திங்கள், ஜூலை 11, 2022

புண்ணிய பூமி

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

சைவ சமயத்தில் செயற்கரிய செய்த அடியார்களுள் சிறப்பிடம் பெற்றவர் பேயார் என்று சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளால் சிறப்பிக்கப்பட்ட காரைக்கால் அன்னை புனிதவதியார்..

சிவாலயங்களில் நாம் தரிசிக்கும் அடியார் திருத்தொகையுள் அமர்ந்திருக்கும் பேறு பெற்றவர் இவர் ஒருவரே..

திரு ஆலங்காட்டில் இறைவனுக்காக
அம்மையார் காத்திருந்தார் என்பதால் அந்த மண்ணில் நடக்கவும் அஞ்சினார் - திருஞான சம்பந்தர் என்று பெரிய புராணம் கூறுகின்றது..

இப்படி ஞானசம்பந்தப் பெருமான் அஞ்சும்படிக்கு புனிதவதி செய்த அருஞ்செயல் தான் என்ன?..

காரைக்கால் அம்மையாகிய புனிதவதியார் செய்த அருஞ்செயல் - கணவன் கொடுத்தனுப்பி மாங்கனிகளில் ஒன்றை சிவனடியாருக்கு வழங்கி விட்டு கணவன் வந்து சாப்பிடும்போது அந்த இன்னொரு மாம்பழத்தைக் கேட்க - தனது கையில் வரவழைத்துக் கொடுத்தாரே!.. - அதுவா!..

அதன் சுவையில் மயங்கிய பரமதத்தன்
ஐயத்துடன் வினவ, கணவனின் கண் முன்னால் மீண்டும் ஒரு பழத்தை ஈசனிடம் இருந்து பெற்றுக் கொடுத்தாரே!.. அதுவா?..

மனைவியின் கையில் கிடைத்த மாங்கனி தனது கைக்கு வந்ததும் மறைந்து விட்ட அதிசயத்தினால்  அரண்டு போன பரமதத்தர் தெய்வத்தன்மை பொருந்திய புனிதவதியாருடன் இல்லறம் நடத்துதல் தகாது என, அவரைத் துறந்து பாண்டிய நாட்டிற்குச் சென்று அங்கு மீண்டும் ஒரு திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தி பெண் மகவையும் பெற்று அக்குழந்தைக்கு புனிதவதி என்றே பெயரும் சூட்டுகின்றார்.. 

விவரம் அறிந்த நல்லோர் புனிதவதியாரை அழைத்துக் கொண்டு காரைக்காலில் இருந்து மதுரைக்கு செல்கிறார்கள்.. அங்கே ஊர் எல்லையில் தங்கியபோது விவரம் அறிந்த பரமதத்தர் மனைவி மகளுடன் ஓடி வந்து புனிதவதியாரின் கால்களில் விழுந்து வணங்கி பழைய சம்பவத்தினை விவரிக்கின்றார்.. அத்துடன் இல்லாமல் நான் வணங்கும் தெய்வம் என்றும் சொல்கிறார்..


இதைக் கேட்டு அதிர்ந்த புனிதவதியார் மனம் கலங்கியவராக -

" இறைவா.. எனது கணவருடைய கருத்து இதுவானால், அவருக்காக நீ வடிவமைத்துத் தந்த எனது மேனியழகின் சதைத் திரளினை நீக்கி, நின் திருவடிகளைப் போற்றி நிற்கும் கணங்களில் ஒன்றான பேய் வடிவினை எனக்குத் தந்தருளுக!.. " என, வேண்டி நிற்க -

ஈசன் அருளால்  விண்ணுலகும் மண்ணுலகும் வணங்கும் வண்ணம் எவருக்கும் கிட்டியிராத எலும்பு உருவம் அவருக்குக் கிட்டியது..


