ஞாயிறு, மார்ச் 29, 2020

மகமாயி வருக 1

மங்கலங்கள் தந்தருளும்
ஸ்ரீ மாரியம்மன் திருவடிகளுக்கு
எளியேன் தொடுத்த தமிழ் மாலை
இன்றைய பதிவில்..
***

மாயி மகமாயி..
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே..
ஆஸ்தான மாரிமுத்தே..


மங்கலங்கள் தந்திடுவாள் மண் விளையச் செய்திடுவாள் 
என்று வரும் மக்களுக்கு ஆறுதலும் சொல்லிடம்மா...
ஆனைமுகன் ஓடிவந்து அன்னை என்று தானழைக்க
ஆறுமுகன் மடிதவழும் அற்புதமாய் வந்திடம்மா!...

வெள்ளியில பிரம்பெடுத்து வீதிவழி வருபவளே..
தங்கத்தில பிரம்பெடுத்து தான் நடந்து காப்பவளே..
தஞ்சமென்று தவிக்குதம்மா தனித்திருந்து துடிக்குதம்மா...
தஞ்சம் ஒன்று அளித்திடவே தங்கமாரி வந்திடம்மா!...


வேப்பிலையை வீசி வரும் வித்தகியே மாரியம்மா
மஞ்சள் முகம் பூசி வரும் மாதரசி மாரியம்மா..
செந்தூரப் பொட்டுடனே செண்பகத்துப் பூமுடித்து
சிங்காரமாகி வரும் செல்லமுத்து மாரியம்மா!...


நாங்கள் உந்தன் மக்கள் என்ற நல்ல சொல்லும் மெய்யாகும்
  நல்ல சுடர் விளக்கினிலே எங்கள் அன்பு நெய்யாகும்..
சுற்றி வரும் பிணிகள் எல்லாம் அக்கினியில் தீயாகும்
வஞ்சகமும் கொடும்பகையும் வாழ்விழந்து பொய்யாகும்!..

தஞ்சை ஸ்ரீ முத்துமாரியம்மன் 
பூங்கரகம் ஏந்தி வரும் பொன்மகளே மாரியம்மா
பூவெடுத்து வணங்கி நின்றோம் புன்னை வன மாரியம்மா..
தங்கமுகம் காட்டிடுவாய் தஞ்சை முத்து மாரியம்மா
முன்நடந்து காத்திடுவாய் முத்தழகு மாரியம்மா!...

நாடிவந்து நடை கிடந்தோம் நாடிமுத்து மாரியம்மா
நல்ல துணை ஆகிடுவாய் பட்டுக்கோட்டை மாரியம்மா..
பக்கத்தினில் இருந்திடுவாய் பந்தலடி மாரியம்மா
தேறுதலும் தந்திடுவாய் தேரடியில் மாரியம்மா!...

கை விளக்கு ஏந்தி வந்தோம் கரம்பயத்து மாரியம்மா
வரும் பயத்தைத் தீர்த்திடுவாய் வடிவழகு மாரியம்மா..
அன்னை முகம் பார்த்திருந்தோம் ஆதிமுத்து மாரியம்மா
உன்னை நெஞ்சில் வைத்திருந்தோம் வண்ணமுத்து மாரியம்மா!..


வஞ்சகத்தை அறுப்பவளே வண்டியூரில் மாரியம்மா
நெஞ்சகத்தில் இருப்பவளே நின்று அருள் கொடுப்பவளே
தொல்லை வினை தீர்ப்பவளே தெப்பக்குள மாரியம்மா
தண்டெடுத்துக் காப்பவளே தஞ்சமொன்று அளிப்பவளே!..

உன்னிடத்தில் சொல்லாமல் யாரிடத்தில் சொல்லுவது
உந்தன் துணையில்லாமல் எப்படித்தான் வெல்லுவது...
வாடிவரும் மக்களைத்தான் வலங்கையில் காப்பவளே
தேடிவரும் மக்களைத்தான் தீவினையில் மீட்பவளே!..


குடந்தை நகரினிலே படைவெட்டி மாரியம்மா
குழந்தைகள் நலங்காக்க தடைவெட்டி வாடியம்மா..
கோடிமுத்து மணி விளக்காய் முகங்காட்டி நடந்து வர
ஓடி இற்று விழுந்தழியும் உயிர் குடிக்கும் கிருமிகளும்..

குடமுருட்டிக் கரையினிலே குலங்காங்கும் கோமளமே
வீரசிங்கன் பேட்டையிலே வெற்றி வடிவானவளே..
வந்தவர்க்கு பசி தணிக்கும் தங்க முத்து மாரியம்மா..
வந்து பிணி தீரடியோ திருவிளக்கு மாரியம்மா...

