சனி, பிப்ரவரி 29, 2020

அம்பிகை வந்தாள் 1

தஞ்சை மாநகருக்குள் வடக்குப் புறமாக கரந்தை வழியாக வரும்போது கொடிமரத்து மூலை எனும் பகுதியை நெருங்கும் முன்பாக அகழிக் கரையிலிருந்து மேற்குத் திசையில் நோக்கினால் நெடிதுயர்ந்த கோபுரம் தென்படும்...

சென்னை , மயிலாடுதுறை, கும்பகோணம், ஆத்தூர், அரியலூர் பேருந்துகள் இவ்வழியாகத் தான் வருகின்றன...

16.2.2012
சரி இருக்கட்டும்... அது என்ன கோயில்?.. சிவன் கோயிலா?..

இல்லை!...

பெருமாள் கோயிலா?..

அதுவும் இல்லை!...

அப்புறம் என்ன?... புதிர் போட்டு விளையாடுகிறீரா!...

அந்தக் கோயிலின் பெயர் என்ன என்பது இன்னும் சரியாக யாருக்கும் தெரியாது!...

என்னது!... பேர் தெரியாதா?...

உண்மைதான்..
நீங்கள் சிவன் கோயில் என்று சென்றால் -

16.2.2012

16.2.2012 
ஸ்ரீ சிவேந்த்ர மூர்த்தி 
அங்கே ஸ்ரீ சக்கரத்தில் திருமேனியுடன் பத்துப் பன்னிரண்டு வடிவங்களைத் தரிசிக்கலாம்...
சிவராத்திரியன்று திருக்கோலம் 
பெருமாள் கோயில் என்று சென்றால்
பிரம்மாண்டமாக ஸ்ரீ சுதர்சன மூர்த்தியை மூலஸ்தானத்தில் தரிசிக்கலாம்...

மூலஸ்தானத்தில் ஸ்ரீ சுதர்சன மூர்த்தி 
17/1/20 அன்று ஸ்ரீ சுதர்சனருக்கு அலங்காரம் 
இதனால் தான் இக்கோயிலை ராஜகோபாலசாமி கோயில் என்று சிலர் சொல்கிறார்கள்...

ஆனால் இங்கு தான் ராஜகோபாலன் இல்லையே!...
எங்கே போனான் - அந்த ராஜகோபாலன்!...

இங்கிருக்கும் காளி ஆடிய கூத்தினால்
செண்பகாரண்யம் எனப்படும் மன்னார்குடிக்கு
ராஜகோபாலன் சென்று விட்டதாக சொல்கிறார்கள்...

இது நாயக்கர்கள் காலத்தினால் நடந்ததாம்...
மன்னார்குடியில் பிரம்மாண்டமாகக் கோயிலைக் கட்டி எழுப்பி
அங்கே ஸ்ரீமந் ராஜகோபாலனை எழுந்தருளப் பண்ணினார்களாம்...

அதன் பிறகு இந்த கோயிலைக் கவனத்தில் கொள்ளவில்லை என்கிறார்கள்...

தற்காலத்தில் வடக்கு வீதி காளி கோயில் என்றால் தான் புரியும்...

மூலஸ்தானத்தில் ஸ்ரீ சுதர்சன மூர்த்தி...

அதற்குப் பின் புறமாக கன்னி மூலையில் பெரிய மண்டபம்..
அது தான் சிவேந்திரர் கோயில் எனப்படுவது...

இந்த மண்டபத்தினுள் தான் பல்வேறு சக்ர பீடங்களில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்றார்...

சிவபெருமான் என்றாலும் இருபுறமும் தேவியர் விளங்குகின்றார்களே!...
ஈசனுக்கு அப்படியான திருக்கோலம் எதுவும் கிடையாதே!..

