புதன், ஜூலை 15, 2015

பெருந்தலைவர்

அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது..

நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா!.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே!..


சந்தோஷமும் துக்கமும் ஏழை நெஞ்சுக்குள் அலை அலையாய் புரண்டன..

கல்யாணங்காட்சி..ன்னு ஒன்னும் இல்லாம - நாடு நாடு..ன்னு காடு மேடு எல்லாம் சுத்தித் திரிஞ்ச புள்ளை.. ஆசையா முகத்தைப் பாத்து சோறு போட்டு கொள்ளை நாளாச்சு..

என்னைய விட்டா யாரு பொறுப்பா பாத்துக்குவாங்க.. இனிமேயாவது ஒரு எடத்துல ஒக்காந்து புள்ளைய பாத்துக்கணும்.. நாமளும் காமாட்சி கூட பட்டணத்துக்கே போயிறலாம்!..

அன்னையின் மனம் ஆசைப்பட்டது. ஆனாலும் - கூடவே தயக்கம்!..

காமாட்சிக்கு இது தெரிஞ்சா - என்ன பதிலு வருதோ தெரியலையே.. நாகு!..

அன்பு மகளுடன் - தன் தயக்கத்தைப் பகிர்ந்து கொண்டது தாய் மனம்..

அண்ணாச்சி.. ஒண்ணுஞ்சொல்ல மாட்டாக!..

தாய்க்கு ஆதரவாகப் பேசியது - அந்த ஏழைக் குடும்பத்தின் இளங்கிளி..

விளைந்த வெள்ளரி வீதிக்கு வரத்தானே வேண்டும்!..

ஒருவழியாக வெளியில் வந்தது விஷயம்..

ஒம் மனசுல இப்படியும் ஆசை இருக்கா.. அதெல்லாம் சரிப்படாது..ன்னேன்.. நீ எங்கூட வருவே.. உங்கூட இன்னும் நாலுபேரு வருவாங்க!.. கூடவே ஊரு பொல்லாப்பும் சேந்து வரும்!..

இதெல்லாம் பாக்குறதுக்கா நா மந்திரியானது.. ன்னேன்?.. பட்டணம் எல்லாம் உந்தோதுக்கு ஒத்து வராது.. நீ இங்கேயே இரு.. ன்னேன்!..

நறுக்கு தெறித்தாற்போல பேச்சு..

தாயின் ஆசை அத்துடன் அடங்கிப் போனது..

சீராட்டி பாராட்டி வளர்த்த அன்பு மகனை - நாட்டுக்காக அர்ப்பணித்தார்..

நாட்டுக்காக - உழைப்பைத் தருவர்..
நாட்டு மக்களுக்காக  பொருளைத் தருவர்.. பொன்னையும் தருவர்..

ஆனால் -

தன் உயிருக்கும் உயிரான செல்வ மகனை - கொடையாகக் கொடுத்த தாய் -

சிவகாமி அம்மையார்!..

(கலங்கும் கண்களோடு தான் இந்தப் பதிவு!..)


தமிழகம் இதுவரையிலும் கண்டிராத -
இனியும் காண இயலாத - தங்கமகனின் பிறந்த நாள் இன்று!..

இலவசக் கல்வி, ஏழைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு, இலவசப் புத்தகங்கள், பிள்ளைகளுக்கு  சீருடை என்றெல்லாம் வழங்கியவர் பெருந்தலைவர்..

கல்லாய் கிடந்த மக்கள் கல்வி கற்று எழுந்திடக் கை கொடுத்தவர் - காமராஜர்.
* * *

கிட்டங்கியில கேப்பை தான் போடுறாங்க.. நல்ல அரிசி வாங்கிக் கொடு ராசா!..
தாய் ஆசையுடன் கேட்டார்..

அதற்கு நாட்டின் முதல்வராக இருந்த மகன் சொன்ன பதில் -

ஊருக்கு ஒன்னு..  உனக்கு ஒன்னா?.. இதையே நீயும் ஆக்கித் தின்னு!..

