ஞாயிறு, நவம்பர் 29, 2020

திருக்கார்த்திகை


அருணாசல சிவம்
அருணாசல சிவம்
***

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்று 
திருக்கார்த்திகைத்
திருநாள்..

சகல சிவாலயங்களிலும்
திருமுருகன் சந்நிதிகளிலும்
சிறப்புறு வழிபாடுகள்
நிகழ்த்தப்படும் நன்னாள்..

ஞானசம்பந்தப் பெருமான்
தமது திருப்பதிகத்தில்
குறித்தருளும் 
திருநாள்..


உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள்
மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை
வழுவா வண்ணம் அறுமே..
-: திருஞானசம்பந்தர் :-


பகை எனவும் பிணி எனவும்
நம்மைச் சூழ்ந்திருக்கும்
இருள் விலகிட வேண்டுமென
இந்நாளில் வேண்டிக்
கொள்வோம்..


துயறுற்றுத் தவிக்கும்
அனைவருக்கும்
ஆறுதலும் தேறுலும் நல்கி
அரவணைத்துக் கொள்ள
வேண்டும் எனவும்
ஜோதி மயமான இறைவனை
இவ்வேளையில்
பிரார்த்தித்துக் கொள்கிறேன்..


வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
குகனுண்டு குறைவில்லை மனமே..

அண்ணாமலைக்கு அரோகரா..
அண்ணாமலைக்கு அரோகரா!..
***

வியாழன், நவம்பர் 26, 2020

அஞ்சலி

 


நேற்று Fb வழியாக
சக பதிவர்
மரியாதைக்குரிய
திருமதி கோமதிஅரசு அவர்களது
அன்புக் கணவர்
திரு.A. திருநாவுக்கரசு அவர்கள்
இயற்கை எய்திய
தகவல் அறிந்ததில் இருந்து
மிகவும் வருந்துகின்றது மனம்..

தமிழார்வமும் சிவநெறியும்
மிக்கவராக விளங்கிய அவர்
இலக்கிய விரிவுரையாளராகவும்
திகழ்ந்திருக்கின்றார்..

திருமுறைத் தலங்களைத்
தரிசிப்பதில் நாட்டம் கொண்டு
சிவநேயச் செல்வராகப்
பொலிந்த அவர்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடிகளில் இரண்டறக்
கலந்து விட்டார்..

ஜோதி மயமாகிய
கார்த்திகை மாதத்தில்
சிவஜோதியுள்
நிறைந்து விட்டார்..


தலைவனை இழந்து
தவிக்கும் அவர்களது
துயரத்தில் நாமும்
பங்கு கொள்கிறோம்..

அவர் தம் குடும்பத்தினரது
துயரைத் தீர்க்க வல்லவன்
இறைவன் ஒருவனே..

ஆறாத் துயரில் 
ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர்க்கு
ஆறுதலையும் தேறுதலையும்
இறைவன் தந்தருள்வானாக..

புண்ணியம் செய்தார்க்குப்
பூவுண்டு நீருண்டு
-: திருமூலர் :-

ஓம்
சாந்தி.. சாந்தி.. சாந்தி..
***

வெள்ளி, நவம்பர் 20, 2020

வெற்றி வேல்

கந்தா சரணம்.. கடம்பா சரணம்..கார்த்திகை மைந்தா சரணம்.. சரணம்..
நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்று ஸ்ரீ கந்த சஷ்டி
ஆணவம் மாயா கன்மம் எனும்
அதர்மங்கள் அழிந்த நாள்...

தீமைகளை அழிக்கும் பொருட்டு
இறைவன் பற்பல அவதாரங்களையும்
திருக்கோலங்களையும் மேற்கொள்கின்றனன்..

அவ்வேளைகளில் நம்பொருட்டு பல்வேறு ஆயுதங்களைத் தாங்கி
திருக்காட்சி நல்குகின்றனன்..
அத்தகைய ஆயுதங்களுள்
வெற்றி, ஞானம் எனும் சிறப்பு மொழிகளுடன் திகழ்வது வேல் ஒன்றே..


சிறப்புடைய வேலினைத் தாங்கி நிற்பவன் வெற்றி வடிவேலன்..

வேலை வணங்குவதே வேலை!..
என்றுரைப்பார் ஸ்ரீ வாரியார் ஸ்வாமிகள்..

வேலினை
வெற்றி வடிவேலனை வணங்கி
வாழ்வின் வளம் எலாம் பெறுவோம்..


வந்தவினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்குமே - செந்தி நகர் 
சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வாராதே வினை..



வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
குகனுண்டு குறைவில்லை மனமே..

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!..
***

திங்கள், நவம்பர் 16, 2020

சபரிமலைத் தென்றல்

     


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை
முதல் நாள்..

