செவ்வாய், ஏப்ரல் 07, 2015

குன்றத்திலே குமரனுக்கு..

திருப்பரங்குன்றம்.


அறுபடை வீடுகளுள் முதலாவதான திருத்தலம்..

வட திசை நோக்கித் திகழும் திருத்தலம்.

திருக்குமரன் குகைக் கோயிலினுள் - தைலக் காப்பில் திகழ -
நாளும் நாளும் - வேலாயுதம் திருமுழுக்கு காணும் திருத்தலம்..

படைவீடுகள் ஆறனுள் - முருகப்பெருமான் அமர்ந்திருக்கும் திருத்தலம்.


திருச்செந்தூரில் போர் முடித்ததும் - திருமுருகன் திருமணக்கோலங்கொண்டு தெய்வானையின் திருக்கரம் பற்றிய திருத்தலம்..



ஹரிபரந்தாமனாகிய ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருவிழிகளில் இருந்து திருஅவதாரம் செய்தவர்கள் அமிர்தவல்லியும் சுந்தரவல்லியும்!..

அமிர்தவல்லியும் சுந்தரவல்லியும் - சிவகுமரனைத் தம் மனதில் மணாளன் எனக் கொண்டு - சரவணப் பொய்கையின் திருக்கரையில் தவம் இருந்தனர்.

அவர்களின் தவத்திற்கு இரங்கிய பெருமான் - திருக்காட்சி தந்தருளினான்.

தனது அவதார நோக்கம் - சூரபத்மனை வதம் செய்வது.. எனவே சூரசங்காரம் முடிந்ததும் மணம் கொள்வதாக - அருளினான்.

அமிர்த வல்லியின் விரதம் தேவ விரதமாக இருந்தபடியால் கமல மலரில் மகவாகத் தோன்றினாள்.

தேவேந்திரனின் முன் சென்று -

திருமாலின் திருமகளான என்னை - உன் மகளாக ஏற்று வளர்ப்பாயாக!. - என்றாள்.

அச்சமயத்தில் சூரபத்மனின் கொடுமைகளுக்கு ஆட்பட்டிருந்த தேவேந்திரன் - தனது பட்டத்து யானையாகிய ஐராவதத்தை அழைத்து - அந்தக் குழந்தையை வளர்க்கும்படி கேட்டுக் கொண்டான்.

தேவ யானையாகிய ஐராவதம் வளர்த்ததாலேயே அமிர்தவல்லி -
தெய்வானை என்றும் தெய்வயானை என்றும் வழங்கப்பட்டாள்..

தேவானை எனவும் தேவசேனா எனவும் ஆன்றோர் குறிப்பர்.

மானுட விரதமாக நோற்றபடியால் சுந்தரவல்லி -
மானின் வயிற்றில் கருவடைந்தாள்.

வள்ளிக் கிழங்கினைக் கிள்ளி எடுத்திட்ட பள்ளத்தில் -
இலை தழைகளுக்கு இடையே - பிரசவித்தது மான்..

வனவேடனாகிய நம்பிராஜன் - அந்த மகவைக் கண்டெடுத்து வள்ளி எனப் பெயரிட்டு சீராட்டி பாராட்டி வளர்த்தான்.

காலம் கனிந்தது.


கடும்பகையை வெல்லுதற்கு - கந்தன் வேலெடுத்து நின்றான்.

வேலவனின் வீரத்தால் - அசுரப்படை அழிந்தது.

மாயையின் மகனான சூரன் - ஆணவத்துடன் - மா மரமாகி நடுக்கடலுள் நின்றான்.

அறுமுகனின் திருக்கை வேல் - மாமரத்தை இருகூறாகப் பிளந்தது.

சேவலாய் மயிலாய் மீண்டும் எழுந்து வந்தான் - சூரபத்மன்.

கொடூரமாகக் கூவிய சேவலைக் கொடியில் கொண்ட திருக்குமரன் -

ஆர்ப்பரித்து வந்த மயிலைத் திருவடியால் தீண்டியருளினான்..

தீட்சை பெற்ற மயிலானது - திருமுருகனின் திருமுகம் நோக்கிவாறு நின்றது.

திருந்தி நின்ற அசுரனைத் தன் வாகனமாகக் கொண்டான் - கோலக்குமரன்!..

கொடியவன் அடியவன் ஆனான்!.. - என்றுரைப்பார் - வாரியார் ஸ்வாமிகள்.

வன்கணாளன் - வண்ண மயிலாகி - அடியவர் தம் வணக்கத்திற்கு உரியவன் ஆனான்.

வெற்றி மாலை கொண்ட வேலனுக்கு மணமாலை நிச்சயிக்கப்பட்டது.

தேவேந்திரன் - தனது வளர்ப்பு மகளான தேவயானை அம்மையை -
திருக்குமரனின் திருக்கரத்தில் ஒப்புவித்து - திருவடி பணிந்து நின்றான்.


அம்மி மிதித்து அருந்ததி பார்த்து - ஐயன் முருகப் பெருமான் -
அழகு தெய்வானையின் திருக்கரம் பற்றியருளினான்.

அந்தக் கோலாகலம் நிகழ்ந்தது - திருப்பரங்குன்றத்தில்!..

வருடந்தோறும் திருப்பரங்குன்றத்தில் நிகழும் பங்குனிப் பெருவிழாவில் தெய்வானை திருமணம் சிறப்புடையது.

மார்ச்/24 அன்று பங்குனிப் பெருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ந்தது.


