வியாழன், ஏப்ரல் 30, 2020

சிவமே சரணம் 17

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்.. 
***
இன்றைய பதிவில்
திருநாவுக்கரசர் அருளிச் செய்த
திருப்பதிகம்..

நான்காம் திருமுறை
திருப்பதிக எண் - 100

திருத்தலம் - திரு இன்னம்பர்

ஸ்ரீ எழுத்தறிநாதர்  
ஸ்ரீ சுகந்தகுந்தளாம்பிகை 
இறைவன் - எழுத்தறிநாதர்
அம்பிகை - சுகந்த குந்தளாம்பிகை, நித்ய கல்யாணி

ஸ்ரீ நித்யகல்யாணி அம்பிகை 
தீர்த்தம் - ஐராவத தீர்த்தம்
தலவிருட்சம் - பலா மரம்

அம்பிகைக்கு இரண்டு சந்நிதிகள்..
கஜ பிருஷ்ட வடிவில் மூலஸ்தானம்..
ஐராவதம் வழிபட்ட தலங்களுள் இதுவும் ஒன்று..

ஈசன் எம்பெருமான் அகத்திய மகரிஷிக்கு
தமிழை இலக்கணத்தை
உபதேசித்தருளிய திருத்தலம்..

குழந்தைகளுக்கு 
முதல்கல்வி பயிற்றுவிக்கும் தலமாக
இத்திருக்கோயில் திகழ்கின்றது..

திருப்பதிகத்தின் எல்லாத் திருப்பாடல்களிலும்
ஈசன் திருவடிகள் புகழப்படுவதைக் காணலாம்.. 

கும்பகோணம் திருப்புறம்பியம் சாலையில் 8 கி.மீ
தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம்...
***

மன்னு மலைமகள் கையால் வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறுந் தூப்பொருளாயின தூக்கமலத்
தன்ன வடிவின அன்புடைத் தொண்டர்க்கு அமுதரும்பி
இன்னல் களைவன இன்னம்பரான் தன்இணையடியே.. 1

பைதற் பிணக்குழைக் காளிவெங்கோபம் பங்கப்படுப்பான்
செய்தற்கரிய திருநடஞ் செய்தன சீர்மறையோன்
உய்தற் பொருட்டு வெங்கூற்றை உதைத்தன உம்பர்க்கெல்லாம்
எய்தற்கரியன இன்னம்பரான் தன்இணையடியே.. 2



சுணங்கு நின்றார் கொங்கையாள் உமைசூடின தூமலரால்
வணங்கி நின்றும்பர்கள் வாழ்த்தின மன்னுமறை கள்தம்மில்
பிணங்கி நின்றின்னன என்றறியாதன பேய்க்கணத்தோடு
இணங்கி நின்றன இன்னம்பரான் தன்இணையடியே.. 3

ஆறொன்றிய சமயங்களில் அவ்வவர்க்கு அப்பொருள்கள்
வேறொன்று இலாதன விண்ணோர் மதிப்பன மிக்குமவன்
மாறொன்று இலாதன மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறொன்றிலாதன இன்னம்பரான் தன்இணையடியே.. 4



  அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றினால் அடலங்கியின் வாய்க்
கரக்கமுன் வைதிகத் தேர்மிசை நின்றன கட்டுருவம்
பரக்க வெங்கானிடை வேடுருவாயின பல்பதிதோ
றிரக்க நடந்தன இன்னம்பரான் தன்இணையடியே.. 5

கீண்டும் கிளர்ந்தும் பொற்கேழல் முன்தேடின கேடுபடா
ஆண்டும் பலபல ஊழியுமாயின ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்க நின்றாடின மேவுசிலம்பு
ஈண்டுங் கழலின இன்னம்பரான் தன்இணையடியே.. 6

போற்றுந் தகையன பொல்லா முயலகன் கோபப்புன்மை
ஆற்றுந் தகையன ஆறு சமயத்து அவரவரை
தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றுந் தகையன இன்னம்பரான் தன்இணையடியே.. 7

பயம்புன்மை சேர்தரு பாவந் தவிர்ப்பன பார்ப்பதிதன்

குயம்பொன்மை மாமலராகக் குலாவின கூடவொண்ணாச்
சயம்பு என்றேதகு தாணுஎன்றே சதுர்வேதங் கள்நின்று
இயம்புங் கழலின இன்னம்பரான் தன்இணையடியே.. 8



