செவ்வாய், ஜூலை 16, 2019

கண் கொடுத்த காமாக்ஷி

தொண்டை மண்டலத்தின் சிவாலயங்களைத்
தரிசனம் செய்து கொண்டு வரும் வேளையில்
முந்தை வினையின் பயனாக -

திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் காணுகின்றார் சுந்தரர்..

சங்கிலி நாச்சியார் பால் தனது மனம் சென்றதை உணரும் சுந்தரர்
அவரைத் திருமணம் செய்து கொள்ள விழைகின்றார்..

மேலைச் சிவப் பரம்பொருளின் அருளாணையும்
அவ்வண்ணமாகவே இருந்தபடியால்
திருமணமும் இனிதே நிறைவேறுகின்றது..

மாதங்கள் உருண்டோட
சுந்தரர் மனதில் ஆரூரின் நினைவுகள் மூண்டெழுகின்றன..

அந்தவகைக்கு திரு ஆரூர் நோக்கிப் புறப்படும்போது
எம்மைப் பிரியமாட்டேன் என்று வாக்கு அளிக்க வேணும்!.. - என
சங்கிலி நாச்சியார் கேட்டுக் கொள்கிறார்..

அப்போது
பெருமானே.. நாளை வாக்களிக்கும்போது
தாம் மகிழ மரத்து நிழலில் எழுந்தருளியிருப்பீராக!...  - என்று,


தம்முள் வேண்டிக் கொள்கிறார் சுந்தரர்..

அவருடைய எண்ணம் சந்நிதியில் வைத்து வாக்களிப்போம் என்பது...

அன்றிரவு சங்கிலி நாச்சியாரின் கனவில் எழுந்தருளிய ஸ்வாமி -
மகிழ மரத்தினடியில் வைத்து வாக்குக் கேட்குமாறு பணிக்கின்றார்...

பொழுது விடிந்ததும் சுந்தரரிடம்
மகிழ மரத்தினடியில் வைத்து வாக்களிக்குமாறு சங்கிலியார் கேட்கின்றார்..

வேறொன்றும் சொல்ல இயலாத சுந்தரரும்
மகிழ மரத்தினடியில் வைத்து வாக்களிக்கின்றார்..
உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்!.. - என்று...

ஆனாலும் அடுத்த சில தினங்களில் திரு ஆரூருக்குப் புறப்பட
திரு ஒற்றியூரின் எல்லையில் சுந்தரரின் கண்ணொளி குறைந்து போகின்றது...

ஒளி குன்றிய விழிகளுடன் தட்டுத் தடுமாறி நடக்கும் சுந்தரர்க்கு
திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் அருளுகின்றான் - இறைவன்...

அவ்வேளையில்
கருணை கொண்ட அம்பிகை மின்னல் கொடியாக வழிகாட்டி
சுந்தரரை வழி நடத்துகின்றாள்...

ஒரு வழியாகக் காஞ்சி மாநகரை வந்தடைகின்றார் சுந்தரர்..

காஞ்சிப்பதியில் ஏகம்பரேஸ்வரரைத் தரிசிக்கும் வேளையில்
வலக்கண்ணில் பார்வை நலம் எய்துகின்றார்...

கண்ணாரக் காண்க!.. என்று
காமாக்ஷி அம்பிகையே கண் வழங்கினாள் என்பது திருக்குறிப்பு..

கண் பெற்ற மாத்திரத்தில்
இன்தமிழால் ஏத்திப் பாடுகின்றார் சுந்தரர்..

இந்தத் திருப்பதிகம் முழுதும்
அம்பிகையை வாயாரப் புகழ்ந்து போற்றும் சுந்தரர் -
தல வரலாற்றுச் சிறப்பினை
பத்தாவது திருப்பாடலில் குறித்தருள்கின்றார்...

இத்திருப்பதிகத்தை நாளும் பாராயணம் செய்தால்
கண் நோய்கள் நீங்குவதோடு மற்ற உபாதைகளும் தீரும் என்பது
ஆன்றோர் தம் திருவாக்கு...

இரண்டாண்டுகளுக்கு முன் எனது இடது கை தளர்வுற்றிருந்தபோது
உற்றதுணையாக இருந்தது - இத்திருப்பதிகத்தின் நான்காவது திருப்பாடல்...

அங்கே - அன்பிற்குரிய
ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்கள்
கச்சிப்பதியின் பெருமைகளைத் தொடர் பதிவுகளாக வெளியிடுகின்றார்...

அந்தப் பதிவுகளை இந்த இணைப்பில் காணலாம்...


இவ்வேளையில்
காஞ்சியம்பதியை நாமும் சிந்தித்திருப்போமே!..
- என்பதால் இன்றைய பதிவில் இத்திருப்பதிகம்...

மேலும் இன்றைக்கு ஆனி மாதத்தின் நிறைநிலா..
இன்று சிவாலயங்களில் ஈசனுக்கு பழங்களால் 
அபிஷேகம் நிகழும் நாள்...

நிறைநிலா நாளில்
குறைவிலா நலம் சேர்வதற்கு
அம்மையப்பனை
வேண்டிக்கொள்வோம்..
*** 

திருத்தலம்
திருக்கச்சி ஏகம்பம்


இறைவன் - ஸ்ரீஏகாம்பரேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீகாமாக்ஷி, ஏலவார்குழலி
தலவிருட்சம் - மா
தீர்த்தம் - கம்பை நதி..

ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் - 61

ஆலந்தான் உகந்து அமுது செய்தானை
ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (01)

உற்ற வர்க்குத வும்பெரு மானை
ஊர்வ தொன்று டையான் உம்பர் கோனைப்
பற்றினார்க் கென்றும் பற்றவன் தன்னைப்
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றமில் புகழாள் உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (02)

திரியும் முப்புரந் தீப் பிழம்பாகச்
செங்கண் மால்விடை மேல்திகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
காமனைக் கனலால் விழித் தானை
வரிகொள் வெள்வளை யாள் உமைநங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (03)

குண்டலந் திகழ் காதுடை யானைக்
கூற்றுதைத்த கொடுந் தொழிலானை
வண்டலம் பும்மலர்க் கொன்றை யினானை
வாளரா மதிசேர் சடையானைக்
கெண்டை யந்தடங் கண் உமை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ட நஞ்சுடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (04)

ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி - தஞ்சை 
வெல்லும் வெண்மழு ஒன்று டையானை
வேலை நஞ்சுண்ட வித்தகன் தன்னை
அல்லல் தீர்த்தருள் செய்ய வல்லானை
அருமறை அவை அங்கம் வல்லானை
எல்லையில் புகழாள் உமைநங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (05) 

திங்கள் தங்கிய சடை உடையானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடையானைச்
சாம வேதம் பெரிது (உ)கப்பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளானைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (06)


விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதந் தான் விரித்த் தோத வல்லானை
நண்ணினார்க் கென்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (07)

சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள்
சிந்தையில் திகழுஞ் சிவன் தன்னைப்
பந்தித்த வினைப் பற்று அறுப்பானைப்
பாலொடு ஆனஞ்சும் ஆட்டுகந்தானை
அந்தமில் புகழாள் உமைநங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (08)

வரங்கள் பெற்றுழல் வாளரக்கர்தம்
வாலிய புரம் மூன்றெ ரித்தானை
நிரம்பிய தக்கன் தன் பெருவேள்வி
நிரந்தரஞ் செய்த நிர்க்கண் டகனைப்
பரந்த தொல்புகழாள் உமைநங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (09)


எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி உகந்து உமைநங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (10)

பெற்றம் ஏறுகந்து ஏற வல்லானைப்
பெரிய எம்பெருமான் என்று எப்போதும்
கற்றவர் பரவப் படுவானைக்
காணக் கண் அடியேன் பெற்றதென்று
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானைக்
குளிர்பொழில் திருநாவல் ஆரூரன்
நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார்
நன்னெறி உலகு எய்துவர் தாமே.. (11)
- திருச்சிற்றம்பலம் - 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

22 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    சுவைக்குறிப்புகளுடன் பக்தி மழை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு... வாழ்க நலம்..

      நீக்கு
  2. பக்திச் சொற்பொழிவு அழகு
    வாழ்க நலம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என்ன கில்லர்ஜி... துரை செல்வராஜு சாரை பாகவதாராக்கிட்டீங்க.

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. அருமையான பதிவு.காமாட்சி அம்மையின் கருண மழையை பற்றிய பதிவு.
    இன்று அம்பிகை வழிபாடு செய்வது நல்லது , இங்கு அவள் பெருமையை பாடி,காமாட்சியின் தரிசனம் பெற்றேன். நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும்
      வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. காமாட்சி அம்மனின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

    சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட் ..
      தங்கள் வருகையும் வேண்டுதலும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. காமாட்சி அன்னையின் பரிபூரண அருள் அனைவருக்கும் கிட்டுவதாக! என்னுடைய பதிவுகளின் சுட்டியையும் கொடுத்திருப்பதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா ..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. சுந்தரர் பதிகத்தை இங்கே உள்ள திருநெல்வேலி மாமிக்குப் படிக்கவேண்டிப் பிரின்ட் அவுட் எடுத்துக் கொடுத்தேன் கண் அறுவை சிகிச்சை ஆனபின்னர் தொந்திரவில் அவதிப் பட்டார். இப்போது கொஞ்சம் தேவலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா ..

      மிகவும் சிறப்புடைய பல திருப்பதிகங்களுள்
      இந்தத் திருப்பதிகமும் ஒன்று..

      தங்கள் வருகையும் தகவலும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. கணொளி பெறப் பதிகங்கள்.
    அம்மையப்பன் அருள் பெற இனிய படங்கள்.
    தின்ம் தோறும் படித்துப் புனிதம் அடைய அருமையான
    பதிவு.
    ஏலவார்குழலி. எத்தனை அருமையான அருட்பெயர்.
    கச்சி ஏகம்பனும் ,காமாட்சித்தாயும்
    அனைவரையும் எப்போதும் ரட்சிப்பார்கள்.
    நன்றி துரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் இனிய வேண்டுதலும்
      கருத்துரையும் மகிழ்ச்சியம்மா.. நன்றி...

      நீக்கு
  9. காஞ்சி காமாட்சியை சமீபத்தில் தரிசித்தேன். இங்கும் கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை ..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. ஏலவார்குழலி அழகான பெயர்
    அறிந்திராத கதை.

    பாடல்கள் படங்கள் எல்லாமே சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. நம் இறைவியின் பெயர்கள் மிகவும் அழகாக இருப்பதைப் பார்க்கும்போது நம் தமிழின் பெருமையை உணரமுடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..