திங்கள், ஜூன் 16, 2014

முத்துப்பல்லக்கு

சோறுடைத்த சோழ நாட்டின் சுந்தரத் திருநகர்  தஞ்சையம்பதி!.. 

நீர் வளமும் நிலவளமும் நிறையப் பெற்ற திருத்தலம். 

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாட நெஞ்சை அள்ளும் தஞ்சை என்பதும் தஞ்சைத் தரணி என்பதும் - இந்நகரின் சிறப்பு அடைமொழிகள்.. 


புராணச் சிறப்புகள் வரலாற்றுச் சிறப்புகள் என அனைத்தும் ஒருங்கே உடைய தஞ்சை மாநகரில் - 

நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரிய விழாவான முத்துப் பல்லக்குத் திருவிழா, கடந்த ஜூன்/14 சனிக்கிழமையன்று கோலாகலமாக நடைபெற்றது. 

சமய குரவர் நால்வரில் ஒருவரான ஞான சம்பந்தப் பெருமான் முக்தி பெற்ற நாள் வைகாசி மூலம்.  



அந்த நாளினை அனுசரித்து முத்துப் பல்லக்கு திருவிழா தஞ்சை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் -  வைகாசி மாதத்தில் ,

ஞானசம்பந்தப் பெருமானின் குருபூஜையின் போது  குறிச்சித் தெரு முருகன் கோவிலில் இருந்து முதன் முதலாக முத்துப் பல்லக்கு  புறப்பட்டதாக கூறப்படுகின்றது. 

இடையில் சிலகாலம்  - பல காரணங்களினால் சற்றே எழில் குன்றியிருந்தது. 





தற்போது - தஞ்சை மாநகரில் உள்ள பெரும்பாலான கோயில்களில் இருந்தும் பல்லக்கு புறப்படுவதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள நல்ல மனம் கொண்ட இறையன்பர்கள்  இயன்றவரை பணி செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு முத்துப்பல்லக்கு விழாவினை முன்னிட்டு தஞ்சை மாநகரின்-

கீழவாசல், ஆட்டுமந்தைத் தெரு, குறிச்சித் தெரு,  அரிசிகாரத் தெரு,
வார்காரத் தெரு, பட்டு நூல்காரத் தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, புல்லுகாரத் தெரு, வண்டிகாரத் தெரு, மகர்நோன்புச் சாவடி,
கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜவீதி,  

- என பல்வேறு பகுதிகளிலிருக்கும் விநாயகர், முருகன் திருக்கோயில்களில் இருந்து நாதஸ்வர இசை முழங்க முத்துப் பல்லக்குகள் புறப்பட்டு கீழ ராஜவீதி மாமாசாகேப் மூலைக்கு வந்து சேர்ந்தன.

(கீழராஜ வீதியும் தெற்கு ராஜவீதியும் சந்திக்கும் இடம். பழைய பேருந்து நிலையத்திற்கு சற்று அருகில்)

பல்லக்குகளில் விநாயகர், முருகன் உற்சவ திருமேனிகள் மற்றும் திருஞான சம்பந்தரின் திருஉருவப்படங்கள் ஆபரணங்களாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. 



பல்லக்குகள் பூக்களாலும் பலவண்ண காகிதங்களாலும் மணிச்சரங்களாலும் வண்ண மயமான குஞ்சங்களாலும்  மின் விளக்குகளாலும் தஞ்சைக்கே உரிய கலை நயத்துடன் எழிலாக வடிவமைக்கப்பட்டிருந்தன.  



பழைமையான கோயில்களான -   
கரந்தை - கருணாசாமி கோயில்
கீழவாசல் - வெள்ளைப் பிள்ளையார் கோயில்
பாம்பாட்டித்தெரு - சிந்தாமணி பிள்ளையார் கோயில் 
கொள்ளுபேட்டைத் தெரு - பிள்ளையார் கோயில்
குறிச்சித் தெரு - சுப்ரமணியசாமி கோயில்
ஆட்டுமந்தைத் தெரு - தண்டாயுதபாணி சுவாமி கோயில்
சின்ன அரிசிக்காரத் தெரு - சுப்ரமணிய சுவாமி கோயில்
பூக்காரத்தெரு - சுப்ரமணியசுவாமி கோயில்.
ரயிலடி - பிள்ளையார் கோயில்
மாமா சாகேப் மூலை
- பிள்ளையார் கோயில் 

- இன்னும் சில திருக்கோயில்கள் என -  திருவிழாவில் பதினைந்திற்கும் மேற்பட்ட பல்லக்குகள் தஞ்சையின் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்தன. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

மறுநாள் காலை ஏழு மணி அளவில் பல்லக்குகள்-  அந்தந்த கோயில்களுக்குத் திரும்பிச் சென்று சிறப்பு பூஜைகளுடன் நிலை நிறுத்தப் பட்டன. 


