வியாழன், டிசம்பர் 07, 2017

சிவகங்கைப் பூங்கா 1

தனிப்பெரும் சிறப்புகள் பலவற்றைத்
தன்னகத்தே கொண்டிருக்கும் மாநகர் - தஞ்சை..

தஞ்சை மாநகர் தன்னகத்தே கொண்டிருக்கும்
சிறப்புகளுள் ஒன்று தான் - சிவகங்கைப் பூங்கா!..


தஞ்சை பெரிய கோயிலின் வடக்குப் புறமாக 
மிக அருகாமையில் அமைந்துள்ளது...

ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது..
தஞ்சை பெரியகோயிலின் நந்தவனம் இதுதான் என்பது நம்பிக்கை..

பெரியகோயிலின் தீர்த்தக் குளமான சிவகங்கைக் குளம் இந்தப் பூங்காவின் உள்ளே தான் இருக்கின்றது..

அதனால் தான் இதன் பெயர் சிவகங்கைப் பூங்கா...

சிவகங்கைக் குளமும் சிவகங்கைப் பூங்காவும் பெரியகோயிலின் கோட்டைக்குள் இருக்கின்றன..

சிவகங்கைப் பூங்காவிற்கு வெளியே உள்ள பூங்காவிலுள்ள ராஜராஜ சோழனின் சிலை


பற்பல வருடங்களுக்கு முன்பு -
- என்றால் 30/40 ஆண்டுகளுக்கு சிவகங்கைப் பூங்காவின் அழகே தனி..

மரம் செடி கொடிகள் மட்டுமல்லாமல் -
உயிரியல் பூங்காவாகவும் திகழ்ந்தது...

அன்னங்கள் (Swan), கூழைக்கடா (Pelicon), முக்குளிப்பான்கள், நாரை,
மடையான், கொக்கு - முதலான நீர்ப்பறவைகளால் நிறைந்திருந்தது..

அதற்குக் காரணம் சிவகங்கைப் பூங்காவினுள் இருக்கும் சிவகங்கைக் குளம்..

மேலும் -
அடர்ந்திருக்கும் மரக் கூட்டங்களில் பல்வேறு வகையான பறவையினங்கள்..

கூண்டுகளுக்குள் சிங்கவால் குரங்குகள், முள்ளம் பன்றிகள், மரநாய்கள்,
புனுகுப் பூனைகள், புள்ளி மான்கள் - என, காண்பதற்கு அரிய விலங்குகள் வளர்க்கப்பட்டன..

அத்துடன் மயில்களும் பல்கிப் பெருகியிருந்தன...

கூடவே - இரண்டு ஒட்டகங்கள்..
மகிழ்ச்சியின் மொத்த உருவமாக ராஜேந்திரா எனும் குட்டி யானை...

இந்த குட்டி யானையை பெரிய கோயிலுக்கென்று கொடுத்தார் -
அன்றைய முதல்வர் ஜெ.ஜெ.

கோயிலுக்குக் கொடுக்கப்பட்டாலும்
பூங்காவினுள் சுற்றிக் கொண்டிருந்த யானைக் குட்டி
எதிர்பாராத விதமாக ஏதோ உடல் நலக்குறைவினால் இறந்து போனது..

அதன்பின் யானைக் குட்டி ஏதும் இந்தப் பூங்காவுக்கு வரவில்லை..

ஒட்டகங்களும் பராமரிப்பு இன்மையால் உடல் நலங்குன்றி இறந்து போயின...

இத்தனைக்கும்
கால்நடைகளுக்கான மிகப் பெரிய மருத்துவமனை மிக அருகிலேயே!..

சிங்கவால் குரங்குகளும் முள்ளம் பன்றிகளும் மயில்களும்
போய்ச் சேர்ந்த இடம் தெரியவில்லை..

ஆனால், இன்றைக்கு -
நீர்ப்பறவைகள் எவையும் இல்லை... ஆடிக் கொண்டிருந்த மயில்களும் இல்லை..

பூங்காவினுள் இயற்கையாய் சுற்றித் திரியும் சில பறவைகள் மட்டுமே...

புதுக்கோட்டை மற்றும் விராலிமலை பகுதிகளில்
மயில்களின் வாழிடங்கள் அழிக்கப்பட்டதால்

அங்கிருந்து தப்பிப் பிழைத்த மயில்கள்
ஒரு நூறாகப் பெருகி தஞ்சையைச் சுற்றித் திரிகின்றன..

