ஞாயிறு, ஏப்ரல் 05, 2015

சமயபுரத்தாள்

பூவாடைக்காரி!.. 

பொன்னழகி!..

அவள் - 




சமயபுரம் அருள்மிகு மாரியம்மன்!.. 

சமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா கடந்த மார்ச்/8  ஞாயிறன்று கோலாகலமாகத் தொடங்கியது.

இத் திருக்கோயிலில் - 
காலகாலமாக நிழந்து வரும் மங்கலகரமான வைபவம் - பூச்சொரிதல்.

ஆண்டுதோறும் மாசி மாதத்தின் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதத்தின் கடைசி ஞாயிறு வரை வாரந்தோறும் பூச்சொரிதல் திருவிழா நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா மார்ச்/8 அன்று - அதிகாலை விக்னேஷ்வர பூஜை தொடங்கி வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் - என சம்பிரதாய சடங்குகள் முடிந்து காலை பத்து மணியளவில் அம்பாளுக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.


திருக்கோயில் சார்பில் மேள தாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட யானை மீது பூக்கூடைகளுடன் வலம் வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்த்தப் பெற்றது.

தேவஸ்தானத்தின் பூக்கூடை - அம்பாளுக்கு முதல் காணிக்கையானது. 

அதன்பின், பக்தர்கள் - தாமரை, மல்லிகை, முல்லை, ரோஜா, பிச்சிப்பூ, மகிழம்பூ, தாழம்பூ, மருக்கொழுந்து - முதலான பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். 

பல வண்ணப் பூக்கள் கொண்டு அம்பாளுக்கு புஷ்ப பாவாடை சாற்றப்பட்டது.

நறுமணமலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை நிகழ்ந்தது.

அன்றைய தினம் மட்டும் ஐந்து டன் பூக்கள் - அபிஷேகம் செய்யப்பட்டதாக தகவல். 

பூச்சொரிதல் விழா தொடங்கியதிலிருந்து - 

நமது நன்மைக்காக - நம்மைப் பெற்றெடுத்த தாயாகிய தயாபரி -

பச்சைப் பட்டினி விரதத்தினை மேற்கொண்டாள்!..

சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை எனும் - தளிகை நிவேத்யங்களைத் துறந்தாள் - அம்பிகை!..

நமக்காக - தன்னை வருத்திக் கொண்டாள்!..

துள்ளுமாவு, பானகம், நீர்மோர், கரும்புச்சாறு, இளநீர் - இவை மட்டுமே.. 
இதைத் தொடர்ந்து,வாரந்தோறும் ஞாயிறன்று பூச்சொரிதல் நடைபெற்றது.

சமயபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் திருச்சி, தஞ்சை, அரியலூர், கரூர் - மற்றும் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பூச்சொரிதல் விழாவில் கலந்து இன்புற்றனர்.

தொடர்ந்து வந்த கிழமைகளில் வெகு சிறப்பாக பூச்சொரிதல் விழா நடைபெற - பச்சைப் பட்டினி விரதத்தினை அம்பாளும் நிறைவு செய்தாள்..

கொடியேற்றம் - 2014
அதனைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல்/5) காலை - ஏழு மணியளவில்
சித்திரைத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ந்தது.
கருவறையிலிருந்து உற்சவ அம்பாள் மரக்கேடயத்தில் எழுந்தருளினாள்.

கொடி மண்டபத்தில் அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, அம்பாளின் திருமேனி எழுதப் பெற்ற கொடி - கொடி மரத்தில்  ஏற்றப்பட்டது. சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது.

இன்று இரவு அம்பாள் திருவீதி எழுந்தருளுகின்றாள்.


அடுத்து வரும் நாட்களில் - சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், கஜ வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம் - என தனித்துவமான வாகனங்களின் எழுந்தருளி வருகின்றாள்.

சித்திரைத் திருவிழாவில் திருவீதியுலா கண்டருளும் அம்பிகை -
சித்திரை மாதத்தின் முதல் செவ்வாயன்று - திருத்தேரில் எழுந்தருள்கின்றாள்.

