திங்கள், ஆகஸ்ட் 04, 2014

ஸ்ரீ சுந்தரர்

குண்டையூர்!..  

திருஆரூருக்கு தெற்கே  திருக்கோளிலி (திருக்குவளை) என்னும் தலத்திற்கு அருகில் உள்ளது. 

குண்டையூரில் வேளாண் குடியில் பிறந்த பெருஞ்செல்வர். குண்டையூர்க் கிழார் எனப்பட்டவர். பெரிய மனம் படைத்தவர். 


திருநாவலூரில்  சடையனார் - இசைஞானியார் எனும் தம்பதியர் தம் செல்வ மகனாகத் தோன்றிய சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டவர். 

சுந்தரரின் சுந்தரத் தமிழில் மனம் பறி கொடுத்தவர்.  

சுந்தரர் திருஅமுது செய்தற்கு என - நெல், பருப்பு, காய்கனிகள் - முதலியவற்றை  பரவையார் திருமாளிகைக்குத் தவறாமல் அனுப்பி வரும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். 

அப்படி வழங்கிய பொருட்கள் - சுந்தரர் செய்யும் அறச்செயல்களுக்கும் உகந்ததாக இருந்தது.

ஒருசமயம் மழையின்மையால் நீர் வளம் குறைய -  நிலவளமும் குன்றியது

விளைபொருள்கள் குறைந்தன. சுந்தரர்க்கு அனுப்பும் வழக்கத்திற்கு ஊறு நேர்ந்து விடுமோ என அஞ்சிய  - குண்டையூர்க் கிழார் மனக்கவலையுடன்  உணவும்  உட்கொள்ளாதவராகத்  துயின்றார். 

அவரிடம் கருணை கொண்ட சிவபெருமான் அவர் கனவில் தோன்றி ஆரூரனுக்குப் படி அளக்க உனக்கு நெல்தந்தோம்!.. என்றருளிச் செய்தார். 

ஈசனின் ஆணைப்படி - குபேரன்  குண்டையூர் முழுதும் நெல் மலையை விளைத்தான்.

காலையில் எழுந்த
குண்டையூர்க் கிழார் நெல்மலையைக் கண்டு வியந்தார். 

சுந்தரரும் பரவை நாச்சியாரும்
திருஆரூருக்கு ஓடோடிச் சென்று சுந்தரரிடம் நடந்தவற்றை விவரித்தார்.  

அந்த நெல்மலை மனிதர்களால் எடுக்கக் கூடியதன்று. ஆயினும் அதனைத்  தாங்கள் எவ்விதமேனும்  ஏற்றருள வேண்டும்!..  - என்று கேட்டுக் கொண்டார். 

அதைக் கேட்ட சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளினார். 

நெல்மலையைக் கண்டு வியந்தார்.  

நெல்மலையை எடுத்துச் செல்ல ஆட்களைத் தரும்படி வேண்டிக் கொண்டு,

நீள நினைந்தடியேன் உனைநித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள்வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.


- எனத் திருப்பதிகம் பாடினார் . அவ்வேளையில் -

''இன்று பகற் பொழுது நீங்கியபின் நம்முடைய பூத கணங்கள் ஆரூர் முழுதும் நெல்லைக் கொண்டுவந்து குவிக்கும்!..'' என அருள்வாக்கு வானில் எழுந்தது. 

அதைக் கேட்டு மகிழ்ந்த சுந்தரர் திருவருளைப் போற்றியபடி - குண்டையூர்க் கிழாரிடம் விடை பெற்று - திருஆரூரை அடைந்தார். 

அன்பு மனையாளாகிய பரவையாரிடம் இதைக் கூறி மகிழ்ந்திருந்தார்.

ஈசன் அருளியவாறே - அன்றிரவு பூதகணங்கள் குண்டையூரிலிருந்து நெல்லை வாரிக்கொண்டு வந்து திருஆரூரில் பரவையார் மாளிகையிலும் மற்ற திருவீதிகளிலும் நிரப்பின. 

காலையில் நெற்குவியலைக் கண்டு வியந்து மகிழ்ந்த பரவையார் - அவரவர் வீட்டு முகப்பில் குவிந்திருக்கும் நெல்லை அவர்களே எடுத்து கொள்க!.. - எனப் பறையறைவித்தார். 

