புதன், மார்ச் 13, 2013

பங்குனி உத்திரம் - 01


பங்குனி மாதம் தமிழ் மாதத்தின் கடைசி மாதம்.  ஜோதிட சாரத்தில் சூரியன் மீன ராசியில் பிரவேசிப்பதால் மீனமாதம் என்பர்

இந்த மாதத்தில் சந்திரன் உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து முழுநிலவாக வரும் நாள் பங்குனி உத்திரம் எனும் உற்சாகப் பெருந்திருவிழாவாக எல்லா திருத் தலங்களிலும் கொண்டாடப்படுகின்றது. 

பங்குனியில் - சந்திரன் உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, கன்னிராசியில் நின்று,  பூர்ணகலைகளுடன்  முழுநிலவென பூமிக்கு ஒளி வழங்குகின்றான்.

நிகழும் நந்தன வருடத்தில்  பங்குனி 13 ( 26.3.2013 )  செவ்வாய் அன்று உத்திரம்.
 
பங்குனி உத்திர நாள் நிறைந்த சிறப்புகளை உடையது. இந்த நாளில் சிவபெருமானை கல்யாணசுந்தர மூர்த்தியாக வணங்க வேண்டும்.  ஏனெனில்,

பர்வத ராஜனாகிய இமவான் தன் மகள் பார்வதியை சிவபெருமானுக்குத் திருமணம் செய்து கொடுத்தது பங்குனி உத்திர நாளில் தான்.

ஆதியில் - அங்கயற்கண்ணி மீனாட்சிக்கும் ஐயன் சோமசுந்தரேசருக்கும் மதுரையில் திருமணம் நடந்தது பங்குனி உத்திர நாளில் தான். 

காஞ்சியில் அன்னை காமாட்சியாக வழிபாடு செய்து கயிலைநாதனின் மெய் தழுவியதும் பங்குனி உத்திர நாளில் தான்.

திருக்கயிலையில் ஐயனுக்கும் அம்பிகைக்கும் வழக்கம் போல பிரச்னை. வேறொன்றுமில்லை அது.  

 ஐயனும் அம்பிகையும் ஏகாந்தமாக இருந்த வேளை.  

விநாயகனும் வேலவனும் வெவ்வினைகளை வெகு தொலைவிற்கு விரட்டிக் கொண்டு சென்றதால் திருக்கயிலை ஆரவாரமின்றி அமைதியாக இருந்தது.

சில முனிவர்களுக்கு -  '' சும்மா இரு; சொல்லற!..''   என்று உபதேசிக்க வேண்டி  இருந்தது எம்பெருமானுக்கு. யோக நிலையில் யோசித்துக் கொண்டிருந்தார். 

அந்தவேளையில் தான் அம்பிகை ஆனந்தம் பொங்கிப் பெருக - பெருமானின்,

இருவிழிகளையும் திருக்கரங்களால் மூடினாள். இதனால் உலகம் முழுதும்  இருண்டு இயக்கம் நின்றது. அதிர்ச்சியடைந்த நந்தியம்பெருமான் சட்டென எழுந்து நின்றார். இது நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது ஸ்வாமிக்கு. 

தவறு செய்து விட்டதை உணர்ந்தாள் அம்பிகை. மன்னித்தருள வேண்டினாள். அவரோ - ''....அதெல்லாம் முடியாது. தவறுக்கு தண்டனை அனுபவித்தேயாக வேண்டும். எனவே எமைப் பிரிந்து பூவுலகிற்குச் சென்று தவம் செய்து வழிபடுக. வந்து ஆட்கொள்வோம்!....'' என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு - தவத்தில் ஆழ்ந்தார். அம்பிகைக்குத் தெரியாதா என்ன!... ஐயனின் கோபம்!....
 