சரியான கேள்விதான்... இருந்தாலும்
சிவ அம்சமும் நாராயண அம்சமும் ஒருங்கே விளங்குவதால்
அங்கே மேலராஜவீதி சங்கர நாராயணர் திருக்கோயிலில்
சங்கர நாராயண மூர்த்தி இருபுறமும் தேவியருடன் விளங்குவதைப் போல இங்கேயும் விளங்குவதாகத் தாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து...

ஓஹோ!.. இதுதான் முற்றான கருத்தா?...

அப்படியெல்லாம் இல்லை... இவ்வளவு நாள் இல்லாமல்
இந்தப் பதிவினை எழுதும்போது மனதில் உதித்த கருத்து இது!...
தங்களுக்கு உகந்தது எனில் உவப்புடன் கொள்க!...

அவ்வளவு தானா?...

இருக்கிறதே... மூலஸ்தானத்துக்கு ஈசான்ய மூலையில் இன்னொரு மண்டபம் அதனுள் இரு பிரிவாக ஒன்றில் ஏகப்பட்ட சிவலிங்கங்கள்...



16.2.2012
ஐந்தடி உயரத்துக்கு மேல் விநாயகர், பாலமுருகன், ஆஞ்சநேயர் - என திருமேனிகள்...

மேலும் யந்த்ர பீடத்துடன் கூடி வித்யாசமாக விளங்கும் நவக்ரக மூர்த்திகள்..

அந்தப் படங்கள் ஒன்றையும் இங்கே காணோம்!...

உண்மையைச் சொல்வதானால் -
அந்தத் திருவுருவங்கள்.. அங்கிருக்கும் அதிர்வலைகள் எல்லாம் சேர்ந்து கொள்ள அதிர்ந்து போனேன்... படமெடுக்கத் தோன்றவில்லை...

அப்படியானால் யாரும் வருவதில்லையா அங்கே!...

நல்ல கேள்வி கேட்டீர்கள்... காளி கோயில் என்றிருக்கும் போது பெண்கள் வராமலா இருப்பார்கள்!... நான் அங்கிருந்த போதே ஏராளமான பெண்கள் அவர்களாகவே சிவலிங்கங்களுக்கு மலர் சூட்டி தீபமேற்றி வழிபட்டுச் சென்றார்கள்...

எனக்குத் தான் சற்று நடுக்கம்... மண்டபத்தில் ஆங்காங்கே சின்னச் சின்ன ஓட்டைகள்.. பிளவுகள்.. சுப்புக்குட்டிகள் இருக்குமோ என்று...

எல்லாவற்றுக்கும் மேலாக அங்கே பெரிய சுப்புக் குட்டிகளின் திருமேனிகள் வேறு...


எல்லாம் சரிதான்... அம்பிகையின் படம் ஒன்றையும் காணோமே!...

அம்பிகை வந்தாள் என்று தலைப்பு மட்டுமா!...

அவள் வந்து தானே பதிவைப் போடு!.. - என்றாள்...
இந்தப் படங்கள் எடுக்கப்பட்டு எத்தனை வருடங்கள் தெரியுமா!..
சரியாக எட்டு ஆண்டுகள்... 

இத்தனை ஆண்டுகளாக ஏன் போடவில்லை?...  

எல்லாம் ஒரு மரியாதை தான்... அவள் என்ன சொல்வாளோ... என்ற தயக்கம் தான்!...

அப்படியிருக்க இப்போது என்ன திடீரென்று!...

அவள் தான் சிவராத்திரி அன்று வந்தாளே!.. சிரித்துக் கொண்டே வந்தாளே!..
வேறு சில தகவல்களையும் சொல்வார் மூலம் சொன்னாளே!..

எதையாவது உளறிக் கொண்டு இருக்காமல் எட்டு வருடங்களுக்கு முன்னால் எடுத்த மற்ற படங்களையும் பதிவில் போட்டு விட்டு மறு வேலை பார்க்கவும்...

