சனி, செப்டம்பர் 21, 2024

தரிசனம் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 
முதல் சனிக்கிழமை


நின்ற மா மருது இற்று வீழ  நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கைதொழும்இணைத் தாமரை அடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திட  கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திரு வேங்கடம் அடை நெஞ்சமே.. 1020



எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்  ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாயவன்  திருவேங்கடம் அடை நெஞ்சமே.. 1023



பாரும் நீர் எரி காற்றினோடு  ஆகாசமும் இவை ஆயினான்
பேரும் ஆயிரம் பேச நின்ற   பிறப்பிலி பெருகும் இடம் 
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோரும் மா முகில் தோய்தர
சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே.. 1024
-: திருமங்கையாழ்வார் ;-

காணொளிக்கு  நன்றி

ஓம் ஹரி ஓம்
***

வெள்ளி, செப்டம்பர் 20, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 
வெள்ளிக்கிழமை

திருத்தலம் 
திரு ஆனைக்கா


தந்தன தானத் தானன தந்தன தானத் தானன
தந்தன தானத் தானன ... தனதான

அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய
ஐந்தலை நாகப் பூஷண ... ரருள்பாலா

அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு
மங்கையி னானிற் பூசையு ... மணியாமல்

வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில்
வண்டுழ லோதித் தாழலி ... லிருகாதில்

மண்டிய நீலப் பார்வையில் வெண்துகி லாடைச் சேர்வையில் மங்கியெ யேழைப் பாவியெ ...  னழிவேனோ

கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி குண்டலி யாலப் போசனி ... யபிராமி

கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி குன்றது வார்பொற் காரிகை ... யருள்பாலா

செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை திண்புய மாரப் பூரண ... மருள்வோனே

செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய தென்திரு வானைக் காவுறை ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


நிலவையும் கங்கையையும்
தரித்துள்ள செஞ்சடை மேல் தாவி நிற்கும் 
ஐந்தலை நாகத்தை
ஆபரணமாகக்  கொண்டுள்ள 
சிவபெருமான் அருளிய திருக்குமரனே.. 

நாவாரப் பாடி உன்னை
தினமும் அன்புடன் பூஜை செய்கின்ற 
வழக்கத்தை மேற் கொள்ளாமல்

கச்சு அணிந்து நல் ஆபரணம் பூண்ட 
வஞ்சியரின் மாய அழகிலும்

வண்டுகள் திரிகின்ற
கூந்தலிலும், காதளவு ஓடி நெருங்கி 
மை பூசிய கண்களின் பார்வையிலும்,
வெண் பட்டாடை அழகினிலும், 

அறிவு மயங்கிப் பாவம் புரிந்து 
அடியேன் அழிந்து போவேனோ?..

பொற்கொடியை ஒத்த மெல்லியள், 
நீல நிறத்தவள், தாமரை  மாலையணிந்த அழகி

சுத்த  சக்தி, 
ஆலகால விஷத்தை உண்டவள், 
பேரழகி,

கொஞ்சி மகிழ்கின்ற 
ஆகாய கங்கையைப் போலத் 
தூய்மை நிறைந்தவள், 
சங்கரி, வேதங்கள்
போற்றுகின்ற பார்வதி,

இமயமலை செய்த தவத்தின்
 பயனாக வந்துதித்த  அம்பிகை 
ஈன்றளித்த திருமகனே

செம்பவள  இதழ்களை உடையவளும், 
ஒளி பொருந்தியவளும்
ஆகிய குறப் பெண்  வள்ளி நாயகியின்

அணி தவழும் தனங்களில் அணைந்து 
 நல்லருள் புரிந்தவனே

செந்தமிழ்ப் பாணர் யாழ் வாசிக்க 
(திருஞான சம்பந்தர்  பாடியபோது  
திருநீலகண்டர்  யாழ் வாசித்த நிகழ்வு)  

அழகிய திரு ஆனைக்காவில் 
வீற்றிருக்கும் பெருமாளே..
**

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், செப்டம்பர் 19, 2024

சோயா 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 3 
வியாழக்கிழமை


சோயா பீன்ஸ்

இதய ஆரோக்கியம் காக்கின்ற தானியம்...
மொச்சை வகையைச் சேர்ந்தது..

