புதன், அக்டோபர் 01, 2014

வாய்மையே வெல்லும்

காந்திஜியின் சத்திய சோதனை.



அந்த சம்பவம் - ஏழாம் வகுப்பு படிக்கும் போது நடந்தது. 

அச்சமயம் திரு. தோராப்ஜி யதுல்ஜி ஜிமி - தலைமையாசிரியர். மாணவர்கள் அவரிடம் அதிக பிரியம் கொண்டிருந்தனர். அதே சமயம், அவர் மிகவும் கண்டிப்பானவர். நல்ல ஆசிரியர். 

எந்த காரியத்தையும் முறைப்படி ஒழுங்காகச் செய்வதில் அவருக்கு ஈடுபாடு அதிகம். 

அவர், மேல் வகுப்புப் பையன்களுக்குக் கிரிக்கெட்  உடற்பயிற்சி இரண்டையும் கட்டாயமாக்கி விட்டார். இந்த இரண்டும் எனக்குப் பிடிப்பதில்லை. 

நான் கிரிக்கெட் விளையாடியதும் இல்லை. உடற்பயிற்சி செய்ததும் இல்லை.

இவற்றில் நான் சேராமல் ஒதுங்கியிருந்ததற்கான காரணம் என்னுடைய கூச்சம்!.. தவிரவும் படிப்பிற்கும் இவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற தவறான கருத்தும் மற்றொரு காரணம். 

ஆனால், இன்று பாடத்திட்டத்தில் மனப்பயிற்சிக்கு எந்த அளவு சிறப்பு அளிக்கப்படுகின்றதோ அந்த அளவு சிறப்பு உடற்பயிற்சிக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதை அறிவேன்.  

திறந்த வெளியில் நீண்ட தூரம் நடப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகளைக் குறித்துப் படித்திருந்ததால் - நீண்ட நேரம் நடக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. இதன் பயனாக என் உடல் நன்கு வலுப்பெற்றது. 

மேலும் - உடற்பயிற்சி வகுப்பை நான் விரும்பாததற்குக் காரணம், என்   தந்தைக்குப் பணிவிடை  செய்ய வேண்டும் என்ற ஆர்வமேயாகும். 

பள்ளிக்கூடம் விட்டதும்,நேரே வீட்டுக்குப் போய் அவருக்குப் பணி செய்வேன். அதற்குக் கட்டாயத் தேகப்பயிற்சி இடையூறாக இருந்தது.  

ஆகையால்  தேகப் பயிற்சி வகுப்புக்குப் போகாதிருக்க அனுமதிக்குமாறு தலைமை ஆசிரியரிடம்   கோரினேன். ஆனால், அவர் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். 

அன்று சனிக்கிழமை. மாலை நான்கு மணிக்கு திரும்பவும் நான் வீட்டிலிருந்து உடற்பயிற்சி வகுப்புக்குச் செல்ல வேண்டும். ஆனால், நான் போய்ச் சேர்வதற்குள் பிள்ளைகள் எல்லாம் பயிற்சி முடிந்து போய் விட்டார்கள். 

வந்திருந்தோரின் கணக்கை திரு ஜிமி மறுநாள் தணிக்கை செய்துபோது நான் வரவில்லை என்று குறித்திருந்ததைக் கண்டார்.

மோகன் தாஸ்!.. நீ ஏன் நேற்று வரவில்லை?.. - என்று என்னைக் கேட்டார்.

அதற்கு நடந்ததைச் சொன்னேன்.   

நான் கூறியதை நம்ப அவர் மறுத்து விட்டார். ஓரணாவோ அல்லது இரண்டணாவோ  அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பொய் சொன்னதாக நான்   தண்டிக்கப்பட்டேன்!.. 

இது எனக்கு மிகுந்த மன வேதனையாகி விட்டது. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பது எப்படி? அதற்கு வழியே  இல்லை. 

வேதனை தாங்காமல் கதறி அழுதேன். 

பள்ளிக்கூடத்தில் நான் அசட்டையாக நடந்து கொண்ட முதல் சந்தர்ப்பமும், கடைசிச் சந்தர்ப்பமும் இதுதான். 

பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்கு - நான் வந்துவிட வேண்டும் - என்று தாம் விரும்புவதாக, என் தந்தை - தலைமையாசிரியருக்கு கடிதம் எழுதியதன் பேரில், 

உடற்பயிற்சி வகுப்புக்கு வரவேண்டும் என்பதில் இருந்து நான் விலக்களிக்கப் பெற்றேன்.

