சனி, டிசம்பர் 09, 2017

சிவகங்கைப் பூங்கா 2

தஞ்சை மாநகரின்
சிவகங்கைப் பூங்காவைப் பற்றிய முதல் பதிவு இங்கே!..

நுழைவு வாயிலில் புறப்பட்டு அப்படியே வலமாக சுற்றி
நீர் சறுக்கு பகுதியைக் கடந்து நீச்சல் குளத்தின் அருகில் இருக்கின்றோம்..

வாருங்கள்.. பூங்காவைச் சுற்றி வரலாம்!..


பூங்கா என்றால் பூஞ்சோலை..
ஆனால், சும்மா இது ஒரு பெயருக்குத் தான்!..

இங்கே பூச்செடி ஒன்று கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

அடர்ந்து விரிந்திருக்கும் மரங்கள் மற்றும்
குறுஞ்செடிகளான குரோட்டன்ஸ் இவைகள் மட்டுமே!..

பூஞ்செடிகள் என்றால் பொதுமக்களிடமிருந்து மீட்டெடுத்து
பராமரிப்பது மிகவும் கடினம் தான்..

அதற்காக புல்வெளிகளைக் கூட - வெயிலைக் காரணம் காட்டி
பராமரிக்காமல் விட்டிருக்கின்றார்கள்...


மான்கள் வெட்டவெளி கட்டாந்தரையில் தான் சுற்றித் திரிகின்றன...
அவ்வப்போது கொட்டப்படும் புற்களை மேய்ந்து கொண்டிருக்கின்றன...

அவற்றின் வாழிடத்தில் பத்தடி அகலத்துக்குக் கூட பசும்புல் வெளி கிடையாது... அவற்றுக்கு முறையான நிழல் பரப்பு கூட இல்லை...

பெரிய தண்ணீர் தொட்டி நீரின்றி வறண்டு கிடக்க
சிறிய தொட்டியில் மட்டுமே தண்ணீர் இருக்கின்றது..

வறண்டு கிடக்கும் நீர்த்தொட்டி
அதுமட்டுமல்லாமல் இந்த மான்களுக்கு
முறையான பாதுகாப்பும் கிடையாது என்பது வேதனையான செய்தி..

இங்குள்ள மான்கள் அவ்வப்போது வெறிநாய்களால் கடித்துக் குதறப்படுகின்றன... பலத்த காயங்களுடன் உயிர் துறக்கின்றன..

பாவப்பட்ட ஜீவன்களாகிய இந்த மான்களுக்காக வேண்டிக் கொள்வோம்...



நீர் சறுக்கு அரங்கம்.. செயற்கை நீரூற்றுகள்.. இதற்கெல்லாம் கட்டணம்..

நீர் சறுக்கு அரங்கத்தின் வெளிப்புறம் மேற்காக சற்று நடந்தால் சிவகங்கைக் குளத்தின் முழு அழகையும் காணலாம்..


இங்கிருந்து பார்க்கலாமே தவிர குளத்துக்குள் இறங்க முடியாது..

திரும்பி நடந்தால் வெளிப்பக்கமாக நீச்சல் குளமும் உள்ளது..
இதற்கும் கட்டணம் தான்...

இதற்கு அருகில் பழைமையான தொங்கும் தொட்டில் (Rope Car)...



இந்த தொங்கும் தொட்டில் - கரையிலிருந்து குளத்தில் இருக்கும் சிறிய தீவுக்கு இயக்கப்படுகின்றது..

தண்ணீரில் இருக்கும் தீவில் என்ன விசேஷம்!?..

தீவு போன்ற திட்டில் சிறிய கோயில்..
அதனுள்ளே சிவலிங்கம்.. சிவலிங்கத்தின் எதிரே நந்தி..


இந்தக் கோயில் தான் -
திருவீழிமிழலை திருப்பதிகத்தில் அப்பர் பெருமான் குறிப்பிட்டருளிய
தஞ்சைத் தளிக்குளம் என்று சொல்கின்றார்கள்...

சிலர் அப்படியில்லை - என்கின்றார்கள்..

சரி.. உண்மை என்ன?..

தஞ்சைத் தளிக்குளம் பெரிய கோயிலோடு ஒன்றி விட்டது..
தளிக்குள நாதர் எனப்பட்ட லோகநாத ஸ்வாமியும் லோகேஸ்வரி அம்பிகையும் பெரிய கோயிலின் மேற்குத் திருச்சுற்றில் விளங்குகின்றனர்!.. -

- என்று, உள்முக தியானத்தில் விடை கிடைக்கின்றது...

