திங்கள், டிசம்பர் 07, 2015

அவன்தான் அரசன்

ஆற்றில் ஓடும் நீருக்குள் இருந்த - அந்த கட்டுமானத்தைக் காண்பதற்கே அவர்களுக்கு ஏதோ ஒரு மாதிரி இருந்தது..

ஒன்றாகக் கூடி - ஓரிடத்தில் அமர்ந்து  - தங்களுக்குள் - புஸூ.. புஸூ.. என்று பேசிக்கொண்டார்கள்..


அதன் பின் ஒருமனதாக - தம்முடன் இருந்த பொறியாளரிடம் அந்தப் பணியை ஒப்படைத்தார்கள்..

அதாவது, அவர்களுக்கு அருவெறுப்பாக இருந்த அந்த கட்டுமானத்தை - ஒருதரம் ஒப்புக்கு சோதனை செய்து விட்டு - இடித்துத் தள்ளி தரையோடு தரையாக ஆக்கி விடுமாறு ஆணையும் பிறப்பித்தார்கள்.

அப்படிப் பிறப்பிக்கப்பட்ட ஆணையைப் பெற்றுக் கொண்ட பொறியாளர் -

சர். ஆர்தர் காட்டன்.,

அவரிடம் தரைமட்டமாக ஆக்கிவிடும்படி அந்த இடமும் ஒப்படைக்கப்பட்டது..

சர். ஆர்தர் காட்டன் - ஆற்றுக்குள் இறங்கி - அதிலிருந்த கட்டுமானத்தின் அமைப்பினைப் பரிசோதித்த நேரம் - மிக மிக நல்ல நேரம்!..

அதனால் - நல்ல பல தகவல்களுடன் கரைக்கு வந்தார்..

தனது ஆய்வை அறிக்கையாகச் சமர்ப்பித்தார்..

அறிக்கையைப் பெற்றுக் கொண்ட ஆட்சியாளர்கள் - அறிக்கையை முழுதுமாகப் படித்தார்கள் - அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள்..

அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள்வதற்கு வெகுநாட்களாகின..

அப்படி என்னதான் இருந்தது - சர். ஆர்தர் காட்டன் சமர்ப்பித்த அறிக்கையில்!..

இந்த கட்டுமானத்தில் - செயற்கையான காரைகள் எதுவும் பூசப்படவில்லை..

நீரோடும் ஆற்றின் ஆழத்தில் அகலமான தளம் இயற்கையாக அமையும்படி கற்களை ஒவ்வொன்றாகப் போட்டிருக்கின்றார்கள்..

எதிர்பார்த்தபடி துல்லியமாக அடித்தளம் அமைந்து விடவே - ஒழுங்கமைக்கப்பட்ட கற்களை, மேலும் மேலும் சீரான இடைவெளியில் போட்டிருக்கின்றார்கள்..

இய்ற்கையான களிமண்ணுடன் வண்டலும் சேர்ந்து நீருக்குள் போடப்பட்ட கற்களைப் பிடித்துக் கொண்டு அற்புதமான அடித்தளத்தை அமைத்தன..

இப்படியாக -
இயற்கையாக ஓடும் நீரின் மணற்படுகையில் உறுதியான தளத்தின் மீது எழுப்பப்பட்டதே - இந்த அணை..

இதனாலேயே, இந்த வளநாட்டின் மக்கள் இதனை கல்லணை என்கின்றார்கள்..

பெருமைக்குரிய இந்த கல்லணையைக் கட்டியவன் -
சோழ சக்ரவர்த்தி கரிகாற்பெருவளத்தான் என்றறியப்படுகின்றது..

இது மாதிரியான அணை உலகில் வேறதுவும் இல்லை..
எனவே, இந்த அணையை GRAND ANAICUT என்று புகழ்ந்துரைக்கின்றேன்..

வெள்ளை பரங்கியருக்கு இருந்த தலைக்கனம் சற்றே இறங்கியது..

கல்லணையை இடிப்பதற்கு முடிவெடுத்த - தம்மைத் தாமே நொந்து கொண்டு - அந்த யோசனையை அப்போதே கைவிட்டனர்..

இப்படி -

தமிழனின் பெருமையை உலகுக்கெல்லாம் பறை சாற்றிய வண்ணம் - 
இன்றளவும் கம்பீரமாக நின்று கொண்டிருப்பது - கல்லணை!..




