செவ்வாய், டிசம்பர் 17, 2013

தில்லை சிற்றம்பலம்

தில்லை திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்தில் - நாளை (18.12.2013) புதன்கிழமை - திருவாதிரை தரிசனப் பெருவிழா!.. 

நால்வருடன்- புண்ணியர் பலரும் பரவித் துதித்த திருத்தலம் - தில்லையம்பதி.


சைவத்தில் கோயில் என்று பொதுவாக வழங்கினாலே  அது - சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயிலைத்தான் குறிக்கும்.

தலத்தின் திருப்பெயர் தில்லை. திருக்கோயில் - சிதம்பரம்.

இன்று தலத்தின் பெயர் - சொல்வழக்கில் இருந்து மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகின்றது.

தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. இம்மரங்கள் பிச்சாவரத்திற்கு அருகிலுள்ள கடல் உப்பங் கழியின் கரைகளில் காணப்படுகின்றன.

சித்+ அம்பரம் (அறிவு - வெட்டவெளி) = சிதம்பரம் பூலோக கயிலாயம்,


இறைவன் - நடராசப்பெருமான், கூத்தபிரான், அம்பலவாணன், கனக சபாபதி.

அம்பிகை - சிவகாம சுந்தரி.

தீர்த்தம்  - சிவகங்கை. தலவிருட்சம் - தில்லை.

இக்கோயிலுள் 'திருமூலட்டானம்' என்னும் தனிக்கோயில் ஒன்றுள்ளது. அர்த்த ஜாம வழிபாடு முடிந்தபின் பிற கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இங்குள்ள மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்.

சிற்றம்பலம் உள்ளே செல்வதற்கு என உள்ள  ஐந்துபடிகளும்  - பஞ்சாக்கரப் படிகள் என வழங்கப்படுகின்றது.;

சிற்சபையில்  நடராசப் பெருமானுக்கு வலப்புறம் உள்ளது - சிதம்பர ரகசியம்  .

இறைவனின் யோக வடிவத்தில் திருவாரூர் மூலாதாரம், திருவானைக்கா உந்தி. திருவண்ணாமலை மணிபூரகம், திருக்காளத்தி கழுத்து. காசி புருவ மத்தி, சிதம்பரம்  - இருதய ஸ்தானம்.

பஞ்சபூத தலங்களுள் இது ஆகாயத் தலம். பஞ்ச சபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை எனவும் வழங்குவர்.  இத்திருக்கோயிலுள் - சிற்றம்பலம், பொன்னம்பலம் (கனகசபை), பேரம்பலம், நிருத்தசபை, இராஜசபை என ஐந்து சபைகள் உள்ளன.

சிற்றம்பலம்  - நடராசப்பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடம். இதற்கு முதலாம் ஆதித்தசோழனின் மகன் முதற்பராந்தக சோழன் பொன் வேய்ந்தான்



பொன்னம்பலம் (கனகசபை) பெருமான் அபிஷேகம் கொண்டருளும் இடம்.
பேரம்பலம் - இது தேவசபை எனப்படும்.
நிருத்த சபை - ஊர்த்துவ தாண்டவம் செய்தருளிய இடம்.
இராஜசபை - இது ஆயிரக்கால் மண்டபமாகும். பண்டைய காலங்களில் சோழ மன்னர்களுக்கு முடி சூட்டப்படும் இடம்.

வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) பதஞ்சலி ஆகியோர் பூஜித்த தலம். 


திருநாவுக்கரசர் அங்கப் பிரதட்சணம்  செய்த திருத்தலம்.

திருஞானசம்பந்தர் இத்திருத்தலத்தில் தங்கியிருக்க அஞ்சி அருகிலுள்ள திருவேட்களத்தில் தங்கி இருந்து - நாளும் இங்கே வந்து வழிபட்டார்.

சுந்தரர் - தில்லையம்பதியை மிதிக்க அஞ்சி ஊருக்கு வெளியே நிற்க , பெருமான் விரும்பி அழைத்த தலம்.

மாணிக்கவாசகர்  ஊமைப் பெண்ணைப் பேசுவித்து பெளத்தரை வாதில் வென்று சைவத்தை நிலை நாட்டிய பெரும்பதி.