அதன்வழி -  அம்பிகை,  காமாட்சி  எனும் திருப்பெயர் கொண்டு,  நம் பொருட்டு காஞ்சியம்பதியில் சிவபூஜை இயற்ற வந்தனள். அம்பிகையை சோதிக்க வேண்டி - ஈஸ்வரன்  ஒரு நாழி நெல்லை மட்டும் அளந்து கொடுத்தார். 

அன்னை, நாழி நெல்லைக்கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாது செய்தனள். கம்பை ஆற்றின் கரையில் மாமரத்தின் நிழலில் ஆற்று மணலில் சிவலிங்கம் அமைத்து பெருமானின் அருளைப் பெறவேண்டி ஒருமனதாக வழிபட்டும் வந்தனள்.  எம்பெருமானுக்கு மிக்க மகிழ்ச்சி!.  

கருந்தடங்கண்ணி இல்லாத கயிலையும் என்னவோ போலிருந்தது. இரண்டு பேரும் ராசியாகி விடுவோம் என்று எண்ணினார் எம்பெருமான். இருப்பினும், மேலும் ஒரு சோதனையாக, 

அன்னை வழிபாடு செய்து கொண்டு இருக்கையில் - திடீரென கம்பையாற்றில் வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்தி புதிதாக திருவிளையாடலை நிகழ்த்தினார். 

திகைத்த அன்னை. ''..கள்ளக் கம்பனே!.. அதுவா விஷயம்!..''  - புன்னகைத்தாள்.

'' பெருகி வருவது ஆற்று  வெள்ளம் அல்ல!..  ஐயனின் அன்பு உள்ளம்!..'' - என உணர்ந்து கொண்டாள். அப்படியே ஆனந்தத்துடன் மணல் லிங்கந்தனைக் கட்டித் தழுவிக் கொண்டாள். அப்போதுதான் அன்னையின் திருக்கரங்களில் விளங்கிய வளையல்களின் தழும்பும்,  சந்தனச் சாந்து  இலங்கிய திருமுலைத் தழும்பும் சிவலிங்கத்தின் மீது பதிந்தன.  


ஸ்வாமி பேரானந்தத்துடன் வெளிப்பட்டு திருமணக்கோலம் கொண்டார். பெருமானின் திருநாமம் ,  ''தழுவக் குழைந்த நாதர் '' - என்றாயிற்று. 

மூலமூர்த்தியின் திருமேனியில் கைவளைத்தழும்பும், திருமுலைத்தழும்பும் இன்னும்  உள்ளதாகக் கூறுவர்.   

காஞ்சியில் ஆற்று மணலால்  அமைந்த ஏகாம்பர லிங்கத்திற்கு புனுகு மற்றும் நறுமணப் பொருட்களைப் பூசி, வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்குத் தான். 

மாமரம் தல விருட்சம் . திருத்தலமும்  பஞ்சபூத தலங்களில் முதன்மையான பிருத்வி (மணல் - நிலம்) தலம்  என்றானது.  

திருக்கயிலை மாமலையில் அம்பிகையின் பணிப்பெண்கள் - அனிந்திதை, கமலினி.  அங்கே பெருமானுக்கு திருநீற்று மடல் ஏந்திப் பணிபுரிபவர் சுந்தரர். ஒருநாள் நந்தவனத்தில் வழிபாட்டுக்கு மலர் பறித்துக் கொண்டிருந்த அனிந்திதை, கமலினி  என்ற கன்னியரை அரை நொடிப்பொழுது - சுந்தரர் கண்டதன் விளைவாக - '' கண்கண்ட காட்சியினைக் கொண்டு வாழ்ந்து வருக''  -  என மூவருக்கும் ஈசன் ஆணையிட்டார். 

