திங்கள், பிப்ரவரி 20, 2017

கேள்வியின் நாயகன்..

மடப்பட்டி சமஸ்தானத்தின் அதிபதி!...



அவர் வந்து இவர்களுள் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும்..

அதற்காகக் காத்திருக்கின்றார்கள் - இவர்கள்..

இவர்கள் என்றால் - அந்த சமஸ்தானத்தின் குடிமகன்கள்...

நற்றமிழ்ப் புலமை கற்றவர்க்கோர் நல்ல வாய்ப்பு!..

- என்று ஊரெங்கும் பறையறிவிக்கப்பட்டதால், அதை நம்பி வந்தவர்கள்..

சமஸ்தானத்தில் வேலை - என்று, நூற்றுக் கணக்கில் திரண்டு வந்தவர்களுக்கு பலவகையான போட்டிகள் நடத்தப்பட்டன..

அவற்றுள் வெற்றிகரமாகத் தோல்வியைத் தழுவியவர்களைத் தவிர்த்து வெற்றி வாகை சூடியவர்கள் நால்வர்!..

இந்த நால்வரும் எல்லா போட்டிகளிலும் சமமான புள்ளிகளைப் பெற்றிருந்ததால் கீழ்நிலை வேலையாட்களின் மண்டை காய்ந்து விட்டது..

யாரைத் தேர்ந்தெடுப்பது!.. - என்று..

கடைசியில்,

நமக்கெதற்கு வம்பு.. அங்கே கொண்டு போய் நிறுத்தி விடுவோம்.. 
யாரையாவது தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்!.. 

- என்று, இங்கே கொண்டு வந்து விட்டார்கள்...

சமஸ்தானாதிபதிக்கு ஏன் - இவர்களுள் ஒருவன்?..

ஆலோசனை சொல்லத் தான்!..

அப்படியானால் - 
பெரியவர்கள் யாரும் இல்லையா - அந்த சமஸ்தானத்தில்!...

உண்மையில் இவன் அவனே அல்லன்..

பழைய அதிபதியின் அடைப்பைக்காரன்...

வெற்றிலையில் நறுமணப் பாக்கு வைத்து - 
பதமாக வாசனைச் சுண்ணாம்பு தடவி 
தாம்பூலமாக மடித்துக் கொடுத்தவன்..

சரி.. பழைய அதிபதி என்ன ஆனார்?..

அவருக்குக் காலம் வந்தது.. போய்ச் சேர்ந்து விட்டார்..

ஏன்?.. ராஜ வைத்தியம் பார்க்கவில்லையா?..

பார்த்தார்கள்... பழங்கிழடான வைத்தியன் ஒருவனைக் கொண்டு!..

அந்த வைத்தியனோ - ஒன்றும் புரியாமல்
சூரணம் குளிகை இளகியம் கஷாயம் - என,
எதை எதையோ கலந்து கொடுத்தான்..

ஒன்றும் பயனில்லை..

சமஸ்தானாதிபதியின் உயிர்க் குருவி - விட்டால் போதும்!.. 
- என்று ஓடிப் போய்விட்டது...

அடுத்த வாரிசு என்று யாரும் இல்லாததால் -

யானையின் கையில் பூமாலையைக் கொடுத்து புதிய வாரிசைத் தேடலாம்!.. - என்றார்கள், சிலர்..

அதெல்லாம் வேண்டாம்!.. யானையின் கையில் பூமாலையைக் கொடுத்து அதை கொடுமைப் படுத்துகின்றார்கள்.. என்று,  எவனாவது கொடியைத் தூக்கிக் கொண்டு வருவான்!.. அதனால், 

அதனால்!?..

அதனால், இப்போது முதல் எல்லாம் நானே!..

நீங்களா!?..

ஏன்!.. எனக்கென்ன குறைச்சல்?..

அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்..

வெற்றிலை மடித்த கையென்று எண்ண வேண்டாம்!..
வேல் கம்பையும் ஏந்தும்!..

கொட்டைப் பாக்கு எடுத்த கையென்று நினைக்க வேண்டாம்!..
கோடாலியையும் தூக்கும்!..

சுண்ணாம்பு தடவிய கையென்று கருத வேண்டாம்!..
சுளுக்கியையும் எடுக்கும்!..

புதிய அதிபதியானவன் உறுமினான்...

அதற்குப் பின் - அங்கிருந்தவர்களின் முகத்தில் ஈயாடவில்லை...

தலை தப்பிக்க வேண்டும்.. தம்பிரானே!.. 

அனைவரும் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டார்கள்...

அப்படிப்பட்ட அதிபதிக்குத் தான் ஆலோசகன் தேவைப்பட்டான்..

அதன் முடிவில் தான் - இதோ இங்கே நான்கு பேர் காத்திருக்கின்றார்கள்..

அதோ.. கட்டியக்காரன் கத்திக் கொண்டு வருகின்றான்..

வந்தாயிற்று.. உடனடியாக நேர்முகம் ஆரம்பமானது..

நால்வரையும் கண்களால் அளவெடுத்தான் புதிய அதிபதி..