வைணவத்தில் திருச்சித்திர கூடம் என்று புகழப்படும் திருத்தலம். 

மாணிக்க வாசகர், நந்தனார், கணம்புல்ல நாயனார் - ஆகியோர் முக்தி நிலை எய்திய திருத்தலம். திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்த தலம்.. 

திருஆதிரை அன்று வீதியில் - தடைப்பட்டு நின்ற தேர் சேந்தனார் திருப் பல்லாண்டு பாடியதும் மீண்டும் இலகுவாக ஓடிய தலம்.

இராசராசன் வேண்டுதலின் பேரில் -  பொல்லாப் பிள்ளையாரின் துணையால் -  நிலவறையில் இருந்த மூவர் தேவாரம் வெளிப்பட்ட திருத்தலம். பின்னர் இதையே, நம்பியாண்டார் நம்பி - ஏழு திருமுறைகளாகத் தொகுத்தார்.

சேக்கிழார் - திருத்தொண்டர் புராணம் பாடுவதற்கு, ஈசன் - அடியெடுத்துத் தந்து திருத்தலம். திருத்தொண்டர் புராணம் அரங்கேற்றச் செய்யப்பட்ட  தலமும் இதுவே.. 

அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க ஸ்வாமிகளின் அபிமான திருத்தலம்.

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையி னகத்தானை அணுவை யார்க்குந்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
திருநாவுக்கரசர் தேவாரம்

சிவாய திருச்சிற்றம்பலம்!..

22 கருத்துகள்:

  1. ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரம் பற்றி பல புதிய தகவல்கள் அறிய முடிந்தது. அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா!..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  2. திருச்சிற்றம்பலம்.

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
  3. ஆண்டுதோறும் சிதம்பரம் செல்வது வழக்கம். அத்தனை பெரியகோவில் சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதுவேதனை. கோவிலைச் சுற்றி பல இடங்கள் என்னவென்றே தெரியாதபடி இருக்கின்றன. அங்கு வழக்கமாக எங்களுக்காக பூசை செய்யும் தீட்சிதருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. கோவிலைச் சுற்றி இருமுறை வந்தாலே போதும் நல்ல உடற்பயிற்சி. இப்போது அரசாங்கமே எடுத்துக் கொள்ளப் போவதாகச் செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் கருத்துரை சரியே!..
      இன்னும் பல பெரிய கோயில்களில் திறக்கப்படாத அறைகள் பல உள்ளன. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. தீட்சிதர்களை ஏமாற்றிக்கொண்டு சில ஒப்பந்ததாரர்கள் கோவில்நிர்வாகத்தை முன்னேறவிடாமல் செய்துகொண்டிருப்பது கண்கூடு. இப்போது அரசு எடுத்துக்கொண்டபிறகாவது நல்லது நடக்கிறதா என்று பார்ப்போம். (பழனி, திருச்செந்தூரும் இதே நிலையில் தான் உள்ளன எனபதும் கவனிக்கப்படவேண்டும்.)
    பக்திமணம் கமழும் பதிவுகளால் நம் மனத்தைக் கொள்ளை கொள்ளும் துரை.செல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்போமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அர்த்த ஜாம வழிபாடு முடிந்தபின் பிற கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இங்குள்ள மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்.

    மிகச்சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. சிறப்பான பகிர்வு.
    வாழ்த்துக்கள் ஐயா...
    வலைச்சர ஆசிரியர் பணிக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பூலோக கைலாயம் இருப்பதாக இப்பொழுது தான் அறிகிறேன். சமயக்குரவர்களும் அவர் பெருமைகளும் கோவில் பற்றிய விடயங்களும் எடுதுரைத்தமை சிறப்பே
    நன்றி ....! தொடர வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. சிதம்பரம் கோவில் பற்றிய சிறப்பான தகவல்கள். சிறு வயதில் சென்றது. மீண்டும் ஒரு முறையாவது செல்ல நினைத்திருக்கும் கோவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. சிற்றம்பலம் இருக்க வெற்றம்பலம் தேடி ஓடுவது ஏன் என்ற கருத்தமைந்த பாடல் ஒன்றினைப் படித்ததாக நினைவு. கோயில் பற்றிய விவரங்களும், மற்றவர்கள் தந்த கருத்துரைகளும் பயன் தருவன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..