கணவருக்கு ஆகாத அழகும் இளமையும் எனக்கு எதற்கு?.. இவை எனக்கு ஒரு பொருட்டே அல்ல!.. - என்று அழகையும் இளமையையும் துச்சமென இமைப் பொழுதில் துறந்தாரே!..

அது தான் அளப்பரிய தியாகம்!..

அத்தகைய புனித வல்லியாகிய புனிதவதியார்க்கு ஈடு இணை எவரும் இல்லை.. அவர்களது திருப்பாதம் பதிந்த புனித மண் இது!..

இறையருள் பெற்ற இணையிலா மங்கையர்கள் உலாவிய புண்ணிய பூமி இது!..  

- என்பதே ஞானசம்பந்தப் பெருமான் நமக்கு சொல்லிச் சென்றிருக்கும் செய்தி..

பேய் வடிவம் பெற்ற பின் தனது மனோ வேகத்தால் கயிலாய மாமலைக்கு ஏகினார் புனிதவதியார்..

திருக் கயிலாயத்தினைக் காலால் மிதித்தல் கூடாது எனக் கருதி, தலையால் ஊர்ந்து மேலேறிச் சென்று இறைவன் சந்நிதியை அடைந்தார்.  அம்மையாரைக் கண்டு வியந்த அம்பிகை இறைவனை நோக்கி, 
" பெருமானே!.. நம்மை நோக்கித் தலையினால் நடந்து வருகின்ற இவரது அன்பு தான் என்னே!.. " என, வினவினாள்..

பெருமானும், " இவர் நம்மைப் பேணும் அம்மை.. பேய் வடிவம் நம்மை வேண்டிப் பெற்றனள்.. " - எனச் சொல்லி, " அம்மையே.. "  என்றழைத்தார்..  அம்மையாரும்
"அப்பா.." என்று கசிந்துருகி இறைவன் இறைவியின் தாள் பணிந்து வணங்கினார்..

இறைவன் அம்மையாரை நோக்கி, " நீ பெறக் கருதுவது என்ன?.. " எனக் கேட்க, அம்மையார், 

" இறைவா நீ திருநடம் புரியும் போது உன் அடி நிழற் கீழ் இருக்க வேண்டும்.. " - என, வேண்டி நின்றார்..

எம்பெருமானும்,  
" திருவாலங்காட்டில் யாம் உமக்காக எழுந்தருளி  திருக்கூத்து நிகழ்த்துவோம்.. அங்கே எம்மைக் கண்டு
இன்புற்று இருப்பாயாக!.." - என்றருளினார்..

அவ்வண்ணமே 
பங்குனி சுவாதி நட்சத்திரத்தன்று திரு ஆலங்காட்டில் ஐயன் திருநடனம் ஆடினான்.. ஐயனின் அடி நிழற் கீழிருந்து சிவகதி எய்தினார் காரைக்காலம்மையார்..


சைவ சமயத்தின் பெருமை 
புனிதவதியார்..

அடியார் வடிவங் கொண்டு எழுந்தருளிய பரமனுக்கு - புனிதவதியார் திருவமுது செய்வித்த வைபவம் ஆனி நிறைநிலா நாளன்று மாங்கனித் திருவிழா என்ற பெயரில்  கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்..

அந்தக் கோலாகலம்
காரைக்காலில் இன்று ஆனி 27 (11/7) தொடங்குகின்றது..

முதல் இரண்டு நாட்களில் மாப்பிள்ளை அழைப்பு, புனிதவதியார் திருக்கல்யாணம்..

மூன்றாம் நாள் ஆனி 29 (புதன்) அன்று ஸ்ரீ பிக்ஷாடனர் எழுந்தருளல்.. புனிதவதியார் பிக்ஷாடனருக்கு மாங்கனியுடன் அமுது படைக்கும் வைபவம்..
மாங்கனித் திருவிழா என்பது அன்று தான்..

ஆனி 30 (14/7) வியாழன் அதிகாலை ஐந்து மணியளவில் ரிஷப வாகனத் திருக்காட்சி..