சைவ உணவை மட்டுமே உண்பவர்களுக்கு, சோயா பீன்ஸ் சந்தேகத்திற்கு இடமின்றி அதிக அளவு புரதத்தை வழங்குகிறது.  

மேலும், சோயாவில் அனைத்து அத்தியாவசிய அமினோ  அமிலங்களும் உள்ளன. 


சோயா பீன்ஸ் முழுமையான புரத ஆதாரமாக அமைகிறது.. நமது உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களை சோயா உற்பத்தி செய்கிறது..

சோயா பீன்ஸின்  புரதத்தை புலால் உணவுடன் ஒப்பிடும் போது, சோயாவில் கொலஸ்ட்ரால் அளவு குறைவாக உள்ளது. இது நார்ச்சத்து நிறைந்தது  மேலும், எலும்புகளை வலுப்படுத்துகின்றது.


சோயா பீன்ஸில் குறைந்த அளவு ஒமேகா 3,  கொழுப்பு அமிலங்கள், இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற  தாதுக்களும் உள்ளன.


சோயா பீன்ஸில் உள்ள புரோட்டீன் நமது இதயத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. 

இது நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


இந்த ஆய்வுகளில் சோயாவின் புரதத்தால் கெட்ட கொழுப்புகள், ட்ரை கிளிசரைடு கொழுப்புகள் இரத்தத்தில் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது..
தகவல் தொகுப்பு : நன்றி விக்கி  

குவைத்தில் இருந்த போது எத்தனையோ நாள் சோயா பீன்ஸ் எனது சமையலில் இடம் பெற்றிருக்கின்றது..

இத்தனை நலங்களும் சோயா பீன்ஸையும் அதன் என்ணெயையும் பயன்படுத்துகின்ற போது தான்..

எதற்கும் உதவாத சோயா பீன்ஸின் சக்கையை உணவுப் பொருள் என்று பயன்படுத்தும் போது?...

இன்றைக்கு Veg Mutton என்றும் Veg Chicken 
என்றும் உணவு வியாபாரிகளிடம் புழங்குவது சோயா பீன்ஸின் சக்கை தான்..

நல்லவேளை... 
வேறு விதங்களில் வேஷம் கட்டப்பட வில்லை சோயா சக்கைக்கு!..

சோயா சக்கை மனிதருக்கு நல்லதா... 
கெட்டதா?..

நலம் தருமா?..
நலிவைத் தருமா?..

இன்று வரை உறுதி செய்யப்படவில்லை..

தொடர்ந்து வேறொரு பதிவில் இதனைக் காண்போம்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..

இயற்கையே இறைவன்
 இறைவனே
இயற்கையே
***

புதன், செப்டம்பர் 18, 2024

கோடி தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 2
புதன் கிழமை

இன்று முதல்
மஹாளயபட்சம்

கொட்டையூர் ஸ்ரீ கோடீஸ்வரர் தரிசனத்திற்குப் பின் 
பதிவொன்று தருவதாக அன்றைக்கு சொல்லியிருந்தேன்..

விநாயக சதுர்த்தியை அடுத்த செவ்வாய்க் கிழமை (10/9) மாலை கொட்டையூர் ஸ்ரீ கோடீஸ்வர ஸ்வாமி தரிசனம் செய்தேன்..

தஞ்சையில் இருந்து
திரு ஐயாறு வழியே செல்வதானால்
சுவாமிமலையைக் கடந்து உத்தேசமாக நான்கு கிமீ..

கும்பகோணம் வழி எனில் மேலக் காவிரியை அடுத்து கொட்டையூர்..

பிரதான சாலையை அடுத்து 
கிழக்கு முகமாக அமைந்துள்ளது திருக்கோயில்..

ஆங்காங்கே நவகிரக தலங்கள் என்று கொந்தளித்துக் கிடக்க இக்கோயிலில் அமைதி தவழ்கின்றது.



கம்பீரமான ராஜகோபுரத்தைக் கடந்ததும்  கொடி மரம், பலிபீடம், நந்தியம்பெருமான்  
முன் மண்டபத்தில் வலப்புறம் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என நால்வர் திருமேனிகள்... 

இதே மண்டபத்தில் ஆத்ரேய மகரிஷி (ஹேரண்டர்) திருமேனி.. 


