சனி, செப்டம்பர் 02, 2017

சக்கராப்பள்ளி 1

திருச்சக்கரப்பள்ளி..

இன்றைக்கு சக்கராப்பள்ளி என்று வழங்கப்படும் திருவூர்..

தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலையில் ஐயம்பேட்டையை அடுத்து தென்புறமாக உள்ளது...

தொலை தூரம் செல்லும் அரசு பேருந்துகளைத் தவிர -
மற்றெல்லா பேருந்துகளும் சக்கராப்பள்ளியில் நின்று செல்கின்றன..

பேருந்து நிற்கும் இடத்திற்கு அருகிலேயே கோயிலுக்குச் செல்வதற்கான வழி..

அலங்கார வளைவு ஒன்று நமக்கு அடையாளங்காட்டுகின்றது.

திருக்கோயில் செல்லும் வழியில் உள்ள தோரண வாயில்
பிரதான சாலையிலிருந்து இரண்டு நிமிட நடை தூரம் தான்...

வாருங்கள் செல்வோம்...

இதோ - இந்தக் குளத்தைப் பார்த்தீர்களா!..

இது சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் திருக்குளம்..

குப்பையும் கூளமுமாக!..  குளம் தூர்க்கப்படுகின்றது..
ஏதோ மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர்!..

ஏதும் செய்ய வழியற்றவர்களாக - பக்த ஜனங்கள்...

இறைவன் ஒருவனே கண் கொண்டு நோக்கியாக வேண்டும்..

இதோ - ஸ்ரீ சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில்..

ஸ்ரீ தேவநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீ சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில்..

சக்ரவாகப் பறவை வழிபட்டதால் ஈசனுக்கு இத்திருப்பெயர்..

ஈசனிடமிருந்து சக்ராயுதம் பெறுவதற்காக -
திருமால் இங்கு வேண்டி நின்றனர் என்ற திருக்குறிப்பும் உள்ளது...

மிகப் பழமையான திருக்கோயில்..

ராஜராஜ சோழனின் பாட்டியார் செம்பியன் மாதேவியார் திருப்பணி செய்த திருக்கோயில்களுள் இதுவும் ஒன்று..

திருக்கோயிலுக்கு ராஜகோபுரம் ஒரு காலத்தில் இருந்திருக்கலாம்..

ஆனால் இப்போது இல்லை... நுழைவாசல் மட்டுமே..

தலை வாசல் அழகான வாயிலாக அமைந்துள்ளது..

தேவ மகளிர் கவரி வீசுகின்றனர் - கணபதியும் கந்தனும் விளங்க அம்மையப்பன் ஆனந்த தரிசனம் அளிக்கின்றனர்..


கீழ்த் திசை நோக்கி சந்நிதித் தெரு நீண்டு விரிந்திருக்கின்றது..

திருக்கோயிலைச் சார்ந்த வீதிகளில் - குறிப்பாக சந்நிதி வாசலில் கூட
எந்த ஒரு சிவ வைணவ சமயத்தவர் இல்லமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது...

திருக்கோயிலுக்கு எதிர்புறமாக இறைச்சிக் கடைகளும் இருக்கின்றன..

கூரை மற்றும் ஓட்டு வீடுகளாக இருந்தவை உறுதியான கட்டிடங்களாக ஆகியிருக்கின்றன..

அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு வாருங்கள்.. திருக்கோயிலுக்குள் செல்வோம்..

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் திருக்கோயிலுக்கு வருகின்றேன்..

அப்போதெல்லாம் கோயில் எப்போது திறப்பார்கள் என்றே தெரியாது..

நமது மக்களும் வருவதேயில்லை.. திருநாட்கள் எல்லாம் நின்று போயிருந்தன..

ஒரு சந்தர்ப்பத்தில் எழுச்சியுற்ற மக்கள் நின்று போயிருந்த சப்த ஸ்தான பெருவிழாவினை முன்னெடுத்தார்கள்..

அப்போதும் மிகப் பெரிய பிரச்னைகளை புறச் சமயத்தாரிடமிருந்து எதிர்கொள்ள வேண்டியிருந்தது..

எல்லாவற்றையும் எதிர்கொண்ட இறையன்பர்களால் திருக்கோயிலும் சப்த ஸ்தான திருவிழாவும் புத்துயிர் பெற்றுள்ளது..

