நமது உரிமையை மீட்டெடுப்பதற்கும்
போராடிக் கொண்டிருக்கும்
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
அன்பினொடு நன்றியும் வணக்கமும்!..
அனைத்திலும் வெற்றியடைய
அன்பின் நல்வாழ்த்துகள்!..
***
தம்பி.. எங்கேப்பா.. இந்த வேகாத வெயில்..ல?..
போகும்போதே எங்கேன்னு.. கேள்வி?..
அதுக்கில்லே.. செவலை ரெண்டும் வெயில்ல கெடக்கு பாருங்களேன்.. கொஞ்சம் தண்ணி காட்டிட்டு நிழல்..ல கட்டிட்டு போகலாம்!...
சின்னையன் வரமாட்டானா?.. அவன் வந்து பார்க்க மாட்டானா?.. அதுக்குத் தான அவனை வேலைக்கு வெச்சிருக்கு?...
அதெல்லாம் சரிதான்.. ராத்திரியில இருந்து லெச்சுமி காளைக்கு கத்திக்கிட்டு இருந்தா.. விடியக் காலையில ஓட்டிக்கிட்டுப் போனவனை இன்னுங் காணோம்!.. அவன் வந்துட்டான்..னா உங்ககிட்ட ஏன் சொல்லப் போறேன்!.. வேலைக்கு ஆள வெச்சிருந்தாலும் நம்ம பொருளை நம்ம கவனம் பண்ண வேண்டாமா?.. கோவிச்சுக்காதப்பா!..
கடுப்பேறியது கபாலத்திற்குள்.. அருகே இருந்த சைக்கிளுக்கு ஒரு உதை விடலாமா!.. - என நினைத்தான்..
ம்ஹூம்.. வேண்டாம்!.. சைக்கிள் கீழே விழுந்து ஏடாகூடம் ஆகிவிட்டால் ஊர் சுற்றும் வேலைக்கு ஒத்து வராது...
அண்ணே!.. நான் பார்த்துக்கறேன்.. நீ.. போ!..
பிரச்னை விட்டது.. தனக்குள் மகிழ்ந்தபடி ஓரடி எடுத்து வைத்தபோது -
தங்கச்சி தான் ரெண்டு நாளா காய்ச்சல் அடிச்சிக் கிடக்கா!.. நாம செஞ்சா என்னா..ன்னு செய்ய மாட்டேங்கிறீங்களே!. போங்க.. போங்க!.. ஏதாவது நடக்கட்டும்...
சும்மா.. இருங்கப்பா!.. அண்ணனை ஒன்னும் சொல்லாதீங்க!.. நீ போய்ட்டு வா..ண்ணே!...
அந்த நேரம் பார்த்து நெஞ்சை அடைக்க - ஒரு வாய் தண்ணீரைக் குடித்து கொப்பளித்துத் துப்பினார்..
ஏண்டா.. இங்கே வந்து பொறந்தோம்!.. - என்றிருந்தது அவனுக்கு..
அவன் - கார்த்தி....
ஓரளவுக்கு நன்றாகப் படித்ததும் வீட்டுக்கு அடங்காத பிள்ளையாகி விட்டான்..
அம்மா - அப்பா, தங்கை - என, இனிய குடும்பம்..
இந்த இனிய குடும்பத்திற்குள் ஆடு மாடு - கோழி குஞ்சுகளும் அடக்கம்..
விவசாயம் தான் பாரம்பரியம்...
ஆனாலும், தாத்தாவுக்குப் பிறகு புளியடிக் கொல்லை நாலு துண்டுகளாகிப் போனது..
அப்பா சுந்தரத்தின் பங்காக வந்தது - ஒரு வேலி.. கிட்டத்தட்ட ஆறரை ஏக்கர்..
அதுவும் காலக் கொடுமையால் சுருங்கிப் போயிற்று..
இப்போது மூனு ஏக்கர் தான் கையிருப்பு..
இதை வைத்துத் தான் கல்யாணியை கரை சேர்க்க வேண்டும்...
