செவ்வாய், ஆகஸ்ட் 25, 2015

வாரியார் ஸ்வாமிகள்

1906 ஆகஸ்ட் மாதம் இருபத்தைந்தாம் நாள்.,

காங்கேய நல்லூரில் -

மல்லைய தாசர் - கனகவல்லி அம்மையார் எனும் திவ்ய தம்பதியர்க்குத் திருக்குமரனாகத் தோன்றியவர் -

திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்..


இயற்பெயர் - கிருபானந்த வாரி - என்பதாகும்..

மூன்றாம் வயதில் எழுத்தறிவு தொடங்கியது..

தந்தையாரே குருவாக இருந்து உபதேசித்தார்..

ஐந்து வயதில் ஏடுகளை வாசிக்கத் தொடங்கிய ஸ்வாமிகள் தமது எட்டாம் வயதில் வெண்பா பாடினார்..

பன்னிரண்டு வயதிற்குள்ளாக - பன்னீராயிரம் திருப்பாடல்களை -
திருக்குறள், தேவாரம், திருவாசகம் மற்றும் நீதி நூல்களில் இருந்து மனனம் செய்திருந்தார்..

இசையுடன் உபன்யாசங்கள் செய்யத் தொடங்கியபோது ஸ்வாமிகளின் வயது - பத்தொன்பது..

நடமாடும் தமிழ்க்கடலாக விளங்கினார் ஸ்வாமிகள்..


ஆன்மீகத் தென்றலாகத் தவழ்ந்த ஸ்வாமிகளை -
குமார வயலூர் முருகன் ஆட்கொண்டு அருளினன்..

தமிழகத்தில் - பழுதுபட்டிருந்த பலநூறு திருக்கோயில்கள் - ஸ்வாமிகளால் திருப்பணி கண்டு பொலிந்தன..

ஸ்வாமிகள் தங்கள் ஊருக்கு வரமாட்டாரா?.. - என ஏங்கித் தவித்தனர் மக்கள்..

குளிர்ந்த முகத்துடன் - புன்னகை தவழ -
ஸ்வாமிகள் நிகழ்த்திய உபன்யாசங்கள் ஆயிரக்கணக்கில்!..

அவரது அருளுரை கேட்டு நல்வழியில் திரும்பியவர்கள் பல்லாயிரம் பேர்!..

பல ஊர்களிலும் தொடர்சொற்பொழிவுகள் நிகழ்த்தும் போது -

அக்கம் பக்கமுள்ள ஊர்களிலிருந்தும் மக்கள் திரண்டு வந்து -
ஸ்வாமிகள் அருளிய தேனமுதத் தமிழ் விருந்தில் மயங்கிக் கிடந்தனர்.

அன்பு கொண்ட மக்கள் - அருள்மொழி அரசு என்றும் திருமுருக வாரியார் ஸ்வாமிகள் என்றும் அழைத்து மகிழ்ந்தனர்.

தமிழகம் மட்டுமல்லாது - வடநாட்டிலுள்ள திருத்தலங்களிலும் ஸ்வாமிகள் உபன்யாசங்கள் நிகழ்த்தியுள்ளார்..

இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் பலநாடுகளிலும் பயணம் செய்து ஆன்மீகப் பயிர் வளர்த்தவர் ஸ்வாமிகள்..


இலக்கியப் பேருரைகளின் போது -
சங்க இலக்கியங்கள், திருக்குறள், இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், திருப்புகழ், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் மற்றுமுள்ள நீதி நூல்களில் இருந்தெல்லாம் மேற்கோள் காட்டி மக்களை நல்வழிப்படுத்திய பெருமை ஸ்வாமிகளுக்கு உண்டு..




ஸ்வாமிகள் வாழுங்காலத்திலேயே -

வயலூர் திருக்கோயிலின் கோபுரத்தில் - ஸ்வாமிகளின் சுதை சிற்பம் அமைக்கப்பட்டது..

பலமுறை ஸ்வாமிகளைத் தரிசித்து திருநீறு பெற்றுள்ளேன் என்பது எளியேன் பெற்ற பேறு..

* * *

ஸ்வாமிகள் அருளிய பொன்மொழிகள் பல நூறு..

அவற்றிலிருந்து - சிந்தனைக்குச் சில!..