ஸ்ரீ சமயபுரத்தாள் 
சமயபுர நாயகியே சஞ்சலங்கள் தீர்ப்பவளே
சாம்பிராணி வாசத்திலே சந்நதமும் கொடுப்பவளே...
கண்ணபுர நாயகியே.. கைகொடுத்துக் காப்பவளே
காலடியில் சரணடைந்தோம் சங்கடங்கள் தீர்த்திடுவாய்...

ஸ்ரீ வெக்காளியம்மன் - உறையூர் 
மக்கள் நிழல் நின்றிருக்க வெயிலிருக்கும் வெக்காளி
வந்து வரம் தந்திடம்மா நல்ல குறி சொல்லிடம்மா..
திக்கு திசை நடுநடுங்க திரிசூலக் கூர்முனையால் 
வஞ்சினத்து நோய்க்குறியை வெந்தணலில் தள்ளிடம்மா 

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் 
சிறுவாச்சூர் மாரியம்மா பெரும் பேரும் கொண்டவளே
சீறிவரும் சிங்கத்துடன் சீக்கிரத்தில் வாடியம்மா...
சின்னமணிச் சதங்கை எல்லாம் சிங்காரப் பாட்டிசைக்க
வந்தபிணி தீர்த்திடம்மா வாழ்வளித்துக் காத்திடம்மா..


கருமாரி உருமாறி கனக மணி தரும் மாரி
வேற்காட்டு எல்லையிலே வினையோட்டும் புகழ் மாரி..
அருள்மாரி ஆனவளே அஞ்சு குடை நாகவல்லி
ஆதரிக்க வேணுமம்மா அல்லலையும் தீர்ப்பவளே.. 

ஸ்ரீ வீரமாகாளி
என்னையும் ஏந்திக் கொண்ட என் அன்னை 
வீரமா காளியம்மா.. வெற்றி தரும் நீலியம்மா
சூழ்பிணியைத் தீர்த்திடவே சுற்றி வர வேணும் அம்மா...
கொப்புடைய நாயகியே குலங்காக்க வாடியம்மா
வெப்புடைய பிணிதீர்க்கும் திருவுடைய கோடியம்மா...

சின்ன முத்து பெரிய முத்து மாரி என்று வந்தவளே
சிந்தித்தவர் நெஞ்சத்திலே சீர்கொடுத்து நின்றவளே..
உன்னையன்றி ஒருதுணையும் ஊர்காக்க இல்லையம்மா
வந்து எங்கள் பிழைபொறுத்து வாழ்வருள வேணுமம்மா.. 

கோலவிழி மாரியம்மா குங்குமத்து தேவியம்மா..
ஆயிரங்கண் உடையவளே ஓங்கார நாயகியே
பரிதவித்து ஓடி வந்தோம் நேச முத்து மாரியம்மா
தேடி உன்னைச் சரணடைந்தோம் தேச முத்து மாரியம்மா..

ஸ்ரீ பேச்சியம்மன் 
ஊரெல்லாம் சந்நதிகள் ஒய்யார மண்டபங்கள்..
பேர் கொண்டு இருப்பவளே பெரும் பேச்சி ஆனவளே...
உனைக் கடந்து வந்ததுவோ ஊர் முழுக்க ஒருபிணியும்
கூர் கொண்டு அழித்திடம்மா ஆருயிரைக் காத்திடம்மா...

அஞ்சேல் என்று வந்த ஆரணங்கு
ஸ்ரீ பிடாரியம்மன் - குரால் நத்தம் (சேலம்) 
எல்லையிலே பிடாரி இளங்காளி ஆனவளே
எல்லாமும் அறிந்தவளே இந்தப் பிணி தான் எதற்கு?..
எங்கள் வழி பார்த்திடம்மா.. இன்னுயிரைக் காத்திடம்மா
எந்தப் பிழை என்றாலும் உந்தன் மனம் பொறுத்திடம்மா..

உந்தன் முகம் மறந்த குறை உருக்கொண்டு வந்ததுவோ
ஊர் முழுதும் வாடிடவே வக்கிரத்தில் நின்றதுவோ..
எந்தப் பிழை ஆனாலும் வந்த வினை தீர்த்திடம்மா
நல்லவர்கள் பூசையிலே நன்மைகளைத் தந்திடம்மா...

சூலத்தினில் பிடாரி சூட்சுமங்கள் ஆனவளே
சுற்றிவரும் பிணி முடித்து வெற்றி நடம் ஆடிடம்மா..
மஞ்சளுடன் வேப்பிலையாய் முன் நடக்க வேணுமம்மா
     பீடைகளை அரிந்தெடுத்து பிள்ளைகளைக் காத்திடம்மா..


