திங்கள், ஜனவரி 16, 2017

கன்னித் தமிழ்க் கும்மி

அக்கா!... இப்போ நாம எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்?..

அங்கே போனதும் தெரிஞ்சிக்கலாமே!..

என்னக்கா.. நீங்க... எப்படியாவது போட்டு வாங்கிடலாம்..ன்னு பார்த்தால் முடியலையே!..

போகும் இடம்.. வெகு தூரமில்லை.. நீ வாராய்!..

ஆஹா... பாட்டு வேறயா!...



நமது அன்புக்குரிய அக்கா தமிழ்ச் செல்வியும் தங்கை தாமரைச் செல்வியும் ஸ்கூட்டியில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள்...

அவர்களைத் தொடர்ந்து நாமும் பயணிக்கின்றோம்...


இதோ... காவிரிக்கு வடகரையில் ஸ்கூட்டி திரும்புகின்றது..


அந்தச் சாலையின் இருமருங்கிலும் தழைத்து வளர்ந்திருக்கும் தென்னையின் ஊடாக இளங்காற்று சலசலத்துக் கொண்டிருக்கின்றது...


நெடுகிலும் ஆங்காங்கே தரிசு நிலங்கள் தென்பட்டாலும் 

பரவலாக பச்சைப் பசும் பட்டாடை விரித்தாற்போல அன்ன வயல்கள்...



எப்படிக்கா?.. இந்த வருஷம் காவிரியும் கைகொடுக்கலை..  மழையும் முகம் காட்டலை... இங்கே சாகுபடி செஞ்சிருக்காங்களே!..

இங்கேயிருந்து பக்கத்தில கொள்ளிடம்.. இது காவிரி படுகை.. நீர் பிடிப்பு அதிகம்.. பம்பு செட்டு..ங்க கொஞ்சம் கை கொடுக்கறது...னாலே ஓரளவுக்கு வேளாண்மை!..

அக்கா.. இந்த கிராமத்துக்குத் தான் வந்திருக்கிறமா?!..

ஆமாம்!..

என்ன பேருக்கா.. இந்த ஊருக்கு!..

வழியில நல்வரவு பலகை வெச்சிருந்தாங்களே.. கவனிக்கலையா!..

இல்ல.. அக்கா!.. நான் இந்த பச்சை எல்லாம் பார்த்துக்கிட்டே வந்தேனா!..

இந்த கிராமத்துக்கு புதூர் பூஞ்சோலை.. ந்னு பேரு!..

நல்ல பொருத்தமான பேர்!..

அதற்குள்ளாக..

வாங்க.. வாங்க!.. தமிழு.. நல்லாருக்கீங்களா... தாயி!.. எத்தனை வருஷம் ஆச்சி.. உங்களையெல்லாம் பார்த்து!..

வாம்மா.. வாம்மா!... வண்டிய.. டேய்.. முத்து.. வண்டிய வாங்கி மாமரத்து நிழல்ல.. நிறுத்து!...


வணக்கம் ..ஐயா!.. வணக்கம்..மா!.. எங்கே செண்பகம்?..

செண்பகம்... இப்போ வந்துடுவா!.. இந்தப் பொண்ணு யாரு!.. நான் உம் மக..ன்னுல நெனைச்சேன்..

வாங்க.. வாங்க.. ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள வாங்க...

ஏ.. தங்கச்சி.. இந்தா.. கூடத்தில பாயை எடுத்து விரிச்சுப் போடு..


வாய் ஓயாத வரவேற்பு.. புன்னகை விலகாத பூ முகங்கள்...

இப்படியும் உபசரிப்பு உண்டா!..
தாமரை வியப்பின் உச்சிக்கே சென்று விட்டாள்..

சித்தப்பா மகள்..  தாமரை.. வீட்டுக்காரர் அபுதாபியில இருக்கார்..

அப்படியா... நா.. இப்பத் தானே பார்க்கிறேன்... ஏ.. ராசாத்தி.. அந்த தாம்பாளத்தை இங்கிட்டு எடுத்து வா!..