அன்றுடன் வைபவங்கள் நிறைவு பெறுகின்றன.. எனினும், இது முப்பது நாள் திருவிழா ஆகும்.. எதிர்வரும் ஆடி 26 (11/8) அன்று தான் விடையாற்றி..

ஆனி 26.. நிறைநிலா நாள்..

இறைவன் பசித்திருப்போர் பொருட்டு அன்னம் கேட்டு வருகின்றான்..

ஆங்கொரு ஏழைக்கு அன்புடன் அன்னம் இடுவோம்..

" துன்பங்கள் தொலைந்தாலும் சரி.. தொடர்ந்தாலும் சரி..
இறைவனின் பாதங்களில் அன்பு வைப்பதே நமக்கு நெறி!.. "  - என்று சொல்லிச் சென்றிருக்கின்றார் அம்மையார்..

இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும் நெறி பணியா ரேனும் சுடர் உருவில்
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மனார்க்கு
அன்பு அறாது என் நெஞ்சு அவர்க்கு..
-: காரைக்காலம்மையார் :-

காரைக்காலம்மையார் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

19 கருத்துகள்:

  1. காரைக்கால் அம்மையார் என்று அந்நாளில் ஒரு படம் வந்ததது.  கே பி சுந்தராம்பாள் நடித்த படம்.  அதில் இக்காட்சிகளைக் கண்ட நினைவு.

    பதிலளிநீக்கு
  2. ஒரு மாதம் திருவிழாவா? அட...  சமீபத்தில் சூழல் என்றொரு சீரிஸ் பார்த்தேன்.  அதில் மசானக்கொள்ளை விழா காட்டுகிறார்கள்.  அந்த அளவு பெரிய அளவில் தமிழ்நாட்டில் மசானக்கொள்ளை விழாக்கள் நடக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்நாட்டில் மயானக்கொள்ளைத் திருவிழா மிகவும் பிரபலம்.

      நீக்கு
  3. காரைக்கால் அம்மையார் வரலாற்று செய்திகள் பிரமிக்க வைக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  4. அருமையான விளக்கம்...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
  5. காரைக்காலில் திருவிழா தொடங்கிய செய்தியை நானும் பார்த்தேன். பிக்ஷாடனர் திருக்கோலத்தில் ஐயன் வீதி உலா வருகையில் பொங்கும் கண்ணீரை அடக்க முடியாது. அவர் கப்பரையில் காசு போடச் சொல்லுவார் குருக்கள். மனம் விம்மி விம்மிக் கண்ணீர் சுரக்கும்.

    பதிலளிநீக்கு
  6. அம்மையாரை வணங்குகிறேன்.

    காரைக்கால் அம்மையார் சிறுவயதில் சமய பாடப்புத்தகத்தில் படித்தபோது வியப்புதான்.

    எமக்கு சமயபாடம் எடுத்த ஆசிரியை அவர்களை இந்நேரம் போற்றி வணங்குகிறேன் அவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இறுதிவரை செல்வியாகவே வாழ்ந்தவர் சமய வகுப்புகளை நடாத்தும்போதே மனமுருகி பாடி ஆனந்த கண்ணீர் சிந்தி நடத்துவார் நாங்களும் ஒன்றிப்போய் இருந்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      கருத்துரை கண்டு நெகிழ்ந்து விட்டேன்..

      எனது தமிழாசிரியர் திரு. பாலசுந்தரம் அவர்களும் இப்படித் தான்.. பணியில் இருக்கும் போதே சிவனடியார் கோலம் பூண்டவர்.. தேவார திருவாசகம் நடத்தும் போது கசிந்து உருகுவார்கள்.. அப்படியான நாட்கள் இனி வராது..