ஸ்ரீ ஹேரண்ட மகரிஷி

இவரே திருவலஞ்சுழியில் ஆதிசேஷனால் ஏற்பட்ட பிலத்தினுள் காவிரியாள் விழுந்து மறைந்து போக -  காவிரியாளைக் காத்து கரை சேர்க்கும் பொருட்டு அதே பிலத்தினுள் குதித்தவர்.. 

இவரது தியாகத்தைக் கண்ட ஈசன் மனமகிழ்ந்து திருவலம்புரத்தில் முனிவரை மீட்டெடுத்து நமக்கு அளித்தனன் என்பது ஐதீகம்..


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.. 

என்று வள்ளுவர் சிறப்பிக்கின்ற ததீசி முனிவரைப் போல தன்னையே மக்களுக்குத் தந்தவர்... இவருக்கு ஆராதனை முறைகள் நடைபெறுகின்றன என்றால் அதுவும் வள்ளுவர் வகுத்த நெறியே..

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்



இடப்புறம் தெற்கு முகமாக அம்பாள் ஸ்ரீ பந்தாடு நாயகியாள் சந்நிதி..

அடுத்து -
நடராஜ சபையும் நவக்கிரக சந்நிதியும் உள்ளன. 

கருவறைக் கோட்டங்களில் நர்த்தன விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, அருணாசலேஸ்வரர் பிரம்மா, துர்கை உள்ளனர். துர்க்கையின் எதிரில்
கோடி சண்டிகேஸ்வரர் .

திருசசுற்றில் கோடி விநாயகர்..

மூலஸ்தானத்திற்கு நேர் பின்னால் ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் கூடிய கோடி சுப்பிரமணியர் 

வாயு மூலையில் கஜலட்சுமி சந்நிதி 





ஸ்வாமி அம்பாள் 
மூலஸ்தானங்கள் வெளிப்புறம் உள்நாழி அமைப்பில் விளங்குகின்றன..

இறைவன் பலாப்பழம்  போன்று திருமேனியில்  கோடி லிங்கங்களைக்  கொண்டு சுயம்புமூர்த்தியாக சிரசிலிருந்து கங்கை நீர் அரும்பும் நிலையில் இன்றளவும் விளங்குவதாக சிவாச்சாரியார் தெரிவித்தார்..

கும்பகோணம் ஸ்ரீ கும்பேஸ்வரர் சப்த ஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று...


நான் அன்றைக்குப் பதிவு செய்த காட்சிகளில் இரண்டு தவறி விட்டன.. 

மீண்டும் தலத்திற்கு அழைக்கின்றான் இறைவன்..

எனது கர்ம வினைகள் அப்படிப்பட்டவை..

அன்றைக்கு வளர்பிறை சஷ்டி..  சுவாமிமலையில் சுவாமிநாதப் பெருமானைத் தரிசித்து விட்டு நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தேன்...


விரைகமழு மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்
வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்
அரையதனிற் புள்ளியதள் உடையான் கண்டாய்
அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்
வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய்
குரவமரும் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே. 6/73/8
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

செவ்வாய், செப்டம்பர் 17, 2024

புரட்டாசி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி முதல் நாள்
செவ்வாய்க்கிழமை


புரட்டாசி

புரட்டாசி  தமிழ் காலக் கணக்கின்படி  ஆறாவது மாதம் ஆகும்.

புரட்டாசி முதல் நாள் (செப் 18)
பௌர்ணமி..

புரட்டாசி இரண்டாம் நாளில் இருந்து இயன்ற அளவிலான தான தர்மங்களுடன் மஹாளய பட்சம் ஆரம்பமாகின்றது..

புரட்டாசி 16 புதன்  (அக் 2) அன்று மஹாளய அமாவாசை..
ஆத்மார்த்தமாக முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடன்களுக்கான நாள்.

மஹாளய அமாவாசையைத் தொடர்ந்து கலைமகள் திருவிழா ... 


புரட்டாசி 25 வெள்ளி  (அக் 11) அன்று சரஸ்வதி பூஜை.. மறுநாள் விஜயதசமி..

புரட்டாசி - ஜோதிடக் கணக்கில் கன்யா மாதம் எனப்படுவது.. கன்யா ராசிக்கு உரியவன் புதன்.. 

புதனுக்கு அதிபதி ஸ்ரீமந் நாராயணன்..  