கார்த்திகையின்
பெருமைகளைச் சொல்லவும்
வேண்டுமோ!..

ஐயனவன் நினைவினிலே
தவிக்கிறது நெஞ்சம்..
மெய்யனவன் மலரடியில்
என்றென்றும் தஞ்சம்..


சபரி மலைத் தென்றல்
வந்து தாலாட்டுமே..
சரண் அடைந்த அன்பர்
நெஞ்சை சீராட்டுமே!...
பொங்கிவரும் புனலாய் என்றும்
நலங்  காட்டுமே...
பூதநாதன் புகழைப் பாட
தமிழைக் கூட்டுமே!..
காரிருளில் ஒளியாய் நின்று
வழியைக் காட்டுமே..
கண் மறந்து இழைத்த பாவம்
பழியைத் தீர்க்குமே!..
மாலை என்னும் புனிதம் தாங்க
மனமும் ஆறுமே...
மங்கலங்கள் நன்கலமாய் 
மனையில் சேருமே!..
செய்த பாவம் செய்யும் பாவம்
யாவும் தீருமே..
செந்நெறியில் நன்மை எல்லாம்
வந்து சேருமே!..


பதினெட்டுப் படிகள் காணக்
கண்கள் ஏங்குதே..
என்று கூடும் என்று விழி
நீரும் தேங்குதே..
தேவதேவன் கதிர்முகத்தில்
நகையும் மலருதே..
திருக்கரத்தில் நல்கும் வரமும்
நாளும் வளருதே..
சாமி சாமி சாமி என்று
இதயம் துடிக்குதே...
ஏழை மனமும் இருந்து ஐயன்
புகழைப் படிக்குதே!...
ஃஃஃ

ஸ்ரீஐயப்ப ஸ்வாமியை
வழிபடும்
இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
வேண்டிக் கொள்வோம்!..

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா..
ஃஃஃ

ஞாயிறு, நவம்பர் 15, 2020

தேடி வந்த தேவி

    


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
துலா மாதமாகிய 
ஐப்பசி இன்றுடன்
நிறைவடைகின்றது..

இம்மாதத்தின் முப்பது நாட்களும்
காவிரியுடன் கலந்தவளாய்
கங்கை இம்மண்ணில்
தவழ்ந்திருந்தாள்..

கடந்த வருடங்களில்
துலா மாதத்தில்
கங்கை - காவிரியைப்
பேசும் பதிவுகள்
வழங்கிய நிலையில்
இவ்வருடம் அப்படி ஒரு பதிவைத்
தொகுத்து இடுவதற்கு
இயலவில்லை..

வேலையின் சூழ்நிலை
கடுமையாக அமைந்து விட்டது..
எனவே - சற்று தாமதமாக
கங்கை காவிரி தரிசனம்..

கங்கோத்ரி

கோமுகி


தலைக்காவிரி

துள்ளி வரும் காவிரி - மேட்டூர்

பொன்னி சூழ் திருஅரங்கம்

கல்லணை

காவிரியின் அருட்கொடை

காவிரியின் மடியில் கண்ணன்
திருச்சேறை..

மேலே உள்ள படம் கணினியில்
எனது சேமிப்பாக உள்ளது..
எனினும் கைப்பேசி வழியாக
பதிவுகள் இயங்குவதால்
இந்தப் படத்தைத் தேடினேன்...

கூகுள் கொடுத்த படம்
துளசிதளத்தினுடையது..
அவர் தமக்கு நன்றி..
 ஃஃஃ


நாளை கடைமுகம்..
மயிலாடுதுறையில்
முடவன் முழுக்கு..
இவ்வருடம்
திருவிழா நடைபெறுவதாகத்
தெரியவில்லை..

இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்!..

"கங்கையிற் புனிதமாய காவிரி"
என்பது ஆழ்வார் திருவாக்கு..

ஆழ்வாரின் அருள் வாக்கினை
சிரமேற்கொள்வோம்..
நீர் நிலைகளைக் காத்து
அவற்றின் புனிதம்
போற்றி நிற்போம்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

சனி, நவம்பர் 14, 2020

அன்பின் தீபங்கள்

    


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
ஒவ்வொருவரும்
அவரவர் நிலையில்
எண்ணிலாத துன்பங்களை
அனுபவித்திருக்கும் நிலையில்

இன்று
தீபாவளித் திருநாள்..



இனிவரும் நாட்கள்
இனிதாய் வாய்த்திட
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக் கொள்வோம்...

மின் நிலா
தீபாவளி மலருக்காக
எழுதிய கவிதையை (!)
இங்கு பதிவு செய்வதில்
மகிழ்ச்சி எய்துகிறேன்...


