சனி, ஜூன் 14, 2014

தமிழ் ஞானசம்பந்தர்

சீர்காழி.

மகா பிரளய காலத்தில் தோணி போல மிதந்த திருத்தலம். 

சோழ வளநாட்டின் சிறப்பு மிக்க திருத்தலங்களுள் ஒன்றாகிய சீர்காழியில் சிவபாத இருதயர் -  பகவதி அம்மை எனும் தம்பதியர் சிவநெறி பிறழாது வாழ்ந்து வந்தனர். 


அவர் தமக்கு சித்திரைத் திருவாதிரையில் திருமகவாய்த் தோன்றியவர்  - சம்பந்தப் பெருமான்.

மூன்றாவது வயதில் ஒரு நாள். 

குளிப்பதற்கென்று திருக்குளக்கரைக்குப் புறப்பட்ட தந்தை தம்முடன் குழந்தையையும் அழைத்துச் சென்றார். 

பிரம்ம தீர்த்த திருக்குளக்கரையில், குழந்தை அமர்ந்திருக்க  தந்தை நீரில் மூழ்கிக் குளிக்கலானார்.  

சில விநாடிகளில் தந்தையைக் காணாது பதறிய குழந்தை கதறியது. அது கேட்டு மனம் தாளாத  திருத்தோணியப்பர் அம்பிகையுடன் எழுந்தருளினார். 


அழுத பிள்ளைக்கு - அன்னை பொற்கிண்ணத்தில் ஞானப்பால் நல்கினாள். 

சிறுபொழுதில் கரையேறிய சிவபாத இருதயர் - குழந்தையின் இதழ்களில்  - பால் அருந்திய தடம் கண்டு  - யார் கொடுத்த பாலினை உண்டாய்  - எனக் கேட்க,

தோடுடைய செவியன்!.. - எனத்  திருப்பதிகம் பாடி திருக்கோயிலைச் சுட்டிக் காட்டினார். 

சிவபெருமான் உமாதேவியுடன் விடை மேல் எழுந்தருளி, திருக்காட்சி தந்தருளினன். 

சிவஞானம் எய்திய குழந்தை திருஞான சம்பந்தன் எனப் புகழப் பெற்றது.

ஊர்கள் தோறும் சென்று  சிவ வழிபாடு செய்ய விரும்பிய குழந்தையை  - தன் தோள்களில் சுமந்து கொண்டு நடந்தார் - சிவபாத இருதயர்.


முதற்பாடலிலேயே, உள்ளங் கவர்கள்வன்!.. - என பெருமானைச் சுட்டிக் காட்டிய  சம்பந்தர் - திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றார்.

திருநனிபள்ளி எனும் தலம் வறண்டு பாலையாகக் கிடக்க- இவரது திருப்பதிகத்தால் - மருத நிலம்  என்றானது.

திருநெல்வாயில் அரத்துறை எனும் திருத்தலத்தில் முத்துப்பல்லக்கு, முத்துக் குடை, சின்னங்கள் இவற்றைப் பெற்றார்.

வேதங்களை ஓதாது உணர்ந்த ஞானசம்பந்தர் - தன்னைத் தேடி வந்த திருநாவுக்கரசரை - அப்பா  என்று அன்புடன் அழைத்தார்.

அதுமுதற்கொண்டு  திருநாவுக்கரசர்  - அப்பர்  என்றழைக்கப்பட்டார்.

திருப்பாச்சிலாச்சிராமம் எனும் தலத்தில்  கொல்லி மழவனின் மகளைப் பற்றி இருந்த  முயலகன் என்னும் நோயை நீக்கினார். 

கொடி மாடச்செங்குன்றூர் எனும் திருச்செங்கோட்டில் - திருப்பதிகம் பாடி, விஷக் காய்ச்சலில் இருந்து அன்பர்களையும் மக்களையும்  காத்தார். 

திருப்பட்டீஸ்வரத்தில் முத்துப் பந்தல் அருளப் பெற்றார்.  

திருவாவடுதுறையில் திருப்பதிகம் பாடி ஆயிரம் பொன் நிறைந்த கிழியினைப் பெற்றார். 

தருமபுரத்தில் யாழ்மூரி பண் கொண்டு திருப்பதிகம் பாடி, புறம் உரைத்தாரின் செருக்கு அடங்கச் செய்தார்.

திருமருகல் எனும் தலத்தில், நாகம் தீண்டி இறந்த வணிகனை, சடையா எனுமால் சரண் நீ எனுமால்!.. - எனும் திருப்பதிகம் பாடி - உயிர்த்தெழச் செய்தார். அவனை நம்பி வந்த முறைப்பெண்ணுக்கு, மங்கலவாழ்வினை அருளினார். 

திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டரையும், திருப்புகலூரில் முருக நாயனாரையும் சந்தித்து  சிறப்பித்துப் பாடினார்.

அப்பருடன் கூடி - திருவீழிமிழலையில், வாசி தீரவே காசு நல்குவீர்!.. - எனும் திருப்பதிகத்தினால் படிக்காசு பெற்று மக்கள் தொண்டு செய்தார்.