பெருமாள் வழிபாட்டிற்கு உரிய சனிக்கிழமைகள் புரட்டாசியில் சிறப்புக்கு உள்ளாகின்றன..


அவரவர் குடும்ப வழக்கப்படி  பெருமாளுக்கு தளிகை சமர்ப்பித்து ஆராதனை செய்வதும் அன்னதானம் செய்வதும் பெரு மகிழ்ச்சிக்குரியவை..

இப்படியாக -  நன்மைகளை நிறைத்துக் கொண்டு வந்திருக்கின்றது புரட்டாசி..

எல்லாருக்கும் மங்கலம் என்று இருகரம் நீட்டி வரவேற்போம்..


நின்ற மாமருது இற்று வீழ  நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கைதொழும் இணைத் தாமரை அடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திட  கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திரு வேங்கடம் அடை நெஞ்சமே.. 1020

எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்  ஒள்ளெயிற்றொடு
திண் திறல் அரியாயவன்  திருவேங்கடம் அடை நெஞ்சமே.. 1023
-: திருமங்கையாழ்வார் :-
 ஓம் ஹரி ஓம்
**

திங்கள், செப்டம்பர் 16, 2024

பாயசப் பெருமை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 30
திங்கட்கிழமை

இன்றொரு சமையல் குறிப்பு..


ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் நாட்டில் விளைந்து கொண்டிருக்கும் சிறு தானியம்..

இதன் பெருமைகள் யாவருக்கும் தெரிந்ததே..


தினைப் பாயசம்  

தேவையான பொருள்கள்:

தினையரிசி  200 கி
பாசிப்பருப்பு  50 கி
கருப்பட்டி  250 கி
ஏலக்காய்  3
பசும்பால் 400 மிலி
தேங்காய்த் துருவல் சிறிதளவு
முந்திரி  15
உலர் திராட்சை  20
பசு நெய்  50 மிலி

செய்முறை :
தினை, பாசிப்பருப்பு  இவற்றை  சுத்தம் செய்து சற்று சிவக்க வறுத்துக் கொள்ளவும்..

பாயசம் வைக்கும் முன்பாக  இரண்டீயும் சரிக்கு சரி தண்ணீரில் 15 நிமிடங்கள்
ஊற வைத்து பின் மிதமன சூட்டில் அடுப்பில் ஏற்றவும்..

வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சையை சற்றே சிவக்க வறுத்துக்  கொள்ளவும்.. 
( பொன்னிறமாக எப்படி டா வறுபடும் ?..)

ஏலக்காய்களை கல்லுரலில் இடித்துக் கொள்ளவும்..

பாலை மிதமான சூட்டில் வைத்து -
அரை வேக்காட்டில்  கொதிக்கின்ற தினையுடன்  சேர்த்துக் கிளறி விடவும்..

இடையில் கருப்பட்டியைத் தூளாக்கி - அளவான வெந்நீரில் கரைத்து வடிகட்டி தளதளத்துக் கொண்டிருக்கின்ற பாயசத்தில் ஊற்றி -

வறுத்து வைத்திருக்கின்ற முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், தேங்காய்த் துருவல் நெய் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு தளதளத்து வரும்போது
இறக்கவும்..

தினைப் பாயசம்  செய்வதற்கு இன்னும் பற்பல வழிகள்...

ஏதோ - நாமும் நமது வித்தையை இங்கு காட்டினோம் என்பதில் எனக்கொரு மகிழ்ச்சி..

கீழுள்ள காணொளியில் சொல்லப்படுவதைப் போல அப்பளத்துடன் தான்  தினைப் பாயசத்தைச் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை..

இன்றைய அப்பளங்கள் இரசாயனக் கலவைகள் என்பதை மனதில் கொண்டால் சரி..
**

காணொளிக்கு நன்றி

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

இயற்கையே இறைவன்  
இறைவனே இயற்கை
***

ஞாயிறு, செப்டம்பர் 15, 2024

காளி தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 30
ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ விஜயாலய சோழர் - பல்லவர்களிடம் இருந்து சோழ மண்டலத்தை மீட்டு தஞ்சை மாநகரை 
மீண்டும் நிர்மாணித்த போது எட்டுத் திக்கிலும் ஸ்ரீ காளி  திருக்காட்சி நல்கியதாக நம்பிக்கை..