அந்தத் திருத்தலத்தில் நான் நின்று - காவிரியில் தவழ்ந்து வந்த குளிர் காற்றை நெஞ்சார சுவாசித்த நாள் - இந்த மாதத்தின் இரண்டாம் நாள் - புதன்கிழமை..

ஆம்!.. டிசம்பர் 2/ 2015., 

இன்றைய தமிழகத்தின் நீர்மேலாண்மையைக் கண்டு உலகெல்லாம் நகைக்கும்படி - 

வான்வழி வந்த நீர் தேங்கி நிற்பதற்கும் இடங்களின்றி
வெள்ள நீராகி வழிந்து ஓடுவதற்கும் வாய்க்கால்கள் இன்றி
குவிந்து கிடந்த குப்பை கூளங்களில் புரண்டெழுந்து
தேங்கிக் கிடந்த கழிவு நீருடன் கைகோர்த்துக் கொண்டு -
ஆர்த்தெழுந்த கோபத்துடன் - அலைகடலுடன் சங்கமமாகிய -

அதே நாள்!..

அன்றைய தினம் எடுக்கப்பட்டவற்றுள் - சில படங்கள் -  இன்றைய பதிவில்!..
மற்றவை தொடரும் பதிவுகளில்..




பார்க்கும் இடமெங்கும் பரந்த வெளியாக நீர் - காவிரி நீர்..

மேற்கிலும் வடமேற்கிலும் பெருமழை பொழியாததால் -
சிலு சிலு - என, தண்டைக் கொலுசுகள் முழங்க ஓடிக் கொண்டிருந்தாள் காவிரி..



நடந்தாய் வாழி காவேரி!.. என, வாழ்த்தினர் - அகத்தியரும் இளங்கோவடிகளும்..

அப்படியிருந்தும்,
இவளுடைய நடையைக் காத்துக் கொள்ளவும் இயலாததாகி விட்டது தமிழகம்!..


ஆனாலும்,

காவிரியையும் கல்லணையையும்
கல்லணையை அமைத்துத் தந்த மாமன்னன் கரிகாற்சோழனையும்
கண்ணறிந்த காட்சியாய்க் கண்டபோது,
நெஞ்சில் ஆனந்த அலைகள் பொங்கிப் புரண்டெழுந்து -
கண்களின் வழியே கன்னங்களில் வழிந்தன..


கரிகாற்சோழனால் அல்லவோ - 
காடு நாடாகியது!.. வனங்கள் வயல்கள் ஆகின!..

மாமன்னன் கரிகால் சோழனுக்குப் பின் வந்த மன்னவர்கள் - 
கர்வங்கொண்டு - கல்லணையைப் புறக்கணிக்கவும் இல்லை..
ஊழல் பெருச்சாளிகளாகி - புதிதாய் ஒன்றைக் கட்டவும் இல்லை..

மாறாக - கல்லணையைப் பராமரித்துப் பாதுகாத்தார்கள்..

ஆனால் - நாம்?..

அன்பின் திரு. கில்லர் ஜி அவர்கள் தமது பதிவில் குறிப்பிட்டபடி -
அணைகள் கட்டி, ஆறு குளங்களை வெட்டியவர்களை -
வெட்டிப் பயல்களாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம்..

அதனால் தானே,
சோற்றைத் தந்த - ஆற்றை குளத்தை ஏரியை அழித்து ஒழித்தோம்!..

நன்றி - Fb.,
தலைநகர் சென்னைக்கும் மக்களுக்கும் நேர்ந்த அவலங்களைக் கண்டு -
நீர் நிலைகளை ஆக்ரமிப்பவர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களும் திருந்த வேண்டும்..

இத்தனை அவலங்களுக்கும் காரணம் - அவர்களே!..

செம்பரம்பாக்கம் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்படாமல் இருந்தது என்றும்
சென்னைப் பெருநகரின் குறுக்காக ஓடும் அடையாற்றின் முகத்துவாரம் அடைபட்டுக் கிடந்தது என்றும் செய்திகள் வருகின்றன..

ஏரிக்கரையைப் பலப்படுத்தவும் ஆற்றின் அடைப்பை அகற்றவும் தெரியாத அவலம் தான் என்ன!?..

ஐப்பசி மாதம் அடைமழை என்பதை பாமரனும் அறிந்த சொல்வழக்காயிற்றே!..

நல்லவேளையாக - புயலும் சூறைக்காற்றும் மழையுடன் சேர்ந்து கொள்ளவில்லை!..