மண் கொண்ட மாண்பு
***
மண் கொண்ட மாண்புகள்
மீண்டு வர வேண்டும்...
கண் கண்ட கனவுகள்
கை நிறைய வேண்டும்..

தீபங்கள் ஒளி தர
தீவினை அகன்றதும்
தீதிலா வழி சென்று
ஜோதியாய் நின்றதும்


ஆவளி ஆக அன்பு
தீபங்கள் ஏற்றினோம்
தீப ஆ வளியென்று
தெய்வமே போற்றினோம்..

வறியாரும் வாழ்வதனில்
வளங் காண வாழ்த்தினோம்
வளங் காணும் வாழ்வதனில்
வகை ஒன்றைக் கூட்டினோம்..

உண்பதுவும் நன்னாள்
உடுப்பதுவும் பொன்னாள்.
உருகி மனம் ஒருவற்கு
உதவுதலும் திருநாள்..

என்றாகி நின்றாலும்
இதனுள்ளே ஒன்றுண்டு
ஒன்றென்ற பொருள் கண்டு
உணர்வதிலே நலம் உண்டு..

உண்பதுவோ நன்னாள்
உடுப்பதுவோ பொன்னாள்
உருகி மனம் ஒருவற்கு
உதவுதலே திருநாள்..

படிகொண்டு பாம்பணையில்
துயில்கின்ற பரம்பொருள்
பார் நலம் காத்தெங்கும்
தர வேண்டும் திருவருள்..

அளந்தார்க்கு அளந்தபடி
அருள்கொண்டு பொழிகவே..
அருள்வேண்டி நிற்பார்முன்
அன்னையெனப் பொலிகவே..

வில் கொண்டு நின்றனை
வீரம் விளைத்தனை..
வெல் என்ற சொல் தந்து
வேல் கொண்டு வந்தனை..

அடியார்தம் மனைகண்டு
அமுதுண்டு நின்றனை
அன்புதான் சிவமென்ற
அருள்மொழி தந்தனை..

சொல் கொண்டு உந்தனை
ஏற்று கின்ற எந்தனை
காத்தருளும் எந்தையே
கதி காணும் சிந்தையே...
 ஃஃஃ


இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்!..


ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

திங்கள், நவம்பர் 09, 2020

ஸ்ரீரங்க தரிசனம்

    


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
ஸ்ரீ ரங்கத்தில்
ஊஞ்சல் உற்சவம்
நடைபெற்றுக் கொண்டிருக்கும்
இவ்வேளையில்
இன்று 
திரு அரங்க தரிசனம்..





மனத்திலோர் தூய்மை இல்லை
வாயிலோர் இன்சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித்
தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலையானே
எனக்கினி கதி என் சொல்லாய்
என்னை ஆளுடைய கோவே.. (901)
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-
***
அழகிய படங்களும்
இனிய காணொளியும்
ஸ்ரீ ரங்க அரங்கம் எனும்
தளத்திலிருந்து
பெறப்பட்டவை...

அவர்தமக்கு
நெஞ்சார்ந்த நன்றி..


இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்!..
***

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

செவ்வாய், நவம்பர் 03, 2020

அன்னாபிஷேகம்

   


நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***


இன்றைய பதிவில்
ஐப்பசி நிறைநிலா நாளன்று
சிவாலயங்களில் நடைபெற்ற
அன்னாபிஷேக வைபவத்தின்
திருக்காட்சிகள்..

Fb வழியாக நண்பர்கள்
பகிர்ந்தவை..

திருக்கோயில்களின் 
பெயர் அறியக்கூடவில்லை..

ஸ்ரீ வராஹி அம்மன்
திருக்கோலத்தினை அனுப்பித்
தந்தவர் தஞ்சை ஞானசேகரன்..

அனைவருக்கும்
நெஞ்சார்ந்த நன்றி..





ஏர் கலப்பையுடன்
உலக்கையையும்
தாங்கியிருப்பவள்
அன்னை ஸ்ரீ வராஹி..

ஐப்பசி நிறைநிலா நாளன்று
தஞ்சை பெரிய கோயிலில்
ஸ்ரீ வராஹி அம்மனுக்கும்
அன்னாபிஷேகம்
நிகழ்த்தப்பட்டது..



எல்லாம் வல்ல இறைவனுக்கு
நிகழ்த்தப்படும்
அன்னாபிஷேக தரிசனம்
என்றென்றும் குறைவின்றி
அன்ன விருத்தி என்பதாக
நம்பிக்கை..
***
Fb ல்
கிடைத்த காணொளி


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நம சிவாயவே..
-: திருஞானசம்பந்தர் :-
***
இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்..
***
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