ஆகா!.. அதை விட எனக்கு வேறு வேலை என்ன எனக்கு!..
உங்கள் ஆசைக்காக ஒன்றே ஒன்று.. மற்றவை அடுத்த பதிவில்!...


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.. (077)
-: அபிராமபட்டர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

வெள்ளி, பிப்ரவரி 28, 2020

ஸ்ரீசங்கரநாராயணன்

முந்தைய பதிவு ஒன்றில் தஞ்சை மாநகரின்
ஸ்ரீசங்கரநாராயணர் திருக்கோயிலைப் பற்றிச் சொல்லியிருந்தேன்..

தஞ்சை மேலராஜவீதியில் விளங்கும் ஏழு திருக்கோயில்களில்
முதலாவதாகத் திகழ்வது இத்திருக்கோயிலே...

இத்திருக்கோயிலில்
ஸ்ரீ மஹாசிவராத்திரியை ஒட்டி நிகழ்ந்த
சந்தனக்காப்பு வைபவத்தின் திருக்காட்சி இன்றைய பதிவில்...

காலத்தால் முந்தைய தலம்..
திருக்கோயிலின் கட்டுமானம் பிந்தையது..

மூலவர் ஸ்ரீசங்கரநாராயண லிங்கம்..
அம்பிகை ஸ்ரீ பாலாம்பிகை...

கருவறைக்கு நேர் பின்புறமாக
பிரகார மண்டபத்தில் ஸ்ரீ சங்கர நாராயணர் திருமேனி..

ஆறடி உயரத்துக்கு ஆகிருதி...

சிவபெருமானின் இடப்புறம் நாராயண அம்சம்...

திருக்கோலத்தின் வலப்புறம் மலைமகள்... இடப்புறம் அலைமகள்...
பார்த்துக் கொண்டே இருக்கலாம்... அப்படியொரு அழகு...

படங்களை வழங்கியவர் அன்பின் திரு தஞ்சை ஞானசேகரன்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...





ஸ்ரீ சங்கரநாராயணர் திருக்கோயில் 

சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சங்கரநாராயணர் 
ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் கூற்றொருபால்
மங்கையான் பூமகளான் வார்சடையான் நீண்முடியான்
கங்கையான் நீள்கழலான் காப்பு..(2155)
-: பொய்கையாழ்வார் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

சனி, பிப்ரவரி 22, 2020

சிவதரிசனம்

ஸ்ரீ மஹாசிவராத்திரியன்று
தஞ்சை மாகரில் விளங்கும் சிவாலயங்கள் பலவற்றிலும்
சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்துள்ளன..

அவற்றுள் - இன்றைய பதிவில்
ஸ்ரீ சங்கர நாராயணர் திருக்கோயில், மற்றும் ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி கோயிலின் ஸ்ரீ சிவேந்திரர் சந்நிதி தரிசனம்...

ஸ்ரீ சங்கரநாராயண ஸ்வாமி
ஸ்ரீ பாலாம்பிகை 
ஸ்ரீ சங்கர நாராயணப்பெருமாள் 
வடக்கு ராஜவீதி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோயிலின்
ஸ்ரீ சிவேந்திரர் சந்நிதி தரிசனம்..





ஸ்ரீ சிவேந்திரர் கோயிலில் அக்னி கேசம் நெற்றிக் கண் விளங்க
ஸ்ரீ சக்கரத்தில் ஈசன் எழுந்தருளியுள்ளார்...

இருபுறமும் தேவியர் விளங்குவதால் நாராயண அம்சம் என்கின்றனர்...
ஸ்வாமிக்கு முன்பாக ரிஷபம், குதிரை, யானை - என வாகனங்கள் விளங்குகின்றன..

இவ்வாறாக சிறிதும் பெரிதுமான சக்கரங்கள் பத்திற்கும் மேல் விளங்குகின்றன...

இக்கோயில் ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் எனப்பட்டாலும்
மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸுதர்சனப்பெருமாள்...


ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள பிரம்மாண்டமான அஷ்டபுஜ துர்கையும் ஸ்ரீ காளியும்...


ஸ்ரீ பகளாமுகி அம்மன் 

ஸ்ரீ பகளாமுகி அம்மன் 
இங்குள்ள காளி - ஸ்ரீ பகளாமுகி எனப்படுகின்றாள்...

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் இக் கோயிலில் படங்கள் எடுத்திருக்கின்றேன்..
ஆனால் அவை எனது கோப்பில் எங்கே இருக்கின்றன என்று தெரியவில்லை..

படங்களை Fb ல் வழங்கியவர் திரு. தஞ்சை ஞானசேகரன் அவர்கள்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

பெரிய கோயிலில் நிகழ்ந்த அபிஷேக அலங்கார தரிசன காணொளி..
Youtube ல் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது..

ஸ்டூடியோவினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...





நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக் கெலாம்
நம்பன் நாமம் நம சிவாயவே..(3/49)
-: திருஞான சம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
ஃஃஃ 

வெள்ளி, பிப்ரவரி 21, 2020

ஸ்ரீ மஹாசிவராத்திரி

இன்று மகா சிவராத்திரி..

மாசி மாதத்தின் தேய்பிறை திரயோதசி.. பிரதோஷ நாள்..

இத்துடன் மஹாசிவராத்திரி
புண்ய காலமும் கூடி இருக்கின்றது..


இன்றிரவு அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால சிறப்பு வழிபாடுகள் நிகழ்வுறுகின்றன..

முதல் கால பூஜையை ஸ்ரீ நான்முகனும்
இரண்டாம் கால பூஜையை ஸ்ரீ மஹாவிஷ்ணுவும்
மூன்றாம் கால பூஜையை ஸ்ரீ பராசக்தி அம்பிகையும்
நான்காம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் மகரிஷிகளும் சித்தர்களும் நிகழ்த்தியதாக ஐதீகம்..

இந்த நான்கு காலங்களிலும் ஈ எறும்பு முதற்கொண்டு மனிதர் வரை எண்ணாயிரங்கோடி ஜீவராசிகளும் வழிபட்டு உய்வடைவதாக ஆன்றோர் வாக்கு..

முதல் கால பூஜை மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள்ளாக நிகழும்..

இரண்டாம் கால பூஜை மாலை ஒன்பது மணியிலிருந்து நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குள்ளாக நிகழும்..

மூன்றாம் கால பூஜை மாலை நள்ளிரவு பன்னிரண்டு மணியிலிருந்து பின்னிரவு மூன்று மணிக்குள்ளாக நிகழும்..

மூன்றாம் காலத்தின் மத்திய பொழுது (ஒன்றரை மணி) -
லிங்கோத்பவ காலம் என்று குறிக்கப்படுகின்றது..

இவ்வேளையில் தான் ஈசன் எம்பெருமான் அடிமுடி அறியவொண்ணா
அனல் மலையாகத் தோன்றினன் என்பது திருக்குறிப்பு..

நான்காம் கால பூஜை பின்னிரவு மூன்று மணியிலிருந்து அதிகாலை ஆறு மணிக்குள்ளாக நிகழும்..


நான்கு கால பூஜைகளிலும் 
சிறப்பான அபிஷேக அலங்கார ஆராதனைகள் நிகழ்த்தப்படுகின்றன..

சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்பல.. ஆனாலும்,
நேரிய நினைவுகள் நிறைந்திருந்தால் நெஞ்சகமே கோயிலாகின்றது..

எம்பெருமானின் திருமுடியை அலங்கரித்ததால் ஆணவமுற்ற நாகராஜன் பாதாளத்தில் வீழ்ந்தான்..

தலை கீழாக அதள பாதாளத்தில் வீழ்ந்ததால்
அவனது தலை ஆயிரம் பிளவுகளாகச் சிதறிப் போனது..