அவற்றுள் ஒன்றிரண்டு அவ்வப்போது பூங்காவினை வலம் வருகின்றன..

புள்ளி மான்கள் மட்டும் சற்றே பரந்த வெளியில் சுற்றித் திரிகின்றன...

சற்றும் பொருத்தமில்லாத கூண்டுக்குள் - பாவப்பட்ட சீமை எலிகளும்
ஒரு சில முயல்களும் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கின்றன...

அந்த ஜீவன்களைக் காணச் சகிக்காததால்
அவற்றைப் படமெடுக்கவில்லை..

அவைகள் அடைபட்டிருக்கும் கூண்டு மட்டும் பதிவில் இடம்பெற்றுள்ளது..

மற்றபடி அடர்ந்து படர்ந்திருக்கும் அரசு,  ஆல், வாத நாராயண மரம் என பல்வகையான மரங்களால் பூங்கா குளிர்ந்திருக்கின்றது..

பிற நகர்களுக்குக் கிடைக்காத வரப்பிரசாதம் - இந்தப் பூங்கா!..

ஆனால், பராமரிப்பு!?..

பூங்காவினுள் மகாத்மா
இன்றைய பதிவில் சிவகங்கைப் பூங்காவின் சில தோற்றங்கள்..

இந்தப் பூங்காவினுள் இருக்கும்
சில அதிசயங்களை அடுத்த பதிவினில் காணலாம்..  



பராமரிப்பின்றிக் கிடக்கும் யானைமுக நீரூற்று




எஞ்சியுள்ள மான்கள்
பூங்காவினுள்ளிருந்து பெரியகோயில்

சிவகங்கைக் குளம்
சிறுவர் ரயில்
சிறுவர்களுக்கான மிதி படகு

தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத மரம் தான் மேலே உள்ள படத்தில் இருப்பது..

அந்த மரத்தில் யானைக்கால் மரம் என்ற குறிப்பு பதிக்கப்பட்டுள்ளது..

யானைக்கால் மரத்தைப் பற்றிய மேலதிக செய்திகளுடன் அடுத்த பதிவு...

பதிவிலுள்ள படங்கள் எனது கைவண்ணம்..
நன்றாக இருக்கின்றனவா.. என்று சொல்லுங்கள்..



வாழ்க நலம்.. 
***

25 கருத்துகள்:

  1. 20வருடங்களுக்கு முன் இந்தப் பூங்காவுக்குப் போயிருக்கிறேன். ஆனால் இப்போது வண்ணமயமாக இருப்பது போல் இருக்கு. அப்போது மரங்கள் இருந்தன. குளம் இன்னும் நன்றாக இருந்தது போல் இருந்தது. இத்தனை
    குழந்தைகளுக்கான விளையாட்டுகள் இருந்தநவா என்று நினைவில் இல்லை. சிறிய அளவில் மினி ஜூ போன்று இருந்தது. ஆனால் அதிகம் பார்த்த நினைவில்லை....

    நம்மூரில் எந்தப் பூங்காவுமே நன்றாகப் பராமரிக்கப்படுவதில்லை. முதலில் மக்களும் சுற்றுப்புறத்தைத் தூமையாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். என்ன செய்ய...அழகான பூங்காக்கள் அழிந்து வருகின்றன...

    நல்ல பதிவு சகோ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்/கீதா..

      தாங்கள் முன்பே வந்திருக்கின்றீர்களா!..
      இப்போது படத்தில் காண்பது புதிய விளையாட்டு அரங்கம்..
      பழையன எதுவும் இல்லை..

      நமது மக்களும் திருந்த வேண்டும்.. அதற்கெல்லாம் எத்தனை காலம் ஆகுமோ?..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அன்பின் ஜி
    விரிவான செய்தி பூங்காவைப்பற்றி படங்கள் அருயையாக எடுத்து இருக்கின்றீர்கள்.

    யானைக்கால் மரத்தின் வரலாறு அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      அடுத்த பதிவில் விரிவாகத் தருகின்றேன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஆஹா.... எத்தனை வருடங்களாயிற்று? இங்கு உயிரியல் பூங்காவையும் கண்டு மகிழ்ந்திருக்கிறோம். புனுகுப்பூனை பார்த்து மூக்கைப் பொத்திக் கொண்டு கடந்திருக்கிறோம் - இதிலிருந்து எப்படி வாசனை தயாரிக்கிறார்கள் என்கிற கேள்வியோடு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      நம் நினைவில் இருக்கும் பூங்காவை நகராட்சியினரால் அழிக்க முடியாது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. காந்தி தாத்தா இன்னும் இருக்கிறாரா? பெருக்கும் இளைஞர்? உடன் நிற்கும் ஒரு லேடி சிலை! அந்தத் தாமரை நீரூற்று... இளமை நினைவை மீட்டெடுக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      கூட்டிப் பெருக்கும் இளைஞன், வாலிபனும் அவனது தோழியும் இந்த சிற்பங்கள் எல்லாம் தூளாகிப் போய் விட்டன..

