வியாழன், மே 09, 2013

பிள்ளைக் கனியமுது

வழக்கம் போலவே -  திருக்கயிலை மாமலையில் பெருங்கூட்டமாகக் கூடி - அங்குமிங்குமாக  நின்று கவலையுடன் பேசிக் கொண்டிருந்தனர் தேவர்களும் முனிவர்களும்....

ஏன்... என்ன ஆயிற்று அவர்களுக்கு!....


நித்ய ஜப, தவங்களைச் செய்ய முடியாதபடிக்கு கஜமுகாசுரன்  விளைவிக்கும் பெருந் தொல்லைகளை - ஸ்வாமி தரிசனத்தின் போது தெளிவாக குழப்பமில்லாமல் சொல்லிவிட வேண்டும் என்பது முனிவர்களின் தரப்பு.

அதே கஜமுகாசுரனால் எனது - எங்கள் பதவிக்கு எவ்வித ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று ஸ்வாமி தரிசனத்தின் போது குழப்பமில்லாமல் தெளிவாக சொல்லிவிட வேண்டும் - இது இந்திராதி தேவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. 

''..இருக்கின்ற குறுகிய காலத்தில் - இது மாதிரியான தொல்லைகள் தொடர்ந்தால், பதவிசுகத்தை நிம்மதியாக எப்படி அனுபவிப்பது?..'' இது ஒன்றே பெருங்கவலையாக இருந்தது இந்திரனுக்கு... இருந்தாலும், 

மற்ற தேவர்களின் மனதில் ''..பதவி போனால் போகட்டும்... இந்த மனிதப் பதர்கள் செய்யும் பரிகாரக் குடைச்சல்களில் இருந்து தப்பித்த மாதிரி இருக்கும்!..'' என்று உள்ளூர - வேறு ஒரு தனி ஓட்டம் ஓடிக் கொண்டிருந்தது!..

ஆயிற்று... நந்தியம்பெருமான் புன்முறுவலுடன் கையசைத்து  - அவர்களை அனுமதித்தார்..

''காவாய் கனகத் திரளே போற்றி!..
கயிலை மலையானே போற்றி!.. போற்றி!..''

பெருத்த ஆரவாரத்துடன் - எம்பெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள் அனைவரும்.

அனைவரையும் அன்புடன் ஆசீர்வதித்த அம்மையும் அப்பனும் - ஏதும் அறியாதவர் போல, ''.நலமா!.'' என்றனர். இதற்காகவே காத்திருந்த இந்திரனின்  கன்னங்களில்,  கண்ணீர்த் துளிகள் ''கர கர'' என வழிந்தன. ஒருவழியாக விஷயத்தை விம்மலுடன் சொல்லி முடித்தான்.  யாராலும் வெல்ல முடியாத வலிமை பெற்ற அசுரன் அகந்தையுடன் செய்யும் அடாத செயல்களைக் குறித்து எல்லாரும் -  பெருமானிடம் முறையிட்டனர். 

''..எம்முடைய அம்சமாகத் தோன்றும் புத்திரனால் உம்முடைய குறைகள் யாவும் தீரும்!..'' என்றனர் பெருமானும் அம்பிகையும்!... 

அதன்படிக்கு, திருக்கயிலாய மாமலையின் மந்திர சித்திர மணிமண்டபத்தில் தீட்டப்பட்டிருந்த சமஷ்டி பிரணவமும் வியஷ்டி பிரணவமும் - அப்பனும் அம்மையும் திருவிழி கொண்டு நோக்கியதால் பேரொளியுடன் மருவிப் பொருந்தின.


அந்தப் பேரொளியின் உள்ளிருந்து -  பிரணவ வடிவாக, யானை முகத்துடன் விநாயகர் தோன்றியருளினார். அண்டபகிரண்டம் எங்கும் சுபசகுனங்கள் தோன்றின. கஜமுகாசுரனின் தொல்லை தாள மாட்டாமல் மலையிடுக்கிலும் மரப்பொந்திலும் ஒளிந்து தவம் மேற்கொண்டிருந்த முனிவர்கள் உரம் பெற்று எழுந்தனர்.

உலகின் முதற்பொருளாக முடி சூட்டப்பட்டார் விநாயகர். 

இந்திரனுக்கு தன் மணிமுடி காப்பாற்றப்பட்ட சந்தோஷம்!... 

விநாயகமூர்த்தி - தாய்க்கும்  தந்தைக்கும்  - இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்கக்கலசத்தில் கங்கை நீரெடுத்து பாதபூஜைசெய்தார். பாரிஜாத மலர்களைத் தூவியபடி - அம்மையப்பனை வலஞ்செய்து வணங்கினார்.

