திங்கள், செப்டம்பர் 04, 2017

மாயக் குறளன்

இன்று சீர்மிகும் ஓணத் திருநாள்..

திரு ஓணம் என்பது சிறப்பு...

ஞானசம்பந்தப் பெருமான் மயிலைத் திருப்பதிகத்தில் குறித்தருளும் திருவிழாக்களுள் ஓணத்திருநாளும் ஒன்று..


திருமறைக்காடு திருத்தலத்தில் சிவ சந்நிதியில் எரிந்து கொண்டிருந்த திருவிளக்கின் நெய்யைச் சுவைத்திட வந்தது எலி ஒன்று..

ஆவலுடன் நெய்யைச் சுவைத்தபோது தீபச்சுடர் எலியின் மூக்கைச் சுட்டது..

பதற்றத்துடன் எலி துள்ளிக் குதிக்க -
தீபத்தின் சுடர் துண்டி விடப்பட்டது..

அறியாமல் நிகழ்ந்த இந்த செயலினால் மகிழ்வெய்திய சிவபெருமான்
எலிக்கு நல்லருள் புரிந்தார்..

நிறைமறைக்காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக்
கறைநிறத்தெலி தன்மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகமெல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே..(4/49)
-: திருநாவுக்கரசர் :-

திருக்கோயில் விளக்கினைத் தூண்டி விட்ட எலி தான் -
மாவலியாக பிறப்பெடுத்தது என்பது அப்பர் பெருமானின் திருவாக்கு...

இப்படியான புண்ணியத்துடன் -
அசுர குலத்தில் மன்னனாகப் பிறந்து அறநெறியுடன் ஆட்சி செய்தபோதும் போதும் என்ற மனம் இல்லாமல் போயிற்று - மாவலிக்கு!..

தேவலோகத்தைத் தன் ஆளுமைக்குள் கொண்டு வரவேண்டும் எனத் துடித்தான்..

அதற்குத் தூபமிட்டவர் அசுர குருவாகிய சுக்ராச்சார்யார்...

பல நூறு வேள்விகளைச் செய்தான் மாவலி..

ஆயிரமாவது வேள்வியினைச்செய்யும் போது மாவலியை அடக்கி ஆட்கொள்ள ஸ்ரீ ஹரிபரந்தாமன் வாமனனாகத் திருஅவதாரம் செய்தான்..

யாக சாலைக்குள் பிரவேசித்து மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்க -
மாவலியோ பெரியதாகத் தருவதற்கு விரும்பினான்..

வாமனனோ அதை மறுத்து மூன்றடி மட்டும் கேட்டு நிற்க -
வேறு வழியில்லாமல் தானம் தருவதற்கு முனைந்தான் மாவலி..

தனது மாணாக்கனை எச்சரித்தார் - சுக்ராச்சார்யார்..

வந்திருப்பவன் மாயக் கள்வன்.. அவன் கேட்டவாறு தானம் கொடுக்காதே!.. - என்று...

மாவலி கேட்கவில்லை..

ஆயினும் மனம் பொறுக்காமல் தாரை வார்க்கும் வேளையில் வண்டாக உருவெடுத்து கிண்டிக்குள் விழுந்து நீர் வழியை அடைத்தார் - அசுரகுரு..

தர்ப்பைப் புல்லால் கிளறி விட சுக்ராச்சார்யருக்கு ஒரு கண் போயிற்று..

கிண்டியிலிருந்து நீர் வெளிப்பட தானம் நிறைவேறியது..

வாமனன் திரிவிக்ரமனாக வளர்ந்து இரண்டடிகளால் வையத்தையும் வானத்தையும் அளந்திட மூன்றாவது அடிக்கு இடமில்லாமல் போயிற்று..

வந்திருப்பவனை உணர்ந்து கொண்ட மாவலி, மனமகிழ்வுடன் கூறினான் -

ஸ்வாமி!.. மூன்றாவது அடியினை எனது தலைமேல் வைத்துக் கொள்ளுங்கள்!. - என்று..

ஸ்ரீ ஹரிபரந்தாமனின் நோக்கம் நிறைவேறிற்று...

தானமாகத் தன்னையே தந்த மாவலியை
பாதாள லோகத்திற்கு அதிபதியாக்கி வாழ்த்தினான்..

மாயனின் அவதாரம் மிகச் சிறியது என்றாலும்
நாம் பெறும் வாழ்வியல் நெறிகள் மிகப் பெரியவை..

இந்நாளில் தமிழகத்தின் திவ்ய தேசங்கள் பலவற்றிலும் சிறப்பான வழிபாடுகள் நிகழ்கின்றன..

இன்றைய பதிவில் சீர்மிகு திவ்ய தேச தரிசனத்துடன் 
பெரியாழ்வாழ்வார் அருளிய திருப்பாசுரங்கள்..

