செவ்வாய், ஜூலை 14, 2015

பிரியாவிடை

விடியற்காலை.. நேரம் - 4.15..

கண்களில் மீண்டும் தூக்கம் படரும் நேரம்.

அந்த வேளை தவிர்த்த மற்ற நேரத்தில் தான் எண்ணி வந்த காரியம் ஈடேறாது என்பதைத் தெரிந்து வைத்திருந்த காலன் -

தன் வேலையை சுலபமாக முடித்துக் கொண்டான்...


மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் (87) அவர்கள் - கடந்த ஜூன்/24 அன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பிறந்த நாளைக் கொண்டாடினார்..

அனைவரின் அன்பும் வாழ்த்துரைகளாக மலர்ந்து கொண்டிருந்த வேளையில் - சற்றே உடல் நலம் பாதிக்கப்பட்டது..

மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அறிந்து - உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சையின் பலனாக - கொஞ்சம் நலமடைந்த நிலை.

அடுத்த சில தினங்களில் மீண்டும் உடல் நலக்குறைவு..

மீண்டும் மருத்துவமனை..

சிகிச்சையின் போது உணவை மறுத்திருக்கின்றார் - மெல்லிசை மன்னர்..

அவரது உடல் நலம் விசாரிக்கச் சென்றிருந்த இளையராஜா அவர்கள் - செய்தியறிந்து, தன் கையாலேயே உணவை ஊட்டியிருக்கின்றார்..

மெல்லிசை மன்னரும் பிடிவாதம் பிடிக்காமல் - இளையராஜாவின் கையால் உணவு உண்டிருக்கின்றார்..

இசைக்கு இசை இசைந்தது.. இருவரும் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தனர்.

நாளிதழ்களின் மூலமாக - இந்தச் செய்தியை அறிந்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது..

மெல்லிசை மன்னர் வீடு திரும்பும் நாளை எதிர்நோக்கியிருந்தனர்..

ஆனால் -

இந்த முறை காலன் வென்று விட்டான்..

தன்னுடன் அழைத்துச் சென்று விட்டான்..



தளராத முயற்சியினால் - சிகரம் தொட்டவர்..

மனித உணர்வுகள் அனைத்தையும் - இசை வடிவாகக் கொடுத்தவர்.

1928 ஜூன் 24ல் பிறந்தவர்..

எளிய குடும்பம்.. சிறிய வயதிலேயே தந்தையை இழந்தார்.

அத்துடன் பள்ளிக் கல்வியும் போனது.. ஆனால் - 

இவர் இசையமைத்துக் கொடுத்த -

நீராரும் கடலுடுத்த - எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பள்ளிகள் தோறும் பிள்ளைகள் பாடிக் கொண்டிருக்கின்றனர்..

முன் தோன்றிய மூத்த மொழி தமிழ்.. தமிழுடன் பிறந்த ராகம் - மோகனம்..
தமிழுக்கான வாழ்த்துப் பாடல் மோகன ராகத்திலேயே அமைந்தது..

சீர்காழியார் - MSV - TM.சௌந்தரராஜன்


நாளிதழ்கள் எல்லாம் - அவரைப் பற்றி சிறப்புச் செய்திகளை வெளியிடுகின்றன..

தன் இசையால் - தமிழ் கூறும் நல்லுலகைக் கட்டிப் போட்டவர்.

S.M. சுப்பையா நாயுடு தான் இவரது குரு. அவருக்குப் பிள்ளைகள் இல்லை..

அவரை கடைசி வரைக்கும் காப்பாற்றி - மகனாக நின்று எல்லாக் காரியங்களையும் நிறைவேற்றியிருக்கின்றார் - மெல்லிசை மன்னர்.

நடிக்க வேண்டும் என்ற ஆவல்.. ஆனால் - 

இறைவன் கொடுத்ததோ - இசை எனும் அமுதத்தை..

திரைத் துறைக்குள் நுழைந்தவர் C.R. சுப்புராமனின் இசைக்குழுவில் இணைந்தார். 

இசையில் இவரது வழித்துணை - T.K. ராமமூர்த்தி அவர்கள்..

இவர்களுடன் கவியரசர் கண்ணதாசனைச் சேர்த்து வைத்து மகிழ்ந்தான் - இறைவன்..

அந்த காலக்கட்டம் தான் -
தமிழ்த் திரையுலகத்தின் பொற்காலம் என்கின்றார்கள்..

ஆனாலும் அவரது திறமையை அங்கீகரித்து - எந்தவித சிறப்பையும் செய்து அவரைக் கௌரவிக்கவில்லை.

இப்போது வரையிலும் ஒரு பத்ம விருது கூட வழங்கப்படவில்லை..

ஆனால் அதையெல்லாம் கடந்தவராக - மக்கள் மனம் எனும் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்..

பலரின் முன்னேற்றத்துக்கு ஏணியாகத் திகழ்ந்திருக்கின்றார்.

இதுவரை 1200 படங்களுக்கு மேல் இசையமைத்திருப்பதாக அறியமுடிகின்றது.

கவியரசரும் மெல்லிசை மன்னரும் ஒரே தேதியில் பிறந்தவர்கள்..

1965ல் இந்திய - பாகிஸ்தான் போர் நடந்த சமயம் - தமிழகத்திலிருந்து
சிவாஜி கணேசன், சாவித்ரி, சந்திரபாபு எனப் பலருடன் மெல்லிசை மன்னரும் சேர்ந்து நாட்டின் எல்லைக்கே சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி வீரர்களை மகிழ்வித்திருக்கின்றனர்..