இன்று
தஞ்சை மாநகரில்  எட்டுக்கு மேற்பட்ட காளியம்மன் கோயில்கள் உள்ளன...

கால வெள்ளத்தில் பழைமையான
சிலகோயில்கள நகருக்குள் திகழ்கின்றன..

இவை ஸ்ரீ விஜயாலய சோழ மன்னருடன் தொடர்பு உடையவை..

கிழக்குத்திசை



ஸ்ரீ நிசும்பசூதனி, வடபத்ர காளியம்மன் - பூமாலை வைத்யநாதர் கோயில் - கீழவாசல்.

ஸ்ரீ உக்ர காளியம்மன்
குயவர் தெரு - கீழவாசல்.


ஸ்ரீ முத்து மாரியம்மன் - புன்னை நல்லூர்.. 

மராட்டியர் காலத்தில் புற்றின் உள்ளிருந்து வெளிப்பட்டவள்..
கோயிலின் உள்ளே ராஜகோபுரத்தின் தென்பால் ஸ்ரீ காளி அமர்ந்திருக்கின்றாள்..
அருகில் ஸ்ரீ பூர்ணகலா பொற்கலா தேவியருன் ஸ்ரீ ஐயனார்

தெற்குத்திசை


ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி
- தெற்கு ராஜவீதி..

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, 
ஸ்ரீ முனீஸ்வரர் கோயில்..
மாநகரின் தெற்கு எல்லையில் திசை தெய்வமாக..

ஆய்வுகளின்படி
பிற்காலத்திய கோயில்
என்கின்றனர்..

நடுநாயகமாக அரண்மனைக்குப் பின்புறத்தில் ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில்...

இக்கோயில் மராட்டியர் காலத்தில் கட்டப்பட்டது என்றாலும் கோயிலில் தஞ்சகன் தாரகன்  இருவருடன் அம்பிகை விளங்குகின்றாள்..

இவள் பெயரால் 
எல்லையம்மன் கோயில் வீதி  - என அமைந்திருக்கின்றது.. இது தஞ்சையின் பழைமையான கடைத்தெரு..

மேற்குத்திசை



ஸ்ரீ ஏகவீரி அம்மன் 
(ஏகௌரி அம்மன்)
- வல்லம்..

ஸ்ரீ பத்ரகாளியம்மன்,
ஸ்ரீ முனீஸ்வரன் கோயில்,
வஸ்தாத் சாவடி,
புதுக்கோட்டை சாலை.

ஸ்ரீ பத்ரகாளியம்மன் - மேல வாசல் / மேல அலங்கம்..



ஸ்ரீ கோடியம்மன்
ஸ்ரீ முனீஸ்வரன் கோயில்..
ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனம் அருகில்,
மேலவெளி..

வடக்குத்திசை



ஸ்ரீ கோடியம்மன் - வெண்ணாற்றங்கரை..

இவளே தஞ்சையின் மூல ஸ்தானம்.. ஆதிநாயகி..


ஸ்ரீ பகளாமுகி காளியம்மன்
- ராஜகோபாலசுவாமி
கோயில், வடக்கு ராஜவீதி (கோட்டைக்கு உள்ளே)

ஸ்ரீ வீரபத்ர காளியம்மன் (என்கிற)
மகிஷாசுரமர்த்தினி  
- வடக்கு வாசல், சத்திரம் அருகில். (கோட்டைக்கு வெளியே)

ஸ்ரீ செல்வ காளியம்மன்
(செல்லியம்மன்)
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயில், கரந்தை..
 
இங்கு குறிக்கப்படுள்ள கோயில்கள் அனைத்தையும் தரிசித்துள்ளேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி..

வெண்ணாற்றங்கரை கோடியம்மன் கோயில்,
புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் , வல்லம் ஏகௌரியம்மன் மற்றும் புதுக்கோட்டை சாலை ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில்களுக்கு மட்டுமே பேருந்தில் செல்ல முடியும்.. 

ஏனையவை நகரின் உட்புறத்தில் உள்ளவை.. இலகு வாகனம் அவசியம் தேவை..