அந்த வீட்டின் ஐயாவும் அவர்தம் துணைவியாரும் கைக்கு வந்த தாம்பாளத்தில் இருந்த மங்கலப் பொருட்களை தமிழுக்கும் தாமரைக்குமாக வழங்கினர்..

தாமரை... எழுந்திரும்மா!..

ஐயா!.. நீங்களும் அம்மாவும் கிழக்க பார்த்து நில்லுங்க!..

இருக்கட்டும்.. இருக்கட்டும்.. தமிழு!..

அந்த வயதான தம்பதியரின் கால்களில் விழுந்து வணங்கினர் - தமிழும் தாமரையும்!..

பதினாறும் பெத்து பெரு வாழ்வு வாழணும்!..

தாமரை மெல்ல கிசுகிசுத்தாள்..

அக்கா!.. இவங்க யாரு..ன்னு சொல்லலையே!..

இவங்க எனக்கு இன்னொரு அப்பா!..

..... ..... .....?..

எங்க அப்பாவும் ஐயாவும் ஒன்னா படிச்சவங்க!.. அப்பாவையும் ஐயாவையும் காலம் தான் பிரிச்சது... எனக்கு அப்பா ஞாபகம் வந்துட்டா.. 

இங்க ஓடியாந்துடுவா!.. தமிழு.. நான் பெறாத புள்ளை!.. அவன் படிச்சுட்டு வாத்தியார் வேலைக்குப் போயிட்டான்.. நான் இப்படியே வயக்காடு களத்து மேடு... அப்படின்னு இறங்கிட்டேன்...

தமிழு.. இந்தா ஒரு வாய் காபி குடிச்சிக்கிட்டே பேசுங்க!.. ஆமா.. அம்மாடி.. உம் பேரென்ன சொன்னீங்க...


தாமரை!..

எத்தனை புள்ளைங்க!..

இப்பதான்... கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது...

அதுக்குள்ள அவரு வெளிநாட்டுக்குப் போய்ட்டாரா?.. என்னா.. இந்த காலத்துப் புள்ளைங்க!..

ஏ.. தங்கம்... வந்ததுமே.. ஆரம்பிச்சிட்டியா?.. நீயுந்தான் பத்து வருஷம் கழிச்சு புள்ளை பெத்துக் கொடுத்தே!..


அதுக்கென்ன.. செய்றது!.. அப்பதானே படி அளந்தான் பரமசிவம்!.. நீ ஒன்னும் நெனைச்சுக்காதம்மா!.. எங்க ஊரு கன்னிப் பொங்கலுக்கு வந்துட்டே..ல்ல!.. குளுந்தாளம்மன்.. வரங்கொடுப்பா பாரு!..


அதென்னக்கா.. குளுந்தாளம்மன்!..

குளிர்ந்தாள் அம்மன்!.. ந்னு பேர்... அது அப்படி மருவி போச்சு..

தமிழு.. அந்தா வர்றா.. பாரு செம்பவம்!..

அக்கா...வ்!... எப்பக்கா வந்தீங்க!.. கோயிலுக்கு குத்து விளக்கு கொடுக்கப் போயிருந்தேன்..

வாம்மா.. செண்பகம்!.. வா.. வா!..

அக்கா.. இவங்க தான் தாமரையா!.. நல்லாருக்கீங்களா...க்கா!..

நல்லாருக்கேன்.. நீங்க எப்படியிருக்கீங்க!..

என்னது.. என்னைப்போயி.. வாங்க.. போங்க..ன்னுக் கிட்டு!..

தாமரை.. செண்பகத்தைப் பற்றி நெறைய சொல்ல வேண்டியிருக்கு!..

அக்கா... அதெல்லாம் கிடக்கட்டும்.. நீங்க கெளம்புங்க... மந்தையில பொங்க வைக்கப் போறாங்க.. ஆமா.. பசங்க எல்லாம் கூட வரலையா?..

