செவ்வாய், ஆகஸ்ட் 05, 2014

அங்கயற்கண்ணி

சக்தி பீடங்களுள் இத்தலம்  - ராஜமாதங்கி சியாமளா பீடம்.

ஆட்சி செய்யும் அவளுக்குத்தான் எத்தனை எத்தனை பெயர்கள்!.. 

அங்கயற்கண்ணி, கயற்கண்ணி, கருந்தடங்கண்ணி, மாணிக்கவல்லி, மரகத வல்லி, அபிஷேகவல்லி, கற்பூரவல்லி, சுந்தரவல்லி!..


அம்பிகை பிறந்து நல்லாட்சி செய்யும் பதி  - மதுரை!..

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி  - மலையத்வஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் மகளாக அக்னியில் தோன்றிய திருத்தலம். 

தடாதகை எனும் திருநாமத்துடன் அவள் வளர்ந்தாலும் அங்கயற்கண்ணி - மீனாக்ஷி எனும் திருப்பெயர்களே அவளுக்கு உரியவை. 

காரணம்?..

அங்கயற்கண்ணி - மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். 

மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப் போல அங்கயற்கண்ணியும் தன்னைத் தரிசிக்க வரும் அன்பர்களைத் தன் அருட்கண்களால் நோக்கி நலம் செய்விக்கும் தன்மையால்!..

இறைவனின் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் நிகழ்ந்த பெரும்பதிக்குச் சொந்தக்காரி!..

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெருமானின் திருத்தலம் எனினும் -

ஒவ்வொரு நாளும் அனைத்து பூஜைகளும்  ஸ்ரீ மீனாக்ஷிக்கு நிறைவேறிய பின்னரே  பெருமானுக்கு  நடைபெறுகின்றன.

இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் முகிழ்த்தெழுந்த கலைக்கோயில்  இவளுடையது.


நான்கு திசைகளிலும் வானளாவிய திருக்கோபுரங்களை உடைய திருக் கோயில். இத்திருக் கோபுரங்களுள் தெற்கு கோபுரம் தான் உயரமானது.  160 அடி உயரமுடைய தெற்குக் கோபுரத்தில்  சுதையால் ஆன 1511 சிற்பங்கள் உள்ளன. 

மேலைக் கோபுரத்தில் 1124 ,  கீழைக் கோபுரத்தில் 1011 ,  வடக்குக் கோபுரத்தில் 404 ,  விமானங்களில் 174  மேலும் ஆங்காங்கே உள்ளவற்றுடன் - கூடுதல் 4224  சிற்பங்கள் என  கணக்கிட்டுள்ளார்கள்.

985 தூண்களுடன் கூடிய ஆயிரங்கால் மண்டபம், அஷ்ட சக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலிப் பிள்ளை மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் - கல்யாண மண்டபம் என பல மண்டபங்கள்.


தங்கக் கொடி மரம்,  நந்தி, பலிபீடம் இவற்றுடன்  சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு எதிரே நந்தி மண்டபம் எனும் கம்பத்தடி மண்டபம்

ஒரு காலத்தில் நீராழி மண்டபமாக திகழ்ந்த புது மண்டபம் இப்போது கடைத் தெருவாகிப் போனது.

பங்குனி உத்திரத்தில் மீனாட்சியம்மையின் திருக்கரத்தினை - சுந்தரேசப் பெருமான் பற்றிய வேளை!..

பெருமானும், மீனாட்சியும் - திருமணத்திற்கு வந்திருந்தவர்களை உணவு அருந்துவதற்காக  அழைத்த போது பதஞ்சலியும், வியாக்ரபாதரும் - 

பெருமானே!.. நாங்கள் எப்போதும் பொன்னம்பலத்தில்  ஆனந்த நடனத்தைத் தரிசித்த பிறகு தான் உணவு அருந்துவோம்!.. - என்றனர்.

இதைக்கேட்ட இறைவன் - இவர்களின் நியமத்தை காக்கும் பொருட்டு  திருநடனம் புரிந்தருளினார். அதனால் மதுரை வெள்ளியம்பலம் எனப்பட்டது.

பின்னாளில்,
மதுரையை ஆண்ட  ராஜசேகர பாண்டியனுக்காக நடராஜர் - கால் மாற்றி ஆடியதாகவும் ஐதீகம்.