சித்திரை முதல்நாளாகிய ஏப்ரல்/14 அன்று காலை (10.30 - 11.30) மிதுன லக்னத்தில் திருத்தேரோட்டம் நிகழ்கின்றது.

அதற்கடுத்த இரு நாட்களில் -

காமதேனு வாகனத்திலும் முத்துப்பல்லக்கிலும் வீதியுலா எழுந்தருளும் அம்பிகை -

ஏப்ரல்/17 அன்று தெப்பத்தில் எழுந்தருள்கின்றாள்.


அதோ பாருங்கள்!..
அன்னை வீதி வலம் வந்து கொண்டிருக்கின்றாள்!..


மஞ்சளிலே குளித்து வந்தாள்
மல்லிகையை முடித்து வந்தாள்
கொஞ்சு தமிழ் பேசி வந்தாள்
கோலவிழி பூத்து வந்தாள்!..

சந்தனத்தில் குளித்து வந்தாள்
சங்கடத்தைத் தீர்க்க வந்தாள்
குங்குமத்தைப் பூசி வந்தாள்
குலவிளக்கை காக்க வந்தாள்!..

உச்சிப்பூ முடிந்து வந்தாள்
உற்றமுகம் தேடி வந்தாள்
பிச்சிப்பூ சூடி வந்தாள்
பிள்ளைத் தமிழ்பேசி வந்தாள்!..

நெற்றிவிழி சிவக்க வந்தாள்
நீதிநெறி காக்க வந்தாள்
அல்லிவிழி காட்டி வந்தாள்
அருவினையைத் தீர்க்க வந்தாள்!..

கைவளைகள் குலுங்க வந்தாள்
கடும்பகையைத் தீர்க்க வந்தாள்
தோள்வளைகள் குலுங்க வந்தாள்
தொல்வினையை தொலைக்க வந்தாள்!..

காதணிகள் குலுங்க வந்தாள்
கண்மலர்கள் பூத்து வந்தாள்
மாலைகளும் குலுங்க வந்தாள்
மங்கலங்கள் நிறைய வந்தாள்!..


காற்சிலம்பு முழங்க வந்தாள்
கஷ்டங்களைத் தீர்க்க வந்தாள்
மெட்டிமணி ஒலிக்க வந்தாள்
மேன்மைகளை அளிக்க வந்தாள்!..

வேப்பிலையைத் தாங்கி வந்தாள்
வேதனையைத் தீர்க்க வந்தாள்
அக்கினியை ஏந்தி வந்தாள்
ஆதரித்துக் காக்க வந்தாள்!..

மூத்தவனைக் கூட்டி வந்தாள்
முத்துநகை காட்டி வந்தாள்
வேலவனை ஏந்தி வந்தாள்
வெற்றி மலர்சூடி வந்தாள்!..

ஆயிமக மாயி வந்தாள்
ஆயிரங்கண் காட்டி வந்தாள்
மாயி மகமாயி வந்தாள்
மக்களைத் தான் காக்க வந்தாள்!..

வீர முத்து மாரி வந்தாள்
விழிக்கருணை காட்டி வந்தாள்
நல்ல முத்து மாரி வந்தாள்
நல்லதெல்லாம் கொடுக்க வந்தாள்!..

சிங்க முத்து மாரி வந்தாள்
சிறப்பெல்லாம் கொடுக்க வந்தாள்
எங்க முத்து மாரி வந்தாள்
இவ்வுலகைக் காக்க வந்தாள்!..


ஜனனி!.. ஜகத் ஜனனி!.. ஜகத் காரணி!.. ஜகத் கல்யாணி!..

அம்பிகை - பச்சைப் பட்டினி விரதம் இருந்ததும் நம் பொருட்டு!..

அழகுற வாகனங்களில் திருவீதியுலா வருவதும் நம் பொருட்டே!..

நம்மைப் பெற்ற அன்னை - தன்னை வருத்திக் கொள்ளும் போது நம் மனம் என்ன பாடுபடும்?..