அவளுக்கு என்று செறுவாடு (சேமிப்பு) உண்டு.. ஆனால்,
அதுவும் அவ்வப்போது கார்த்தியின் கை வரிசையால் கரைந்து போகும்..
இதொன்றும் தெரியாதவளைப் போல -
அண்ணனின் கைச் செலவுக்கு என்று கை நிறையக் கொடுத்து விடுவாள்...
அந்தக் காசெல்லாம் - ஆடு, கோழி - இவற்றை வைத்துச் செய்யும் பண்ணையத்தில் இருந்து கிடைப்பவை...
நாலு ஆடு.. வருஷத்துக்கு எட்டு குட்டிகள் நிச்சயம்... கிடாக் குட்டியாக இருந்து விட்டால் - ஆறு மாசத்தில் காசாகி விடும்.. குரால் என்றால் நாலு வருசத்துக்கு கவலையில்லை...
எல்லாமே நாட்டுக் கோழிகள் தான்.. மூனு வாரம் முட்டையிட்டதுமே அடுக்களையைச் சுற்றிச் சுற்றி வரும்..
பத்து பதினைந்து முட்டைகளை கூடையில் வைத்து மூலையில் அடை வைத்து விட்டால் - அடுத்த மூன்றாவது வாரத்தில் முத்து முத்தாக கோழிக் குஞ்சுகள்..
ஒன்று கூட கூமுட்டையாகாது.. அத்தனையும் பொரித்து விடும்.. ஆனால், காக்கா கழுகு இரையெடுத்தது போக பன்னிரண்டு குஞ்சுகளாவது உருப்படியாகத் தேறிவிடும்..
முட்டை, பால், தயிர், மோர் - அப்படின்னு எதுக்கும் பஞ்சம் இல்லை..
காலை..ல கறந்த பாலைக் காய்ச்சி அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றுவாள் கல்யாணி..
அதைப் பக்குவமாக ஆற்றி - அண்ணனுக்குக் கொடுப்பாள்...
அண்ணன் ரொம்ப மெலிஞ்சிருக்கு!.. என்று ஏகத்துக்கும் கவலை...
பாலைக் குடித்து விட்டு பத்து ரூபாய் கேட்பான் - கார்த்தி..
அவள் இருபது ரூபாயைக் கொடுத்து விட்டு சொல்வாள் -
பத்து ரூபா எந்த மூலைக்கு?.. - என்று..
அப்படிப்பட்ட தங்கைக்கு தன் உழைப்பினால் ஒரு ஜோடி பிளாஸ்டிக் வளையல் கூட வாங்கித் தந்ததில்லை - அவன்!..
அம்மா மரகதம்... உலகம் தெரியாத உத்தமி..
வயக்காட்டைத் தாண்டி என்ன இருக்கு?.. - என்று கேட்டால்.
அங்கிட்டால அத்துவானம் தானே!.. - என்பாள்..
புருஷனுக்கும் புள்ளைக்கும் இடையில் கிடந்து திண்டாடுபவள்...
நீங்க ரெண்டு பேரும் தான் அவனை கெடுக்கிறீங்க!..
கார்த்தியின் காதில் விழுந்தால் வருத்தப்படுவான் என்று அவன் இல்லாத போது சுந்தரம் சத்தம் போடுவார்...
சும்மா இருங்க நீங்க!.. ஒவ்வொருத்தன மாதிரி அவன் இருக்கான்?.. என்னமோ நேரங்கூடி வரல்லே.. நானுந்தான் மணி ஐயருக்கிட்ட ஜாதகத்தைக் காட்டிக் கேட்டேன்.. தை பொறந்தா வழி பொறக்கும்.. எல்லாம் சரியாயிடும்..ன்னு சொல்லியிருக்கார்... என்னதான் நடக்குது..ன்னு பார்ப்போமே!..
மரகதம் பொறுமையாக பதில் சொன்னாள்..
நீ இதையே சொல்லிக்கிட்டு இரு.. கொஞ்சங்கூட பொறுப்பு இல்லை.. காலாகாலத்துல கல்யாணியை கரை சேர்க்கணுமே... அதைப் பத்தி நினைக்கிறானா.. உம்மகன்!?..
