செவ்வாய், ஜூலை 26, 2022

பாமாலை 1

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆடிச் செவ்வாய்..

ஸ்ரீ காமாட்சி  அன்னையின் பேரில் அடியேன் தொடுத்திருக்கும் பாமாலையை அவளது 
 திருவடிகளில் பணிவன்புடன் சமர்ப்பிக்கின்றேன்..
*
ஸ்ரீ காமாட்சி பாமாலை
(பகுதி - 1)
ஓம் சக்தி ஓம்


வரசித்தி வாரணம் வலஞ்சுழி பூரணம்
வரந்தரும் ஐங்கரம் வாழ்கவே குஞ்சரம்
வஞ்சிஉமை பாலகம் வல்லபவி நாயகம்
வானவர் தாயகம் வாழ்கவே கணநாயகம்..

ஸ்ரீ தங்கக் காமாட்சி -  தஞ்சை
செங்கனகத் தனிக் குன்றில் படர்கின்ற
பைங்கொடி பத்மபா தங்கள் போற்றி..
அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
அருள்கின்ற ஜோதி போற்றி..

மங்கலவி சாலாட்சி மாவடு வகிர்
கண்ணி நாறும்பூ குழல் நாயகி
நீள்விழி நிமலையாய் நீலாம்பிகை என்று 
தோள் தந்த அன்னை போற்றி!..

எந்தையுடன் நின்றெம்மை ஆள்கின்ற 
அம்மையின் அடிமலர் போற்றி போற்றி..
தன்கையில் தாங்கியே தமிழமுது ஊட்டிய 
தாய்மையே போற்றி போற்றி..

சிந்தையில் உனைவைத்து சீர்கொண்டு 
பேசி வரும் சிறியனை ஆதரிப்பாய்
அழகான காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 1


திருநின்ற பூமியில் திக்கெட்டும் புகழ் 
கொண்டு வாராஹி என்று வந்தாய்..
வாள்தனைக் கைக்கொண்டு பகைவென்ற 
சோழனின் தோள்களில் நீயும் நின்றாய்.. 

வருகின்ற துயர்தீர்க்க வளர்தஞ்சை நகர் 
தன்னில் வானுயர் கோயில் கொண்டாய்
வாராது வந்தனை வளம் எலாம் 
தந்தனை வாழ்க நீ வாழ்க வாழ்க!.. 

பெருவுடை யாருடன் பிரியாது நின் 
றென்றும் பேரருள் பொழியும் தாயே
திரிபுரம் தீர்த்திட்ட தீர்த்தனின் திருமேனி
பாதியாய் பொலியும் மாயே.. 

திருவுடைய நாயகி தீவினை மாய்த்தனை
கருவூரர் போற்றும் கலையே
நலமான காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 2


புற்றென எழுந்தனை புண்ணியம் 
வளர்த்தனை பூமாரி புகழ் மாரியே
மற்றொரு இணையிலா மகமாயி என்
றிங்கு மனைவாழ வைக்கும் தாயே..

கற்றவர் கைதொழும் கருணா 
விலாசினி நற்றுணை அருள்க தாயே...
செந்தூரச் செல்விநீ சிவகாம 
வல்லி நீ திரிபுர சுந்தரியும் நீ!..

உண்ணாமுலை அன்னை ஊழ்வினையை 
நீமாற்று உன்னடி போற்றுகின்றேன்
ஐயாறு கொண்டவள் அறங்காத்து 
நின்றவள் அடிமலர் ஏத்துகின்றேன்..

சங்குவளை ரத்னவளை தங்கவளை 
தரித்தவளை தமிழ்கொண்டு பாடினேனே
எழிலான காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 3


மங்கலக் குங்கும மந்திரபு ரீஸ்வரி 
மா மகம் காணும் உமையே
சுந்தரி சுகந் தரும் சூட்சும 
சூலினி  வாடா மலர் நாயகி..

கும்பத்தில் கூடிய ஈசனைக் கூடியே 
குமரி நீ கூத்தாடினை 
அகிலமும் தழைக்கவே ஆங்கொரு நிழல் 
கொண்டு ஆனந்தப் பாலூட்டினை!..

காவிரிக் கரையினில் சிவலிங்க 
பூஜையில் செல்வியே மயிலாம்பிகா 
மாமயில் என வந்த மன்னவன் 
தன்னோடு நின்றவளே  உமையாம்பிகா..

தையல் நல்லாள் எனும் அன்னையே  வாழ்கநீ தில்லையுள் காளி நீயே
இனிதான காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 4

(தொடரும்)

14 கருத்துகள்:

  1. மிகவும் அருமை. உங்கள் திறமை வியக்க வைக்கிறது. அன்னையின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      ஓம் சக்தி ஓம்

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பாமாலை சிறப்பாக உள்ளது. பாடி அன்னைகளை வணங்கிக் கொண்டேன். அன்னைக்கு அழகான பாமாலையாக தொடுத்துள்ளீர்கள். ஒவ்வொரு வரிகளும் பாடும் போது மனம் முழுக்க மகிழ்ச்சியை பரவுகிறது. அன்னையின் அருள் தங்களிடம் பரிபூரணமாக உள்ளது. எளிதில் கவிபாடும் திறமை கொண்ட உங்களுக்கு என் அன்பான வணக்கங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தட்டச்சுப் பிழை. மகிழ்ச்சியை பரப்புகிறது என வந்திருக்க வேண்டும். நன்றி.

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      பதிவினைப் படித்து மகிழ்வுடன் கருத்தைச் சொல்லும் தங்களுக்கும் எனது வணக்கங்கள்..

      ஓம் சக்தி ஓம்

      நீக்கு
  3. பாமாலை அருமை ஜி
    வாழ்க தமிழ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      தமிழ் வாழ்க..

      ஓம் சக்தி ஓம்

      நீக்கு
  4. அன்னையின் அருளால் பாமாலை அருமையாக அமைந்து விட்டது.
    எல்லா ஊர்களிலும் குடி கொண்ட அன்னையின் புகழ்பாடும் பாமாலை பாடி மகிழ்ந்தேன்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      தல வரலாறுகளையும் சொல்லியிருக்கின்றேன்..

      ஓம் சக்தி ஓம்

      நீக்கு
  5. அம்பிகையின் பரிபூரண அருள் இன்றி இவை எல்லாம் சாத்தியம் இல்லை. வணங்கிக் கொள்கிறேன். _/\_

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றியக்கா..

      தங்களுக்கும் என் வணக்கங்கள்..

      ஓம் சக்தி ஓம்

      நீக்கு
  6. மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்...

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். உங்களின் திறமையும் தமிழும் என்னை எப்போதுமே வியக்க வைக்கும். இதுவும் சேர்த்து. எல்லாம் இறை அருள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. அன்னையவளை போற்றும் நல்லதோர் பாமாலை வணங்குகிறோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..