செவ்வாய், மார்ச் 08, 2022

சித்தாமிர்த தீர்த்தம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

திருத்தலம்
திரு புள்ளிருக்குவேளூர்
( வைத்தீஸ்வரன் கோயில்)

இறைவன்
ஸ்ரீ வைத்தியநாதர்
அம்பிகை
ஸ்ரீ தையல் நாயகி
தீர்த்தம்
சித்தாமிர்த தீர்த்தம்
தல விருட்சம் - வேம்பு..

இன்று மாசி 24..
செவ்வாய்க்கிழமை
வளர்பிறை சஷ்டி
காலை  எட்டு மணிக்குப் பிறகு
கார்த்திகை நட்சத்திரம்..

வல்வினையும்
வழிப் பகையும் நீங்க
செல்வமுத்துக் குமரனை
வேண்டிக் கொள்வோம்..

ஸ்ரீ செல்வ முத்துக்குமரன்

புள் - பறவைகளாகிய சம்பாதி, ஜடாயு, ரிக் -  இருக்கு எனப்பட்ட வேதம், வேள் -  முருகப் பெருமான் ஆகியோர் வழிபட்ட திருத்தலம்..

நவகிரகங்களுள் செவ்வாய் எனப்படும் அங்காரகன் வழிபட்டு நலம் பெற்ற திருத்தலம்..

சூரியனின் தேரோட்டியாகிய அருணனின் புத்திரர்கள் சம்பாதி, ஜடாயு.. இவர் இருவரும் நாளும் பூக் கொணர்ந்து சிவ வழிபாடு செய்த தலம்..
சம்பாதி, ஜடாயு..

இவர் இருவரையும் குறித்தே திருப்பதிகம் அருள்கின்றார் ஞானசம்பந்தப் பெருமான்.. எனில் இவர்களது பெருமை தான் என்னே!..

கள்ளார்ந்த பூங்கொன்றை
மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடி
எம்பெருமானார்
உறையுமிடந்
தள்ளாய சம்பாதி
சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம்
புள்ளிருக்கு வேளூரே.. 2.43.1.
-: திருஞானசம்பந்தர் :-

சீதாதேவியை இராவணன் கவர்ந்து சென்றபோது அவனை எதிர்த்துப் போரிட இராவணன் ஈசன் அளித்த சந்திர காந்த வாளைக் கொண்டு ஜடாயுவைத் தாக்கினான்..  வாளினால் வெட்டுண்ட ஜடாயு சிறகிழந்து  வீழ்ந்தான் ..


தையலாள் ஒருபாகஞ்
சடைமேலாள் அவளோடும்
ஐயந்தேர்ந் துழல்வாரோ
ரந்தணனா ருறையுமிடம்
மெய்சொல்லா இராவணனை
மேலோடி ஈடழித்துப்
பொய்சொல்லா துயிர் போனான்
புள்ளிருக்கு வேளூரே.. 2.43.2
-: திருஞானசம்பந்தர் :-

ஸ்ரீ ராமபிரான் பின்னாளில் ஜானகியைத் தேடி வரும் போது நடந்ததை விவரித்தபடி ஸ்ரீ ராமனின் கரங்களில் உயிர் துறக்கின்றான் ஜடாயு..

இதனை ஞானசம்பந்தப் பெருமான் மேலேயுள்ள திருப்பாடலில் குறித்தருள்கின்றார்..

ஸ்ரீராமன் ஜடாயுவைத் தனது சகோதரனாகக் கொண்டு தகனக் கிரியைகளைச் செய்த தலம் புள்ளிருக்கு வேளூர்..

நாளும் நன்மைகளை நடாத்தித் தரும் திருத்தலத்தின் தீர்த்தமாகிய சித்தாமிர்த திருக்குளத்தின் தரிசனம் இன்றைய பதிவில்..











பேராயிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.. 6.54.8
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. ஜடாயு விவரம் அறியாதது.  கோவில் படங்கள் கவர்கின்றன.  அருமையாய் தொகுத்து எழுதுகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. எத்தனை முறை போயிருப்பேன் எனச் சொல்ல முடியாது. கடைசியாப் போனப்போ அபிஷேஹம் செய்வதற்குப் போனோம் 2018 ஆம் வருஷம் என நினைவு. அன்று முழுக்கக் கால் நடக்க முடியாமல் ஓட்டுநர் உதவியுடன் படி ஏறி இறங்கி ஸ்வாமி தரிசனம் செய்ததும் அபிஷேஹம் பார்க்கையில் நிற்கவும் முடியாமல்/உட்காரவும் முடியாமல் பட்ட அவஸ்தையுமே நினைவில்! :(

    பதிலளிநீக்கு
  3. திருப்பணி அப்போது ஆரம்பிக்கவில்லை. எங்க பெண் வீட்டிற்குக் குலதெய்வம் என்பதால் அவங்களுக்குக் கட்டளை இருக்கு. ஆகவே தரிசனம் எல்லாம் ஒவ்வொரு முறையும் சிறப்பாகச் செய்து வைப்பார் குருக்கள். தையல்நாயகி சந்நிதியில் மாவிளக்கும் போட்டிருக்கேன்/போட்டிருக்கோம். ஜடாயு குண்டத்தைப் பல முறை சுற்றி வந்துள்ளேன். ஹிஹிஹி,கூடவே ஒரு "திங்க"ற விஷயம். அப்போல்லாம் மாயவரத்தில் சொந்தக்காரங்க வீட்டில் தங்கிட்டு அங்கிருந்து இங்கே வருவோம். பின்னாட்களில் சொந்தக்காரங்க இல்லாதப்போ வைத்தீஸ்வரன் கோயிலிலேயே தங்கி இருந்தோம். கோயிலுக்கு அருகே இருந்த தையல்நாயகி ஓட்டலில் (கணேச ஐயர் ஓட்டல் என்பார்கள்) 2009 வரை சாப்பிட்டிருக்கொம். இப்போ அவர் ஓட்டல் இல்லை.

    பதிலளிநீக்கு
  4. இன்றைய தினச் சிறப்பைப் பற்றி நேற்று முதல் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, அனைவர் வாழ்விலும் முருகண் அருளால் அவன் கை வேலால் அனைத்துப் பிரச்னைகளும் பொடிப்பொடியாகித் துன்பங்கள் நீங்கி அமைதியான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொரு கார்த்திகைக்கும் வைத்தீஸ்வரன் கோயில் போவோம்.
    கோயில் மிக அழகாய் இருக்கிறது. படங்கள் நன்றாக இருக்கிறது.
    முருகன் அனைவரையும் காக்க வேன்டும்.

    பதிலளிநீக்கு
  6. திருபுள்ளிருக்குவேளூர் தரிசனம் ...ஆஹா அற்புதம்

    பதிலளிநீக்கு
  7. விவரங்களுடன் படங்கள் அட்டகாசம் துரை அண்ணா.

    திருக்குளப் படங்கள் மனதிய அள்ளுகிறது. ரொம்ப அழகாக எடுத்திருக்கிறீர்கள்..மிகவும் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. திருக்குளம் படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கின்றன. திருபுள்ளிருக்குவேளூர் இறைவனின் தரிசனமும் விவரணமும் எல்லாம் அருமை. இத்தலம் அறிந்து கொண்டேன்.

    நன்றி சார்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  9. உங்கள் பதிவு வழி நாங்களும் தரிசனம் கண்டோம்.... சிறப்பான தகவல்கள். மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..