அயனொடு மால்இந்திரன் சந்த்ராதித்த அமரரெலாம்
சயசய என்று முப்போதும் பணிவன தண்கடல்சூழ்
வியனில முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியனகர்க்கும்
இயபரம் ஆவன இன்னம்பரான் தன்இணையடியே.. 9

தருக்கிய தக்கன்தன் வேள்வி தகர்த்தன தாமரைப்போது

உருக்கிய செம்பொன் உவமனிலாத ஒண்கயிலை
நெருக்கிய வாளரக்கன்தலை பத்து நெரித்தவன்தன்
இருக்கு இயல்பாயின இன்னம்பரான் தன்இணையடியே.. 10
-: திருச்சிற்றம்பலம் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

ஃஃஃ

புதன், ஏப்ரல் 29, 2020

களக்கோடி காவலன்

நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

ஓராண்டுக்கு முன்னால்
அன்புக்குரிய ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களது
குலதெய்வமாகிய 
ஸ்ரீ களக்கோடி தர்ம சாஸ்தாவைப் போற்றி
எழுதியிருந்த திருப்பாட்டு
இன்றைய பதிவில் ..

எல்லாருக்கும் எல்லா நலன்களையும்
ஸ்ரீ ஹரிஹரபுத்ரன் தந்தருள்வாராக... 
***
ஸ்ரீ பூர்ணகலா ஸ்ரீ புஷ்கலா தேவியருடன்
ஸ்ரீ களக்கோடி தர்ம சாஸ்தா..
பணிக்கோடி இரைக்கோடி பரிதவிக்கும் இவ்வுலகில்
துணைதேடி ஓடிவந்தோம் ஸ்வாமியே...1

உனைத்தேடி உனைத்தேடி இவ்வுயிரும் தவிக்கையிலே
எனைத்தேடி எழுந்துவந்த ஸ்வாமியே!...2

களக்கோடி நாயகனே.. கவலையெல்லாம் தீர்ப்பவனே..
புகழ்க்கோடி பேர் சொல்லிப் போற்றினேன்....3

வளங்கோடி தந்தருளி நலங்கோடி காத்தருள
பூக்கோடி தூவி தீபம் ஏற்றினேன்!...4

நீரோடி நிலம் செழிக்க காற்றோடி கதிர் கொழிக்க
நாகோடி தமிழ் உரைக்க வேணுமே...5


உனைத்தேடி வருவோர்க்கு தருங்கோடி நலமெல்லாம்
ஊர்கோடி கண்டு உணர வேணுமே...6

வரங்கோடி தந்தருளும் வடிவுடையாள் திருமகனே
களக்கோடி கண்மணியே சரணமே!...7

மனைதேடி வருபவனே.. மனந்தேடி அமர்பவனே..
களக்கோடி காவலனே சரணமே...8  

கடைக்கோடி மனிதருக்கும் கதிகாட்டும் கோமகனே
களக்கோடி நாயகனே சரணமே...9

விடைதேடி நிற்போர்க்கு வழிகாட்டும் நாயகனே
களக்கோடி கண்மணியே சரணமே...10



திருக்கோடிக் காஉறையும் சிவநாதன் திருமகனே
களக்கோடி தானமர்ந்த தூயனே...11

வினைகோடி என்றாலும் பகைகோடி என்றாலும்
விரைந்தோடி நலஞ்சேர்க்கும் நாதனே...12

களக்கோடி என்னுங்கால் களிறேறி வரவேணும்
கண்கோடி காணும்படி ஸ்வாமியே...13

விழிகோடி தமிழ்கொடுக்க வில்லேந்தி வரவேணும்
பண்கோடி பாடும்படி ஸ்வாமியே...14


பொன்கோடி குவிந்தாலும் புகழ்கோடி விரிந்தாலும்
களக்கோடிக் காவலனே காரணன்..15

பூச்சூடிப் பொற்கலையும் பூங்கலையும் அருகிருக்க
கதிர்கோடி எனக்காட்டும் பூரணன்...16

வழிந்தோடி விழிநீரும் திருவடியில் மலராகும்
களக்கோடி கண்மணியே சரணமே...17

நெகிழ்ந்தோடி நெஞ்சகத்தில் நின்பெயரே நின்றாடும்
களக்கோடி காவலனே சரணமே...18


ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத
ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஸ்வாமியே போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

செவ்வாய், ஏப்ரல் 28, 2020

தேடி உன்னை..

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்... 
*** 
இன்றைய பதிவில்
மகாகவியின்
திருப்பாடல்...