ஆரூர் வாழ் மக்களனைவரும் நெல் பெற்றுச் சுந்தரரைப் போற்றி வாழ்த்தினர். 

இந்த வைபவம் திருஆரூரில் இன்றும் கொண்டாடப்படுகின்றது. 

திருஆரூர் வீதிகளில் மாசி உத்திரத்தன்று  ஈசன் நந்தி வாகனத்தில் எழுந்தருள பூத கணங்களைப் போல வேடம் அணிந்தோரும் உடன் வருவர். 




அப்போது அவர்களிடம் நெல் கோட்டைகளைக் கொடுத்து வாங்கிக் கொள்வர். இதனால் தான்ய விருத்தியாகும் என்பது நம்பிக்கை. 

திருக்கயிலாய மாமலையில் - 

அம்பிகையின் சேடிப் பெண்களாகிய அநிந்திதை, கமலினி என்னும் மங்கையரை - ஒரு நொடியிலும் நொடியாக நோக்கியதற்காக - அவர்களுடன் வாழ்ந்து வருமாறு பணிக்கப்பட்டவர் சுந்தரர். 

அதன்படி - திருநாவலூரில் பிறந்து வளர்ந்து -  பதினாறாம் வயதில் சடங்கவி சிவாச்சார்யார் தம் அன்பு மகள் சுகுணவதியை மணம் செய்யுங்கால் ஈசனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டார். 


தடுத்து ஆட்கொள்ளப்பட்ட தலம் - திருவெண்ணெய்நல்லூர்.

தேவாரம் அருளிய மூவருள் சுந்தரர்க்கு பல தலங்களிலும் பொன்னும் பொருளும் அருளப்பட்டிருக்கின்றது . 

ஏன்!.. அவர் இல்லறவாசி என்பதலா!..

அவர் ஏழை எளியோரிடம் அன்பு கொண்டு செய்த தான தர்மங்களுக்காக!.. 

பரவை நாச்சியார் வாடுகின்றாள்!.. - என நேராகவே பதிகம் பாடி கேட்டிருப்பினும்  - தான் பெற்ற அளவற்ற செல்வங்களை அனைவருக்கும் வாரிக் கொடுத்த வள்ளலாகவே சுந்தரர் காணப்படுகின்றார். 

முன்னோர்களான திருநாவுக்கரசு சுவாமிகள், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோரைப் போன்றே - மனிதநேயம் மிக்கவராகவே திகழ்கின்றார்.

இதற்கு ஒரு சான்று!..

திருஆரூரில் சுந்தரர் வாழ்ந்த நாட்களில் சோழ மன்னனின் சேனைத் தலைவர் என விளங்கியவர் கோட்புலி என்பவர். வேளாளர் குடியில் பிறந்தவர்.

இவர் திருக்கோயில் திருவமுதுக்குத் தேவையான நெல்லைச் சேகரித்துத் தந்த திருத்தொண்டினால் நாயனார் ஆனவர்.  

கோட்புலி நாயனார் - தம் ஊராகிய திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளும் படி சுந்தரரை வேண்டிக் கொண்டார்.

அதற்கிசைந்த சுந்தரர் திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளினார். 


கோட்புலியாரும் அன்புடன் வரவேற்றுத் தம் திருமாளிகைக்கு அழைத்துச் சென்று திருவமுது செய்வித்தார். அத்தோடு நில்லாமல் -  

தம் அன்பு மகள்களாகிய சிங்கடி, வனப்பகை என்னும் கன்னியரை - மணம் புரிந்து ஏற்றுக் கொண்டருளுமாறு வேண்டினார். ஆனால் சுந்தரரோ - 

சிங்கடி, வனப்பகை எனும் இரு கன்னியரையும் தம் மக்களாக ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல் - 

சேடார் பூங்குழற் சிங்கடி அப்பன்
திருஆரூரன் உரைத்த..
(7/15)


வஞ்சி யும்வளர் நாவ லூரன்
வனப்பகை அவளப்பன் வன்றொண்டன்..
(7/87)

 
- என்று பல பதிகங்களிலும் இதனைக் குறிப்பிட்டு பரவுகின்றார் எனில் - சுந்தரின் மாண்பு போற்றத்தக்கது அல்லவோ!..