புகைப்படங்கள்: 
திரு.கலியபெருமாள் வீராசாமி. (Thanjavur City Pages) அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
 
ராஜவீதிகளின் பல இடங்களிலும் சித்ரான்னங்கள் வழங்கலும் அன்ன தானமும் நடைபெற்றது.

முத்துப் பல்லக்கு விழாவினை முன்னிட்டு,  தஞ்சை மாநகரம்  முன்தினம் இரவு விழாக்கோலம் பூண்டிருந்தது. 

ராஜ வீதிகளில் தலையாட்டி பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், இனிப்பு, பலகார வகைகள் - என, வியாபாரம் விடியும் வரை - களை கட்டியது. 

நூறாண்டுகளையும் கடந்து நடைபெறும் இவ்விழா - தஞ்சை மாநகருக்கு மேலும் புகழ் சேர்ப்பதாக அமைகின்றது.  

இவ்விழா  -  தஞ்சை மாநகரை நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சூழலுக்கு அழைத்து சென்றதாக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 


மகிழ்ச்சியும் மன நிறைவும் என்றென்றும்  நிறைந்திருப்பதாக!..

வாழ்க வையகம் .. வாழ்க வளமுடன்!.. 

 * * *

14 கருத்துகள்:

  1. தஞ்சையில் இருக்கும் எனக்கே முத்துப் பல்லக்கு என்றைக்கு நடைபெறும என்று தெரியவில்லை ஐயா, ஆனால் குவைத்தில் இருந்து கொண்டு முத்துப் பல்லக்கு பற்றிய பதிவு
    மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  2. முத்துப்பல்லக்கு நிகழ்வில் கலந்துகொண்டு பல்லக்குகளைப் பார்த்தேன். கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. விழா முடிந்ததும் பல்லக்கிலிருந்து சிறிய பொம்மைகளையும், தோரணங்களையும் நோகாமல் கயிறு கட்டி இழுப்பதைப் பார்த்து வியந்தேன். கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயிலில் விழா நாட்களில் அலங்காரங்களைப் பார்த்ததுண்டு. நம்மவர்கள் இவ்வாறான நிகழ்வுகளை சிறப்பாகச் செய்கிறார்களே என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      முத்துப் பல்லக்கு திருவிழாவினை நேரில் தரிசித்ததைக் கேட்டு மகிழ்ச்சி.. கலை நுணுக்கம் - அது நம்மவர்களுடன் இணைந்த ஒன்று.. சோழ மண்டலத்தில் இதற்கெல்லாம் கேட்பானேன்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. பகிர்வின் மூலம் நாங்களும் கண்டு களித்தோம் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. பெயரில்லா16 ஜூன், 2014 23:04

    missed this event this year too.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அடுத்த வருடம் காண்பதற்கு ஐயன் அருள் புரிவாராக..
      தாங்கள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு நன்றி..

      நீக்கு
  5. முத்துப்பல்லக்கு பற்றிய ஒரு விரிவான தகவல், அழகான படங்களுடன் .
    பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  6. ஆஹா எவ்வளவு அழகு. மெய் மறக்கும் அளவுக்கு தரிசனம் கிடைக்கப் பெற்றேன். 25 வருடங்களுக்கு முன்னர் நான் தஞ்சை பெரிய கோவிலுக்கு போனேன். இவற்றை பார்க்க இப்போ போக வேண்டும் போல் இருக்கிறது. நன்றி நன்றி சகோ ! வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தஞ்சைக்கு வாருங்கள்.. தங்களை வரவேற்கிறோம்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  7. முத்துப் பல்லக்கு - இது வரை பார்த்ததில்லை.

    தங்கள் பதிவு மூலம் படங்களாகப் பாத்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தாங்கள் வருகை தந்து கருத்துரைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  8. முத்துப்பல்லாக்கு கண்டு களித்தேன்.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..