அதன்படி - பூவுலகில் திருநாவலூரில் சுந்தரர் பிறந்தார். இளம் பருவத்தில் திருமண நேரத்தில் - இறைவன் முதியவராக வந்து , அடிமை ஓலை காட்டி - சுந்தரரைத் தடுத்தாண்டு கொண்டார். பின்னர் முந்தைய விதிப்படி,

திருஆரூரில் பிறந்திருந்த பரவை நாச்சியாரை மணம் கொண்டு வாழ்ந்த சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திருத்தல யாத்திரையாக - திருவொற்றியூருக்கு வந்தபோது  முற்பிறவியில் நிகழ்ந்ததன்படி, சங்கிலியாரை இரண்டாவதாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரை விட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று திருவொற்றியூரில் மகிழ மரத்தின் கீழ் சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சிவதரிசனம் செய்யப் புறப்பட்டதால்   இருகண்களிலும் பார்வையை இழந்தார்.

பார்வையில்லாத நிலையிலும் தலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்தருளினார் பெருமான். காமாட்சி அன்னை மின்னல் கொடி போன்று உடன் வந்து வழிகாட்டினாள். 


தட்டுத் தடுமாறி வழியில் பலதலங்களையும் தரிசித்துக் கொண்டு காஞ்சியை வந்தடைந்த சுந்தரர் -  

எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து  உள்கிஉகந்து  உமைநங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண்அடியேன் பெற்ற வாறே... ( 7/61/10)


 - தன் பிழையினை வேதனையை - நினைந்து உருகித் திருப்பதிகம் பாடினார். அந்தவேளையில், தான் தன் பங்கிற்கு இடது கண்  பார்வையை அருளினாள் காமாட்சி.   அதன் பின்னர் -

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்கு வலக்கண் கிடைத்தது திருஆரூரில். ஆரூரும் பிருத்வி தலம் தான். ஆரூரில் பெருமானின் திருப்பெயர் புற்றிடங்கொண்டார் - (வன்மீகநாதர்). திருஆரூரிலும் சிவலிங்கத்திற்கு புனுகு பூசி, வெள்ளிக்கவசம் சாத்தியே வழிபடுகின்றனர்.

திருக்கயிலையில், ஐயனின் விழிகளை அம்பிகை மூடியபோது எழுந்து நின்ற நந்தியம்பெருமான் இன்னும் நின்றபடியே சேவை சாதிப்பது திருஆரூரில்....

பெருமானின் திருமேனியில் ஒரு பாதியாகிய அம்பிகையாயினும் - ஐயனின் காலடியில் பணிபுரியும் சேவகமாக இருந்தாலும் - இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதும், அப்படி அனுபவிக்குங்கால் -

பெருமானே பெருந்துணையாக வந்து - தன்னைத் தானே -  நமக்குக் காட்டி - தடுத்து ஆட்கொள்வார் என்பதும் திருக்குறிப்பு!....

எனவே, காஞ்சி காமாட்சியிடம் வேண்டிக்கொண்டால் - செய்த தவறுகளுக்கு மன்னிப்பும் கிடைக்கும், கண் நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.  

அத்துடன் - ஞானக்கண் கிடைக்கும் என்பதும் உறுதி. அது எப்போது ?...

 
இல்லறமாகிய நல்லறத்தில் வழுவாது நழுவாது கணவனும் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டு - ''..நீயின்றி நானில்லை..'' என்று, ஒருபோதும் பிரியாது வாழ்வாங்கு வாழும் போது!... 

சிவசக்தி ஐக்கிய திருமணக்கோல நிகழ்வுகள் - இதைத்தான் காட்டுகின்றன.

இல்லறம் நல்லறம் ஆகும் போதுதான் - யாரும் வாழ்வாங்கு வாழ முடியும்!.. அப்படி வாழ்வாங்கு வாழ்ந்தால் தான் - நாமும் நாம் வாழ்ந்த வாழ்வும்  வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவோம்!... 

இது வழிகாட்டும் வள்ளலாகிய வள்ளுவப்பெருமானின் வாக்கு!...


ஏகம்பத்துறை  எந்தாய் போற்றி!...
பாகம் பெண்ணுரு  ஆனாய் போற்றி!...

திருச்சிற்றம்பலம்!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..