புதன், ஜூலை 27, 2022

பாமாலை 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஸ்ரீ காமாட்சி பாமாலை
(பகுதி - 2)
ஓம் சக்தி ஓம்


வயிரவர் தோள் பற்றி  நின்றாடும் 
வயிரவி வருகவே வாழ்க வாழ்க
துயர் தனை மாற்றுவை தூயனாய்
ஆக்குவை அம்பிகே பரமேஸ்வரி..

பயந் தனைப் போக்கிடும் பஞ்சமி 
வாழ்க நீ பாதங்கள் துணை என்றுமே
அயனவன் சிரம் செற்ற ஐயனின் கரம்
 பற்றிக் கலையான கருணை வாழ்க..

கதியென்று கழல்தேடி வருகின்றவர் கண்ணில் கவலையை மாற்றுகின்றாய்
மதிசூடும் மங்கையே மாதவனின்
தங்கையே தண்ணருள் ஊட்டுகின்றாய்..

தயவுடன் தாள்மலர் தலை சூடும் 
தனயனின் சஞ்சலம் தீர்க்க வருவாய்
புகழான காவிரி வளர் தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே.. 5


குன்றேறி நின்றவன் கொடும்பகை 
வென்றிட கூர்வேல் கொடுத்து நின்றாய்
நின்றாடும் நாதனின் நிழல் என்று 
தானாகி தண்ணருள் நல்குகின்றாய்..

அன்றாலின் நிழல் கொண்ட ஐயனின் 
மனம் நின்ற அம்பிகே எந்தன் தாயே..
ஐயனின் கண்பட்டு காற்றோடு 
காற்றான காமனுக் கருள் காட்டினாய்..

மன்றேறி நடமாடும் மன்னவன்தோள் 
களில் கொன்றை யாய்ஆடு கின்றாய்
நன்றான நந்தியுடன் நாயகன் தானாட 
நாயகி உடன் ஆடினாய்..

குன்றாத நலம் தந்து குறையாத 
வளம் அருளும் கோமதி சிவசங்கரி
வளமான காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 6


அபிராம சுந்தரி ஆனந்த நந்தினி
அமரர்க்கு அருள் நல்கினாய்
அமுதீசன் தாள்தொட்டு தளிர்முல்லை
தானிட்ட அடியவனின் விதிமாற்றினாய்..

அடைக்கலம் நீ என்று அடிமலர் 
போற்றிய அடியனின் முன் தோன்றினாய்
அருள்கொண்டு வெளிநின்று அழகென்று  
நிலவென்று விழிகளில் அமுதூட்டினாய்..

கால சம்ஹாரனின் நெஞ்சிலே 
கொஞ்சுமொழி பேசிடும் வஞ்சி மயிலே
மைந்தன் என் குறைகேட்டு மன்னவன் 
செவிதனில் பேசிடும் தங்கக் குயிலே..

அபிராம வல்லி நின் ஆனந்த 
சீர்பாட அல்லல்கள் பறந்தோடுமே
தவமான காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 7


வேல்நெடுங் கண்ணியாய் விளையாடி
வருகநீ வினையதன் வேரறுக்க
கருந்தடங் கண்ணியாய் கைவீசி 
வருகநீ கயவர்தம் கதைமுடிக்க..

செங்கயற் கண்ணியாய் அங்கயற் 
கண்ணியே அருளோடு வருக வருக 
அழகனின் தங்கையே ஆதிசிவன் 
மங்கையே அலங்காரச் செல்வி நீயே..

அடியவர்கள் உனைப் போற்ற ஆனிப்
பொன்தேரிலே அன்னையே வருக வருக
காவியங் கண்ணியாய்க் கருதுவார் 
தம்மனதில் ஜோதியாய் வருக வருக..

மேன்மை தருமீனாட்சி எங்குமுன் 
அரசாட்சி பாண்டியன் பெற்ற திருவே
சிவமான காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 8

(தொடரும்)

13 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      ஓம் சக்தி ஓம்

      நீக்கு
  2. அருமை ஜி தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் சக்தி ஓம்

      நீக்கு
  3. ஆஹா! மிக மிக அற்புதம். அருமை. ஆனால் பகுதி ஐந்திலே தங்கக்காமாட்சி "உமையே"னு வராமல் "உரையாடல்" என வந்திருப்பதில் ஏதேனும் தனிப்பட்ட பொருள் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றியக்கா..

      ஓம் சக்தி ஓம்

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி தனபாலன்..

      ஓம் சக்தி ஓம்

      நீக்கு

  5. @ கீதாக்கா

    //உமையே.. // >> ((உரையாடல்))

    எழுத்துப் பிழையின்றி தட்டச்சு செய்து விடுவேன்..

    பதிவினை மூன்று நிலைகளில் ஒழுங்கமைப்பு செய்திருக்கின்றேன்..

    கைப்பேசியில் Blogger ஐ திறந்து Work Sheet ல் செய்யும் போது கூகிள் உள்ளே புகுந்து செய்த குழப்பத்தினால் ஏற்பட்ட பிழை இது..

    மன்னிக்கவும்..

    பதிலளிநீக்கு
  6. முந்தைய பாமாலையையும் வாசித்தேன் துரை அண்ணா. இப்பாமலையும் வாசித்துவிட்டேன். அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய பாமாலை வரிகளும் அழகாக வந்திருக்கின்றன. பாடி மகிழ்ந்தேன். அன்னை பராசக்தியின் அருள் தங்களுக்கு நிறைய வரப் பெற்றிருக்கிறது. பாமாலை முழுவதும் பாடி முடிந்ததும், சின்னஞ்சிறிய பக்தி கைப்புத்தகமாக தயாரித்து வெளியிடுங்கள் அனைவரும் படித்து பயன் பெறுவார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அன்னைக்கு பாமாலை அருமை.
    கமலா ஹரிஹரன் சொன்னதை வழி மொழிகிறேன். கை புத்தகம் வரட்டும் , அனைவருக்கும் பயன் தரும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அபிராம வல்லியை துதிக்கும் பாமாலை அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..