..... .... .....
அவன் படிக்கிறதுக்குத் தான காணியை வித்து எல்லாம் செஞ்சோம்... ஒரு வேலை வெட்டிக்குப் போனா நம்ம கஷ்டம் தீராதா?.. முன்னைய மாதிரி சாகுபடி நல்லா இருந்தா நான் ஏன் அவனை கெஞ்சிக்கிட்டு இருக்கப் போறேன்...
..... ..... .....
அட... கூட இருந்து வயக்காட்டு வேலையப் பார்க்கிறானா?.. ஆடு மாடுகளைத் தான் கவனிக்கிறானா? சொன்னா கோவம் மட்டும் பெருசா வந்துடுது.... ஊரு ஒலகம் சரியில்லை.. அவன் மனசு உடைஞ்சிடக் கூடாதேன்னு தான் நானும் பொறுமையா இருக்கேன்...
அப்படியே.. இருங்க.. அதான் உடம்புக்கு நல்லது.. அவனும் நல்லபடியா வருவான் பாருங்க!...
ஆனாலும் கட்டிக் காத்த பொறுமை ஒருநாள் உடைந்து சிதறி விட்டது...
கோபித்துக் கொண்ட கார்த்தி -
மெட்ராசுக்குப் போறேன்!.. - என்று கிளம்பிவிட்டான்..
அவனுடன் படித்த பசங்க அங்கே இருக்கின்றார்கள்..
FB ல் வெளியான கவிதை |
தீபாவளிக்கும் வரவில்லை.. பொங்கலுக்கும் வரவில்லை...
பெற்ற வயிறு பதறித் துடித்தது..
எம்புள்ளை எப்படியிருக்கானோ.. என்ன சாப்பிட்டானோ?.. பசி தாங்க மாட்டானே!.. ஒன்னுஞ் சொல்லாதீங்க... ஒன்னுஞ் சொல்லாதீங்க.. ந்னு சொன்னேன்.. மனுசன் கேட்டாத்தானே!..
சுந்தரத்துக்கும் திக்..திக்.. என்றிருந்தது... கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாமோ!.. - மனம் நிலைகொள்ளாமல் தடுமாறியது..
இந்தப் பிள்ளை முகத்தைப் பாருங்க.. அண்ணே.. அண்ணே..ன்னு உருகிக் கிடப்பா.. இந்த ஏழு மாசமா தன்னால கிறங்கிப் போயிருக்கா... எடுக்குற ஒருவாய்ச் சோறும் தொண்டக்குழிக்குள்ள எறங்க மாட்டேங்குது!..
சரி.. நான்.. வாத்யார்..கிட்ட விலாசம் வாங்கிக் கிட்டு மெட்ராஸ் போயி பார்த்துட்டு கையோட கூட்டிக்கிட்டு வர்றேன்..
சடாரென கல்யாணி வீறிட்டாள்..
யம்மா!.. அண்ணன் வருது.. அண்ணன் வருது!.. யண்ணே!.. எப்படி..ண்னே இருக்கே!...
திடுக்கிட்ட சுந்தரமும் மரகதமும் வாசலுக்கு வந்து பார்க்க -
அதோ - மா மரத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்தான் கார்த்தி..
துள்ளிக் குதித்தோடிய கல்யாணி அண்ணனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறினாள்..
ஏ.. ராசா. எங்களெயெல்லாம் விட்டுட்டு இத்தனை நாள் எப்படிடா.. இருந்தே!.. இப்படி உருக்குலைஞ்சு வந்திருக்கியே!,, உனக்கு என்னய்யா குறை வெச்சோம்!..
பதறிக்கொண்டு ஓடினாள் - மரகதம்...
எப்படியோ மகன் நல்லபடியாக வந்து விட்டான்.. சுந்தரத்துக்கு திருப்தி..
நான் இனிமே ஒன்னுஞ் சொல்லமாட்டேன்!..