ஒரே ஒரு கேள்வி தான் கேட்பேன்.. அதற்கு உறுதியாக இறுதியாக ஒரே ஒரு பதிலைத் தான் சொல்ல வேண்டும்!.. விடை சரியாக இருந்தால் உள்ளே!.. இல்லையேல்!..

அப்போதே தொண்டை காய்ந்து விட்டது நால்வருக்கும்...

டிங்!.. - முதல் மணி அடிக்கப்பட்டது..

மூன்றும் நான்கும் எத்தனை?..

முதலாமவன் சொன்னான்..

ஏழு!..

ம்ஹூம்!..

டிங்!.. - இரண்டாவது மணி..

மூன்றும் நான்கும் எத்தனை?..

ஆறு!..

ம்ஹூம்!..

டிங்!.. - மூன்றாவது மணி..

மூன்றும் நான்கும் எத்தனை?..

ஐந்து!..

ம்ஹூம்!..

டிங்!.. - நான்காவது மணி..

கடுப்பான அதிபதி கத்தினான்..

அடேய்.. உனக்காவது தெரியுமா?.. மூன்றும் நான்கும் எத்தனை?..



அரசே!.. தாங்கள் என்ன நினைக்கின்றீர்களோ.. அதுவே விடை!..

ஆஹா!.. நீயே அறிவாளி.. நீயே ஆலோசகன்!..

ஆங்கிருந்தோர் அனைவரும் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்..

இந்த மூவரும்!?..

வெளியே விரட்டி அடி!..

நல்லவேளை.. அடித்து விரட்டாமல் விட்டார்களே.. அந்த வரைக்கும் சரி!..

உயிர் தப்பிய மூவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்..
* * *

மூன்றும் நான்கும் எத்தனை?..

இந்த கருத்துக்குச் சொந்தக்காரர் 
எனதுயிர் நண்பர் இஸ்மாயில் அவர்கள்..
அவர் இலங்கையைச் சேர்ந்தவர்..
இஸ்மாயில் அவர்கள் இப்போது இல்லை..

அவர் தமக்கு இந்தப் பதிவு
சமர்ப்பணம்.. 
***

16 கருத்துகள்:

  1. நல்ல கருத்துள்ள கதை.
    சரியான விடை சொல்வதை விட கேள்வி கேட்டவர் எதிர்ப்பார்த்த விடையை சொன்னவர் பிழைக்க தேரிந்தவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      வெகுநேரமாக யாரும் வரவில்லையே.. - என்று தவித்துக் கொண்டிருந்தேன்.. நல்லவேளை..

      தாங்கள் முதல் வருகையாக நல்ல கருத்துள்ள கதை என்றதும் நிம்மதியாயிற்று..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அந்த கைக்கு கோடாலியை எடுத்து போடவும் தெரியும் :)
    அருமையா சொன்னீங்க அறிவுக்கு நம் அரசில் இடமில்லை :)
    ஆள்பவர் நினைத்ததை கணிப்பவரே அறிஞர் என ஏற்றுக்கொள்ளப்படுவர் அரியணை ஏற்றப்படுவர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நன்றாகச் சொன்னீர்கள்..
      ஆள்பவர் நினைப்பதைக் கணிக்க வேண்டும். அவன்தான் அறிஞன் - என்று..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வசன கவிதை வார்த்தைகளால் விளையாடி விட்டீர்கள். இன்றைய அரசியலைச் சொல்லும் அடைப்பைக்காரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பெரும்பாலானவர்களின்
    இன்றைய வாழ்வியல் மந்திரமும்
    தந்திரமும் இதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அவர்களின் மந்திரமும் தந்திரமும் ஒரு முடிவுக்கு வந்து தானே ஆகவேண்டும்!..?..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. எல்லாக் காலத்திலேயும் இதுபோல் அரசனைக் குளிர்விக்கும் ஆட்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். என்ன பதில் சொன்னால், அரசன் மகிழ்வான் என்று தெரிந்திருந்த இவர்கள், பிழைக்கத் தெரிந்தவர்கள்! சுவையான நடையில் எழுதப்பட்ட அரசியல் உண்மை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் சொல்வதைப் போல - எக்காலத்தும் துதிபாடி பிழைக்கும் கூட்டமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. ஆடிட்டராக வேலை தேடுவோருக்கு ்வழக்கமாகக் கேட்கப்படும் கேள்வி இது. முதலாளி என்ன விரும்புகிறாரோ, அந்த எண்ணிக்கையை வரவழைத்துக் காட்டவேண்டியதுதான் ஆடிட்டரின் வேலை. ஆடிட்டருக்குப் பதில் அரசியல்வாதி என்று வைத்துக்கொள்ளலாம். குறைந்தாபோய்விடும்!

    - இராய செல்லப்பா நியூஜெர்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் சொல்வது உண்மைதான்..

      வெள்ளைக் காக்கா மல்லாக்கப் பறக்கிறது!.. - என்று சொன்னால் தான் அன்றையப் பொழுதே நகர்கின்றது

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் குமார்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..