வெள்ளி, பிப்ரவரி 24, 2017

ஸ்ரீ மஹா சிவராத்திரி

இன்று மகா சிவராத்திரி..

மாசி மாதத்தின் தேய்பிறை பிரதோஷ நாள்..

இத்துடன் மஹாசிவராத்திரி புண்ய காலமும் கூடி இருக்கின்றது..

மாசி மாதத்தின் திரயோதசியும் சதுர்த்தசியும் இணைந்து வருகின்றன..


இன்றிரவு அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால சிறப்பு வழிபாடுகள் நிகழ்வுறுகின்றன..

முதல் கால பூஜையை ஸ்ரீ நான்முகனும்
இரண்டாம் கால பூஜையை ஸ்ரீ மஹாவிஷ்ணுவும்
மூன்றாம் கால பூஜையை ஸ்ரீ பராசக்தி அம்பிகையும்
நான்காம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் மகரிஷிகளும் சித்தர்களும் நிகழ்த்தியதாக ஐதீகம்..

இந்த நான்கு காலங்களிலும் ஈ எறும்பு முதற்கொண்டு மனிதர் வரை எண்ணாயிரங்கோடி ஜீவராசிகளும் வழிபட்டு உய்வடைவதாக ஆன்றோர் வாக்கு..

முதல் கால பூஜை மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள்ளாக நிகழும்..

இரண்டாம் கால பூஜை மாலை ஒன்பது மணியிலிருந்து நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குள்ளாக நிகழும்..

மூன்றாம் கால பூஜை மாலை நள்ளிரவு பன்னிரண்டு மணியிலிருந்து பின்னிரவு மூன்று மணிக்குள்ளாக நிகழும்..

மூன்றாம் காலத்தின் மத்திய பொழுது (ஒன்றரை மணி) -
லிங்கோத்பவ காலம் என்று குறிக்கப்படுகின்றது..

இவ்வேளையில் தான் ஈசன் எம்பெருமான் அடிமுடி அறியவொண்ணா
அனல் மலையாகத் தோன்றினன் என்பது திருக்குறிப்பு..

நான்காம் கால பூஜை பின்னிரவு மூன்று மணியிலிருந்து அதிகாலை ஆறு மணிக்குள்ளாக நிகழும்..


நான்கு கால பூஜை நேரங்களிலும் 
சிறப்பான அபிஷேக அலங்கார ஆராதனைகள் குறிப்பிடப்படுகின்றன..

சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்பல.. ஆனாலும்,
நேரிய நினைவுகள் நிறைந்திருந்தால் நெஞ்சகமே கோயிலாகின்றது..

எம்பெருமானின் திருமுடியை அலங்கரித்ததால் ஆணவமுற்ற நாகராஜன் பாதாளத்தில் வீழ்ந்தான்..

கீழே மோதியதால் - தலை ஆயிரம் பிளவுகளாகச் சிதறிப் போனது..

தானுற்ற பழியினின்று நீங்குதற்காக -

முதற்காலத்தில் திருக்குடந்தை
இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரம்
மூன்றாங் காலத்தில் திருப்பாம்புரம்
நான்காம் காலத்தில் திருநாகைப்பட்டினம்

- எனும் திருத்தலங்களில் நாகராஜன் சிவபூஜை செய்ததாக ஐதீகம்..

ஆணவம் நீங்கப் பெற்று ஈசனைச் சரணடைதல்..
இதுவே சிவராத்திரியின் மகத்தான தத்துவம்..

இந்நிலைக்கு 
எல்லாம் வல்ல சிவம் நம்மையும் உய்விக்குமாக!..
 ***

இன்றைய பதிவில்
ஸ்ரீ திருநாவுக்கரசு ஸ்வாமிகள் அருளிய 
போற்றித் திருத்தாண்டகம்..

ஆறாம் திருமுறை
முப்பத்திரண்டாவது திருப்பதிகம்



கற்றவர்கள் உண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மணியே போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (01)

வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி
மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித் தோலாடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக் குன்றே சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (02)



மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்நெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக் கண்ணுடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலை வேலேந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (03)


பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப்படை உடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (04)



நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (05)

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்னியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (06)




வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி
நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி
செம்பொன்னே மரகதமே மணியே போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (07)

உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (08)



பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி
திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை ஆண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (09)

பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளும்
சிரநெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி.. போற்றி.. (10)

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
***

13 கருத்துகள்:

  1. சிவராத்திரி நான்கு கால பூஜை குறித்து அறிந்து கொண்டேன் ஐயா...
    அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சிவராத்திரி சிறப்பு பதிவு அருமை.
    படங்களும், பாடல்களும் மேலும் சிறப்பு சேர்த்தன.
    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. மஹா சிவராத்திரி பற்றி விளக்கமாக அறிந்துகொண்டேன் நன்றி ஐயா ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அனைத்து விளக்கங்களும் மிகவும் அருமை ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இன்று வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறது என் மூத்தமகனும் மருமகளும் சென்றுள்ளார்கள் நேர்லையில் ஒளிபரப்பப் படுகிறதுபொதிகையில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகையும் மேலதிக செய்தியும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. சிவராத்திரி பற்றிய விபரத்தை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் சார்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..