அதற்குள்ளாக -
அப்பா!.. - என்று அலறிக் கொண்டு ஓடிவந்த கார்த்தி -
தெருப் புழுதி என்றும் பாராமல் தகப்பனின் கால்களில் விழுந்தான்..
எழுந்திரு ராசா.. நீ ஒரு தப்பும் பண்ணலை.. உம்மேல எங்களுக்குக் கோவமே இல்லை!..
இல்லப்பா.. நான் தான் தப்பு பண்ணிட்டேன்...
அதற்குள்ளாக அக்கம்பக்கத்திலிருந்து குரல்கள் -
முதல்ல வீட்டுக்குள்ள அழைச்சிக்கிட்டு போய் எண்ணெய் தேச்சி குளிக்க வைங்க... அவனுக்கு பசியாத்தி விடுங்க.. அப்புறமா பேசலாம்!..
சற்றைக்கெல்லாம் குளித்து முடித்து விட்டு -
பொங்கலுக்கு எடுத்த புது வேட்டியைக் கட்டிக் கொண்டு வந்தான் - கார்த்தி..
கிழக்கு முகமாக நிற்க வைத்து சுற்றிப் போட்டாள் மரகதம்..
மாப்ளே!.. நல்லபடியா வந்திட்டீங்களா.. வயசான காலத்தில இப்படி தவிக்க வைக்கலாமா?..
வாங்க.. மாமா!.. தப்பு பண்ணிட்டேன்.. பெரிய தப்பு பண்ணிட்டேன்!.. எல்லாரும் என்னைய மன்னிக்கணும்!...
சரி.. அதெல்லாம் விடுங்க!... மெட்ராஸ்.. ல தான் களேபரமா கெடக்குன்னு சொல்றாங்களே?..
அங்க தான மாமா.. எனக்கு நல்ல புத்தி வந்தது!..
என்னது?..
நாலு நாலா போராட்டம்.. கடற்கரை மணல்..ல சோறு தண்ணி கூட இல்லை.. வயசு வித்தியாசம் இல்லாம ஆயிரக்கணக்கா கூடிக் கெடக்காங்க...
நானும் நேத்துப் போயிருந்தேன்.. நீ.. யாரு.. நான் யாரு..ன்னு பார்க்காம தோளுக்குத் தோளா கிடக்கிறாங்க..
ஒருத்தரைப் பார்த்துக் கேட்டேன்.. எந்த ஊருங்க.. எத்தனை ஏக்கரு சாகுபடி பண்றீங்க.. எத்தனை மாடு வெச்சிருக்கீங்க.. அப்படி..ன்னு!..
விவசாயம்..ன்னா என்னான்னு தெரியாதுங்க... ஆனாலும் விவசாயி.. களுக்கு அவங்களோட இருக்கிற காளைக்கு பசுவுக்கு ஏதாவது செய்யணுங்க!.. நம்ம உரிமைய எவனுக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது..ங்க.. அந்நியனோட சதிக்கு ஆளாகிடக் கூடாது..ங்க!.. நமக்கு சோறு போடற அவங்க கண்ணுல நீரு வரலாமா?... - அப்படி..ன்னாரு!..
எனக்கு நெத்திப் பொட்டுல அடிச்ச மாதிரி இருந்துச்சு.. அப்பதான் எங்க அப்பன் பாட்டன் சொன்னதெல்லாம் செஞ்சதெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது மாமா?...
என்னடா.. இது!.. வயல் தெரியாது.. வரப்பு தெரியாது.. ஏர் தெரியாது.. கலப்பை தெரியாது.. நாத்து தெரியாது.. நடவு தெரியாது!..
ஆனா.. அரிசி தெரியும்.. சோறு தெரியும்!.. அப்படிப்பட்டவங்களே காளையைக் காப்பாற்ற கழனியைக் காப்பாற்ற இப்படிப் போராட்டம் செய்றாங்க...ன்னா..
எல்லாம் இருந்தும் வயக்காட்டு வேலை கேவலம்..ன்னு போனேனே!.. மாடு கன்றை மதிக்காமல் போனேனே!.. எனக்கு மன்னிப்பே கிடையாது மாமா!..