ஆயிரங்கால் மண்டபம் - நூறாண்டுகளுக்கு முன்
திருச்செந்தூரில் - முருகன் திருவருளால் பேசும் தன்மையடைந்த  குமர குருபரர் - பிள்ளைத் தமிழ் கொண்டு மீனாட்சியைப் பாடி மகிழ- அது கேட்ட அன்னை சிறு பிள்ளை என வந்து முத்து மாலையை அணிவித்து உள்ளம் உவந்தனள் என்பது தமிழுக்குக் கிடைத்த பெருமை.

திருவாதவூராகிய மாணிக்கவாசகப் பெருமான்  - முதலமைச்சராகப் பணி புரிந்த வேளையில் நாளும் பணிந்த திருத்தலம். 

நீர் நிறைந்த பொற்றாமரைக் குளம்
திருஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து  சைவத்தை மீட்டு நிலை நிறுத்தியது இங்கேதான்!..

வருடம் முழுதும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம். இருந்தாலும் ஆடியில் முளைக்கொட்டு உற்சவம் தனித்தன்மையானது.


மதுரையில் ஆடி மாத  ஆயில்ய நக்ஷத்திரத்தில் கொடியேற்றி ஆடி முளைக் கொட்டுத் திருவிழா கொண்டாடுவார்கள்.   அன்னைக்கு மட்டுமே கொடி ஏற்றப்படும் உற்சவம் இது. 

அதன்படி -  முளைக்கொட்டு உற்சவம் அம்மன் சன்னதியில் கொடியேற்றம் ஜூலை/28 திங்கள்கிழமை நிகழ்ந்தது .

அதைத் தொடர்ந்து பத்து நாட்கள் முளைக்கொட்டு உற்சவம்.   

நதிகளில் புது வெள்ளம் பாய்ந்து வயல்களில் செழிப்பாக நாற்றுக்கள் வளர்ந்து சாகுபடி செழிக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளும் வைபவம் எனலாம்.

பாரெங்கும் பசிப்பிணி தீர வேண்டி நடத்தப்படும் உற்சவம் எனலாம்.

கிராம மக்கள் அனைவருமே இந்த வேளையில் கிராம தெய்வங்களுக்கும் விழாக்கள் நடத்தி - முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டுப் பிரார்த்திப்பார்கள்.

முளைப்பாரிக்கெனத் தனியாக மண்பாண்டம் உள்ளது.  இப்போது பித்தளைப் பாத்திரங்களும் வந்து விட்டன.

பானையில் அந்தந்தப் பகுதிகளுக்குரிய  விளைநிலத்தின் மண்ணை  இயற்கை உரங்களான - சாணம்,சாம்பல், எரு இவற்றுடன் கலந்து நிரப்புவார்கள்.  

இதன் பின்னர் சிறு தான்யங்களான பச்சைப் பயறு, சோளம், கம்பு, கேழ்வரகு விதைகளைத் தூவி -  விதைகளின் மேலேயும் கொஞ்சம் மண்ணைத் தூவி பதமாக நீர் தெளித்து - சற்றே நிழலான இடத்தில் பாதுகாத்து வைப்பர். 


முளைப்பாரி நேர்ந்து கொள்ளப்பட்ட வீட்டில் அதிகமான சுத்தம் பேணப்படும்.  வெளி ஆட்களை உள்ளே விட மாட்டார்கள்.

முளைப்பாரிக்கு முன்னால் விளக்கு ஏற்றி வைத்து மலர்ச்சரங்களை சூடி - எல்லாச் சீரும், சிறப்பும், உபசாரங்களும் செய்வார்கள். காலை, மாலை - என இருவேளையும் வீட்டிலுள்ள பெண்கள் வழிபாடு நடத்துவார்கள்.

 வைபவம் - புத்தளம், இலங்கை
கன்னிப் பெண்கள் பராமரிக்கும் பாலிகை - முளைப்பாரி செழித்து உயரமாக வளர்ந்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. 

மேலும் முளைப்பாரி உயரமாக வளர்ந்தால்  அந்த வருஷம் விவசாயமும் செழிப்பாக இருக்கும் என்பதும் ஒரு குறிப்பு.