இல்லேம்மா.. அவங்க பள்ளிக்கூடத்தில பொங்கல் கலை விழா நடத்துறாங்க.. அதனால எல்லாரும் அங்கே போய்ட்டாங்க...
அம்மா.. நீங்க வரலையா.. கோயில் மந்தைக்கு!..

இல்லேம்மா.. தமிழு.. பனி எறங்குனா உங்க ஐயாவுக்கு ஒத்துக்காது.. அதுவும் இல்லாம.. நேத்து மாட்டுப் பொங்கல்..ன்னு மந்தையில ஓடியாடுனது வேற அசதி.. நீங்க போய்ட்டு வாங்க!..

சரிங்க ஐயா!.. கோயில்ல விசேஷம் எல்லாம் முடிய எப்படியும் நேரமாயிடும்.. நாங்க அப்படியே புறப்படுறோம்..

சரிம்மா.. கவனமா.. போய்ட்டு வாங்க!..



தமிழும் தாமரையும் செண்பகமும் கோயில் மந்தைக்கு விரைந்த வேளையில் -

ஊர்ப்பொங்கல் தழைத்துப் பொங்கிக் கொண்டிருந்தது...

கோயிலுக்கு அருகில் ஆலமரத்து மேடையில் அலங்காரமாக அம்மன் உற்சவத் திருமேனி.. அருகில் பூங்கரகம்...

உறுமியும் பம்பையும் கிடுகிடுக்க.. சாம்பிராணி மணம் எங்கும் கமழ்ந்தது..

முழு மரக்கால் நெல், உரித்த தேங்காய், வெடித்த தென்னம்பாளை, பழுத்த வாழைத் தார், மல்லிகைச் சரங்கள், குத்து விளக்கு, வீச்சரிவாள், கைப் பிரம்பு - என, நடுவில் வைக்கப்பட்டன..

ஆகட்டும்.. ஆகட்டும்.. பொண்ணு புள்ளைங்க எல்லாரும் கூடி வாங்க.. யாராவது கும்மி பாடுங்க.. சேர்ந்த மாதிரி வட்டமா கூடி நில்லுங்க...

அம்மாயீ!.. நீங்க கும்மி பாடுங்களேன்!..


ஏ... பூசாரி.. முன்னையாட்டம் பாட முடியலை..ஐயா!.. நான் எடுத்துத் தாறேன்.. சோட்டுப் பொண்ணுங்க தொடுத்துப் பாடிக்கட்டும்!.

சரி..ஆகட்டும்.. மாணிக்கம்.. பம்பையில மெட்டு கட்டிக்கிடுங்களேய்!...


தன்னன்னன் நாதினம்.. தன்னன்னன் நாதினம்..
தன்னன்னன் நாதினம்.. தன்னானா..
தன்னன்னன் நாதினம்.. தன்னானா..

அக்கா.. நீங்க பாடுங்களேன்.. 

செம்பகம் நா.. ஒரு கண்ணி பாடுறேன்.. நீ மறு கண்ணியப் பாடு!..

சரிங்க.. அக்கா!..

தாமரை.. செம்பகத்தோட சேர்ந்து நீயும் வா!.. 
தலை சுத்தற மாதிரி இருந்த நகர்ந்துக்க.. சரியா!..




தன்னன்னன் நாதினம்.. தன்னன்னன் நாதினம்..
தன்னன்னன் நாதினம்.. தன்னானா..

கும்மியடி பெண்ணே கும்மியடி வளை
குலுங்கக் குலுங்கக் கும்மியடி
கொஞ்சு தமிழ்க் குணவேழ முகத்தனைக் 
கும்பிட்டுத் தொழுது கும்மியடி!..

ஊருக்கு மேற்கால ஆலமரம் அந்த
ஆல நிழலுல ஐயனாரு.. ஐயனாரு
துணை வேணுமின்னு ஐயன்பேரைச்
சொல்லிச் சொல்லிக் கும்மியடி!..

