சனி, மே 11, 2013

அக்ஷய த்ரிதியை


சித்திரை மாத வளர்பிறையின்  மூன்றாம் பிறை  அக்ஷய த்ரிதியை. 

மங்கலகரமான ஒரு பொருளை அட்சய திரிதியை தினத்தன்று வாங்கினால் குடும்பம் செல்வச் செழிப்புடன் திகழும் என்று  ஒரு ஐதீகம் உண்டு.  


ஆனால்,

இந்நாளில் தங்கம் - அதுவும் எங்கள் கடையில் வாங்கினால் தான் - உங்கள் இல்லத்தில் செல்வம் குவியும் என்பதே இன்றைய பெருங்கூச்சல்.

இந்த மாயையால் மதிமயங்கி -   ஏழை எளியோர்கள் கூட -   அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கிவிட வேண்டுமென வெகு பிரயத்தனம் செய்கின்றார்கள்.

அட்சய திரிதியை நாளில் ஏதாவது ஒரு பொருளை - உப்பு,  மஞ்சள் - என இயற்கைச் சார்ந்த எந்தப் பொருளை வாங்கினாலும் நலம் கூடும் என்பது தான் உண்மையான நம்பிக்கை.

தருமபுத்திரர் - வஞ்சக சகுனியின் சூழ்ச்சியால் வறட்டு கெளரவத்துக்காக சூதாடினார். அனைத்தையும் தோற்றார். விளைவு?.... திரெளபதியின் தோள் சேலையைப் பற்றி இழுத்தான் துச்சாதனன். 

கெளரவர்கள் சபையில் அவமதிக்கப்பட்ட திரெளபதி  - காப்பாற்றிக் கை கொடுப்பார் யாருமின்றிக் கதறினாள். தன் முனைப்பில் போராடிய அன்னை பாஞ்சாலி கோவிந்தா எனப் பெருங்குரல் எழுப்பியபடி தன்னிலை மறக்க -  

அப்போது ''அக்ஷய'' என்று சொல்லி, சேலைத்தலைப்பு வளர்ந்து மலையெனக் குவியும்படிச் செய்து தங்கையின் மானம் காத்தருளினான் ஸ்ரீகிருஷ்ணன். 

பின்னும் பெரியோர்கள் (?) கூடிப் பேசி முடிவெடுத்து பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும் ஓராண்டு அஞ்ஞாதவாசமும் மேற்கொள்ளும்படி தீர்ப்பாகியது. அதன்படி பாண்டவர்கள் வனம் புகுந்த வேளையில் அவர்கள் பொருட்டு - 

சூரியன் கருணை கொண்டு, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தினை
திரெளபதிக்கு வழங்கிய நாள் - அக்ஷய த்ரிதியை.   

அகந்தையுடன் பேசிய பிரம்மனின் சிரத்தினைக் கிள்ளியாகி விட்டது. மண்டை போனாலும் மண்டையின் கனம் இன்னும் போகவில்லை. அந்த மண்டை ஓட்டை அப்படியே விட்டு விட்டால் மண்ணுலகம் மாசுபடும். எனவே -

எல்லாம்வல்ல ஈசன் எம்பெருமான், நம் பொருட்டு பிரம்ம கபாலம் தன் கையில் ஒட்டிக்கொண்டதாக திருவிளையாடல் புரிந்தார்.

திருக்கரத்தில் கபாலத்துடன் அங்கும் இங்கும் திரிந்தார். 

என் பெயரே விளங்க வேண்டும் என்ற பேராசை, நானே பெரியவன் என்ற கர்வம், நானே இதற்கு நன்றானவன் என்ற அகந்தை, என்னால் அன்றி இது ஆகுமா என்ற ஆணவம் - இவை எல்லாம் மனதிற்குள் இறுகப் பொதிந்து கொண்டால் மண்டை இற்றுப் போகும் என்பதை -

உலகோர் உணர்ந்து  உருப்பட வேண்டும் - என்பது இறைவனின் ஆவல். 

ஆனால், நாம் என்ன அவ்வளவு விரைவில் உருப்படக் கூடியவர்களா!... 

இருப்பினும் தன் முயற்சியில் தளராத தயாநிதியாகிய சிவபெருமான், கையில் கபாலத்துடன் காசியம்பதியின் வீதிகளில் நடந்தபோது - கருணாசாகரியான அம்பிகை பெரும் கவலை கொண்டாள்...

''..எல்லாரும் மனைவி மக்கள் என்று சுகபோகமாக இருக்கையில் நீங்கள் மட்டும் ஏனிப்படி!... அகந்தையையும் ஆணவத்தையும் பிச்சையாக இடுங்கள் என்றால் யார் தான் இடுவார்கள்?... இட்டார் உயர்குலத்தோர்... இடாதார் இழிகுலத்தோர்... அவரவர் பாடு.. அனுபவித்துக் கொள்ளட்டும்!...''


உலகநாயகி அன்னபூரணியாகி - அன்னம் எனும் பரிபூரண  அன்பினை இட்டு,

பிரம்மகபாலம் கழன்று விழும்படிச் செய்த நாள் -  அக்ஷய த்ரிதியை.   

சங்கநிதி, பத்மநிதி எனும் நிதிகளை குபேரன் பெற்ற நாள், மஹாவிஷ்ணுவின் திருமார்பினில் மஹாலக்ஷ்மி இலங்கிய நாள்,  மஹாலக்ஷ்மி ஐஸ்வர்ய லக்ஷ்மியாகத் தோன்றிய நாள் - என பல்வேறு பெருமைகள் பேசப்படுகின்றன.