தங்கக் கவசத்தில்
எங்கள் முத்து மாரியம்மன் 
எலுமிச்சம் மாலையுடன் எங்கள் குறை மாற்றிடம்மா..
வேப்பிலையை வீசி நடந்து வேதனையைத் தீர்த்திடம்மா..
நாடெங்கும் காத்திடவே எங்கள் முத்து மாரியம்மா
நல்ல தமிழ் சொல்லி வைத்தேன் நான் வணங்கும் மாரியம்மா!...

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

10 கருத்துகள்:

  1. மிக அற்புதம்.
    அத்தனை ஊர்த் தெய்வங்களையும் அரணாக
    அழைத்துவிட்டீர்கள்.
    இந்தத் தெய்வங்களைக் கண்டாலே நோய் பறந்தோடும். அன்னையின் அருளைப் பைந்தமிழில் பாடிய உங்கள்
    ஆராதனை நாங்களும் பாடி நலம் பெறுவோம். நன்றி
    அன்பு துரை.
    அத்தனை படங்களும் அழகு.
    எங்கள் குல நாயகியே கண்ணகி அம்மா பாடலின் இசையில்
    இந்தப் பாடலைப் பாடலாமோ.

    அன்னைக்கோ துன்பம் பிடிக்காது.
    நாம் அவளைப் போற்றி நல் வாழ்வு பெறுவோம்.

    பதிலளிநீக்கு
  2. மிக அற்புதம்.  அம்மாவைத் தவிர குழந்தைகளைக் காப்பவர் யார்?  இந்த சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமான காவல் தெய்வம்..  அன்பின் தெய்வம்...  வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    தாங்கள் இயற்றிய செந்தமிழ் பாமாலையால் அம்மனுக்கு அழகு செய்து எங்களுக்குள்ளும் அற்புத பக்தியின் பெருக்கை தந்த தங்கள் பதிவுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள். ஒவ்வொரு ஊரின் அன்னைக்கும் பொருத்தமான பக்திப்பாடல்கள் வெகு அருமை.

    அத்தனைப் படங்களும் அழகு.அதற்கு நீங்கள் பாடிய எளிதான கவசங்களை நானும் பாடி பிராத்தனைகள் செய்தேன். காலையில் அன்னையின் தரிசனங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாய் இருந்தது. பிணிகள் சூழும் போது அன்னையின் அருகாமைதானே நமக்கு ஆறுதல். அன்னையின் அன்பு கரம் பட்டாலே ஆயிரம் துன்பங்களும் ஓடி மறையும். அன்னை உலக மக்களின் துன்பம் துடைத்து அருள் மழை பெய்யட்டும் என நானும் அவள் அடிமலர் பணிந்து பிராத்தனைகள் செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. அழைத்தாள் வருவாள், அழைக்காவிட்டாலும் வருவாள், என்றும் நம்முடன் துணை நிற்பாள். அவளை நினைக்க அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  5. மக்கள் துயர் மகமாயி தீர்க்கட்டும்.
    வாழ்க வையகம்....

    பதிலளிநீக்கு
  6. துயர் தீர்க்க மகமாயி அருள் புரியட்டும். நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  7. எங்கள் கோட்டையை காக்கும் மகமாயி, அனைவரையும் காப்பாக இருப்பாள்...

    பதிலளிநீக்கு
  8. துன்பம்நேர்கையில் இன்பம் சேர்க்க அன்னையை அழைக்கும்பாட்டு கற்பனைஊற்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  9. மகமாயி எங்கள் குலதாயே! எங்கள் குலம் காக்கா வா தாயே!

    மிக் அற்புதமான மாரியம்மன் புகழ் பாடி குறை கேட்க சொல்லி விட்டீர்கள்.வருவாள் அன்னை.
    படங்கள் மூலம் அன்னையை தரிசனம் செய்து வேண்டிக் கொண்டேன்.
    உலக மக்கள் அனைவரையும் காப்பாள் கருணை மிக்க தாய்.

    பதிலளிநீக்கு
  10. மிக அருமை. மாரியம்மன் தாலாட்டை வேறே விதத்தில் படிப்பது போல் உள்ளது. எல்லா ஊர் அம்மன் அனைவரையும் அழைத்துவிட்டீர்கள். சில இடங்களில் கண்ணீர் வருகிறது. தனியாக நகல் எடுத்து வைத்துக்கொள்ள முடியலை. நினைத்த போது படித்துக்கொள்ளலாம். மறுபடியும் தட்டச்சிக் கொள்ளவேண்டும். நேரம் கிடைக்கையில் தட்டச்சிக் கொள்கிறேன். நன்றி.ஒரு வருடத்துக்குக் குலதெய்வம் கோயிலுக்கே போகக் கூடாது எனச் சொல்லிவிட்டார்கள். இதன் மூலமாவது மனம் ஆறுதல் அடையும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..