திருமறைக்காட்டில் - அடைத்துக் கிடந்த திருக்கோயில் கதவுகளை அப்பர் பெருமான் - திருப்பதிகம் பாடி திறந்தருள -

சம்பந்தப் பெருமான் அக்கதவுகளை - தனது திருப்பதிகத்தால் மீண்டும் மூடச் செய்தருளினார். 

மதுரையில்  பாண்டியன் புறச்சமயத்தைச் சார்ந்து நிற்க -  

பாண்டிமாதேவியாகிய மங்கையர்க்கரசியும் அமைச்சர் குலச்சிறையாரும் சைவத்தினை மீட்டெடுக்க வேண்டும் என -  விரும்பி அழைத்ததன் பேரில் மதுரையம்பதிக்குச் சென்றார். 

ஞானசம்பந்தரின் வருகையை அறிந்து - அவர் தங்கியிருந்த திருமடத்திற்கு - தீயோர் இட்ட தீயை அரசனுக்கு வெப்பு நோயாக்கினார்.  

பின்னர் -  மந்திரமாவது நீறு!.. - எனும் திருப்பதிகத்தைப் பாடி, அரசனின்  நோய் தீர்த்தருளினார்.  

சமணர் வாதினை ஏற்று - அனல் வாதம் நிகழ்த்த - தீயிலிட்ட ஏடு பச்சையாகப் பொலிந்தது. புனல் வாதம் நிகழ்த்த -  நீரிலிட்ட ஏடு எதிரேறிச் சென்றது.

மன்னன்  தன் தவறுக்கு வருந்தினான். பிழை உணர்ந்து மனம் திருந்தினான்.


வேந்தனும் ஓங்குக!.. என்று  சம்பந்தர் வாழ்த்திட, கூன் பாண்டியன் எனப்பட்ட  மன்னன்,  நின்ற சீர் நெடுமாறன் என்றானான். 

பாண்டிய நாட்டில் இருந்த புறச்சமயம்  நீங்கியது.

மதுரையிலிருந்து சோழ தேசம் திரும்பியதும் - திருநாவுக்கரசரை வணங்கி அவருடன் சிலநாட்கள் தங்கியிருந்தது - திருப்பூந்துருத்தியில்!..

திருக்கொள்ளம்பூதூர் எனும் தலத்தில் வெள்ளம் பெருகி ஓடியபோது,  ஆளற்ற ஓடத்தைச் செலுத்தி அன்பர்களுக்கு இறை தரிசனம் செய்வித்தார். 

ஆண் பனைகளைப் பெண் பனைகளாக்கியது - திருஓத்தூரில்

பூவனத்தில் பாம்பு தீண்டி இறந்த பூம்பாவையை - அஸ்திக் கலசத்திலிருந்து மட்டிட்ட புன்னையங்கானல்.. - எனும்  - திருப்பதிகம் பாடி, உயிர்ப்பித்தது - திருமயிலையில்!..

வடக்கே திருக்காளத்தி வரை சென்று பல திருத்தலங்களைத்  தரிசித்தார். 

உயிர்களிடத்தில் அன்பும் தொண்டுள்ளமும் கொண்டிருந்த ஞானசம்பந்தப் பெருமான் -  உயர்வு தாழ்வுகளைக் கருத்தில் கொள்ளவில்லை.

திருஞானசம்பந்தர் அந்தணர். அம்பிகையின் திருமுலைப் பால் உண்டவர்.  பற்பல பண்களில் பதிகம் பாடுவதில் வல்லவர்.

திருநீலகண்டர் திருக்குலத்தார். மதுரையில் சோமசுந்தரப் பெருமான் அருளிய பொற்பலகையில் அமர்ந்த பெருமையை உடையவர். யாழ் மீட்டுவதில் வல்லவர். 

தன் மனைவி மதங்க சூளாமணியுடன்  - ஞான சம்பந்தரைத் தொடர்ந்தவர்.


திருக்குலத்தைச் சேர்ந்தவரான திருநீலகண்ட யாழ்ப்பாணரை - தன்னுடன் திருத்தலங்களுக்கும் வேள்விச் சாலைகளுக்கும் அழைத்துச் சென்றவர் - ஞானசம்பந்தப் பெருமான். 

திருக்குலத்தார் என்பது எவ்விதத்திலும் தடையாக இருக்கவில்லை. 

பாணரின் யாழிசையில் பெருமகிழ்ச்சி எய்திய திருஞான சம்பந்தப் பெருமான் பாணரையும், அவர்தம் மனைவியாரையும் தம்முடனேயே இருந்து, திருப் பதிகங்களை யாழில் இசைத்து பாடும் வண்ணம் அருள் புரிந்தார். 

சிவானந்தப் பெருவெள்ளத்தில் திளைத்த ஞானசம்பந்தர் - திருநீலகண்டருடன் தான் - தலங்கள் தோறும் பயணித்தார்.

ஞானசம்பந்தருக்கு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று பெற்றோரும், மற்றோரும் விரும்பினர். 