எப்படியோ இந்தத் திருக்குளம் -
பெரியகோயிலுக்கு பல நூற்றாண்டுகள் முந்தையது என்பது மட்டும் நிச்சயம்...

தஞ்சைத் தளிக்குளம் எனப்படும் திருத்தலம்
தொங்கு தொட்டில் கரையிலிருந்து இந்தக் கோயிலுக்குச் சென்றதும்
அங்கே ஒருவர் இருந்து தொங்கு தொட்டிலின் கதவினைத் திறந்து விடுவார்...

ஆனால் - இப்போது தொங்கு தொட்டில் அங்கு செல்லுமே தவிர
திட்டில் இறங்குவதற்கு பயணிகளுக்கு அனுமதியில்லை...

அதனால் கோயிலுக்குச் செல்வதென்பது இயலாது...

அதற்குக் காரணம் - சமூக விரோதிகள் மற்றும் கல்லூரிகளைக் கடந்து வரும் மாணவ மாணவிகள்...

படகுத் துறை
சிவகங்கைக் குளத்தின் கீழ்க்கரையில் படகுத் துறை உள்ளது..

மாலை நேரத்தில் இங்கேயுள்ள மிதி படகுகளை இயக்கலாம்..
சிவகங்கைக் குளத்தைச் சுற்றி வந்து மகிழலாம்..

அந்த மகிழ்ச்சிக்கும் கட்டணம் உண்டு..

இந்தக் குளத்தினைக் கடந்து நடந்தால்
கிட்டத்தட்ட பூங்காவின் வாசலருகில் வந்து விடுகின்றோம்...


இந்தப் பூங்காவினுள் ஆண்டுகள் பல நூறினைக் கடந்தவைகளாக
நிழல் பரப்பியிருந்த மரங்கள் பற்பல..

ஆல், அசோகம், இலுப்பை, நாகலிங்கம், செண்பகம் மற்றும் மலைவேம்பு -
என்பவை முக்கியமானவை..

இவற்றுள் ஆலமரங்களைத் தவிர வேறெவையும் இப்போது இல்லை...

இப்போதிருக்கும் ஆலமரங்கள் பல நூறு ஆண்டுகளைக் கடந்தவை என்றாலும்

அவற்றைவிடவும் வயது முதிர்ந்த மரங்களாக இருப்பவை -
யானைக்கால் மரம் மற்றும் மோதகவல்லி மரம் என்பன...


இவற்றுள் யானைக்கால் மரத்தின் பூர்வீகம் ஆப்பிரிக்கா..

ஆப்பிரிக்க கண்டத்தில் 33 நாடுகளில் பரவலாகக் காணப்படும்
இம்மரத்தின் தாவரவியல் பெயர் - Adansonia Digitata..

இம்மரத்தின் பழங்கள் சற்றே புளிப்புச் சுவை உடையவை..
முற்றிய விதைகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகின்றது..

இத்தகைய மரத்தின் விதை இங்கே விதைக்கப்பட்டபோது 
அதற்கு என்ன பெயர் சொல்லப்பட்டதோ - தெரியவில்லை..

பிரம்மாண்டமாக வளர்ந்த பின் -
மக்கள் இதற்கு யானைக்கால் மரம் என்று பெயரிட்டிருக்கலாம்..

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 
ஆப்பிரிக்க அரபு நாட்டின் வர்த்தகர்களால் 
நம் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் - என அறியப்படுகின்றது...

இம்மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு
மயக்கத்தைக் கொடுக்கும் எனவும் மலேரியாவுக்கு மருந்து இதன் மூலம் பெறப்பட்டதாகவும் -

தலை சிறந்த வைத்தியராக விளங்கிய -
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தனது கருணாமிர்த சாகரம் எனும் நூலில்
குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன..

இந்தப் பூங்காவில் இரண்டும் வெண்ணாற்றங்கரையில் ஒன்றுமாக -
மூன்று யானைக்கால் மரங்கள் தஞ்சையில் குறிப்பிடப்படுகின்றன...