முடிவில் அந்த அபராதம் ரத்து செய்யப்பட்டதில் நான் வெற்றி அடைந்தேன்.


உண்மையுள்ளவன் எச்சரிக்கையுடன் இருப்பவனாகவும் இருக்க வேண்டியது முக்கியம் என்பதை அன்று தான் உணர்ந்தேன்!..

நாளைய தினம் - அக்டோபர்/2. அந்த உண்மையுள்ளவனின் பிறந்த நாள். 

 * * *


மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்..
சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்..

ஓடக்காரனுக்குக் கொடுக்க காசில்லாததால் 
கங்கையை நீந்திக் கடக்கும் அளவுக்கு 
வாழ்வில் வறுமையைச் சந்தித்தவர்..

தாய் மாமன் அளித்த ஆதரவினால்
காசி வித்யாசாலாவில் கல்வி கற்று
சாஸ்திரி எனும் பட்டம் பெற்றவர்..

மகாத்மாவின் உரைகளினால் கவரப்பட்டு
சுதந்திர வேள்வியில் தன்னை இணைத்துக் கொண்டவர்..

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 
ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில்
1951ல் இரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.. 

1956 நவம்பர் 23 
அரியலூருக்கு அருகில் நிகழ்ந்த 
ரயில் விபத்துக்குத் தார்மீக பொறுப்பேற்று 
பதவியை விட்டு விலகிய வீரமகன்!..

நாளைய தினம் - அக்டோபர்/2. 
அந்த வீரமகனின் பிறந்த நாள்.
* * *



தமிழகத்தை முன்னேற்றிய சிறப்புறு முதல்வர்..
கல்விக்கண் கொடுத்த கர்மவீரர்..

மதிய உணவு திட்டத்தின் மூலம் 
பள்ளிப் பிள்ளைகளின் பசிப் பிணி தீர்த்த
அருளாளர்..

ஏழையாய்ப் பிறந்து ஏழையாய் வாழ்ந்து
ஏழையாகவே போய்ச்சேர்ந்தவர்..
* * * 

நாளைய தினம் - அக்டோபர்/2.
ஊரார் பிள்ளைகள் உண்டு களித்ததை - 
கண்டு களித்த கர்ம வீரன் - கண் மூடி மீளாத் துயிலில் ஆழ்ந்த நாள்!..

மாசறு பொன்னாக வாழ்ந்த அந்த மாபெரும் தலைவர்களைச் 
சிந்தித்துப் போற்றி வணங்குவோம்!..
* * *

14 கருத்துகள்:

  1. தேச பிதா காந்தி , எளிமையாக வாழ்ந்த தலைவர் லால்பகதூர் சாஸ்திரி , கர்மவீரர் காமராஜ் இவர்களை பற்றிய பகிர்வு மிக அருமை.
    அவர்கள் வழி எல்லா தலைவர்களும் தன்னலம் இல்லாமல் நாட்டுக்கு உழைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி

      நீக்கு
  2. தன்னலமற்ற மாபெரும் தலைவர்களைப் போற்றி வணங்குவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. மூன்று பெரும் தலைவர்கள் பற்றி நினைவு கூர்ந்து எழுதி போற்றியது அருமை! ஐயா! காந்தி பற்றி மட்டுமே போற்றும் நன் நாளில் மறக்கப்பட்ட லால் பகதூர் சாஸ்திரி பற்றியும் எழுதியதற்கு பாராட்டுக்கள்!

    அவர்கலை நினைக்கும் பொது இப்போதுள்ள நிலையை நினைத்தால் ம்ம்மென்ன சொல்லுவது!

    மிக நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  4. வணக்கம் ஐயா!

    தேச பிதாவைத் தேடி இட்ட பதிவு மிக அருமை ஐயா!

    அஹிம்சைக்குப் பொருளானவர்! இதயத்தில் ஏற்றிப் போற்றுவோம்!
    பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. எளிமைக்கும் உண்மைக்கும் நேர்மைக்கும் உதாரணமான போற்றுதலுக்குரிய மாசற்ற தலைவர்கள் !!
    மிக அருமையான பதிவு அய்யா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் அன்பு வருகை கண்டு மகிழ்ச்சி..
      தங்களின் இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. மூன்று தலைவர்களையும் நினைவு கூர்ந்தது சிறப்பு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ...! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் இனிய வருகையும் அன்பின் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.
      நன்றி..

      நீக்கு
  7. மூன்று முக்கனிகளை பற்றிய முத்தான விசயங்கள் அருமை நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      இனிய கருத்துரையுடன் தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..