அட்சய திருதியை பற்றி மேலும் ஒரு சுவையான சம்பவம்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பால்ய நண்பரான குலேசன் மிகக் கொடிய வறுமையில் உழன்று வாடுகிறார். ''...உதவி கேட்டுப் பாருங்களேன்!..'' என்று மனைவி சுசீலை சொன்னதன் பேரில், ஸ்ரீகிருஷ்ணனை சந்திக்கப் புறப்பட்டார்.

வெறுங்கையுடன் போகக்கூடாது என,  வீட்டில் மிச்சமிருந்த பழைய அவலை மேலாடையில் முடிந்து கொடுத்தாள் சுசீலை.

குசேலரை வரவேற்று நன்கு உபசரித்த கிருஷ்ணன்,  ''...எனக்கென என்ன கொண்டு வந்தாய்!...'' எனக் கேட்டு, பழைய துணி முடிப்பில் இருந்த அவலை ஆசையுடன் அள்ளி எடுத்து - வாயில் போட்டுக் கொள்கிறார்.

அன்று - மண்ணைஅள்ளி உண்டது அண்டபகிரண்டங்களைக் காட்டுதற்கு..

இன்று - அவலை அள்ளி உண்டது அண்ட பகிரண்டங்களைக் காட்டிலும் பெரிதான அன்பினைக் காட்டுதற்கு..

நட்பிலும், அன்பிலும்  மயங்கிய குசேலன் - ''..கண்ணனின் அன்பையே பெற்ற பிறகு, கேட்பதற்கு வேறென்ன இருக்கின்றது!..'' என்று எதையும் கேளாமலேயே  - தன் வீட்டிற்குப் புறப்பட்டார்.

அன்பிலும் அவலிலும்  மகிழ்ந்து  - ''அக்ஷய''  என வாழ்த்தி வழியனுப்பிய - கிருஷ்ணன்,  குசேலன் கேட்காமலேயே அனைத்து செல்வங்களையும்   வழங்கி அருளினான்.  

வீடு திரும்பிய பிறகுதான் நடந்தவை அனைத்தும் குசேலனுக்கு புரிந்தது. கண்ணனின் அன்பை நினைத்து மனம் உருகினார். 

குசேலனுக்கு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைத்த நாள் -  அக்ஷய த்ருதியை.

அக்ஷய என்றால் மேலும் மேலும் வளர்தல். வளர்ந்து நிறைதல் என்று பொருள். இந்த நாளில் நல்லது செய்தால் அது மென்மேலும் வளரும். பல்கிப் பெருகும் - என்பதே திருக்குறிப்பு.

இந்த மங்கலகரமான நாளில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுதல், எப்போதும் நல்லனவற்றையே சிந்தித்தல், எல்லா உயிர்களிடத்தும்  இரக்கம் காட்டுதல்  என -  நம்மை நாம் -  மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படி செய்வதனால் சந்தோஷம், அமைதி, நிம்மதி - என எல்லாமே வீட்டில் நிறையும் என்பது இன்றைய நாளின் திருக்குறிப்பு.

ஆனால், தற்காலத்தில் வியாபாரிகள் தங்களது பணப் பெட்டியை நிறைத்துக் கொள்ளும் பொருட்டு மக்களின் கவனத்தை சிதற அடித்து திசை திருப்பி - நாள் முழுவதும் தங்கள் கடையில் கூட்டத்தில் தடுமாற வைத்துள்ளனர்.

நம் வீட்டில் தங்கத்தின் இருப்பை மட்டும் உயர்த்திக் கொண்டால்  போதுமா?...

நம் தரத்தை நாம் உயர்த்திக் கொள்ளவேண்டாமா?...

வீட்டில் சாந்தியும் சந்தோஷமும் நிலவ வேண்டாமா?.

எனவே,

அட்சய திருதியை அன்று வீட்டில் விளக்கேற்றி வைத்து - நம் வீட்டில் மட்டுமல்ல, 

ஆதரவற்றோர்,  உதவி தேவைப்படுவோர் - என்று எவருக்காவது நம்மால் இயன்றதைச் செய்து - அவர் தம் வாழ்க்கைக்கும் விளக்கேற்றி வைத்து,

நிம்மதிக்கும் அமைதிக்கும் வித்திடுவோம். 

அக்ஷய த்ரிதியை - 

நமது நன்மைக்காக!... நம்முடைய சந்ததியின் நன்மைக்காக!...

நகைக்கடைக்காரர்களின் நன்மைக்காக அல்ல!... 

பிறருக்கு உதவி செய்வதை '' வேளாண்மை '' என்று திருவள்ளுவர் புகழ்ந்து உரைக்கின்றார்.  அதனாலேயே சந்ததி மேன்மையுறும் வலியுறுத்துகின்றார்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

2 கருத்துகள்:

  1. விரிவான விளக்கங்கள் ஐயா...

    மிக்க மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  2. வருக... தனபாலன் அவர்களே!... தங்களுக்கும் வலைப்பதிவின் நண்பர்களுக்கும் அன்பு வாசகர்களுக்கும் அக்ஷய த்ரிதியை நல்வாழ்த்துக்கள்..எல்லாருக்கும் நன்மைகள் மேன்மேலும் பெருகுவதாக!..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..