வியாழன், பிப்ரவரி 14, 2013

காதலாகிக் கசிந்து

இளம் வயதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடந்த பண்டைய சமுதாயத்தில் திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் பழகுவது என்பதற்கு வாய்ப்பே இல்லை - என்று கற்றறிந்தோர் கூறுகின்றனர்.

பழந்தமிழ் இலக்கியங்கள் கூட, பருவத்தின் கவர்ச்சியால் ஆணும் பெண்ணும் பழகும் பழக்கத்தைக் ''களவியல்'' என்று தான் கூறியுள்ளன.   

ன்றும் என்றும் தமிழில் ''காதல்'' என்றால் ''அன்பு'' என்ற அர்த்தம்தான். வேறு எந்த அர்த்தமும் கிடையாது.

நம்மை வழிநடத்தும் தேவாரத்திலும் திருவாசகத்திலும் ''காதல்'' என்ற சொல் ''அன்பு'' எனும் பொருளிலேயே நோக்குமிடம் எங்கும் விரவிக் கிடக்கின்றது. 

எனினும் சிந்தனைக்குச் சில...

''காதலாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது''
- திருஞானசம்பந்தர்,  தேவாரம் - 3/49.

''காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக்
காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
வாரானை மதிப்பவர் தம் மனத்துளானை''
- திருநாவுக்கரசர்,  தேவாரம் - 6/66.

''காதல் செய்து களித்துப் பிதற்றிக் 
கடிமா மலரிட்டு  உனையேத்தி''
- சுந்தரர், தேவாரம் - 7/41. 

''உடையானே நின்றனை உள்கி உள்ளம் 
உருகும் பெருங்காதல் உடையார்'' 
- மாணிக்கவாசகர்,  திருச்சதகம் - 8/56.
 
மணம் செய்து கொள்ளும் முறை என்று இருந்தாலும் திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் தீண்டாமல் இருப்பதுதான் தமிழர் பண்பாடு என்பதை திருமருகலில் பாம்பு தீண்டி இறந்து, திருஞானசம்பந்தர் திருவருளால் மீண்டும் உயிருடன் எழுந்த இளைஞனின் வரலாறு விளக்கும்.

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தீண்டாதிருந்து - திருமாங்கல்ய தாரணம் நிகழ்ந்த பிறகு, மணமகனும் மணமகளும் ஒருவர் கரத்தினை ஒருவர் பற்றுவதால் (கைப்பிடித்தல்) திருமணத்திற்குப் ''பாணிக்கிரகணம்'' என்றும் பெயர் என்று அருளாளர்களும்   ஆன்றோர்களும் வகுத்து வைத்துள்ளனர்

ஆன்மீகமும் இலக்கியமும் கூறும் சமுதாய பழக்கவழக்கங்களைத் தெரிந்து கொள்வோம். அவற்றின் உட்பொருளைப் புரிந்து கொள்வோம்!...

எதுவும் தெரியாமல் - புரியாமல், மேல் நாட்டின் கீழ்த்தரமான ஒழுக்கமற்ற செயல்களை - கலாச்சாரம் என ஏற்று நடந்து  தமிழின் விரோதியாக, தமிழ்ச் சமுதாயத்தின் துரோகியாக தமிழர் இருக்க வேண்டாம்!...

ஏதும் அறியாத வாழை இளங்கன்றுகளும் - வளர் இளஞ்சிங்கங்களும் நெறி முறைகளைப் பேணிக்காத்து பெருவாழ்வு வாழ வேண்டும். 

பெற்றோர்க்குப் பிள்ளைகளே பெருஞ்செல்வங்கள்!... அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்று பெற்றவர்களால் தான் நினைக்க முடியும்!... 

பெற்றெடுத்து பெயர்சூட்டி, பெரிதுவந்து வளர்த்து பேணிக்காத்த பெற்றோரைக் காட்டிலும் உயர்ந்த மற்றோர் யார்?....

உடல் கவர்ச்சியால் மயங்கி

உளக்கிளர்ச்சி மிகக்கொண்டு, 

உளம் அழிந்து போகாமல்,  

உரு அழிந்து போகாமல்,  

உடல் அழிந்து போகாமல்  -

பெற்றோர்க்குப் பெரும்பெயர் தாருங்கள் பிள்ளைகளே!...

  
உங்களை மங்களகரமான மணக்கோலத்தில் -

மணக்கோலத்தில் காணவே ஒவ்வொரு பெற்றோரும் நாளும் தவம் செய்து கொண்டிருக்கின்றனர்!... 

அந்த வரத்தினைப் பெற்றோர்க்குத் தாருங்கள்!...

வாழ்க வளமுடன்!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..