பால் வாங்கும் போதும் துணி வாங்கும் போதும் அளந்து வாங்குவதைப் போல - யாரிடம் பழகினாலும் அளந்து பழக வேண்டும்..

தீப்பந்தத்தைத் தலைகீழாகப் பிடித்தாலும் அதன் ஜூவாலை மேல் நோக்கி விளங்குவது போல - உயர்ந்த குணத்தைக் கீழ்ப்படுத்த எவராலும் இயலாது..

தூய உணவை உண்ணும் போது தூய எண்ணங்கள் உருவாகின்றன. எனவே - சமைக்கும்போது தூய எண்ணங்களுடன் சமைக்க வேண்டும்..

பிறருடைய குற்றங்களை அலசி ஆராய்தல் கூடாது.. அதேபோல நமது குற்றத்தையும் மறைக்கக் கூடாது..


குடும்பம் பசுமையான மரத்தைப் போன்றது.. 
அதில் மனைவியே வேர்.. கணவன் அடிமரம்.. பிள்ளைகள் கிளைகள்.. 
அன்பு இலைகள்.. கருணை மலர்கள். 
அந்த மரத்தில் விளையும் பழங்கள் தான் அறச்செயல்கள்... 
 பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் ஏனைய உயிர்களுக்கும் 
மரங்கள் நிழல் தருவதைப் போல - 
குடும்பத்தால் மற்றவர்களும் பயன்பெற வேண்டும்..

ஸ்வாமிகளின் அவதார நாளாகிய இன்று -
அவரது திருவடிகளைச் சிந்திப்பதில் கொள்வதில் மனம் மகிழ்கின்றது..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
* * *  

18 கருத்துகள்:

  1. வாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து
    பலமுறை திருநீறு பெற்றுள்ளீர்கள்
    கொடுத்து வைத்தவர் ஐயா தாங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. தேவகோட்டையில் எல்லா வருடமும் சுமார் 15 வருடங்கள் இவரது சொற்பொழிவு கேட்டு இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      15 வருடங்கள்.. அருமை.. தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. சிறந்த பகிர்வு


    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. வாரியார் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை தேர்ந்தெடுக்கப்பட்ட அழகான அவருடைய பொன்மொழிகளுடன் பகிர்ந்துள்ளமைக்கு நன்றி. சுவாமிகளை நேரில் காணும் பேறு பெற்றவர்களில் நானும் ஒருவன். நல்ல நாளில் நல்ல பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. வாரியாரின் சொற்பொழிவுகளைப் பலமுறை கேட்டிருக்கிறேன் முன் வரிசையில் அமர்ந்திருக்கும் குழந்தைகளுடன் நிறையவே interact செய்வார். குழந்தைகளிடம் கேள்விகள் கேட்பார். பதில் சொல்லும் குழந்தைகளுக்கு பரிசாக சில புத்தகங்களைப் போடுவார் போடும் போது போட்டா(போட்டோ) பிடிச்சுக்கணும் என்பார். . அவரையே அரசியல் வாதிகள் ஏதோ கருத்து சொன்னார் என்பதற்காகத் தாக்கினார்கள் என்பது அவலச் செய்தியாகும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தாங்கள் கூறும் சம்பவம் நெய்வேலியில் நடந்தது..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. சிவாகாசியில் இருக்கும் போது வாரியாரின் சொற்பொழிவுகளை நிறையமுறை கேட்டு இருக்கிறேன். கேள்விகளுக்கு பதில் அளித்து பரிசாக புத்தகம் பெற்று இருக்கிறேன்.

    இரை தேடுவதுடன், இறையும் தேடு என்று கையெழுத்து போட்டு தந்து இருக்கிறார்.

    எங்கள் வீட்டுக்கு (மாமனார் வீட்டுக்கு) அடிக்கடி வருகை தந்து இருக்கிறார். அவரிடம் ஆசிகள் பெற்று இருக்கிறோம்.

    அவருடைய சிந்தனை விருந்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மேலதிக செய்திகள் கண்டு மகிழ்ச்சி..
      தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வாரியாரைப்பற்றிய செய்திகளும் அவரின் பொன்மொழிகளும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. நல்லவரைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தீர்கள், அவரின் பொன்மொழிகள் படித்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. ஆறுமுகன் அருள்பெற்ற அடியவரின் ஆசிபெற்ற
    அருளாளர் அய்யாவின் பதிவை வணங்குகிறேன்.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..