நல்லூர் பெருமணம் எனும் ஆச்சாள் புரத்தில் - நம்பியாண்டார் நம்பிகள் திருமகள் தோத்திர பூர்ணா எனும் நங்கையை  பெருமானுக்கென குறித்தனர். 

திருமண வேளையில்,  

பெருமானின் திருக்கரத்தில் - நம்பியாண்டார் நம்பி  மும்முறை மங்கல நீர் வார்த்துத் தமது மகளைக் கன்யா தானம் செய்து கொடுத்தார். 

ஞானசம்பந்தர், மங்கை நல்லாளின் கரம் பற்றி அக்னியை  வலம் வந்தார்.

அவ்வேளையில் - 

இவளொடும் சிவனடி சேர்வன்!.. -  என திருஉளங்கொண்டு திருப்பதிகம் பாட -
சிவப்பெருஞ்ஜோதி ஆங்கே மூண்டெழுந்தது. 


காதல் மனையாளின் கரம் பிடித்தபடி - ஜோதியை வலம் வந்த ஞான சம்பந்தப் பெருமான் - அஞ்செழுத்து மந்திரத்தை ஓதியவாறே - அதனுள் புகுந்தார்.

அவருடன் - திருமண மங்கலங்களை நிகழ்த்திய திருநீலநக்க நாயனார், முருக நாயனார்,  திருநீலகண்ட யாழ்ப்பாணர், அவர் மனைவி - ஆகியோரும் அந்தப் பிழம்பினுள் புகுந்து அழியாஇன்பம் அடைந்தனர்.

திருமணத்திற்கு வந்த அனைவரும் சிவஜோதியுட் கலந்தனர்

திருஞான சம்பந்தர் அழியா முத்தி நலம் எய்திய நாள் வைகாசி மூலம்..

நேற்று (ஜூன்/13) திருஞான சம்பந்தப் பெருமானின் குருபூஜை.

இரவு பகல் என வேலை சற்று அதிகம். அதனால் கடும் சோர்வு.
உரிய நேரத்தில் பதிவு செய்ய இயலவில்லை. பொறுத்தருள்க..

திருஞானசம்பந்தப் பெருமான்  காட்டியருளிய தடம் கொண்டு பிறவிப் பெருங் காட்டினைக் கடப்போம்.. 

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி 
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது 
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது 
நாதன் நாமம் நமசிவாயவே!..

திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி.. போற்றி.. 
சிவாய திருச்சிற்றம்பலம்!..
* * *

12 கருத்துகள்:

  1. தமிழ் ஞானசம்பந்தர் அறிந்தேன் ஐயா
    மிக்க நன்றி
    இரவு பகல் பாராது கண் விழித்துப் பணியாற்றிய பிறகும், அயர்ந்து படுக்காது, கணினிமுன் அமர்ந்து தமிழ்ப பணிசெய்யும் தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      நமக்குத் துணை எழுத்து என்று ஆன பிறகு கண் அயர்தலும் கூடுமோ!.. தமிழும் தங்களைப் போன்ற நல்லோரின் வாழ்த்துகளும் ஊக்கம் அளிக்கின்றன.

      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதிவில் காணும் பல விஷயங்கள் இதுவரைஅறியாதவை. பகிர்வுக்கு நன்றி. என் மெயிலைப்பார்க்கவில்லையா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுடைய Mail - கண்டு மகிழ்ச்சி..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி - ஐயா..

      நீக்கு
  3. சம்பந்த பெருமான் தனது துணைவியுடன் திருமண நாளன்றே
    திருமண நிகழ்ச்சிக்காக மூட்டப்பட்ட அக்னியில் ஜோதியில் கலந்தார் என்பது நான் இதுவரை படிததில்லை.

    அதுவும் அப்படியே இருப்பினும்
    அவன் செயலே.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      ஞானசம்பந்தப் பெருமான் - திருமண நாளன்று தான் அக்னியில் கலந்தார்.
      தாங்கள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு நன்றி..

      நீக்கு
  4. திருஞான சம்பந்தப் பெருமான் பற்றிய செய்திகளை ஓரளவு அறிந்திருக்கிறேன். இன்றைக்கு இன்னும் தெரியாத விஷயங்களை அறிந்துக்கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சொக்கன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மிக அழகாக சொல்லப்பட்ட வரலாறு. என் தென் ஆப்ரிக்க சைவ அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ..( நான் திருப்பனந்தாள் தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் திரு வேங்கட ராமையா அவர்களின் பேரன்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      தமிழ் வளர்த்த சான்றோரின் வழி வந்த தாங்கள் எனது பதிவுகளைப் படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி..

      தங்களின் தொடர்ந்த வருகையினை விரும்புகின்றேன்.

      நீக்கு
  6. ஞான சம்பந்தர் பற்றி சில விஷயங்கள் படித்திருந்தாலும் இப்பதிவில் சொன்ன பல விஷயங்கள் படித்திராதவை.

    இங்கே படிக்கத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..