வழிபடும் அடியவர் தம் இடர்களைக் கடிவதற்காகத் தோன்றிய கணபதி எனும் இளங்களிறு - பெற்றவர் கண்டு பேருவகை கொள்ளும் வண்ணம் - தத்தித் தவழ்ந்து தளர்நடை பயின்றது.

கயிலை மாமலையில் அங்குமிங்கும் ஓடி விளையாடித் திரிந்த விநாயகப் பெருமானின் - மலர்ப் பாதங்களைத் தாங்கி - தன் தலையில் வைத்துக் கொண்ட இந்திரன், மெதுவாக தன் குறையினை அவருடைய அகன்ற காதுகளில் போட்டு வைத்தான்.  

''...இவ்வளவுதானா!..'' ஆச்சர்யப்பட்ட பெருமான் அன்னை தந்தையரை நோக்கினார்.  புன்னகைத்தனர் இருவரும். புறப்பட்டார் கணபதி போருக்கு!.... பின்னாலேயே தேவாதி தேவரும் ''வீரத்துடன்'' தைரியமாக படையெடுத்தனர்.

விஷயமறிந்து பெரிதாகப் பிளிறிக் கொண்டு வந்தான் கஜமுகாசுரன். ''..ஏதடா?.. நம்மைப் போலவே,  உருக்கொண்டு எதிரில் நிற்கின்றதே!.. ஒரு பிள்ளை... யார் பிள்ளை?...'' என்று யோசித்திருக்க வேண்டாமா!..அந்த அளவுக்கு அவனை யோசிக்க விடவில்லை அவன் விதி!..  

அவன் தன் கைகளில் கிடைத்த ஆயுதங்களை எல்லாம் வாரி இறைத்தான் - கணபதியின் மீது!.. அவை அனைத்தும் பாறையில் விழுந்த பனிக்கட்டிகளாகப் போயின..  கணபதியும் தன்னுடன் வந்த சிவாஸ்திரங்களை அவன் மீது எய்தார். ஆனால் அவை போன வேகத்திலேயே அவரிடம் திரும்பி வந்தன.. காரணம் கஜமுகாசுரன் எந்த ஆயுதங்களாலும் வீழக்கூடாது என சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்தான்.  

தேவர்களும் இதை நினைவு கூர்ந்தனர். அதற்குப்பின் கணபதி தாமதிக்கவே இல்லை.  சிவ மந்திரத்தை உச்சரித்தபடி தன் வலப்புற தந்தத்தினை முறித்து எறிந்தார். ஆயுதம் துளைக்காத கல்நெஞ்சினை  ஆனையின் தந்தம் தூளாக்கியது. 

செங்குருதி ஆறாகப் பெருகியோட மண்ணில் வீழ்ந்தான் கஜமுகாசுரன். ஆயினும் அவனுடைய ஆன்மா மூஷிகமாக உருக்கொண்டு எதிர்த்து வந்தது.  விநாயகப் பெருமான் - தன் காலால் தீண்டினார். அசுரனின் ஆணவம் அடங்கியது. கொடியவன் அடியவனாகி கணபதியின் பாதமலர்களே தஞ்சம் என ஒடுங்கினான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
  
கஜமுக அசுரனை வீழ்த்திய கணபதி, தன் தளிர்க்கரங்களால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து -  போர் முடிக்கப் பெருந்துணை புரிந்த பெருமானை வழிபட்டார். அப்போது - அசுரனை வீழ்த்துதற்கு முறித்த தந்தத்தினை ஈசன் மீண்டும் வழங்கியருளினார்.

கணபதி வழிபட்ட திருத்தலம் கணபதீச்சரம் எனத் திருப்பெயர் கொண்டது. 

அசுரனை வீழ்த்திய போது,  ஆறாக ஓடிய செங்குருதியினால்  சிவப்பாக மாறிய - இத்தலம் செங்காடு எனப்பெயர் பெற்று,   திருச்செங்காட்டங்குடி என நிலைத்தது.

இந்த ஐதீகம், மார்கழி மாத வளர்பிறை -  சஷ்டியன்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்த திருச்செங்காட்டங்குடி-  தான் நரசிம்ம பல்லவனின் படைத்தளபதியான பரஞ்சோதி என்பவரின் சொந்த ஊர். போர்த்தொழில் புரிந்தது போதும்  என மன்னனிடம் விடை பெற்று -  ஊருக்குத் திரும்பி வந்தார்.

வாதாபியில் தான் கவர்ந்த கணபதி திருமேனியினை கணபதீச்சர திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்தார். சிவனடியார்களுக்கும் மற்றவர்க்கும் வயிறார அமுது படைப்பதை அருந்தொண்டாகக் கருதி, அறஞ்செய்யுங்கால் மக்களால் சிறு தொண்டர் எனப்பட்டார்.  

