சனி, ஜனவரி 02, 2016

மார்கழித் தென்றல் - 17

குறளமுதம்

அருள்சேர்ந்த நெஞ்சினர்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.. (0243) 
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 17

திவ்ய தேசம் - திருக்கோஷ்டியூர்



எம்பெருமான் - உரக மெல்லணையான்
தாயார் - திருமாமகள் 
உற்சவர் - ஸ்ரீ சௌம்ய நாராயணன்

சயனத் திருக்கோலம்
ஸ்ரீ அஷ்டாங்க விமானம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.

திருக்கோயில் மூன்று தளங்களைக் கொண்டிருக்கின்றது..

கீழ்தளத்தில் நர்த்தன கிருஷ்ணன்..
முதல் தளத்தில் - சயனத் திருக்கோலம்..
இரண்டாவது தளத்தில் நின்ற திருக்கோலம்..
மூன்றாவது தளத்தில் வீற்றிருந்த திருக்கோலம்..


ஸ்ரீ திருமாமகள்

திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களிடம்
திருமந்த்ர உபதேசம் பெறுவதற்காக
திருக்கோஷ்டியூருக்கு பதினேழு முறை வந்தார்
உடையவராகிய ஸ்ரீ ராமானுஜர்..

பதினெட்டாவது முறை தான் 
மந்திர உபதேசம் பெற்றார்..



மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திய உடையவர்
குருவின் நிபந்தனையையும் மீறி,
திருக்கோயிலின் மீதேறி நின்று 

ஓம் நமோ நாராயணா!..
என, மக்கள் எல்லோருக்கும் உபதேசம் செய்வித்து
பேருவகை கொண்டார்..

தன்னைக் கடிந்து கொண்ட குருவிடம்,
இத்துணை பேர் வைகுந்தம் செல்லுதற்கு
நானொருவன் நரகம் புகுதலும் விருப்பமே!..
என்றுரைத்து
மனிதரில் புனிதராகப் பொலிந்தார்..
***

மங்களாசாசனம்
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்,
பேயாழ்வார், திருமழிசையாழ்வார்.
***


அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்..
***

சிவதரிசனம்
திருத்தலம் - திருஆடானை
(திருவாடானை)


இறைவன் - ஸ்ரீ ஆதிரத்னேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ சிநேகவல்லி
தீர்த்தம் - சூர்ய தீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம்

சூரியன் தனது ஒளி குன்றாமல் இருப்பதற்காக
ரத்னக்கல்லை சிவலிங்கமாக வழிபட்ட திருத்தலம்..




பின்னும் ஒருசமயம்,வருணனின் மகன் 
துர்வாச முனிவரை ஏளனம் செய்திட -
அதனால் சினங்கொண்ட முனிவர்
யானை உடலும் ஆட்டுத் தலையுமாக அலைவாய்!. 
- என, சாபங்கொடுத்து விட்டார்..

யானை உடலும் ஆட்டுத் தலையுமாக அலைந்தவன்
இத்திருத்தலத்தில் சிவ வழிபாடு செய்து
மீண்டும் தன்னுரு கிடைக்கப் பெற்றான்..

- திருப்பதிகம் -
திருஞானசம்பந்தர்
***

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிச்செய்த
திருக்கடைக்காப்பு

மங்கை கூறினன் மான் மறியுடை
அங்கை யானுறை ஆடானை
தங்கையால் தொழுதேத்த வல்லார்
மங்குநோய் பிணி மாயுமே!.. (2/112)

தேவகோட்டைக்கு அருகில் உள்ளது - திருவாடானை..
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருவாசகம்



திருஅம்மானை
திருப்பாடல் 13 - 14


கையார் வளைசிலம்பக் காதார் குழையாட
மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச்
செய்யானை வெண்ணீறு அணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை எங்குங் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானை!..

ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய்
ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந்து எய்த்தேனை
ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஓட்டுகந்து
தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய
கோனவன்போல் வந்தென்னைத் தந்தொழும்பிற் கொண்டருளும்
வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

10 கருத்துகள்:

  1. வணக்கம் ஜி மார்கழித் தென்றலின் 17 ஆம் நாள் பகிர்வு அழகிய படங்களுடன் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அழகிய படங்களுடன் சிறப்பான பகிர்வு. மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. மார்கழி தென்றல் அருமை . தினம் படிக்கவேண்டிய அருமையான தொகுப்பு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. திருக்கோஷ்டியூர் , திருவாடனை இரண்டும் அறிந்த ஸ்தலங்களே...
    கல்லூரியில் படிக்கும் போது ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலுக்கு எதிரே இருக்கும் எனது நண்பனின் வீட்டில் தங்கி கோவிலைச் சுற்றிப் பார்த்து தரிசனம் பண்ணினோம். என் நண்பனின் தந்தை ஆசிரியர் மற்றும் கோவில் குருக்கள் பரம்பரை என்பதால் எங்களால் எல்லா இடத்தையும் பார்க்க முடிந்தது. நண்பன் தற்போது திருவாடனையில் இருக்கும் ஐயப்பன் ஆலயத்தின் குருக்கள்... சிவகங்கை மாவட்டத்தில் பிரபலமான கும்பாவிஷேகக் குருக்கள்களில் அவனும் ஒருவன்... ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தைப் பார்த்ததும் நண்பனின் ஞாபகம் வந்திருச்சு ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் மேலதிக செய்திகளும் கண்டு மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு
  5. ஊரின் பெயரே எமக்கு புதியது. படித்தது தான். அழகிய புகைப்படங்களுடன், அருமையான பாடல்கள், தொகுப்பு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..