ஸ்ரீ குருவாயூரப்பன்
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம்புகுவார் புக்குப் போதுவார்
ஆணொப் பார்இவன் நேரில்லை காண்திரு
ஓணத்தான் உலகாளும் என்பார்களே..(0015)

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்
அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே
முகிழ்நகையீர் வந்து காணீரே..(0028)

ஸ்ரீ சௌரிராஜன் - திருக்கண்ணபுரம்
ஸ்ரீ ஒப்பிலியப்பன்
ஸ்ரீ சாரநாதன் - திருச்சேறை
ஸ்ரீமந் நாராயணன் - திருத்தங்கல்
ஸ்ரீ அழகியமணவாளன் - உறையூர்
மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்
தக்கதி தன்றென்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே அச்சோ அச்சோ
சங்க மிடத்தானே அச்சோ அச்சோ..(0103)

மாவலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று
மூவடி தாஎன்று இரந்தஇம் மண்ணினை
ஓரடி இட்டு இரண்டாமடி தன்னிலே
தாவடி யிட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும்..(0219)

திரு அரங்கன்
தேவுடை மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய்
மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில்
சேவலொடு பெடையன்னம் செங்கமல மலரேறி ஊசலாடி
பூவணைமேல் துதைந்தெழு செம்பொடியாடி விளையாடு புனலரங்கமே..(0420)


ஸ்ரீ நரஸிம்ஹப்பெருமாள் - தஞ்சை யாளி நகர்
மாயக் குறளுருவாய மாயனை என்மனத்துள்ளே
பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி
மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலிவன் குறும்பர்களுள்ளீர்
பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே..(0447)


பழங்காலத்தில் தமிழகம் எங்கும் கொண்டாடப் பெற்ற ஓணத் திருநாள்
இன்று கேரளத்தில் மட்டுமே திருநாளாகத் திகழ்கின்றது..

கேரளம் முழுதும் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன..

ஊர்கள் தோறும் இல்லங்கள் தோறும் பத்து நாள் விழாவாக வெகு சிறப்புடன் ஓணம் கொண்டாடப்படுகின்றது..


எல்லாம் சரிதான்!.. 
மாவலியிடம் தானம் பெற்றதை - பெருமாள் என்ன செய்தார்!..

தானம் பெற்றதை இந்திரனுக்கே அளித்து விட்டு -
திருமகள் பாதசேவை செய்ய -
மீண்டும் பாற்கடலில் பள்ளி கொண்டாராம் நம்பெருமாள்!..


உரியது இந்திரர்க்கு இதென்று உலகம் ஈந்து போய்
விரி திரைப் பாற்கடல் பள்ளி மேவினான் -
கரியவன் இலகு எலாம் கடந்த தாளிணை 
திருமகள் கரம் தொடச் சிவந்து காட்டிற்றே!..
(கம்பராமாயணம்)

மாயனின் அவதாரம் மாணிக் குறளன் என்றாயினும்
நாம் பெறும் வாழ்வியல் நெறிகள் மிகப் பெரியவை..
ஓங்கி உலகளந்த உத்தமனைப் போல!..

அவற்றை வேறொரு வேளையில் சிந்திப்போம்!..
***


அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே!..
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!.. 
-: சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் :-
* * *

மாவலியின் யாகத்தில்
தானம் கொடுப்பதைத் தடுக்க முனைந்து
நீரைத் தடுத்த சுக்கிரன் கண்ணை இழந்தார்..
இதுதான் உணரவேண்டிய நீதி!..

நீரைத் தடுக்காமலும் கெடுக்காமலும்
நீர்வழியை அடைக்காமலும் உடைக்காமலும்
எல்லார்க்கும் ஆகட்டும் என்று
இன்முகம் கொள்ளட்டும் நின்று!.. 


அனைவருக்கும் 
ஓணத்திருநாள் நல்வாழ்த்துகள்!..

ஓம் ஹரி ஓம் 
* * *

9 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    ஓணத்தைக்குறித்த விடயங்கள் நன்று வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  2. திருத்தங்கல் தவிர அனைத்து தலங்களுக்கும் சென்றுள்ளேன். தங்கள் பதிவு மூலமாக பல கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பும், இறைவனைக் காணும் வாய்ப்பும் கிட்டியது. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அருமையான வர்ணனைகள். அழகிய படங்கள். இனிய பாசுரப் பகிர்வுகள்.
    என்னதான் முயன்றாலும் ஈரடியில் வானமும் வையமும் அளந்ததை ஓவியத்தில் கொண்டுவர முடியுமா என்ன!

    பதிலளிநீக்கு
  4. அருமையான கட்டுரை....
    அழகான படங்கள்...
    வாழ்த்துக்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
  5. விருப்பு வெறுப்பகற்றி ஓர் பொருட்கள் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே என்று படித்திருக்கிறேன் என்னதான் முயன் றாலும் இந்த அவதாரத்தை ஏற்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
  6. அழகான தமிழில் விவரங்கள்! படங்கள் மிக அழகு! ஓணத்திருநாள் வாழ்த்துகள்!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  7. ஆரமுளாவின் (திருவாறான்விளை) திருக்குறளப்பனைக் குறிப்பிடவில்லையே. அதைத்தான் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

    நீங்கள் எது எழுதினாலும் அதில் ஒரு விவரணம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான பகிர்வு.
    ஊருக்கு போய்விட்டதால் இந்த பதிவை படிக்கவில்லை.
    மிக அருமையான பதிவு, பாசுரங்கள், படங்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..