இன்று கூட (19/8/2017) பிரதோஷம்.. அதுவும் சனிப் பிரதோஷம்..

பெண்களும் சிறார்களுமாக இறைபணியில்!..

திரளான பக்தர்கள் வந்திருக்கின்றனர்..

அபிஷேக திரவியங்களைச் சேகரிக்கின்றனர்..

நாம் கொண்டு வந்திருக்கும் திரவியங்களையும் அவர்களிடம் கொடுத்து விடுவோம்... அபிஷேக வேளையில் சேர்த்துக் கொள்வார்கள்..


இதோ காண்கின்றோமே கொடி மரம்..
இது கூட சமீபத்தில் நிறுவப்பெற்றது தான்..

இப்போது மாதாந்திர பிரதோஷ வழிபாடுகளும் செம்மையுடன் நிகழ்கின்றன..

காலம் நல்லவிதமாக கூடி வருகின்றது..
எங்கெங்கிருந்தெல்லாமோ மக்கள் தேடி வந்து சிவதரிசனம் செய்கின்றனர்..

ஏனெனில் -

அம்பிகையே சப்த கன்னியராக உருவெடுத்து தேடிவந்து சிவ தரிசனம் செய்த திருத்தலம் அல்லவா!..

ஓ.. அப்படியொரு வரலாறு உண்டா!..

ஆம்.. அதனால் தான் சப்த மங்கை ஸ்தலங்கள் என ஏழு திருக்கோயில்கள் விளங்குகின்றன.. அவற்றுள் முதலாவதானது சக்கவாகேஸ்வரர் கோயில் தான்...

அவற்றையும் சொல்லுங்களேன்..

அவற்றைச் சொல்வதற்கு முன் - இதோ கொடி மரத்தை ஒட்டினாற்போல நந்தி மண்டபம்.. நந்தி மண்டபத்துடன் இணைந்ததாக அம்பிகையின் சந்நிதி..

ஸ்ரீ தேவநாயகி என்னும் திருப்பெயர்..

திருவிளக்கின் ஒளியில் தேவநாயகி அம்பிகையின் திருமுகத்தில் திகழும் கனிவினைத் தரிசனம் செய்து கொள்க!..

சிவதரிசனம் வேண்டி தவமிருந்த அம்பிகை
இத்திருத்தலத்தில் ஈசனின் நேத்ர தரிசனம் பெற்றாள்..

இவள் தான் அநவித்யநாதர் - அனவிக்ஞை எனும் தம்பதியருக்கு பெண்ணின் ஏழு பருவங்களில் ஒன்றான பேதை எனும் வடிவில் திருக்காட்சி நல்கியவள்..


இதோ நேரெதிரே ஸ்ரீ சக்ரவாகேஸ்வரர் திருச்சந்நிதி...

அருள்தரு சக்ரவாகேஸ்வரர் (FB)
அருள்தரு தேவநாயகி (FB)
இறைவன் - ஸ்ரீசக்ரவாகேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீதேவநாயகி 

தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி, கமல தீர்த்தம்..

ஈசனிடமிருந்து சக்ராயுதம் பெறுவதற்காக -
திருமால் வேண்டி நின்ற திருச்சந்நிதி...

இத்தலத்தில் நவக்கிரகங்கள் இல்லை என்பதும்
சப்த கன்னியரும் சப்த ரிஷிகளும் வணங்கிய தலம் என்பதும் சிறப்பு..


படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே..(3/27)
***


காண்டற்கரிய கடவுளைக் கண்டீர்களா!..
கண் கொண்ட பயன் கொண்டு கண்டீர்களா!..
பறவைக்கும் நற்கதி அளித்த ஐயனைக் கண்டீர்களா!..
பாருலகைப் புரந்தளிக்கும் பரமனைக் கண்டீர்களா!..

இத்தலத்தில் நின்று வேண்டிக் கொள்வோர்க்குத்
தடைகள் எல்லாம் தகர்ந்து போகும் என்பது அருட்குறிப்பு..

ஆதலால் தாங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்..

இத்திருத்தலத்தை ஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகம் பாடி போற்றியுள்ளார்..

கூடவே - அப்பர் பெருமானின் திருவாக்கிலும் இடம்பெற்ற திருத்தலம்..