நன்றி - சே.குமார்
திருவிழாவுக்கு முன் ஏழாம் நாள் ஒன்பதாம் நாள் என சௌகரியப்படி பாலிகை வளர்க்கும் மக்கள் அனைவருமாக முளைப்பாரியை மேளதாளத்துடன் எடுத்துச் சென்று ஊர்க்கோயிலில் வைத்து கும்மியடித்து குலவையிட்டு பூஜை செய்த பின் ஆறு குளங்களில் கரைத்து விடுவர். 

முளைப்பாரியில் முளைத்த இளம் நாற்றுகள் ஆற்று நீரின் ஓட்டத்தில் சென்று எங்காவது கரை சேர்ந்து தழைத்து எழும் என்பது நம்பிக்கை.

ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஏற்றப்படும் கொடி பத்து நாட்கள் உற்சவத்திற்குப் பின்னர் இறக்கப்படும். பத்து நாட்களும் அம்மன் சிறப்பான அலங்காரத்தில் அம்மன் சந்நிதியின் மீனாக்ஷி நாயக்கன் மண்டபத்தில் திருக்காட்சி அளிப்பாள். 

இவளுக்கு என்று நேர்ந்து கொண்டு வரும் முளைப்பாரிகள் எல்லாம் அம்மனுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும். 

கும்மிப் பாட்டுடனும் குலவையுடனும் முளைக்கொட்டு பொற்றாமரையில் கரைக்கப்படுவதுடன் ஆடி முளைக்கொட்டு  உற்சவம் நிறைவடையும்.   

ஆடி மாதத்தின் மூன்றாம் செவ்வாய் இன்று.
செந்தமிழ்ச் செல்வியான - அங்கயற்கண்ணியின் தரிசனம்.

மேகம் பொழிய வேணும். மேட்டு அருவி பாய வேணும். 
காடும் செழிக்க வேணும். கண்மாயும் நிறைய வேணும். 
ஆடும் தழைக்க வேணும். மாடும் கொழிக்க வேணும்.
ஊரும் செழிக்க வேணும். உள்வீடும் நிறைய வேணும்.

பசுங்கிளியை ஏந்தியிருக்கும் பச்சைப் பசுங்கொடியாள் 
பாரெங்கும் படியளந்து காத்தருள்வாளாக!.. 

அங்கயற்கண் அன்னையே சரணம்!..
* * *

12 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.

    அங்கயற்கண்ணி பற்றி மிக விரிவாக எழுதியுள்ளீர்கள் காலைப்பொழுதில் படிக்க மனதுக்கு ஒரு இதமாக உள்ளது.. அறியமுடியாத தகவலை தொகுத்து தந்தமைக்கு நன்றிகள் பல..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  2. அருமையான தகவல்களும் படங்களும்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  3. முளைக்கொட்டு உற்சவம் பார்த்தது இல்லை. ஒருமுறை மதுரைக்கு ஆடி மாதம் போய் பார்க்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டது உங்கள் பதிவு.
    படங்கள் எல்லாம் மிக அழகு.

    மேகம் பொழிய அனைவரும் நலமுடன் இருக்க அங்கையர்கண்ணி அருள்புரியட்டும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      மங்கலம் அருள்வாள் மதுரைக்கு அரசி!..
      தங்கள் வாழ்த்துரைக்கு நன்றி..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. ஊரில் நடக்கும் முளைக்கொட்டு ஞாபகம் வந்து விட்டது ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தேவகோட்டை காரைக்குடி பக்கம் எல்லாம் முளக்கோட்டு விழா சிறப்பாக நடைபெறும் என்று அறிந்திருக்கின்றேன்.
      இது தமிழர்களின் சிறப்புகளில் ஒன்று.
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  5. இரண்டு மூன்று நாட்களாக இணையம் ஒத்துழைக்கவில்லை ஐயா
    அதனால் தங்களின் ஒன்றிரண்டு பதிவுகளை பார்க்காமல் விட்டிருப்பேன்
    இனி தொடர்வேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.
      குலதெய்வ வழிபாட்டினை முடித்து கங்கை கொண்ட சோழபுரம் சென்று தரிசனம் செய்திருப்பீர்கள். அரிய தகவல்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்..

      தங்களின் மேலான வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. super pictures and valuble information.thanks to our FACEBOOK FRIENDD

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு. வெங்கட்ராமன் அவர்களுக்கு நல்வரவு!..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..