வசதியும் வாய்ப்பும் கிடைக்கும் போது வந்து தரிசனம் செய்து மகிழுங்கள்.
**
ஓம் சக்தி ஓம் 
ஓம் சிவாய நம ஓம்
***

சனி, செப்டம்பர் 14, 2024

உறியடி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி  29
சனிக்கிழமை





தஞ்சை மேல ராஜவீதி ஸ்ரீ க்ருஷ்ணன் கோயிலில் ஸ்வாமி திருவீதி எழுந்தருள கோகுலாஷ்டமி    வழுக்கு மரம் உறியடி
உற்சவம் கடந்த வாரத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.. 

இன்றைய நாளில்
காட்சிப் பதிவாக  -

தஞ்சை நடுக்காவேரி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் சிறப்பாக நடத்தப்பெற்ற கோகுலாஷ்டமி  உறியடி உற்சவம்..

காணொளிக்கு
நெஞ்சார்ந்த நன்றி..


உழந்தாள் நறுநெய்  ஒரோர் தடா உண்ண
இழந்தாள் எரிவினால்  ஈர்த்து எழில் மத்தின்
பழந்தாம்பால் ஓச்ச  பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே
      முகிழ்முலையீர் வந்து காணீரே.. 26

வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
தந்தக் களிறு போல்  தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு  நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே
ஒளியிழையீர்! வந்து காணீரே.. 30

வண்டு அமர் பூங்குழல்  ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற  கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே
காரிகையீர்! வந்து காணீரே.. 35
-:- பெரியாழ்வார் :-
 நன்றி
நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம்

ஓம் ஹரி ஓம் 
***

வெள்ளி, செப்டம்பர் 13, 2024

திருப்புகழ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 28
வெள்ளிக்கிழமை

தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் .. தனதான


பரிவுறு நாரற் றழல்மதி வீசச் 
சிலைபொரு காலுற் ... றதனாலே

பனிபடு சோலைக் குயிலது கூவக்
குழல்தனி யோசைத் ... தரலாலே

மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
தனிமிக வாடித் ... தளராதே

மனமுற வாழத் திருமணி மார்பத்
தருள்முரு காவுற் ... றணைவாயே

கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத் 
தொடுகும ராமுத் ..  தமிழோனே

கிளரொளி நாதர்க் கொருமக னாகித்
திருவளர் சேலத் .. தமர்வோனே

பொருகிரி சூரக் கிளையது மாளத்
 தனிமயி லேறித் ... திரிவோனே

புகர்முக வேழக் கணபதி யாருக்
கிளையவி நோதப் ... பெருமாளே..
- அருணகிரிநாதர் :-


இரக்கமும்  அன்பும் 
இல்லாத நிலவு
நெருப்பைப் போல்  இருப்பதாலும்,

பொதிகை மலைத்
 தென்றல் அனலாக வீசுவதாலும்
குளிர்  சோலைக் குயில்  சோகத்துடன் கூவுவதாலும்,
குழல் ஒன்று தனியாய்  ஒலிப்பதாலும்,

மீன் போன்ற கண்கள் சோர்வடைய, 
தனிமையில் இருக்கும் இந்தப் பெண்  

தனியே கிடந்து  தளர்ச்சியுறாமல், 
ஒருநிலைப்பட்டு நிம்மதியுடன் வாழ்வதற்கு,  
மார்பினில் ரத்ன  மாலையுடன் 
அருளே உருவாகத் 
திகழ்கின்ற  முருகப் பெருமானே, 
நீ வந்து அவளை  அணைவாயாக..


கிரெளஞ்ச மலையின் மீது வேலை ஏவி
அது பிளவுபட்டு
அழியும்படிக்குச் செய்த திருக்குமரனே..

இயல், இசை, நாடகம் என,  விளங்குகின்ற
 தமிழுக்குப் பெருமானே,

ஜோதி ஸ்வரூபனாகிய்
ஈசனுக்குப் பிள்ளையாகி,

திருமகள் வளர்கின்ற சேலம் எனும் 
பதியில் வீற்றிருப்பவனே..

போருக்கு எழுந்த 
ஏழுமலைகளும், சூரனும், 
அவனது சுற்றத்தாரும் மாண்டு 
அழிந்து போகும்படி

ஒப்பற்ற மயில் மீதமர்ந்து 
உலகை வலம் வந்தவனே..

புள்ளிகளுடன் கூடிய 
யானை முகம் கொண்ட கணேசப் பெருமானுக்கு
 இளையவனாகிய அற்புதம் மிகுந்த பெருமாளே...
*

முருகா  முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***