சந்திரபாபுவின் கடைசி காலத்திலும் - மெல்லிசை மன்னர் காப்பாற்றியதாக ஊடகங்கள் கூறுகின்றன..




எல்லாரையும் மரியாதையுடன் நடத்தும் பண்பாளர்..

மனித நேயம் கொண்ட மகத்தான மனிதர் - என புகழாரம் சூட்டுகின்றனர்..

அவரது சாதனைகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்கின்றார்கள்..


பாகப்பிரிவினை - படத்தில் தாழையாம் பூமுடித்து எனும் பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக் கொண்டு இசையமைத்தவர்,

புதிய பறவை - படத்தில் எங்கே நிம்மதி எனும் பாடலுக்கு முன்னூறு இசைக் கருவிகளைக் கொண்டு இசையமைத்திருக்கின்றார்..

கர்ணன் படத்திற்காக - கவியரசர் கீதோபதேசத்தை பாடலாக வடித்துக் கொடுத்தார்.

அந்தப் பாடலில் - ஆதார சுருதியுடன் கோயில் மணியின் நாதம் மட்டுமே ஒலிக்கும்.

அந்தப் பாடலைக் கீழே உள்ள இணைப்பில் கேளுங்கள்..


மாலைப் பொழுதின் மயக்கத்திலே (பாக்கியலக்ஷ்மி)
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் (அன்பே வா)
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை (சிவந்த மண்)

பன்ஸாயி பாடும் பறவைகள் (உலகம் சுற்றும் வாலிபன்)
மலர்ந்தும் மலராத (பாசமலர்)
யார் அந்த நிலவு (சாந்தி)

இயற்கை எனும் இளைய கன்னி (சாந்தி நிலையம்)
கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே (கர்ணன்)
உன்னை ஒன்று கேட்பேன் (புதிய பறவை)
சிப்பி இருக்குது முத்துமிருக்குது (வறுமையின் நிறம் சிவப்பு)

- பிறரால் தொட முடியாதபடிக்கு - இன்னும் எத்தனை எத்தனையோ பாடல்கள்..

பட்டியலிட முடியாதபடிக்கு மனம் தடுமாறுகின்றது..

விடியற்காலையில் -
மெல்லிசை மன்னரின் மறைவு அறிந்ததிலிருந்து - என் மனம் ஒரு நிலையில் இல்லை..


நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை!..

- என்றார் கவியரசர்..

அந்த நிலை மெல்லிசை மன்னர் அவர்களுக்கும் பொருந்தும்..

இளையராஜாவுடன் மெல்லிசை மன்னர்கள்
திரைப்பாடல்கள் மட்டுமின்றி தனிப்பட்ட பக்திப் பாடல்கள் பலவும் அவரால் மெருகேற்றப்பட்டிருக்கின்றன..

அந்த வகையில் மிகவும் சிறப்பானது கவியரசரின் கிருஷ்ண கானம்..

அதிலிருந்து - ஒருபாடலை ஒலிப்பேழையாக உருவாக்கினேன்..
அதை மெல்லிசை மன்னருக்கு சமர்ப்பித்து புகழஞ்சலி செலுத்துகின்றேன்.


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்கள்
புருஷோத்தமனின் புகழைப் பாடிக் கொண்டிருக்கின்றன..

கார் உள்ள அளவும் கடல் நீர் உள்ள அளவும்
கன்னித் தமிழ் உள்ள அளவும் கருநீல கண்ணன் உள்ள அளவும்
மெல்லிசை மன்னரின் புகழும் பாடப்படும்.

கண்ணனின் திருவடிகளில்
அவரது ஆன்மா சாந்தியடைவதாக!..

ஓம் ஹரி ஓம்..
* * *

17 கருத்துகள்:

  1. எனக்கொரு காதலி இருகின்றாள் எனும் எம்.எஸ்.வி யின் குரல் காதுக்குள் ஒலித்துகொண்டே இருக்கிறது அய்யா:(((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இதற்கு மேலும் தொகுப்பதற்கு மனம் தாளவில்லை..
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  2. மெல்லிசை மன்னருக்கு
    தங்களது கண்ணீர் அஞ்சலியில்
    குழலின்னிசையும் தன்னை இணைத்துக் கொள்கிறது.
    மனதை நெருடிய பதிவு!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  3. மறக்கவே முடியாத பாடல்கள் அவையெல்லாம். அவரை எண்ணி அனைத்தையும் தொகுத்து தந்து மறைந்த மெல்லிசை மன்னரை சிறப்பித் துள்ளீர்கள் நன்றி ! நிச்சயம் அவர் ஆன்மா சந்தியடையும். வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்,
    இசையின் மிகப்பெரிய ஆளுமை,
    இன்று தன் இயக்கம் நிறுத்திக்கொண்டது,
    ஆழ்ந்த இரங்கல்கள்,
    பதிவு நல்லா இருக்கு அவரின் புகைப்படத்துடன் கூடிய பல தகவல்கள் அருமை,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. மெல்லிசை மன்னரின் மறைவிற்கு
    ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன் ஐயா

    பதிலளிநீக்கு
  6. மெல்லிசை மன்னருக்கு தாங்கள் செலுத்தும் அஞ்சலியில் நாங்களும் கலந்துகொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் தனபாலன்..
    தங்கள் வருகைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  8. நம் நெஞ்சில் நிறைந்த பாடல்கள் பலவற்றிற்கு இசையமைத்த மேதையின் மறைவு க்கு ஆழ்ந்த இரங்கல்கள்! அவர் இறந்தாலும் அவர் இசையமைத்த பல்லாயிரம் பாடல்கள் மூலம் என்றும் அவர் வாழ்வார்!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..