தாய், விதவை தங்கை நாகம்மாள் மற்றும் அவருடைய பிள்ளைகள் என்று எல்லாரும் இருந்த குடும்பத்துக்கு மாதந்தோறும் அனுப்பி வைத்த தொகை -  

ரூபாய் நூற்றிருபது மட்டுமே!.. 


அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள், காலக் கோளாறினால்  ஏற்பட்ட கடும் வறட்சியை - சரியாகக் கையாளத் தெரியாமல் சறுக்கி விழுந்தனர். 

பனை ஏறி விழுந்தவனைக் கிடா ஏறி மிதித்ததைப் போல - 
அப்போது மொழிப் பிரச்னையும் சேர்ந்து கொண்டது.

அடுத்து வந்த தேர்தலில் - 

எதிரணியினர் பேசியது புதியதாக புரட்சியாக இருந்தது. இனிமையாக இதமாக இருந்தது. அதனால் அன்றைய மக்கள் அவர்களின்  பின் ஓடினர்.  

மக்களோடு மக்களாக இருந்ததால் -  காமராஜருக்கு  வீர வசனம் பேசுவதற்குத் தெரியவில்லை.  

எதிர் அணியினர் விஷம் கக்கினர். அவர்கள் பேசியவற்றில் ஒரு சில!..

ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்!.. ஒரு படி நிச்சயம்!..
தட்டினால் தங்கம் வரும்!.. வெட்டினால் வெள்ளி வரும்!..

குடல் கருகுது!.. கும்பி கொதிக்குது!..
குளுகுளு கார் ஒரு கேடா!..

இந்த மாதிரி பல வசனங்களால் சொந்த மண்ணிலேயே காமராஜர் தோற்றுப் போனார். 

அண்டங்காக்கை, பனையேறி  - என்றெல்லாம்  பழிக்கப்பட்டார்.

இன்னும் ஒருபடி மேலே போய் - காமராஜர் சுவிஸ் பேங்கில் பணம் போட்டு வைத்திருக்கிறார் - என்று புழுதி வாரி வீசப்பட்டது. 

காட்சி மாறியது. அதன் பின்  நாட்டில் - நடந்தது அனைத்தும் அனைவருக்குமே தெரிந்த விஷயம்!.. 

நாவில் ஈரமின்றிப் பேசியவர்கள் எல்லாம் - 
லஞ்ச லாவண்யங்களில் மூழ்கித் திளைத்தனர்..
தாமும் தம் மக்களும் என - தின்று கொழுத்தனர்.



பொதுக்கூட்டங்களில் - தன்னைப் பாராட்டி யாராவது பேசினால், கொஞ்சம் நிறுத்து.. ன்னேன்!.. - என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். 

வேறு எவரையும் தாக்கிப் பேசினால், 

அதுக்கா இந்தக் கூட்டம்..ன்னேன்!.. - என்று தடுத்துரைப்பார்..


தனக்கு ஆங்காங்கே தரப்பட்ட சில்லறைகளை கூட தன்னுடன் வைத்துக் கொள்ளாமல் கட்சிக்குத் தாரை வார்த்தவர்.

யாரும் அன்பளிப்புகளைக் கொடுக்க முனைந்தால் - 
இதெல்லாம் கஷ்டப்படுற தியாகிகளுக்குக் கொடுங்க..ன்னேன்!.. -  என்பார்

இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்தவர்..

மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என வரையறுத்து - அதன்படி முதல் ஆளாகப் பதவி விலகியவர். 


சட்டசபைத் தேர்தலில் விருதுநகர் மக்கள் அவரைத் தோற்கடித்தனர். 

உடனிருந்த கட்சிக்காரர்கள் அழுதார்கள். 
பொதுவான நல்ல மனிதர்களும் அதிர்ந்தார்கள்..

இதான் ஜனநாயகம்..ன்னேன்.. ஜெயிச்சவனைக் குறை சொல்லாம தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டா மறுபடி ஜெயிக்க முடியும்..ன்னேன்!.. 

- என்று சற்றும் தளர்ச்சியில்லாமல் சொன்னவர் பெருந்தலைவர்.



கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷம் அது ஒன்றுதான்!..

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர். 


பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர்..

அவருடைய அதிகபட்ச ஆடம்பர உணவு - சோற்றுடன் முட்டை.

இறந்தபோது அவருடைய கையிருப்பு என மிச்சம் இருந்தவை -  

ஒரு சில வேஷ்டி சட்டைகள்..
ஓய்வு நேரத்தில் படித்த புத்தகங்கள்..
எளிய சமையலுக்கான பண்ட பாத்திரங்கள்..
நூறு ரூபாயும் கொஞ்சம் சில்லறையும்!.. 

சிவகாமி அம்மையாரின் மரணத்தின் போது
பள்ளியில் பயிலாதவர் தான் பெருந்தலைவர்.. ஆனாலும் படிக்காத மேதை!..

அவர் படித்த நூல்களை அவரது நினைவாலயத்தில் காணலாம்..

அரசாங்க பணத்தை அரசின் சாதனைகள் பற்றிய விளம்பரங்களுக்கு செலவு செய்ய மாட்டேன் என்று மறுத்த அதிசய மனிதர்..

அறம் சார்ந்த ஆட்சியை அரசியலை நடத்திய மாமனிதர் - பெருந்தலைவர்.. 

அனைவரையும் படிக்க வைத்தார்..
படித்தவர்களுக்கு வாழ்வு கொடுத்தார்..

அவரால் முன்னுக்கு வந்த லட்சோபலட்சம் பேர்களுள் எளியேனும் ஒருவன்..

எங்கள் ஐயாவின் பிறந்த நாளாகிய இன்று
அவருடைய திருவடிகளை நினைத்து
வணங்கி எழுகின்றேன்..

இது கூட எங்கள் ஐயாவுக்குப் பிடிக்காது தான்!..
ஆனாலும், என் பிறவி கடைத்தேற வேண்டுமே!..

பெருந்தலைவரின் புகழ் 
என்றென்றும் வாழ்க!.. 
* * *

22 கருத்துகள்:

  1. வணக்கம்
    அவரால் முன்னுக்கு வந்தவர்கள் இன்று உள்ள எல்லோரும் என்றாள் மிகை யல்லவே,
    இப்படி ஒரு மாமனிதனை இச் சமூகம் இனி காணுமா????,
    தங்கள் பதிவு எம் மனதைக் கலங்க வைக்கிறது,
    பார்த்ததில்லை அவரை அவரால் இன்று நலமுடன் இருக்கும் எம்மைப் போன்றோர்,,,,,,,,,
    படிப்பு என்பது அவரால் தான்,,,,,,,,,,,,
    தங்கள் பதிவு அருமை,
    வாழ்த்துக்கள், அவரின் நினைவினைப் போற்றுவோம்,,,,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் இனிய வருகைக்கு மகிழ்ச்சி..

      நிச்சயம் அவரைப் போல் இன்னொருவர் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவது அரிது..

      ஐயா அவர்களை மூன்று முறை தரிசனம் செய்திருக்கின்றேன்.. ஒருமுறை அருகில் சென்று தொட்டுப் பார்த்திருக்கின்றேன்..

      விருதுநகரில் அவர் பிறந்த வீட்டையும், சென்னையில் அவர் வாழ்ந்த வீட்டையும், தகனம் செய்யப்பட்ட மண்டபத்தையும் சென்று பார்த்திருக்கின்றேன்..

      தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. தாங்கள் கலங்குவதை ஒவ்வொரு வரியும் சொல்கிறது ஐயா...