தானுற்ற பழியினின்று நீங்குதற்காக -

முதற்காலத்தில் திருக்குடந்தை
இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரம்
மூன்றாங் காலத்தில் திருப்பாம்புரம்
நான்காம் காலத்தில் திருநாகைப்பட்டினம்

- ஆகிய திருத்தலங்களில் நாகராஜன் சிவபூஜை செய்ததாக ஐதீகம்..

ஆணவம் நீங்கப் பெற்று ஈசனைச் சரணடைதலே
சிவராத்திரியின் மகத்தான தத்துவம்..

இந்நிலைக்கு 
எல்லாம் வல்ல சிவம் நம்மையும் உய்விக்குமாக!..
 ***

இன்றைய பதிவில்
ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிச் செய்த 
திருக்கடவூர்த் திருப்பதிகம்..


ஏழாம் திருமுறை
இருபத்தெட்டாவது திருப்பதிகம்



பொடியார் மேனியனே புரிநூலொருபாற் பொருந்த
வடியார் மூவிலைவேல் வளரங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார் துணை நீயலதே..01

பிறையாருஞ் சடையாய் பிரமன்தலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறையின்பொரு ளானவனே
கறையாரும் மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே எனக்கார் துணை நீயலதே..02


அன்றாலின் நிழற்கீழ் அறம் நால்வர்க்கருள் புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய்மறை யோனுக்குமான்
கன்றாருங் கரவா கடவூர்திரு வீரட்டத்துள்
என்றாதை பெருமான் எனக்கார் துணை நீயலதே..03

போரா ருங்கரியின் உரிபோர்த்துப்பொன் மேனியின்மேல்
வாராரும் குழலாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே
காராரும் மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்
தாரா என்னமுதே எனக்கார் துணை நீயலதே..04



மையார் கண்டத்தினாய் மதமாஉரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருள் புகுந்தாய் இன்னம் போந்தறியாய்
கையார் ஆடவா கடவூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக்கார்துணை நீயலதே..05

மண்ணீர் தீவெளிகால் வருபூதங்களாகி மற்றும்
பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனே
கண்ணாருண் மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்னமுதே எனக்கார்துணை நீயலதே..06


எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே
நரியாருஞ் சுடலை நகுவெண்தலை கொண்டவனே
கரியார் ஈருரியாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே எனக்கார் துணை நீயலதே..07

வேறா உன்னடியேன் விளங்குங் காதுடையாய்
தேறேன் உன்னையல்லால் சிவனே என்செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கடவூர் தனுள் வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக்கார் துணை நீயலதே..08



அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரிய
பயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கடவூர்த் திருவீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்கார் துணைநீயலதே..09

காராரும் பொழில்சூழ் கடவூர்திரு வீரட்டத்துள்
ஏராரும் இறையைத் துணையாஎழில் நாவலர்கோன்
ஆரூரன் அடியான் அடித்தொண்டன் உரைத்த தமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத்திருப்பாரே..10


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

செவ்வாய், பிப்ரவரி 11, 2020

தைப்பூசத் திருவிழா 2

நேற்றைய பதிவின் தொடர்ச்சியாக -

உவரியில் நிகழ்ந்த தைப்பூசத் திருவிழாவின்
திருத் தேரோட்டக் காட்சிகள் இன்றைய பதிவில்...


ஸ்வாமி திருத்தேருக்கு எழுந்தருளல் 









தேரோட்டத்தை அடுத்து பஞ்ச மூர்த்தி எழுந்தருளலும்
தெப்ப உற்சவமும் தீர்த்த வாரியுமாக
திருவிழா மங்கலகரமாக நிறைவுற்றது...










நம சிவாயவே ஞானமுங் கல்வியும்
நம சிவாயவே நானறி இச்சையும்
நம சிவாயவே நாநவின்று ஏத்துமே
நம சிவாயவே நன்னெறி காட்டுமே..(5/90) 
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