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. காரைக்கால் அம்மையார் மாதேவி சொன்னது போல் பத்தாம் வகுப்புக்கு பாடம்.
    மாங்கனி திருவிழா ஒரு முறை பார்த்து இருக்கிறேன். வீடுகளில் மாடிமேல் நிண்ரு கொண்டு மாங்கனியை தூக்கி போடுவார்கள்.
    ஊர் முழுவதும் மாம்பழம் கொடுப்பார்கள் .
    அம்மையார் சொன்னதை கடைபிடித்து வருகிறேன். இறைவன் தான் நமக்கு உற்றதுணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      நானும் ஒருமுறை தான் பார்த்திருக்கின்றேன்.. அதெல்லாம் இனிய காலங்கள்.. இருந்தாலும் மாடியில் நின்று கொண்டு பழங்களைக் கீழே வீசுவதில் எனக்கு உடன்பாடில்லை..

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. அருமையான பதிவு. படங்கள், வரலாறு எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  9. புனிதவதியார் வரலாறு, படங்கள் அனைத்தும் வெகு சிறப்பு, துரை அண்ணா.

    துன்பங்கள் தொலைந்தாலும் சரி தொடர்ந்தாலும் சரி இறைவனின் பாதங்களில் அன்பு வைப்பது -

    என்ன அழகான வரிகள். பாதத்தில் அன்பு வை என்று சொல்லியிருப்பது ரொம்பப் பிடித்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. காரைக்கால் அம்மையார் பற்றி புத்தகங்களில் படித்ததுதான். பின்பு திரைப்படமாகவும் பார்த்து மெய்யுருகி போயுள்ளேன். தாங்கள் அம்மையாரைப் பற்றியும், அவரின் பக்தி நிலை குறித்தும் அளித்த விளக்கங்களையும் படித்தறிந்து கொண்டேன்.

    /துன்பங்கள் தொலைந்தாலும் சரி.. தொடர்ந்தாலும் சரி..
    இறைவனின் பாதங்களில் அன்பு வைப்பதே நமக்கு நெறி!.. " - என்று சொல்லிச் சென்றிருக்கின்றார் அம்மையார்../

    அம்மையாரின் மன உறுதி வணங்கத்தக்கது. இறைவனின் மேல் எப்போதும் பாசம், பற்று என வைத்திருப்பதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். அந்த கொடுப்பினையை வரும் எந்த பிறவியிலாவது தந்து விடு என்ற வேண்டுதலை இந்தப் பிறவியில் இறைவனிடம் வேண்டி கேட்டுக் கொண்டேயுள்ளேன். "அவன் சித்தம் என் பாக்கியம்." அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    காலையில் வர இயலவில்லை தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      விரிவான கருத்துரைக்கு நன்றி..

      காரைக்காலம்மையார்
      இடையறாத பக்தி நெறியில் எல்லாருக்கும் முன்னோடியாகத் திகழ்பவர்..

      அவர்களைப் பற்றி இந்த அளவுக்கு சிந்திப்பதே நாம் பெற்ற பேறு.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. தங்களின் பதிவு மூலம் கூடுதலாகத் தெரிந்து கொள்கிறேன்.

    காரக்காலம்மையார் என்றதுமே கேபி சுந்தராம்பாள் அவர்கள் நினைவுக்கு வந்துவிடுவார்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      காரைக்காலம்மையார் திரைப்படம் அவரது புகழ் பாடியது உண்மை..

      அன்பின் கருத்துரைக்கு நன்றி துளசிதரன்..

      நீக்கு
  12. ஆ! என் கருத்து எங்கே போச்சு? ப்ளாகர் இப்படி ஒளித்து வைத்துவிடுகிறதே..

    புனிதவதியார் பற்றிய பதிவு அருமை. அவரது பக்தி எப்பேற்பட்ட பக்தி! கடைசி வரிகளில் அவரது கருத்தைச் சொல்லியிருப்பது - துன்பங்கள் வந்தாலும் தொடர்ந்தாலும் இறைவனை அன்பு செய்ய வேண்டும் என்பது எனக்கு மிகவும் பிடித்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. அம்மையாரின் பாடல் பக்தி நெறியின் உச்சமாகும்..

    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..