எல்லாம் ஒன்றாக வந்திருந்தால் - நினைத்துப் பாருங்கள்..
நெஞ்சம் நடுங்குகின்றது!..

தனக்கு மாறாகத் தவறு செய்தவர்களின் முகம் இயற்கைக்குத் தெரிந்ததோ.. இல்லையோ!..

இயற்கை - அனைவரையும் மிகக் கடுமையாகத் தண்டித்திருக்கின்றது..

வெட்கம் மானம் துறந்து - ஆண்கள் எதையும் செய்யக்கூடும் சாலை  ஓரத்தில்!..

ஆனால் - பெண்கள்!..
பருவத்தின் மாற்றங்களால் அல்லற்படுபவர்கள் ஆயிற்றே!..

பெண்கள் எத்தகைய சிரமத்திற்கெல்லாம் ஆட்பட்டார்கள்!?..

பச்சிளங்குழந்தைகள், சிறுவர்கள், பருவ வயதினர், கர்ப்பிணிகள், உடற்குறைபாடு உடையவர்கள், முதியவர்கள், நோயாளிகள் மேலும் உடன் வளரும் வாயில்லா பிராணிகள் - என,

எல்லோரும் அடைந்த துன்பத்திற்கும் துயரத்திற்கும் -

இயற்கையை அழித்தவர்களும் அவர்களுக்குத் துணை போனவர்களும் பதில் சொல்லியே தீர வேண்டும்..

இயற்கையின் முகத்தில் கரியைப் பூச நினைத்தோம்..
இயற்கையோ - கழிவு நீர்ச் சகதியைப் பூசி விட்டது!..

நன்றி - விகடன்
சென்னையில் துயர சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த நாட்களில் -
அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் தொலைக்காட்சிகள் -
ஆனந்தக் கோலாகல கும்மாளத்துடன் பாடல்களையும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புவதில் இருந்து தவறவில்லை..

அப்படி ஒலிபரப்பப்பட்ட ஒரு பாடலின் வரிகள் - இதோ!..

வரும் முன் காப்பவன் தான் அறிவாளி - புயல்
வரும் முன் காப்பவன் தான் அறிவாளி  அது
வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி!..

இதையும்  -
வள்ளுவப்பெருமான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சொல்லிவிட்டார்..

ஆனால் - யாரும் கேட்பதாக இல்லை!..

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக்கெடும்.. (435)
* * *

19 கருத்துகள்:

  1. உண்மைதான் ஐயா வரும்முன் காக்கத் தவறிவிட்டோம்
    ஏரி குளங்களை கான்கிரீட் காடுகளாக மாற்றியதன் விளைவை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்
    இனியோனும் மாறுவோமா?அடுத்த மழை நூறாண்டு கழித்துத்தானே வரப்போகிறது, வரட்டும் அப்பொழுது பார்த்துக் கொள்வோம் என்று இருந்து விடுவோமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மக்களும் அதிகார வர்க்கமும் திருந்தாத வரையில் பயனில்லை..
      இன்னல் தீர்வதற்கு இறைவனை பிரார்த்திப்போம்..

      நீக்கு
  2. வருமுன் காப்பவன்தான் அறிவாளி

    வந்தபின் தவிப்பவன் முழுமூடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மக்கள் திருந்தவேண்டும்.. மீண்டும் தமிழகம் செம்மையுற வேண்டும்..
      இன்னல் தீர்வதற்கு இறைவனை பிரார்த்திப்போம்..

      நீக்கு
  3. கல்லணையை நாம் இன்னும் வியந்து பார்க்கிறோம், அறிவியல், விஞ்ஞானத்தில் நாம் வெகுவாக முன்னேறிவிட்டோம் என்று பெருமைப் பட்டுக்கொள்கிறோம். ஆனால் ஏன் நம்மால் கல்லணைப்போல் வேறு ஒன்றினை உருவாக்க முடியல,,

    புதிய நீர் ஆதாரங்களை உருவாக்க முடியலையே நம்மால்,

    இருந்ததையும் மாற்றிவிட்டோம்.

    தங்கள் பகிர்வு அருமை, புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இன்றைய அறிவியலும் தொழில் நுட்பமும் சேர்ந்து முயன்றாலும் கல்லணைக்கு நிகராக ஒன்றை இனி உருவாக்க முடியாது..

      ஏனெனில் - அது தன்னலமற்ற தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டது..

      இன்னும் அப்பாவியாக வாடும் மக்களுக்காக பிரார்த்திப்போம்..