பூங்காவிலுள்ள
மற்றொரு யானைக்கால் மரம்
தற்போது இம்மரங்களின் பூக்கள் மற்றும் விதைகள் ஆகியன
எப்படி கையாளப்படுகின்றன என்பது தெரியவில்லை...

இத்தகைய சிறப்புடைய யானைக்கால் (Adansonia Digitata..) மரத்தினோடு
மோதகவல்லி எனப்படும் மரமும் சிவகங்கைப் பூங்காவில் உள்ளது..

அதன் விவரத்துடன் மேலதிக செய்திகள் - அடுத்த பதிவில்!..

வாழ்க நலம்..
*** 

9 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    சிவகங்கைபூங்கா பற்றிய அரிய செய்திகள் பல அறியத்தந்தமைக்கு நன்றி தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அறியாத செய்திகளை வாரி வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறீர்கள் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. முன்பு ஒரு காலத்தில் இந்த சிவகங்கைப் பூங்கா எப்படி இரு ந்தது? இப்போதைய நிலையைப் படிக்கும்போது கண்ணில் ரத்தம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு பூங்கா.. கோயில் புனரமைப்பு இல்லாதிருப்பது கண்டு மனதுக்கு கஸ்டமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  5. நல்ல பகிர்வு.
    வரலாற்றுடன் தொடர்புடைய பூங்கா பற்றி அறியத் தந்தீர்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  6. சிவகங்கைப் பூங்கா....

    தகவல்கள் தெரிந்து கொண்டேன். பூங்காவின் இன்றைய நிலை - என்ன சொல்ல. மான்கள் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. ஒரு புறம் சமூகப் பிரக்ஞை, ஒரு புறம் அறிவியல் பாடம், ஒரு புறம் ஆதங்கம் என்ற நிலைகளில் வாசித்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. உங்களுடைய இதற்கு முந்தைய பதிவினையும் , இந்த பதிவினையும் பார்த்தவுடன் எனது மனதில் ஏற்பட்ட ஆதங்கத்தை இங்கு சொல்கின்றேன்.

    பள்ளி மாணவனாக இருந்தபோது (சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் ) பலமுறை எனது சொந்தக்கார பையனுடன் இந்த சிவகங்கைப் பூங்கா சென்று இருக்கிறேன். அப்போதெல்லாம் பூங்கா எங்கும் பசுமை. மாலை வேளை திருவிழா போல குழந்தைகள், பெரியவர்கள் என்று நிரம்பி வழியும்.
    கல்லூரி மாணவனாக இருந்த போது அங்கிருந்த அரசு அலுவலகத்தில் பணிபுரிந்த எனது உறவினரைப் பார்க்கச் சென்றபோதும், அப்புறம் எனது மகள் சின்னக் குழந்தையாக இருந்தபோது அங்கு அழைத்துச் சென்ற போதும் அங்கு சென்று இருக்கிறேன். இருமுறையும் நான் சென்றபோது பழைய பசுமையோ அல்லது கலகலப்போ இல்லை. குழந்தைகளோடு வந்தவர்கள் எல்லாம், அங்கு பூங்காக்களில் நடக்கும் கூத்துக்களைக் கண்டு அவசரம் அவசரமாக வெளியேறுவதை பார்க்க முடிந்தது.

    கழகங்கள் ஆட்சி என்று வந்தபிறகு, கட்சிக்காரர்களின் கையில் காண்ட்ராக்ட் என்று ஆனவுடன், பழைய பராமரிப்போ ஒழுங்கோ மற்றும் சமூக உணர்வோ இப்போது அங்கு இல்லை.என்றே நினைக்கிறேன்.

    உங்களுடைய பழைய பதிவினில் முனைவர் B.ஜம்புலிங்கம் அய்யா அவர்கள் எழுதிய “குடும்பத்துடன் இப்போது போவதற்கான சூழல் அங்கில்லைஎன்பதை அறிந்தேன்” என்ற பின்னூட்டத்தை வைத்து இப்போதும் நிலைமை அப்படியேதான் என்பதனை, தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  9. யானைக்கால் மரம் படம் சூப்பர். அப்படியே யானையின் பாதத்தை ஒத்திருக்கிறது. தஞ்சைக்கு வரும் போது, இந்த மரத்தைப் பார்க்கவாவது அவசியம் இந்தப் பூங்காவுக்குச் செல்ல வேண்டும் இந்த அரிய மரத்தைப் பற்றி இன்று தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி துரை சார்!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..