திங்கள், நவம்பர் 12, 2018

கந்தன் கருணை 5


அரகர சிவனரி அயனிவர் பரவிமுன்
     அறுமுக சரவண - பவனேயென்

றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
     அனலென எழவிடு - மதிவீரா

பரிபுர கமலம தடியிணை அடியவர்
     உளமதி லுறவருள் - முருகேசா

பகவதி வரைமகள் உமைதர வருகுக
     பரமன திருசெவி - களிகூர

உரைசெயும் ஒருமொழி பிரணவ முடிவதை
     உரைதரு குருபர - உயர்வாய

உலகம னலகில உயிர்களும் இமையவர்
     அவர்களும் உறுவர - முனிவோரும்

பரவிமு னநுதின மனமகிழ் உறவணி
     பணிதிகழ் தணிகையில் - உறைவோனே

பகர்தரு குறமகள் தருவமை வநிதையும்
     இருபுடை யுறவரு - பெருமாளே..


ஹரனாகிய சிவபெருமானும்
ஹரியாகிய பரந்தாமனும்
அயனாகிய நான்முகப் பிரம்மனும்
அவர்களுடன் ஏனையோர்களும் கூடி நின்று
அறுமுகனே.. என்றும் சரவணபவனே.. என்றும்
உனைக் கொண்டாடித் துதித்து நிற்க

அசுரர் கூட்டம் கெட்டு அழியுமாறு
காலாக்னி போல் விளங்கும் கூர் வேலினை
விடுத்த வீரனே.. வெற்றி வடிவேலனே...

சிலம்புகள் சிலம்பும்
உனது தாமரைத் திருவடிகள்
பக்தர்களுடைய உளந்தனில் என்றென்றும்
பதிந்திருக்க அருள்பவனே முருகனே... ஷண்முகனே...

இமவானின் திருமகளாகிய
தேவி பராசக்தி அருளிய அழகனே.. குகனே...


பரம்பொருளாகிய ஈசனது
திருச்செவி குளிரும் வண்ணம்
ஓம் எனும் ப்ரணவ மந்த்ரத்தின்
உட்பொருளை உரை செய்தருளிய ஞானபண்டிதனே..

இவ்வுலகினில் உள்ள அனைத்து உயிர்களும்
இமையவர்களும் முனிவர்களும் நாளும் நாளும்
உனைப் போற்றித் துதிக்கும்படிக்கு
வாசுகியாகிய நாகம் பணிந்து நின்ற
திருத்தணிகை எனும் திருமலையில்
உறைபவனே க்ருபாகரனே...

ஞான குருபரனாகிய நினது வலப்புறம்
இச்சா சக்தியாகிய ஸ்ரீ வள்ளி பிங்கலையாகவும் -
கிரியா சக்தியாகிய ஸ்ரீ தேவகுஞ்சரி இடகலையாகவும் - விளங்க
அடியவர் தம் குறை தீர்க்க மாமயில் ஏறி வரும் பெருமானே!..

நின் திருவடித்தாமரைகள் சரணம்.. சரணம்!...
*** *** ***  

ஆன்றோர்கள் அருளிய உரை வழி நின்று
எனது சிற்றறிவுக்கு எட்டியபடி
திருத்தணிகை திருப்புகழினை
இப்பதிவில் சொல்லியிருக்கின்றேன்...

குற்றங்குறைகளைப் பொறுத்தருள்க..

முருகா சரணம்... முதல்வா சரணம்...
முத்துக் குமரா... சரணம் சரணம்...

வெற்றி வேல்.. வீரவேல்.. 
ஃஃஃ

6 கருத்துகள்:

  1. திருத்தணிகை திருப்புகழினை படித்து மகிழ்ந்தேன்.முருகனின் படங்கள் அழகு.
    முருகா சரணம் முதல்வா சரணம்
    முத்துக்கும்ரா சரணம் சரணம்
    வெற்றி வேல் வீர வேல்

    பதிலளிநீக்கு
  2. அழகனின் படங்கள் அழகு
    முருகா சரணம்

    பதிலளிநீக்கு
  3. திருத்தணிகை முருகன் புகழ் கண்டு தரிசனமும் கிடைக்கப்பெற்றோம். முருகா சரணம்..

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  4. முருகா சரணம்
    முருகா சரணம்
    முருகா சரணம்

    பதிலளிநீக்கு
  5. முருகனை தரிசித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..