தேடி உன்னைச் சரணடைந்தேன் தேசமுத்துமாரி
கேடதனை நீக்கிடுவாய்... கேட்ட வரந் தருவாய்..

பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்
கோடிநலஞ் செய்திடுவாய் குறைகளெல்லாந் தீர்ப்பாய்..

எப்பொழுதுங் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி
ஒப்பியுன தேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்..

சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயம் அனைத்தும் தீரும்..


ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம்..

துன்பமே இயற்கை என்னும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள்...

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்..


ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ  

திங்கள், ஏப்ரல் 27, 2020

சிவமே சரணம் 16

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் நீங்கிட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
திருநாவுக்கரசர் அருளிச் செய்த
திருப்பதிகம்..

திருத்தலம் - சாய்க்காடு
சாயாவனம்
காசிக்கு நிகரான திருத்தலங்கள் ஆறனுள்
இதுவும் ஒன்று..


இறைவன் - சாயாவனேஸ்வரர்
அம்பிகை - குயிலினும் நன்மொழியாள்


தலவிருட்சம் - கோரைப் புல்
தீர்த்தம் - காவிரி, ஐராவத தீர்த்தம்..


இத்தலத்தில் வில்லேந்திய வேலவனின்
திருக்கோலம் சிறப்பு..

ஐராவதம் வணங்கியதுடன்
எண்ணிரந்த சிறப்புகளை உடையது...
இயற்பகை நாயனார் தோற்றமுற்ற திருவூர்..

திருவெண்காட்டிற்கு அருகில் உள்ள
திருத்தலம்..

நான்காம் திருமுறை
திருப்பதிக எண் - 65

திருப்பதிகத்தின் திருப்பாடல்கள் ஒவ்வொன்றிலும்
ஒரு புராணத்தைச் சொல்லியிருப்பார் - ஸ்வாமிகள்..

பத்து புராணங்களை ஓதிய புண்ணியப் பயன்
அனைத்தையும் தரவல்லது இந்த ஒரு திருப்பதிகம் ..


தோடுலா மலர்கள் தூவித்தொழுதெழு மார்க்கண்டேயன்
வீடுநா ளணுகிற் றென்று மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செலலும் அஞ்சிப் பாதமே சரணம் என்னச்
சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே.. 1

வடங்கெழு மலை மத்தாக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சங்கண்டு பஃறேவர் அஞ்சி
அடைந்துநுஞ் சரணம்என்ன அருள்பெரி துடையராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே.. 2

அரணிலா வெளிய நாவல் அருநிழலாக ஈசன்
வரணியல் ஆகித் தன்வாய் நூலினாற் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்னன் ஆக்கித்
தரணிதான் ஆளவைத்தார் சாய்க்காடு மேவினாரே.. 3

அரும்பெரும் சிலைக்கை வேட னாய்விறற் பார்த்தற் கன்று
உரம்பெரி துடைமை காட்டி ஒள்ளமர் செய்து மீண்டே
வரம்பெரி துடையனாக்கி வாளமர் முகத்தின் மன்னுஞ்
சரம்பொலி தூணி யீந்தார் சாய்க்காடு மேவினாரே.. 4



இந்திரன் பிரமனங்கி எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறையது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த
தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ் சாய்க்காடு மேவினாரே.. 5

ஆமலி பாலு நெய்யும் ஆட்டியர்ச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப் பொறாத்தன் தாதை தாளைக்
கூர்மழு ஒன்றால் ஓச்சக் குளிர்சடைக் கொன்றைமாலைத்
தாமநற் சண்டிக் கீந்தார் சாய்க்காடு மேவினாரே.. 6

மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் அமரர் ஏத்த ஆயிர முகம் அதாகி
வையக நெளியப் பாய்வாள் வந்திழி கங்கை என்னுந்
தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே.. 7


குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரம்
துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கி தூயவாய்க் கலசம் ஆட்ட
உவப்பெருங் குருதி சோர ஒருகணை இடந்தங் கப்பத்
தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே.. 8



நக்குலா மலர் பன்னூறு கொண்டுநன் ஞானத்தோடு
மிக்க பூசனைகள் செய்வான் மென்மலரொன்று காணா
தொக்குமென் மலர்க்கண் என்றங் கொருகணை யிடந்தும் அப்பச்
சக்கரம் கொடுப்பர் போலுஞ் சாய்க்காடு மேவினாரே.. 9

புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்தும் ஆயக்கொண் டரக்கன்ஓடிச்
சிவன்திரு மலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி அஞ்ச
வியன்பெற எய்திவீழ விரல்சிறி தூன்றி மீண்டே
சயம்பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.. 10
-: திருச்சிற்றம்பலம் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

ஞாயிறு, ஏப்ரல் 26, 2020

சிவமே சரணம் 15

நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

அன்பின் அக்கா ஸ்ரீமதி கீதாசாம்பசிவம் அவர்கள்
அன்பின் திரு வெங்கட் நாகராஜ் அவர்களது தளத்தில்
தனது கண்பார்வையைப் பற்றிச்
சொல்லியிருந்தார்கள்...

அது கண்டு மனம் வருந்தினேன்..
அவர்களது இன்னல் தீர
அனைவரும் வேண்டிக் கொள்வோம்...

அக்கா அவர்களுக்காக
இன்றைய பதிவில்

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிச் செய்த
காஞ்சித் திருப்பதிகம்...

இத்திருப்பதிகத்தைப் பாராயணம்செய்வதால்
கண்நோய்கள் தீர்வதாக ஐதீகம்...

இருப்பினும் வயது கூடும் அளவில்
இன்னல்கள் கூடாதிருக்க
அன்னை ஸ்ரீ காமாக்ஷி அம்பிகை
கருணைக் கண் கொண்டு நோக்குவாளாக!..

ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் - 61

திருத்தலம்
திருக்கச்சி ஏகம்பம்


இறைவன் - ஸ்ரீஏகாம்பரேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீகாமாக்ஷி, ஏலவார்குழலி

தலவிருட்சம் - மா
தீர்த்தம் - கம்பை நதி..


ஆலந்தான் உகந்து அமுது செய்தானை
ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 1

உற்ற வர்க்குத வும்பெரு மானை
ஊர்வ தொன்று டையான் உம்பர் கோனைப்
பற்றினார்க் கென்றும் பற்றவன் தன்னைப்
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றமில் புகழாள் உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 2


திரியும் முப்புரந் தீப் பிழம்பாகச்
செங்கண் மால்விடை மேல்திகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
காமனைக் கனலால் விழித் தானை
வரிகொள் வெள்வளை யாள் உமைநங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 3

குண்டலந் திகழ் காதுடை யானைக்
கூற்றுதைத்த கொடுந் தொழிலானை
வண்டலம் பும்மலர்க் கொன்றை யினானை
வாளரா மதிசேர் சடையானைக்
கெண்டை யந்தடங் கண் உமை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ட நஞ்சுடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 4

ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி - தஞ்சை 
வெல்லும் வெண்மழு ஒன்று டையானை
வேலை நஞ்சுண்ட வித்தகன் தன்னை
அல்லல் தீர்த்தருள் செய்ய வல்லானை
அருமறை அவை அங்கம் வல்லானை
எல்லையில் புகழாள் உமைநங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 5 

திங்கள் தங்கிய சடை உடையானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடையானைச்
சாம வேதம் பெரிது (உ)கப்பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளானைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 6


விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதந் தான் விரித்த் தோத வல்லானை
நண்ணினார்க் கென்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 7

சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள்
சிந்தையில் திகழுஞ் சிவன் தன்னைப்
பந்தித்த வினைப் பற்று அறுப்பானைப்
பாலொடு ஆனஞ்சும் ஆட்டுகந்தானை
அந்தமில் புகழாள் உமைநங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 8


வரங்கள் பெற்றுழல் வாளரக்கர்தம்
வாலிய புரம் மூன்றெ ரித்தானை
நிரம்பிய தக்கன் தன் பெருவேள்வி
நிரந்தரஞ் செய்த நிர்க்கண் டகனைப்
பரந்த தொல்புகழாள் உமைநங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 9

எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி உகந்து உமைநங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 10


பெற்றம் ஏறுகந்து ஏற வல்லானைப்
பெரிய எம்பெருமான் என்று எப்போதும்
கற்றவர் பரவப் படுவானைக்
காணக் கண் அடியேன் பெற்றதென்று
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானைக்
குளிர்பொழில் திருநாவல் ஆரூரன்
நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார்
நன்னெறி உலகு எய்துவர் தாமே.. 11
- திருச்சிற்றம்பலம்-

கை கொடுக்கும் காமாக்ஷி
கண் கொடுப்பாளாக!..
ஓம் காமாக்ஷ்யை நம: 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