சங்கிலியார் - பரவையார்
 இயல்பாகவே இளகிய நெஞ்சினராகத் திகழ்ந்த சுந்தரர்  - முதலை உண்ட பாலகனை மீட்டெடுத்தது அவிநாசி எனும் திருத்தலத்தில்!..

மாற நாயனார் நிகழ்த்திய சோமயாகத்திற்கு - பரமனை வரவழைத்தவர் சுந்தரரே!..

ஈசனிடமிருந்து சுந்தரர் பொன் பெற்ற தலங்கள் - திருப்புகலூர், நாகப்பட்டினம், திருப்பாச்சிலாச்சிராமம், திருமுதுகுன்றம், திருமுருகன் பூண்டி, வெஞ்சமாக் கூடல் - என்பன.

பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுஇருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே!..
(7/29)


சுந்தரர் வழிநடைப் பயணத்தால் களைத்த போது  - இறைவன் பந்தல் அமைத்து தயிர் சோறும் தண்ணீரும் தந்த தலம் - திருக்குருகாவூர்.  

வெள்ளம் புரண்டோடிய காவிரி இவர் பொருட்டு விலகி வழி விட்ட தலம் - திருஐயாறு.

அங்கிருந்த சுந்தரரை அழைத்து திருக்காட்சி நல்கிய திருத்தலம் திருமழபாடி. 

பன்னீராயிரம் பொன் பெற்ற திருத்தலம் - திருமுதுகுன்றம் (விருத்தாசலம்).

அதனை - அங்கே மணிமுத்தாற்றில் போட்டு விட்டு - திரும்பவும் குளத்திலிருந்து எடுத்துக் கொண்ட தலம் - திருஆரூர்.

சுந்தரர் பரவை நாச்சியாரை மணந்து கொண்டது - திரு ஆரூரில்..
சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டது - திரு ஒற்றியூரில்..

சிவபெருமானே தோழன் ஆன போதிலும் சத்தியத்தை மீறியதால் சுந்தரர்க்குக் கண் பார்வை பறி போனதும் - திரு ஒற்றியூரில்..

வழி நடைக்கு ஊன்று கோல் பெற்ற தலம் - திருவெண்பாக்கம்.

மின்னல் கொடியாக வழிகாட்டி - சுந்தரரை காஞ்சிக்கு அழைத்து வந்தவள் காமாட்சி!.. 

ஸ்ரீ காஞ்சி காமாட்சி  தான் - இடது கண்ணில் பார்வையைக் கொடுத்தவள்.

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே!..
(7/95)


துன்பம் தாங்க இயலாத அடியார்கள் தம் அல்லலைச் சொன்னபோதும் -  நீர் ஒன்றும் செய்யாமல் இருப்பீரேயானால் - நீரே வாழ்ந்து கொள்ளும்!.. 

- என்று திருஆரூரில் திருப்பதிகம் பாடினார். அதன் பின் வலது கண்ணிலும்  ஒளி கிடைத்தது.

வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமைசொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
கூறை கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்க மழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.. (7/49)

நாட்டில் அக்கிரமமும் அநீதியும்  மலிந்து கிடக்கும் வேளையில் அவற்றைத் தடுப்பதற்கில்லாமல் - நீர் எதற்காக இங்கிருக்கின்றீர்?.. 
 
கொடுமைகள் நடக்கும் எல்லைக்குக் காவல் ஒன்றும் இல்லை. அதுவும் நீர் அறிந்ததே!. அப்படியானால் - இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?..

- என்று ஈசனிடமே நீதி கேட்டவர் - சுந்தரர்.
 
நம் பக்கம் நியாயம் இருக்குமேயானால் - நாமும் இவ்வாறே - கேட்கலாம்!... 


தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று அரசன் முதல் ஆண்டி வரை சிவனடியார்களைத் தொகுத்துக் கூறும் திருத்தொண்டத் தொகையினை அருளியவர்.

வாழும் காலத்தில் வள்ளல் மனத்தினராக - வாழ்வாங்கு வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் - கேரள தேசத்தின் திருஅஞ்சைக் களத்திலிருந்து திருக்கயிலை செல்ல விழைந்தார். 

அந்த அளவில் அவரை அழைத்துச் செல்ல வெள்ளை யானை வந்து நின்றது.
அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனாரும் உடன் சென்றார். 

அந்த நாள்,  ஆடி மாதம் - சுவாதி நட்சத்திரம்!..