அதான் திரும்பி வந்துட்டீங்க.. திருந்தி வந்துட்டீங்க!.. அங்க பாருங்க.. உங்க அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பத்து வயசு குறைஞ்சி போன மாதிரி இருக்கு!..
மச்சான்.. உங்களுக்கும் தான் பத்து வயசு குறைஞ்சி போன மாதிரி இருக்கு!..
மகனுடைய மனமாற்றம் மகிழ்ச்சியாக இருந்தது - சுந்தரத்திற்கு..
நான்தான் அப்பவே சொன்னனே!.. தை பொறந்தா வழி பொறக்கும்..ன்னு!..
- ஜாதகம் பலித்து விட்டதாக மரகதத்திற்கு ஏகப்பட்ட சந்தோஷம்..
மாமா!.. அப்பாகிட்ட சொல்லுங்க... இனிமே நாந்தான் வயக்காட்டு வேலைய எல்லாம் பார்ப்பேன்!..
என் சிங்கமடா.. நீ!.. இளைய தலைமுறை கலப்பைய தோள்..ல வெச்சிக்கிட்டு முன்னால நடங்க.. நாங்க உங்க பின்னாலயே வர்றோம்!..
நாளைக்கே நீலத்தநல்லூர் போய் ரெண்டு பொலி காளை வாங்கிட்டு வர்றோம்.. இனிமே ஊருக்குள்ள ஒரு ஜெர்சி மாடு இருக்கக் கூடாது...
அதுங்களை கசாப்புக் கடைக்கு அனுப்பிடறதா?..
அதுங்களை எல்லாம் கோசாலைக்கு கொடுத்துடுவோம்.. இருக்கிற வரைக்கும் இருந்துட்டுப் போகட்டும்.. கலப்பினம் எல்லாம் பண்ணாம இயற்கையா நாட்டு மாடுகளை விருத்தி செய்றோம்.. நல்ல பால் தயிர் மோர்..- அப்படின்னு ஆரம்பிக்கிறோம்... அந்நியப் பொருட்களை ஓரங்கட்டுறோம்!..
மாப்ளே!.. இதெல்லாம் நடக்கிற காரியமா!..
ஏன் மாமா.. நடக்காது?.. நடத்திக் காட்டுவோம்.. மெட்ராஸ்.. லயிருந்து இயற்கை ஆர்வம் உள்ளவங்களோட விலாசம் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்.. எல்லாரும் கூடி இந்த மண்ணைக் காப்பாத்துவோம்!..
மாப்ளே!.. நானும் உங்கள நெனைச்சு வருத்தமா.. ஏன்.. கடுங்கோவமா கூட இருந்திருக்கேன்.. இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்களே..ன்னு!.. இப்ப அந்தக் கவலை எல்லாம் போயிடுச்சி!.. இனிமே என் செல்லக்கிளி உங்க தோள்..ல தான்!..
அதெல்லாம் முடியாது.. கல்யாணிய கரை சேர்த்துட்டு தான்!..
மாப்ளே!.. கல்யாணி கவலையை விடுங்க!.. கலப்பையைக் கையில எடுங்க!.. காடு கரையைக் காப்பாத்துங்க!.. ஆறு குளத்தைக் காப்பாத்துங்க!.. ஆடு மாடு கோழியக் காப்பாத்துங்க!.
நாம அவங்களைக் காப்பாத்துனா.. அவங்களும் நம்மைக் காப்பாத்துவாங்க!..
வெற்றிக்கொடி கட்டுங்க.. அதோட, எம்..மக வெற்றிச்செல்வி கழுத்துல தாலியுங் கட்டுங்க!..
என்ன கல்யாணி!.. வர்ற மாசியில மாலையும் கழுத்துமா எங்க வீட்டுக்கு மகா லட்சுமியா நீ வந்துடணும்.. எந்..தங்கச்சி சொன்னா போதும்!.. முகூர்த்தக்கால் நட்டுடுவேன்!..
போங்க மாமா!..
மருதாணியாய்ச் சிவந்தது கல்யாணியின் முகம்!..