    மாமனிதர்... படிக்காத மேதையின் சிறப்புகளுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  3. மாமனிதர்.... அவரைப் போன்ற அரசியல்வாதிகளை இனிமேல் காண்பது அரிது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தாங்கள் சொல்வது உண்மையே..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. தமிழ்நாட்டிலகல்வி வளர்ந்ததற்கு முதற் காரணம் கர்ம வீரர்தான் அதில் எள்ளளவு ஐயமும் இல்லை. மூத்தவர்கள் அரசாங்கப் பணிகளில் இருந்து விலை கட்சிப் பணியாற்ற வேண்டும் என்று சொல்லி முதலி விலகியவர் !! ஆஹா இப்போதைய அரசியல்வாதிகளை நினைத்தால் ஹும் நாம் எப்பேர்ப்பட்ட தலைவரை இழந்திருக்கின்றோம் என்ற ஆதங்கம் எட்டிப் பார்க்கின்றது. கண்ணில் நீர் வருகின்றது. மாமனிதர்! அவரைப் போன்ற ஒருவரை இனி காணல் அரிது !! மிக்க மிக்க நன்றி ஐயா! பகிர்வுக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அவரைப் போல் ஒருவரை இனி காண்பது அரிது!..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான தலைவர்.....
    வாழ்ந்து காட்டியவர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அவர் வாழ்ந்து காட்டினார்..
      ஆனால் அரசியல்வாதிகள் பின்பற்றவில்லை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. முன்னுதாரணத் தலைவர் வாழ்க்கையின் வலியை உணர்ந்த அவர் பிறருக்கு அவ்வலி ஏற்படா வண்ணம் பார்த்துக்கொண்டவர். இப்பொழுது இருக்கும் அரசியலையும் தலைவர்களையும் இவரோடு ஒப்புநோக்கக் கூட எவருக்கும் எண்ணம் வராது. அந்த அளவிற்கு அதிக உயரத்தில் இருப்பவர். நல்ல பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பெருந்தலைவருடன் -
      இன்றைக்கு உள்ள எவரையும் ஒப்பிட்டால் - அது மகா பாவம்!..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அன்புக்குரிய தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் - இந்தப் பதிவுக்கு அழகாகக் கருத்துரை வழங்கியிருந்தார்..

    பதிலளிக்கும் போது கணிணியில் நிகழ்ந்த தடுமாற்றத்தால் அழிந்து போயிற்று..

    ஐயா அவர்கள் மீள்பார்வையாக பதிவுக்கு வருகை தந்தால் -
    ஏதும் பிழையாகக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன்..

    ஐயா அவர்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சியும் நன்றியும் என்றும் உரியன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருந்தற்க! இந்த தொழில் நுட்பக் கோளாறு வலைப்பதிவில் எல்லோருக்கும் அடிக்கடி ஏற்படுவதுதான்.

      நீக்கு
  8. இது வெறும் பதிவன்று. ஆவணப் படம்

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நல்வரவு..
      தங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  9. தலைவர் காமராஜர் பிறந்தநாளில் மறக்காமல் அவரைப் பற்றிய ஒரு பதிவு. ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட பெருந்தலைவர் அவர். மதிய உணவுத் திட்டம் என்ற ஒரு அற்புதமான திட்டத்தினைக் கொண்டு வந்து தமிழகத்தில் ஏழை எளியவர்களில் பிள்ளைகள் பலரின் வாழ்வில் கல்வி எனும் ஒளியைத் தந்தவர்.

    பதிலளிநீக்கு
  10. தலைவர் காமராஜர் பற்றி மனம் நெகிழும் பதிவு! தாம் படிக்கவில்லையாயினும் பலரின் கல்விக்கண்ணைத் திறந்துவிட்டவர். லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் இவர் பெயரைச் சொல்லக் கூட அருகதையற்றவர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      உண்மைதான்.. இன்றைய அரசியல்வாதிகள் - மனசாட்சியின்றி எப்படி அவர் பெயரை உச்சரிக்கின்றனர்?...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  11. ஒவ்வொரு வரிகளும் மனதை நெகிழவைத்தது. தங்களும் அதில் ஒருவர். என்றதும் கண்கள் கலங்கின. அவரது சிறந்த குணங்களை கேட்டு பூரித்தேன்.பதிவுக்கு மிக்க நன்றி ! அவர் புகழ் ஓங்கட்டும் நன்றி வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பெருந்தலைவரின் புகழ் என்றூம் நிலைத்து வாழும்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..