ஆமாம்.. சப்த மங்கையரும் தரிசனம் செய்த சிவ ஸ்தலங்களைப் பற்றிச் சொல்கின்றேன் என்றீர்களே!..

சப்த கன்னியருள் பிராம்மணி - அட்ச மாலையுடனும் கமண்டலத்துடனும் தவம் மேற்கொண்ட திருத்தலம் - சக்கராப்பள்ளி என்பது திருக்குறிப்பு..

மற்ற தலங்களைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கின்றேனே!..

FB - எனக் குறிக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்களைத் தவிர
மற்ற படங்களை - கடந்த 19/8  பிரதோஷ தரிசன வேளையில் நான் எடுத்தேன்..


நலமலி கொள்கையார் நான்மறை பாடலார்
வலமலி மழுவினார் மகிழுமூர் வண்டறை
மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே..(3/27)
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய நம சிவாய நம ஓம் 
***

8 கருத்துகள்:

  1. என் கணவர் சொல்கிரார்கள் 40 வருடகளுக்கு முன்பே இதே நிலைதான் என்று.
    தோரணவாயில் கிடையாது கோயிலை
    கண்டிபிடிப்ப்தே கஷ்டம் முன்பு என்றார்கள். கொடிமரமும் அப்போது கிடையாது.
    இப்போது பிரதோஷவழிபாட்டால் கோயில் நன்றாக இருப்பது மகிழ்ச்சி.

    பாடல்களும் படங்களும் அருமை.

    எல்லோர் வாழ்விலும் காரியத்த்டைகள் ஏற்படாமல் நலமாய் நடக்க இந்த கோயில் ஈசன் அருள் புரிய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின்ஜி
    சக்கராப்பள்ளி தல வரலாறு அறியத்தந்தீர்கள்.

    அழகிய படங்கள்.
    தொடர்கிறேன்... வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  3. முப்பது வருடங்களுக்குப் பிறகு செல்கிறீர்களா? அட...

    பழம்பெரும் கோவில் என்று தெரிகிறது. விவரங்கள் அறிந்தேன்.

    முனைவர் ஜம்புலிங்கம் ஐயா போட்டிருக்கும் துக்காச்சி கோவில் பற்றி படித்தீர்களா?

    பதிலளிநீக்கு
  4. திருவூர்
    சக்கரா பள்ளியின் பழமையான தொன்மையான பெயரை இன்றுதான் அறிந்தேன் ஐயா

    பதிலளிநீக்கு
  5. மிகப் பழம் பெரும் கோயில் போலத் தெரிகிறதே! படனள் மிக அழகு! அறியாத கோயில் விவரங்கள் அறிந்துகொண்டோம். முப்பது வருடங்கள் கழித்துச் செல்கின்றீர்களா!!

    மிக்க நன்றி கோயில் பற்றி அறியத்தந்தமைக்கு

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
  6. சப்தமங்கைத் தலங்கள் அனைத்திற்கும் சென்றுள்ளேன். இங்கு சென்று வரும்போது ஒவ்வொரு முறையும் என்னையறியாத பயம் அங்குள்ள சூழல் காரணமாக. என் வழிகாட்டலில் திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்கள் இத்தலங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டார் என்பதைப் பெருமையுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். [Ayyampet N.Selvaraj, Study on the Saptastanam (Seven Sacred Places) of Chakkarappalli in Thanjavur District,Tamil Nadu, May 2011] அதற்காக 2009 மற்றும் 2010இல் இக்கோயில்களுக்குப் பல முறை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. (இந்த இணைப்பில் நாங்கள் ஆயவு மேற்கொண்ட விவரத்தைக் காணலாம் :http://www.nehrutrustvam.org/awards/nehru-trust-awards?page=6)

    பதிலளிநீக்கு
  7. அழகான கோவில். சிறப்பான படங்கள்.

    தமிழகம் - குறிப்பாக தஞ்சை, கும்பகோணம், திருச்சி பகுதிகளில் எத்தனை எத்தனை கோவில்கள்.... பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. சக்கரவாகேஸ்வரரையும் தேவனாயகி அம்மையையும் தரிசனம் செய்துகொண்டேன். ஊருக்குச் சென்ற நேரத்தை மிகப் பயனுள்ள வழிகளில் செலவழித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..