அங்கிட்டும் இங்கிட்டும் ஆரணங்கு தங்கப்
பூரணம் பொற் கலை தேவியராம்
சந்தம் சொல்லிப் பாடும் பாட்டுக்குள்ளே
வந்து மங்கலம் தந்திடக் கும்மியடி!..

நாடு செழிக்கணும் வீடு செழிக்கணும் 
ஆடுமாடு கண்ணு நின்னு செழிக்கணும்
காடு செழிக்கணும் காணி செழிக்கணும்
கூடுங் குருவியும் கூட செழிக்கணும்!..

பொண்ணும் செழிக்கணும் ஆணும் செழிக்கணும்
புள்ளகுட்டி சொந்தம் கூடி செழிக்கணும்
நல்ல மனமுள்ள நல்லவங்க நாளும்
உள்ளங் குளிர்ந்திட இல்லஞ் செழிக்கணும்..

குங்குமப் பொட்டுப் பளபளக்க நல்ல
கோமள மஞ்ச மினுமினுக்க
கொண்டையில மல்லிகப் பூமணக்க தங்கக்
கைவளை குலுங்கக் கும்மியடி!..

நெத்தியில சுட்டி நின்றாட ரெட்டை
சடையில் சண்பகப் பூ ஆட
செவ்வரிக் கண்ணுக்குள் சேலாட சின்னக்
கைவளை குலுங்கக் கும்மியடி!...

தங்கச் சிலம்புகள் தானாட இடை
தந்தனம் தந்தனம் என்றாட
தாமரைப் பூந்தனம் சேர்ந்தாட தமிழ்
கொஞ்சிடக் கொஞ்சிடக் கும்மியடி!..

அஞ்சுவிரல் செங்கை அல்லிமலர் அந்தக்
கொங்கையும் தாமரைத் தங்க மலர்
முன்கையில் முந்திடும் முத்துவளை சந்தம்
தந்திடத் தந்திடக் கும்மியடி!..

சின்ன விரல்களில் மோதிரமாம் செல்லத்
தோள்களில் மாணிக்க ஆரங் களாம் 
காதுமடல்களில் ரத்தினமாம் சந்தம்
சொல்லிடச் சொல்லிடக் கும்மியடி!..

நல்லவளை நலம் தந்தவளை குடி
கொண்டவளைத் துயர் வென்றவளை
பெண்ணவளைப் பெரும் பேறவளைத் தினம்
கண்ணி ரண்டில் வைத்துக் கும்மியடி!..

தாயவளை என்றும் தூயவளை அன்புச்
சேயவளை செல்லப் பெண்ணவளை
பூங்குவளைப் பூவின் தேங்குவளை என்று
ஆனவளைச் சொல்லிக் கும்மியடி!..

தாரை தப்படைகள் உறுமிக் கொண்டிருந்த வேளையில்
இளம் பெண் ஒருத்தியின் மீது அம்மன் இறங்கினாள்..

ஓ!.. - என்ற பரபரப்பு ஊர்மக்களிடம் தொற்றிக் கொண்டது..

சரி.. செண்பகம் நாங்கள் புறப்படுகின்றோம்.. நேரமாகி விட்டது.. பனிச்சாரல் வேறு!..

ஆமாங்..க்கா!.. இன்னுங் கொஞ்சநேரம் இருக்கலாம்.. ஆனா இருட்டிட்டதே!.. நீங்க அவ்வளவு தூரம் போகணுமே!..

செண்பகம்.. அவசியம் எங்க வீட்டுக்கு வாங்க!..

வர்றேன்.. அவசியம் வர்றேன்.. சரி வாங்க.. அம்மன் தரிசனம் செய்து விட்டு புறப்படலாம்!..

மாலை.. மரியாதை.. குங்குமம் சந்தனம்.. தூக்கு வாளி நிறைய பொங்கல்!..

மனங்கொள்ளாத மகிழ்ச்சி.. அங்கே!..

சரி.. புறப்படுகின்றோம்!..

மகராசியா போய்ட்டு வாங்க!..

சற்றைக்கெல்லாம் இளஞ்சாரலுக்குள் ஒற்றை விளக்குடன் -
தஞ்சையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது - ஸ்கூட்டி..