இவரது இல்லாள் திருவெண்காட்டு நங்கை. அன்புமகன் சீராளன். இல்லத்தில் பணிப்பெண் சந்தனநங்கை.

செயற்கரிய செய்யும் சிறுதொண்டரின் - மாண்பினை உலகுக்கு உணர்த்தவே, சிவம் தவநெறி கொண்ட வயிரவத் திருக்கோல உத்திராபதியாக வந்தது. திருக்கோயிலின் ஆத்தி மர நிழலின் கீழ் அமர்ந்து ''...நாம் விரும்பும்படிக்கு அமுது படைக்க வேண்டும். உம்மால் இயலுமா!...'' எனக் கேட்க - அதன்படியே சம்மதித்து சிறுதொண்டர் அமுது படைத்தளித்தார். 

அப்போது ஒன்றும் அறியாதவர் போல -  ''..உம் மகனையும் அழைப்பீராக!... அவனும் அருகிருக்க உண்போம்!...'' என்றார் எல்லாம் அறிந்த உத்திராபதி. அதன்படி சிறுதொண்டரும்,

''கண்ணே! சீராளா! நாம் உய்யும்படிக்கு உடனிருந்து உண்ண - சிவனடியார் உன்னையும் அழைக்கின்றார்... ஓடி வா!.. மகனே!.. ஓடி வா!..'' என்று ஓலமிட்டு அழைக்க -

தலை வாழை இலையில் விருந்தாகிக் கிடந்த தலைமகன், வீதியிலிருந்து ஓடி வந்தான்!..

அவனைக் கண்டு அதிசயித்தார் சிறுத்தொண்டர். கண்கள் குளமாகின. வாரி அணைத்து உச்சி முகர்ந்து சிவனடியாரிடம் அழைத்துச் சென்றார். அங்கே...

பசியுடன் வந்த அடியாரையும் காணவில்லை!.. பரிந்தளித்த விருந்தையும் காணவில்லை!.. பதைத்தார்!.. 

பரமன் பார்வதியாளுடன் திருக்குமரனாகிய முருகனுடன் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்தருளினார்.

அருந்தொண்டு புரிந்த சிறு தொண்டர் பெருந்தொண்டர் ஆனார். 

இல்லாளுடனும் அன்பு மகனுடனும் பணிப்பெண்ணுடனும் காண்பதற்கு அரிய காட்சியாய் சிவதரிசனம் பெற்றார். 

இச்சம்பவம் நிகழ்ந்த நாள், சித்திரை மாத  பரணி நட்சத்திர நாள்.  இன்றும் இந்த ஐதீகம் - அமுது படையல் எனும் (9.5.2013) திருநாளாக ஆண்டு தோறும் திருச்செங்காட்டங்குடியில் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.


திருஆரூர், நாகை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகளை உடைய - திருச்செங்காட்டங்குடியில் எம்பெருமானின் திருப்பெயர் - கணபதீஸ்வரர், உத்திராபதீஸ்வரர். அம்பிகை  - திருகுகுழல் உமைநங்கை.  சுருள் சுருளாக அழகிய கூந்தலை உடையவள் என்று திருநாவுக்கரசர் சூட்டிய திருப்பெயர்.

தீர்த்தம் - சூர்ய தீர்த்தம். தல விருட்சம் -  இறைவன் சிறு பொழுது அமர்ந்திருந்த பேறு பெற்ற ஆத்தி மரம்.

சமகாலத்தவர்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் - ஆகியோரின் பதிகம் பெற்ற திருத்தலம். அதிலும் ஒரு பதிகம் முழுதும் சிறுத்தொண்டரின் திருப்பெயரை வைத்து திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

அது சரி...   வயிரவராக வந்த உத்திராபதியார்,  சிறுதொண்டரிடம்  -

பிள்ளைக்கறியமுது... கேட்டாரா?...

பிள்ளைக்கனியமுது... கேட்டாரா?...

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலாதார்..

3 கருத்துகள்:

  1. திருச்செங்காட்டங்குடியின் பெயர்க்காரணம் அறியப் பெற்றேன்...

    பிள்ளைக்கறியமுது தானே சரி...?

    வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. வருக.. தனபாலன் அவர்களே!... இறைவன் கேட்டது பிள்ளைக்கறியமுது தான்!... அப்படித்தான் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகின்றார். ஒரு சொல் விளையாடலுக்காக பிள்ளைக்கனியமுது என நான் குறிப்பிட்டேன். மேலும் சிறுதொண்ட நாயனாரைப் பற்றியும், வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்ட கணபதியின் சிலை பற்றியும் இன்னும் தீராத சர்ச்சைகள் உள்ளன!...

    பதிலளிநீக்கு
  3. எனது கிராமத்தில் அமுது படையல் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன
    வாக்கூர் என்ற கிராமத்தில்
    சிதம்பரம்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..