      ஆடு புலி விளையாடும் முதியவர்கள் சிற்பம் சிதைந்து கிடக்கின்றது..
      தாமரை நீரூற்று தான் பதிவில் இடம் பெற்றுள்ளது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. சிறுவர் ரயில் முன்பு கொஞ்சம் பெரியதாக இருந்தது போல நினைவு
    தொங்குபாலம் என்னாச்சு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      அந்த விவரங்கள் - அடுத்த பதிவில்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ராஜராஜன் சிலை பெரிய கோவிலில் இருந்து ராஜா மிராஸுதார் ஆஸ்பத்திரி, மத்திய நூலகம் செல்லத் திரும்பும் சாலையில் முனையில் அல்லவா இருந்தது. இப்போது பூங்காவுக்குள்ளா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      ராஜராஜன் சிலை அந்த இடத்திலேயே தான் இருக்கின்றது..
      சிலையைச் சுற்றிலும் குரோட்டன்ஸ் வகையறாக்களை வளர்த்திருக்கின்றார்கள்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பலவருடங்களுக்கு முன் கார் வாங்கிய போது தஞ்சை சிவகங்கை பூங்கா சென்றோம். பக்கத்து வீட்டு பெண்கள் என் குழந்தைகளின் தோழிகள் எங்கள் தோழிகள் ஆனவர்கள். அவர்களுடன் சிறு குழந்தையாக ஊஞ்சல், சீஸாபலகை, சரக்கு மரம், ரோப் காரில் போனது எல்லாம் ஆலபத்தில் படங்களாக இருக்கிறது. கிளிகள் உண்டே! இப்போது அவையும் இல்லையா?
    தாமரை நீரூற்றும் இப்போது இல்லையா?

    மலரும் நினைவுகளை தந்த பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பெரிய பிள்ளைகளுக்கான ஊஞ்சல், சறுக்கு மரம் என்றெல்லாம் முன்பு இருந்தனவே அவையெல்லாம் இப்போது இல்லை..

      கிளிக் கூண்டும் (Love Birds) இல்லை.. தாமரை நீரூற்று நடை தளம் பழுதுபட்ட நிலையில் இருக்கின்றது..

      தாங்கள் வருகை தந்து கருத்துரையுடன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்ததில் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. படங்கள் எல்லாம் அழகு.

    சறுக்கு மரம் என்பதற்கு பதில் சரக்கு மரம்
    என்று பிழையாக வந்து விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் பிழை திருத்தமும் நன்று ..
      வாழ்க நலம்..

      நீக்கு
  9. படங்கள் அழகு.

    நம் நாட்டில் உள்ள பூங்காக்கள் பலவும் பராமரிப்பு என்பதே இல்லாமல் தான் இருக்கிறது - குறிப்பாக அரசு பராமரிக்கும் பூங்காக்கள்.

    மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      பராமரிப்பு என்று லட்சக் கணக்கில் பணம் செலவு செய்யப்படுவது விந்தை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அத்தனை படங்களும் அழகு... இப்பவும் அழகாகத்தான் இருக்கிறது பூங்கா.. ஆனா ஏன் பராமரிப்பைக் கை விட்டார்களோ.. மான் கூட்டம் அழகு. கங்கையும் அழகாகவே இருக்கு. ஆலம் விழுதே .. மரம்போல ஆகிவிட்டது.. மொத்தத்தில் பூங்கா அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் மாஸ்டர் செஃப்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. சிறுவயதில் சிவகங்கைப் பூங்காவிற்குச் செல்வதென்றால் மனதில் மிதமிஞ்சிய மகிழ்ச்சி ஏற்படும்
    இன்று பராமரிப்பு இன்றி வாடுகிறது
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இன்றைய நிலையைக் காணும்போது வருத்தம் தான் மேலிடுகின்றது..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. குடும்பத்துடன் இப்போது போவதற்கான சூழல் அங்கில்லை என்பதை அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. படங்களுடன் அருமையான தகவல்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..