அவளுக்கு உகந்தவற்றை செய்து அவளது மனம் மகிழும்படி செய்வோம்.

அவளது மனம் வருந்தாதபடி நடந்து கொள்வதாக வாக்களிப்போம்!..

அதைப் போலத் தான் -  அண்டபகிரண்டங்களைப் பெற்றெடுத்த அம்பிகையின் மனம் கோணாதபடிக்கு நாம் நடந்து கொள்வது அவசியம்!..


பரந்த பூவுலகில் நாம் காணும் அத்தனையும் அவளுடைய தோற்றமே!..

தாவர ஜங்கமங்கள் அனைத்தும் அவளே!.. அவளே!..

ஒரு கல்லானாலும் சரி.. சிறு புல்லானாலும் சரி.. 
புவியுள் வாழும் சிற்றுயிர்கள் எவையானாலும் சரி..

அவை - அம்பிகையின் திருவடிவம்!.. 
- என எண்ணத் தலைப்பட்டோம் எனில், 
மனம் நேராகும். குணம் சீராகும்!..

அத்தகைய எண்ணம் நம்முள் வளரவும் மலரவும் 
அன்னை அவளே அருள் பாலிப்பாளாக!..

ஓம் சக்தி ஓம்.. ஓம் சக்தி ஓம்..
* * *

17 கருத்துகள்:

  1. சமயபுரம் மாரியம்மன் விழா கண்டு களித்தேன் அனைவருக்கும் சமயபுரத்தாள் அருள் கிடைக்கட்டும். புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தாங்கள் வருகை தந்து அம்பிகையைத் தரிசித்ததற்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதலுக்காக பக்தர்கள் மேள தாளத்தோடு பூக்கள் கொண்டு செல்வதை சில முறை பார்த்ததுண்டு. திருவரங்கத்திலிருந்து வண்டி வண்டியாகப் பூக்கள் செல்லும். சாலை முழுவதும் பூ வாசம்....

    இனிய நினைவுகளை மீட்டியதற்கும் படங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகை தந்து - மலரும் நினைவுகளைப் பதிவு செய்தமைக்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. இங்கும் கோட்டை மாரியம்மன் மிகவும் புகழ் பெற்றது ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      திண்டுக்கல் கோட்டை மாரியம்மனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன்.. தரிசனம் செய்யும் நாள் விரைவில் வரவேண்டும்!..

      நீக்கு
  4. Maariammanai engal hula daivathai
    Vaayaarappadi ulam makizhach
    Cheytha thangalukku eppadi nandri solven ?
    Ellaame aval arul aval karunsi
    Subbu thatha

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..
      அனைத்தும் அவள் கருணையன்றி வேறேதுமில்லை!..

      நீக்கு
  5. சமயபுரத்தாளை கண்டு களித்தேன்
    வணங்கி மகிழ்ந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. சமயபுரத்து மாரியம்மனைப் பல முறை சென்று தரிசித்துள்ளேன். தங்களின் மூலமாக இன்றும். பல கோயில்களுக்கு எங்களை அழைத்துச்செல்லும் உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. சமயபுரம் அம்மன் கோயிலின் பூச்சொரிதல் விழா அருமையாக தங்கள் பதிவில் கண்டேன்,
    புகைப்படங்கள் அருமை,
    அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. சமயபுரம் ம்..ம் கேள்விப்பட்டுளேன். சென்றதில்லை அரமை அருமையான பாடல் பாடி மகிழ்ந்தேன் படங்களும் பூச்சொரிதலும் கண்டு களித்தேன். மிக்க நன்றி வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. எனக்கு கடவுள்கள் மேல் பிரதியேக பக்தி ஏதும் இல்லை. இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை சமயபுரம் செல்கிறேன். விழாக்கள் அவசியம் கலைகள் வளரவும் சிறு வியாபாரம் பெருகவும் அவை உதவுகின்றன,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..

      கலைகள் வளரவும் - மக்களின் சிறு வணிகம் தழைக்கவும் திருவிழாக்கள் உதவுகின்றன - என்று தாங்கள் கூறுவது உண்மையே.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..