் தவநெறியில்  சென்று அமர லோகத்தை ஆள்வார்களே!..

திருச்சிற்றம்பலம்


சுந்தரர் திருவடிகள் போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஜனவரி 22, 2023

திருத்துருத்தி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 8
  ஞாயிற்றுக்கிழமை

சோழநாட்டில் காவிரியின் முப்பத்தேழாவது தென்கரைத் தலம் - திருத்துருத்தி/ வேள்விக்குடி..


திருத்துருத்தி என்பது தலம். 

இன்றைக்கு மக்கள் வழக்கில் குத்தாலம் என்று வழங்கப்படுகின்றது..

ஆற்றின் நடுவில் இயற்கையாய் அமையும் திட்டுகளுக்கு பழந்தமிழில் 'துருத்தி' எனப் பெயர்..  

 ஆற்றின் இடைக்குறை - துருத்தி என்று குறிக்கப்படுகின்றது..

இத்தலமும் ஆதியில் ஆற்றின் நடுவே இடைக்குறை என்று அமைந்ததால் துருத்தி என்றே பெயர் பெற்றது. 

முன்னொரு காலத்தில் கோயிலின் இருபுறம் சென்ற காவிரி தற்போது கோயிலின் வடபுறமாகச் செல்கின்றது.

உத்தாலம் எனும் ஒருவகை ஆத்தி மரம் தான் இங்கு தல விருட்சம்.. 


உத்தால மரத்தின் பூக்கள்


ஆதலின் உத்தால வனம்..  இதுவே மருவி குத்தாலம் என்றாயிற்று.


இறைவன்
உக்தவேதீஸ்வரர் சொன்னவாறு அறிவார்
கல்யாண சுந்தரேஸ்வரர்


அம்பிகை
அமிர்த முகிழாம்பிகை
மிருது முகிழாம்பிகை 
பரிமள சுகந்த நாயகி அரும்பன்ன வன முலையாள்..

மேற்கு நோக்கி சிவசந்நிதி விளங்கும் திருக்கோயில்..

உமையாம்பிகை தவம் செய்த திருத் தலங்களுள் இதுவும் ஒன்று..

பரத மகரிஷி தமக்குக் குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி - என, மகளாகத் தோன்றியருளினாள் அம்பிகை.. 

இறைவனைப் பூஜித்த அம்பிகைக்குக் காட்சி தந்த இறைவன் வாஞ்சையுடன் அவளது கரத்தினைப் பற்றியபோது -  ஈசனிடம்,

தனது பெற்றோர் மகிழும்படிக்குத் தன்னை - விதிமுறைப்படி மணங்கொள்ளுமாறு வேண்டிக் கொண்டாள் அம்பிகை.. 

இறைவனும் அதற்கிசைந்து, " நாம் வகுத்த விதியின்படி  நாமே நடந்து உன்னை மணங்கொள்வோம் - என்று அருள்புரிந்தார்.. 

இதனால் இறைவனுக்கு 
" சொன்னவாறு அறிவார் " என்ற திருப்பெயர் அமைந்தது..

ஈசன் திருக் கயிலையில் இருந்து இங்கு எழுந்தருளிய போது குடையாக வந்த வேதமே உத்தால மரமாயிற்று என்பர்.. 


உத்தால மரத்தின் நிழலில் ஈசனின் திருப்பாதுகைகள் அமைந்துள்ளன..

காசியபர், ஆங்கீரசர், கௌதமர், வசிஷ்டர், மார்க்கண்டேயர், புலஸ்தியர், அகஸ்தியர் - ஆகிய சப்தரிஷிகளும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்..


திருமணத் திருத்தலம் என்பதால் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி உடனாகிய கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபட திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்..


உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்துமினோ
கன்னியை ஒருபால் வைத்துக் கங்கையைச் சடையுள் வைத்துப்
பொன்னியின் நடுவு தன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.. 4/42/3

திருநாவுக்கரசு ஸ்வாமிகளின் மேற்கண்ட திருப்பாடல் மூலமாக பொன்னி நதியின் நடுவில் கோயில் இருந்ததை நாம் அறிய முடிகின்றது..

சமயப் பெருமக்கள் நால்வராலும் ஏனைய சான்றோர்களாலும் பாடப் பெற்ற சிறப்பினை உடையது இத்தலம்..

சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது அவரைத் தோல் நோய் பற்றி இருந்தது..

வடக்கில் இருக்கும் சுந்தர தீர்த்தத்தில்  நீராடி எழுந்தபோது அவரது தோல் நோய் முற்றிலும் நீங்கி சரீரம் புதுப் பொலிவுடன் இருந்தது..

இத்தலத்தில் சுந்தரர் அருளிச் செய்த திருப்பதிகம் தோல் நோய் நீக்கிய திருப்பதிகம் என்று வழங்கப்படுகின்றது..

திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து பார்வையை இழந்த சுந்தரர் மீண்டும் பார்வையைப் பெறும் வரையில் தலங்கள் தோறும் அருளிய திருப்பதிகங்கள் கல்லையும் கரைப்பன..

அவற்றைப் பின்னொரு பதிவினில் காண்போம்..

இத்திருக்கோயிலைக் கருங்கல் கொண்டு திருப்பணி செய்தவர் கண்டராதித்த சோழரின் பட்டத்தரசியும்
மதுராந்தக சோழரது தாயும் ஆகிய செம்பியன் மாதேவியார்..


இத்திருக்கோயில் தருமபுர ஆதீனத்தின்  சீர்மிகு நிர்வாகத்தில் உள்ளது..

தஞ்சாவூர் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது..

அனைத்து பேருந்துகளும் குத்தாலத்தில் நின்று செல்கின்றன..

மயிலாடுதுறையில் இருந்து இவ்வூருக்கு நகரப் பேருந்துகள் உள்ளன..

மயிலாடுதுறை -
தஞ்சாவூர் இருப்புப் பாதையில் உள்ளது குத்தாலம்..

ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது..

ஸ்ரீ சுந்தரர் அருளிச் செய்த திருப்பதிகம் நாளைய பதிவில்!..

(படங்கள்: திருத்துருத்தி Fb)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***