      நீக்கு
    2. எத்துனை நிதர்சனமான உண்மை,,,,
      ஆம்,
      ,,,,,,, தன்னலமற்ற தலைமையின் கீழ்,,,,,,,,,

      பிராத்திப்போம்.

      நீக்கு
    3. மக்கள் துயர் தீர்வதற்குப் பிரார்த்திப்போம்..

      நீக்கு
    4. நலமுடன் சென்று வர வாழ்த்துக்கள்.

      நீக்கு
  4. அன்பின் ஜி எனது பதிவையும் குறிப்பிட்டமைக்கு நன்றி
    அருமையான பாடல் வரிகளுடன் விளக்கவுரை நன்று
    கல்லணையின் வரலாறு தங்களால் அறிந்தேன் நன்றி
    நல்லதொரு சவுக்கடி வார்த்தைகள் இந்த அடிகள் அரசியல்வாதிகளுக்கு உரைக்காது உரைக்க வேண்டியதும் இல்லை மக்கள் அனைவரும் இனியெனும் உணர்ந்து திருந்த வேண்டும் நமது நாளைய சந்ததிகளின் வாழ்வாதாரமாவது தளைக்கட்டும் நன்றி
    கடைசி இரண்டு படங்களும் பல உண்மைகளை சொல்கின்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      சிக்கலான சூழ்நிலைகளில் - மக்களே தம்மைத் தற்காத்துக் கொள்ளவேண்டும்..

      ஆனாலும் - மக்கள் எல்லாரும் திருந்துவது குதிரைக் கொம்பு தான்..

      நீக்கு
  5. நடந்தாய் வாழி காவேரி!!! உங்கள் வார்த்தைகள் அனைத்துமே அருமை. ஆனால் நாமெல்லாம் என்ன சொல்லி என்ன பயன்? மக்கள் புரட்சி செய்ய வேண்டும்.

    இறுதியில் இருக்கும் பாடல் வரிகள் அருமை அதை ஒளி/ஒலி பரப்பியவர்களுக்கு வெட்கம் இல்லையோ...

    விகடன் படங்கள் நல்ல அடி!

    இத்தனைக்கப்புறமும் நம் தலைவர்கள் திருந்துவார்கள் என்று நினைக்கின்றீர்களா? நம்பிக்கை இல்லை...ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      நடந்த சோகத்திற்குக் காரணம் - ஆட்சியாளர்களும் ஆக்ரமிப்பாளர்களும் தான்..

      பாடல் இடம்பெற்ற திரைப்படம்-பூம்புகார்..
      பாடலை ஒலிபரப்பியவர்கள் திரைப்படத்தை வழங்கியவர்களே!..

      மக்கள் திருந்தி விடுவதாக நினைக்கின்றீர்களா!..
      தமிழகம் நலம் பெறுவதற்கு வேண்டுவோம்..

      நீக்கு
  6. உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
    சில வேண்டுதல்கள்...

    இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
    மணிதம் இன்னும் மரிக்கவில்லை
    என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
    நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
    நிறையவே நாம் ஜாக்கிரதையாக
    செயல்பட வேண்டிய தருணம் இது...

    அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
    வேண்டுதல்கள்..

    1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.

    2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..

    3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.

    4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.

    5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..

    நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.

    உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      உதவிக்குச் செல்பவர்களுக்கான குறிப்புகள் ஏற்புடையன..
      அன்புடன் வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  7. சமூக அவலங்களை தாங்கள் முன்வைத்துள்ளவிதம் பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      மக்களின் துயரங்களும் துன்பங்களும் தீர்வதற்கு வேண்டிக் கொள்வோம்..

      நீக்கு
  8. இயற்கையான நீர்ப்படுகையில் செய்ற்கை காரைப்பூச்சு எதுவுமின்றி உறுதியான அடித்தளமிட்டு அந்தக் காலத்திலேயே கட்டியிருப்பது மிகவும் வியப்புக்குரிய செய்தி. இந்த வெள்ளம் ஏற்பட்டது முழுக்க முழுக்க மனிதன் செய்த தவறுகளால் தாம்; நீர் மேலாண்மை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. தவறினால் இது போன்ற துயரங்கள் தொடர்கதையாகவே இருக்கும். இச்சமயத்துக்குத் தேவையான பதிவு. பாராட்டுக்கள் துரை சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      முன்னோர் வகுத்துத் தந்த பாதையை விட்டு விலகியதாலேயே - இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கின்றோம்..

      தங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..