வியாழன், மார்ச் 14, 2013

பங்குனி உத்திரம் - 02


கணவனை அவமதித்து யாகம் செய்த தட்சனின் மகளாக பிறந்ததற்காக வருத்தமடைந்த அம்பிகை - தாட்சாயணி என்ற பெயர் நீங்கவேண்டுமென யாகத்தீயில் புகுந்தாள். பின்னர்,

மலையரசன் ஹிமவானின் மகளாகத் தோன்றி, பர்வத ராஜகுமாரியாக - பார்வதி என்ற திருப்பெயரில் சிவபெருமானை  அடைய வேண்டி கடுந்தவம் இருந்தாள். அவ்வேளையில், சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக யோகத்தில் இருந்ததனால் உலகில் அசுரர்களின் ஆதிக்கம் ஓங்கியது. வழக்கம் போல தேவர்களைத் துன்புறுத்தினர்.  

இதற்குத் தீர்வு  - பெருமான்  பார்வதி தேவியை மணம் புரிந்து கொள்வதுதான் என - எண்ணிய தேவர்கள் மன்மதனின் துணையுடன் ஈசனின் தவத்தைக் கலைத்தனர். மன்மதன் அகந்தையுடன் செயல்பட்டான்.  விளைவு -

பெருமான் நெற்றிக்கண் திறந்து நோக்க - எரிந்து சாம்பலாகிப் போனான். இருப்பினும் தவநிலையினின்று நீங்கிய பெருமானிடம் - தேவர்கள் அசுரர்களின் கொடுமைகளைப்பற்றிக் கூறினர். 

சிவபெருமான், தேவியை மணந்து, அசுரர்களை வதம் செய்வதற்கு - குமரன் ஒருவனை அளிப்பதாகக் கூறினார். இதன்படி சிவபெருமான் - 


பனிமலையில் தவம் இயற்றிய அம்பிகையை திருமணம் செய்து கொண்ட நாள் பங்குனி உத்திரம். 

திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்க, ரதி மட்டும்  தன் துணையைத் தேடி கலங்கிக் கொண்டிருந்தாள். இதைக் கண்ட கருணாசாகரியான அம்பிகை ரதிதேவியை அன்புடன் அருகில் அழைத்தாள். அவ்வளவுதான்!... 

மடை திறந்த வெள்ளமென - ரதியின் சோகம் கண்ணீருடன் பெருகிற்று. 

''... தாயே!... நீ மணக்கோலம் கொள்ளவேண்டும் என்று தானே என் கணவன், இந்திரனின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பெருமான் மீது கணை தொடுத்தார்!. இதில் என் கணவனின் குற்றம் என்ன?... கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது அல்லவா!...'' - ரதியை இடைமறித்த அம்பிகை, தான் பற்றியிருந்த  -   ஈசனின்  வலக்கரத்தினை மெல்ல அழுத்தினாள். 

நினைப்பார் தம் நினைவில் உள்ளவனாகிய பெருமான் - கருணையுடன், 

'' ரதி!... மற்றவர் கண்களுக்கு அங்கனாக விளங்கிய மன்மதன், இனி அனங்கனாக - உன் கண்களுக்கு மட்டும் விளங்குவான்!...  இனி நீயும் உன் மணாளனும் பொலிந்து வாழ்வீர்களாக!... '' - என்று வாழ்த்தி,  மன்மதனை உயிர்ப்பித்து  - 

அன்றைக்கு அவனுடன் எரிந்து சாம்பலாகிய கரும்பு வில்லினையும் பஞ்ச பாணங்களையும் மீண்டும் அருளினார். ரதியும் தன் மணாளனுடன் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தாள். ஆக, மன்மதன் மீண்டெழுந்ததும் - பார்வதியின் திருமண நாளாகிய பங்குனி உத்திரத்தில் தான்.


இந்த பங்குனி உத்திரத்தில் தான் மோகினியாள் பெற்றெடுத்த மோகனன் - பூதநாதனாகிய ஸ்ரீஹரிஹரசுதன் - மணிகண்டன் எனும் திருப்பெயருடன் பம்பை நதிக்கரையில் அன்பும் அறமும் தழைக்கும் பொருட்டு அவதரித்தார். 

வழக்கமான மாதப்பிறப்பு வழிபாடு தவிர்த்து சபரிமலையில் சன்னிதான - நடைதிறக்கும் நாட்களில் பங்குனி உத்திர நாள் குறிப்பிடத்தக்கது. ஐயப்பனின் அவதார நாள் என்பதால், இந்நாளில் விரதம் இருந்து ஏராளமான அன்பர்கள் சபரிமலைக்கு மணிகண்டனாகிய ஐயப்பனைத் தரிசிக்க வருவர்.   
  
திருச்செந்தூரில் சூரபத்மனின் அகங்காரத்தைச் சம்ஹாரம் செய்து, அவனைக் கொடியில் சேவலாகவும்,  தாமரைத் திருவடி நிழலில் மயிலாகவும் கொண்டு பேரருள் புரிந்த முருகப்பெருமானுக்கு, நன்றிக்கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை  திருமணம் நடத்தி வைத்த நாள் பங்குனி உத்திரம்.


இது நிகழ்ந்த திருத்தலம் திருப்பரங்குன்றம். கருவறையில் திருமணக் கோலத்தில் திருமுருகனையும், தெய்வானை அம்மையையும் தரிசிக்கலாம். பங்குனியில் நிகழ்வுறும் திருவிழாவில் சூரசம்ஹாரமும், பட்டாபிஷேகமும் திருக்கல்யாண வைபோகமும் தேரோட்டமும் நிகழ்வுறும்.  

திருக்கல்யாண விழாவில் கலந்து கொள்ள மதுரையம்பதியில் இருந்து  அன்னை மீனாட்சியும், சொக்கநாதரும் திருப்பரங்குன்றிற்கு எழுந்தருள்வர். 

திருப்பரங்குன்றம் பழமையான திருத்தலம். திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் தேவாரத் திருப்பதிகம் பெற்ற சிவஸ்தலம், முருகனின் ஆறு படைவீடுகளில் முதல் திருத்தலம். வடதிசை நோக்கி அமைந்துள்ள குடைவரைக் கோயில். 

பங்குனி உத்திரத்தன்று திருக்கோயில்களில் நிகழ்வுறும் தெய்வத் திருமண வைபவங்களை இயன்றவரை தரிசிப்போம்.  

இல்லத்தில் அன்பும் மகிழ்ச்சியும் பெருக வேண்டுமானால்  - 

கணவனும் மனைவியும் அதிகாலையில் துயில் எழுந்து குளித்து, வாய்ப்பு இருந்தால் புத்தாடை அணிந்து - வீட்டில் திருவிளக்கு மாடத்தில் அல்லது பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து ஒருவருக்கொருவர் வலக்கையைப் பற்றிக்கொண்டு சிறிது நேரம் குலதெய்வத்தை மனப்பூர்வமாக வணங்குங்கள்.

வீட்டில் உள்ள மூத்தவர்கள், பெரியவர்களிடம் ஆசி பெறுங்கள்.

புலால் நீக்கி உணவு உண்டு எளியோருக்கும் உணவளியுங்கள். மாலையில் குழந்தைகளுடன் திருக்கோயில் சென்று இறைதரிசனம் செய்யுங்கள்.  

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது...

வாழ்க வையகம்!... வாழ்க மானுடம்!...

திருச்சிற்றம்பலம்!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..