அதன் பின் - தினமும் - தங்கச் சப்பரம், தங்கக் குதிரை, தங்க மயில், அன்ன வாகனங்களில் ஆரோகணித்து அழகன் முருகன் திருவீதி எழுந்தருளினன்.

ஐந்தாம் திருநாளில் - அறுமுகன் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருள - கைபாரமாக கைகளில் சுமந்து அடியவர்கள் ஆனந்தித்தனர்.

தொடர்ந்து - பங்குனி உத்திரம். அடுத்து சூரசம்ஹாரம்.

ஞாயிறன்று - காலையில் குமரன் தங்கப் பல்லக்கில் எழுந்தருளினான்.

மாலையில் - பதினாறு வகையான அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடந்த பின் - பச்சைக் குதிரை வாகனம்.

பச்சை மயில் வாகனனை - பச்சைக் குதிரையில் கண்டு மகிழ்ந்தனர் - மக்கள்.

தொடர்ந்து - பதினாறு கால் மண்டபத்தில் பரமனின் மகனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

திங்களன்று - கண் பெற்ற பயனாக -

திருக்குமரனுக்கும் தெய்வானை அம்மைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ந்தது.

திருக்குமரனின் திருக்கல்யாணத்தை முன்னிட்டு - மதுரையம்பதியில் இருந்து  அங்கயற்கண்ணி அம்மையுடன் சொக்கநாதப் பெருமான் திருப்பரங்குன்றிற்கு எழுந்தருளினார்.




அம்மையப்பனை வணங்கி வரவேற்ற - திருக்குமரன் மதியம் 12.30 மணியளவில் திருமணக்கோலங்கொண்டான்.

திருக்குமரனுக்கும் - தெய்வயானை அம்மைக்கும் திருக்கல்யாண வைபவம்
கோலாகலமாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் - மணமக்களை வணங்கி நல்லருள் பெற்றனர்.

திருக்கல்யாண வைபவத்தைத் தொடர்ந்து -

இன்று (ஏப்ரல்/7) காலை ஆறு மணியளவில் திருத்தேரோட்டம் நிகழ்ந்தது..

திருமுருகனுக்காகக் காத்திருக்கும் தேர்







வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! எனும் பெருமுழக்கத்துடன் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

வழக்கம் போல - நண்பர் குணாஅமுதன் அவர்களின் அழகிய படங்கள் பதிவினை அலங்கரிக்கின்றன.

அவர் தமக்கு மனமார்ந்த நன்றி என்றும் உரியது.

திருஅண்ணாமலையில் - தடுத்தாட்கொள்ளப்பட்டதும், அருணகிரிநாதர் - தாம் பாடிய முதல் திருப்பாடலின் முதல் வரியில் குறிக்கும் திருத்தலம் -

திருப்பரங்குன்றம்!..

முத்தைத் தருபத்தித் திருநகை அத்திக்கிறை 
சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர...

- எனும் தொடரில்,

அத்தி எனும் தெய்வானையின் மணாளனாகிய திருமுருகன்!.. - என உருகுகின்றார்.


திருமுருக வழிபாட்டில் -
கிரியா சக்தி - தெய்வானை நாச்சியார்.
இச்சா சக்தி  - வள்ளி நாச்சியார்.
ஞான சக்தி - வெற்றிவேல்.

முருகப்பெருமானின் திருக்கோலத்தைக் குறிக்கும் திருப்பாடல் இது!..

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் 
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியார் எல்லாம்..

வருவான் வடிவேலன் - வரம்
தருவான் தமிழ்வேலன்!..

முருகன் திருவருள் முன்னின்று காக்க!..
* * *  

17 கருத்துகள்:

  1. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
    குவைத் கடலோரம் எதிரொலிக்கும்
    புகைப்படங்கள் அழகு
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      முருகனின் சிரிப்பு - அபுதாபியிலும் எதிரொலித்து இருக்கின்றது..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா

    வரலாற்று தகவலுடன் அழகிய புகைப்படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்--

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருமையான தகவல்கள்! பங்களூர் ரமணி அம்மாள் அவர்களின் குரலில் குன்றத்திலே முருகனுக்குக் கொண்டாட்டம் எனும் பாடல் உண்டே அது நினைவுக்கு வந்தது. படங்களும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இனியதொரு பாடலை நினைவு கூர்ந்து கருத்துரை வழங்கியதற்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  4. திருப்பரங்குன்றம்
    அறியாத பல செய்திகளை அறிந்து கொண்டேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான தகவல்களுடன் அருமையான பகிர்வு ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. திருப்பரங்குன்றத்திற்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி. தேர் அழகு தனியழகுதான். நேரில் பல முறை கும்பகோணத்தில் பார்த்து அனுபவித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      ஊர் கூடித் தேர் இழுத்தல் என்பது சமுதாய ஒற்றுமை என்பர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. எங்கேயோ இருந்தாலும் இங்கு நடைபெறும் நீங்கள் விரும்பும் நிகழ்வுகளுக்குப் புகைப் படமனுப்பிக் கொடுக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. திருப்பரங்குன்றம் திருவிழாக் காட்சிகளும் தகவல்களும் தில்லியில் இருந்தபடியே ரசிக்கத் தந்த உங்களுக்கு நன்றி நண்பரே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. திருப்பரங்குன்றம் சென்றதில்லை, தங்கள் பதிவின் வழி சென்று வந்தேன் பதிவினூடாக, அருமை, வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் திருப்பரங்குன்றம் சென்று வந்தது குறித்து மகிழ்ச்சி..
      வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..