அக்கா!..

என்ன.. தாமரை!.. தலைய சுத்துதா?..



இல்ல...க்கா!.. பத்து வயசு குறைந்த மாதிரி ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!.. 

இருக்காதா பின்னே!...

அதெப்படி..க்கா கும்மிப் பாட்டெல்லாம் எடுத்த எடுப்பில பாடுறீங்க?..

எனக்கும் ஆச்சர்யந்தான்.. தாமரை!..

அந்த குளிர்ந்தாள் அம்மன் கொடுத்த வரமா இருக்குமோ?..

இருக்கும்.. இருக்கும்!..

அக்கா.. பேசாம.. அம்மன் அருள் வாக்கு.. அப்படின்னு.. 

இதோ.. கோடியம்மன் கோயில் வந்தாச்சு.. அடுத்தது வீடு தான்!..

தாயே.. கோடியம்மா.. எல்லாரையும் காப்பாத்துங்க அம்மா!..


வாழ்க.. நலம்.. வளர்க வளம்!.. 
* * *

12 கருத்துகள்:

  1. கும்மிப்பாட்டை பாடி ரசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் தனபாலன் ..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமை
    அருமை ஐயா
    உடன் பயணித்து ரசித்துக் கொண்டே வந்த உணர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர் ..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. சிறப்பான பகிர்வு. இப்படி ஒரு கிராமத்தில் சில நாட்கள் இருக்க மனது ஏங்குகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட் ..

      இன்னும் பழைமை மாறாத கிராமங்கள் இருக்கின்றன..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. வெகு சிறப்பான பதிவு!!!!! ஆஹா ஏதோ கிராமத்திற்குச் சென்று பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த உற்சாகம்! கனவுலகு அப்படியே காட்சிகல் விரிய....தாமதமாக வந்தாலும் பொங்கல் இன்னும் ஆறியிருக்க வில்லை சுவையாகவே இருக்கிறது!!!! கிராமத்துக்குச் சென்று அங்கு பொங்கலேனும் வைத்துக் கொண்டாட மனது ஏங்குகிறது..இன்றும் நீங்கள் சொல்லியிருப்பது போல் ஏதேனும் கிராமம் கொண்டாடுகின்றனவா? ஐயா? உங்கள் அனுபவமா ஐயா?பார்த்தால் உங்கள் அனுபவம் போலவே இருக்கிறதே... இருந்தால் தயவாய் சொல்லுங்கள் ஐயா...

    கும்மிப்பாட்டு உங்கள் வரிகளாதானே!!! அருமை அருமை! உங்கள் அனுமதியுடன் மெட்டிட எடுத்துக் கொள்ளலாமா ஐயா!!? (கீதா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களின் அழகான கருத்துரை கண்டு மகிழ்ச்சி..

      நாகரிகம் அடைந்தாலும் பழைமையை மறக்காத கிராமங்கள் இன்னும் தஞ்சை கும்பகோணம் வட்டாரங்களில் இருக்கின்றன..

      சில ஆண்டுகளுக்கு முன் நான் நேரில் கண்ட நிகழ்வுகள் தான் இவை..

      கன்னிப் பொங்கலன்று கிராம தேவதையை வரவழைக்கும் நிகழ்வுகளை சென்ற ஆண்டின் பதிவில் சொல்லியிருக்கின்றேன்..

      பதிவின் நீளம் கருதி - இது சுருக்கமே!..

      மார்கழியிலேயே கும்மிப் பாட்டு தயாராகி விட்டது..
      மனதுக்குள் அடைகாத்து வைத்திருந்தேன்..

      வேலை நேரத்தில் நள்ளிரவுப் பொழுதில் உதித்தவை இந்த வரிகள்..

      இந்தப் பாடலுக்கான கண்ணிகள் இன்னும் இருக்கின்றன..
      சற்றே குறைத்திருக்கின்றேன்..

      தாங்கள் இந்தப் பாடலை எடுத்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..