***
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்..(1033)
பாரம்பர்யக் காளைகளைக்
காத்திடுதற்குக் களம் புகுந்திருக்கும்
அனைவருக்கும் நன்றியும் வணக்கமும்!..
காடும் கரையுமாய்.. காளையும் கன்றுமாய்..
கழனி செழிக்க வேண்டும்.. கதிரும் தழைக்க வேண்டும்!..
வாழ்க வளம்.. வளர்க நலம்!..
***
// நெத்திப் பொட்டுல அடிச்ச மாதிரி இருந்துச்சு // இந்தப் பகிர்வு...
பதிலளிநீக்குவணக்கங்கள் ஐயா...
அன்பின் தனபாலன்...
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
காலத்துக்கேற்ற கதை. கதை மூலம் செய்தி. அருமை.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்...
நீக்குதங்களுக்கு நல்வரவு..
தங்களின் முதல் வருகை இது.. மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
அந்த நாளும் வந்திடாதோ
பதிலளிநீக்குஅன்பின் ஐயா ...
நீக்குநிச்சயம் அந்த நாளும் வந்திடும்.. எல்லாமே சுழற்சி தானே!..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
ஜல்லிக் கட்டு
பதிலளிநீக்குவென்றாக வேண்டும் ஐயா
அன்புடையீர்...
நீக்குநிச்சயம் வென்றாக வேண்டும்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
சரியான பகிர்வு ஐயா....
பதிலளிநீக்குஇந்த நாள் வரவேண்டும் என்பதுதான் ஆவா...
அது அருகில் தெரிவது சந்தோஷமே...
அன்பின் குமார் ...
நீக்குஇன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டால் -
அந்த நாளை எட்டிப் பிடித்து விடலாம்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
அருமை...
பதிலளிநீக்கு(வேறு என்ன சொல்ல வார்த்தைகளே இல்லை)....
ஒவ்வொருவருல்லும் ஒரு கார்த்தி உண்டு...மீட்டும் நாள் விரைவில் வரட்டும்...
அன்புடையீர் ...
நீக்குதங்களின் கூற்று உண்மைதான்..
ஒவ்வொருவருக்குள்ளும் கார்த்தி இருக்கின்றான்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
தாமதமான வருகைக்கு மன்னிக்க. வழக்கம் போல் நல்லதொரு கதைமூலம் செய்தியை அருமையாய்ச் சொல்லிவிட்டீர்கள். கண்டிப்பாக ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெல்வதற்கான சூழ்நிலை நிலவுகிறது. நன்றி துரை சார்!
பதிலளிநீக்குஅன்புடையீர்...
நீக்குதங்கள் வாக்கு பலிக்கட்டும்.. பிரச்னைகள் தீரட்டும்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
அருமை!! வழக்கமான தங்கள் அழகான நடையில் செய்தியை அழகாகச் சொல்லிவீட்டீகள். வெற்றியும் வந்துவிட்டதே..
பதிலளிநீக்குநேற்றே பதிவை வாசித்துக் கருத்திடமுடியாமல் போய்விட்டது. வார்த்தைகள் இல்லை விவரித்திட...ஐயா நல்ல பதிவு!!
அன்பின் துளசிதரன் ...
நீக்குதங்களை விடவும் சிறப்பாக செய்வதாக நான் எண்ணவில்லை..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
நல்லதொரு பகிர்வு.....
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட் ...
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
இந்த பயல்களுக்கு இன்னும் பத்து நாள்ல எல்லாம் மறந்துபோகுமே
பதிலளிநீக்குஅன்புடையீர் ...
நீக்குதங்களுக்கு நல்வரவு..
தங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி..
என்னதான் உற்சாகமாக இருந்தாலும்
மனதில் ஓரத்தில் இப்படியான கருத்தும் இருக்கின்றது..
உள்ளடி வேலைகள் செய்வதற்கு மாற்றார் உள்ளே நுழையக்கூடும்..
எச்சரிக்கையாக இருந்து இமயம் தொடவேண்டும்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..