இந்திரன் முதலான தேவரெல்லாம் எதிர்கொண்டழைத்தனர். 

இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே!..
(7/100)

 
அம்மையப்பன் திருவடிகளை வீழ்ந்து வணங்கினார் சுந்தரர். மீண்டும் - இறைவனின் அனுக்கத் தொண்டராகி அருகிருந்தார்.

இன்று ஆடி சுவாதி. சுந்தரர் திருக்கயிலை மலைக்கு ஏகி இன்புற்ற நாள். 
சகல சிவாலயங்களிலும் சுந்தரர் குருபூஜை நிகழ்கின்றது..

சமயாச்சார்யார்கள் நால்வருள் ஒருவர். வன்தொண்டர் எனப்பட்டவர்.
அன்னவர் திருவடிகள் தலைமேற்கொள்வோம்.

வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி..
சிவாய திருச்சிற்றம்பலம்..
* * *

10 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா!

    அழகிய படங்களுடன் அருமையான பதிவு இன்று!

    ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் ஒரு களஞ்சியமாகச் சேர்த்து வைக்கின்ற அளவு விடயங்களைப் பகிர்வது அரிதான, செயற்கரிய செயலே ஆகும் ஐயா!

    இன்றும் ஆடிச் சுவாதி. சுந்தரர் திருக்கயிலை மலைக்கு ஏகி இன்புற்ற நாள் பற்றியும், சுந்தரரின் சரிதமும் அது தொடர்பாக அவரின் குருபூஜை தினம் பற்றியும் அறியக் கிட்டியுள்ளது.
    மிக்க நன்றி ஐயா அருமையான பகிர்விற்கு!.
    அன்பு வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      சுந்தரமூர்த்தி சுவாமிகளின் சரிதம் - நம் வாழ்வைச் செம்மைப் படுத்துவது. அந்தப் பெருமகனைப் பற்றிச் சொல்வதற்கு இன்னும் இருக்கின்றன.

      தாங்கள் வருகை தந்து - கருத்துரைத்து வாழ்த்தியமைக்கு நன்றி..

      நீக்கு
  2. பதிவினைப் படிக்கும்போது ஏற்கனவே கேட்டிருந்த கதைகள் சில கண்முன்னே விரிகின்றன. கேட்டிராதவை நெஞ்சில் இடம் தேடுகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வாழ்த்துரைக்கு நன்றி ..
      தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.

      நீக்கு
  3. இவையனைத்தும் எனக்கு புதிய விசயங்களே,,, நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் ஊக்கம் அளிக்கின்றன. நன்றி..

      நீக்கு
  4. தெரியாத கதைகள் தெரிந்து கொண்டேன். பல இடங்களில் பொன் பெற்றார் என்பது படித்திருந்தாலும் அதற்கான காரணம் இன்று தெரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      நாம் நமது சமய இலக்கியங்களில் இருந்து தனிமைப் படுத்தப் பட்டோம்.. தேவாரம் திருவாசகம் திவ்யப்ரபந்தம் திருப்புகழ் - இவையெல்லாம் பொக்கிஷங்கள்.. நம்மை நலமுடன் வாழச் செய்பவை.

      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  5. என் மாமானார் அவர்கள் தொடர்ந்து 90 வயது வரை திருஅஞ்சைகளம் விடாது வருட வருடம் சென்று வருவார்கள்., என் கணவரும் தன் தந்தையாருடன் சிலவருடங்கள் சென்று வந்து இருக்கிறார்கள். இப்போது என் கணவரின் அண்ணன் தொடர்ந்து போய் வருகிறார்கள்.
    மீளா அடிமை பாடலை பாடிவந்தால் கண்பார்வை நன்கு தெரியும் என்பார்கள் மாமா. எல்லா துன்பங்களிலிருந்து விடுபட திருபதிகங்களை குறித்துக் கொடுத்து படிக்க சொல்வார்கள்.

    உங்கள் பதிவுகள் மிக சிறப்பாக் இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் மாமனார் அவர்களைப் பற்றி தங்கள் பதிவுகளின் வாயிலாக அறிந்திருக்கின்றேன். சிவநேயச்செல்வர் அவர்.

      ஐயா அவர்கள் கூறியதெல்லாம் சத்யமான வார்த்தைகள். தேவாரம் நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரம்.

      வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..