ஞாயிறு, ஜூலை 07, 2024

கசப்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 23
ஞாயிற்றுக்கிழமை



கசப்பு :

இது பொதுவாக எவராலும் விரும்பப்படாத சுவையாகும். இருப்பினும், உடலுக்கு ஏராளமான நன்மைகளைத் தருகின்றது என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை..

கசப்புச் சுவை நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றது.. குடலில் கிருமிகளை நீக்குகின்றது... 

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கின்றது..


பாகற்காய் வறுவல் .. 

தேவையானவை :

பாகற்காய்  1⁄2  kg 
பெரிய வெங்காயம் ஒன்று
தக்காளி  ஒன்று
மஞ்சள் தூள் 1⁄2   tsp 
மிளகாய்த்தூள் 1 Tbsp
புளி சிறிதளவு 
வெல்லம் 50 gr
கல் உப்பு தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு :
கடலெண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - 1⁄2   tsp 
சீரகம் - 1⁄2   tsp 
உளுத்தம் பருப்பு  1⁄2   tsp 
கறிவேப்பிலை ஒரு இணுக்கு 


செய்முறை :

முதலில் பாகற்காய், வெங்காயம் தக்காளி இவைகளை - சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். 

புளியை சிறிதளவு வெதுவெதுப்பான நீரில்  ஊற வைத்துக் கரைக்கவும்.. . 


வாணலி ஒன்றில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு சீரகம் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

அடுத்து, பாகற்காயை போட்டு நன்கு வதக்கவும். எண்ணெயில் நன்கு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். அடுத்து தக்காளியைச் சேர்க்கவும்.

இதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து, நன்கு வதக்கவும். 

எதற்காகவும் தண்ணீர் விட வேண்டாம்..

எல்லாமும் சேர்ந்து நன்றாக  வெந்து சிவந்ததும், கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரையும்  வெல்லத்தையும்  சேர்க்கவும்.  

மசாலா இறுகி சுருண்டு, வேண்டிய பதத்திற்கு வந்ததும் இறக்கி விடவும்..


இது சுருளச் சுருள இருக்கும்..  
தளதளப்பாக வேண்டும் என்றால் அது வேறு விதம்..

பாகற்காய் கூட்டு..

வாரம் ஒரு முறையாவது
உணவில் கசப்பு சேர்த்துக் கொள்வது நல்லது.. மிக மிக நல்லது.. முயற்சிக்கவும்..

(ஒளிப்படங்கள் : நன்றி இணையம்)

(இங்கே, உணவின் படங்களுக்கும் பக்குவத்திற்கும் சம்பந்தம் இல்லை..  ஆனாலும் நன்றி..)
இந்த அளவில் 
உணவுத் திருவிழா பதிவுகள் 
நிறைவடைகின்றன..
தொடர் பதிவுகளுக்கு நல்லாதரவு நல்கிய நன்னெஞ்சங்களுக்கு அன்பின் நன்றி..

நமது நலம்
நமது கையில்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

சனி, ஜூலை 06, 2024

துவர்ப்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 22  
சனிக்கிழமை



பணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆர உண்டு  கிடந்த இப் பிள்ளை
இணைக்காலில்  வெள்ளித் தளை நின்று இலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே.. 25
-: பெரியாழ்வார் :-
**
உணவுத் திருவிழா 5


துவர்ப்பு..

அதிக விருப்பு, வெறுப்புக்கு ஆட்படாத சுவை. 

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. 

உடலில் உப்பைச் சமன் செய்கின்றது. 
வயிற்றுப் போக்கினை சரி செய்ய வல்லது.
இரத்தப் போக்கினைத் தடுக்கின்றது . 

வாழை மட்டையின் சாறு - 
நாக விஷத்தின் வீரியத்தைக் குறைக்க வல்லது.. நான் நேரில் கண்டிருக்கின்றேன்..

வாழைப்பூ, வாழைக் காய், மாதுளை, நாவல், மாவடு, மஞ்சள், பாக்கு, அவரை, அத்திக்காய் போன்றவற்றில் துவர்ப்பு நிறைந்துள்ளது..

இன்று
வாழைக்காய்
பொரியல்..
 

 தேவையானவை :

முற்றிய மொந்தன்
வாழைக்காய் 2
தேங்காய் ஒருமூடி
பொட்டுக் கடலை 50 gr
மிளகு ஒரு tsp
சீரகம் ஒரு tsp
கசகசா ஒரு tsp
உளுத்தம் பருப்பு ஒரு tsp
கடலெண்ணெய் 100 ml
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

தேங்காயைத் துருவி
 மிளகு சீரகம் பொட்டுக் கடலை கசகசா ஆ‌கியவ‌ற்றுடன் அரை‌‌க்கவு‌ம். 

வாழைக்காயின் தோலைக் கவனமாக சீவி விட்டு,  சீரான துண்டுகளாக நறுக்கவும். 

பா‌த்‌திர‌ம் ஒன்றில் வாழை‌‌க்கா‌ய்த் து‌ண்டுகளை‌ப் போ‌ட்டு அ‌தி‌ல் அரை‌த்தெடுத்த ‌விழுதையு‌ம், உப்பையு‌ம் சேர்த்து  பிசறி வைக்கவும்..


பின்னர் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு கறிவேப்பிலை தாளித்து வாழைக்காய் துண்டுகளைப் போட்டுப் புரட்டி  வேகவிட்டு எடுக்கவும்.

கசகசாவிற்குப் பதிலாக ஓமம் சேர்த்துக் கொள்ளலாம்.. 

அளவான மிளகாய்த் தூளில் புரட்டிக் கொள்வதும் ஏற்புடையது.. அவரவர் விருப்பம்..


கடுமையான மசாலா வகைகள் ஏதுமில்லாமல் - 
தயிர் சாதத்துடன் இதனை சாப்பிடுவது நல்லது... ஆரோக்கியம்..

இணையத்தில் பெறப்பட்ட படங்கள்.. எனவே ஆங்காங்கே மிளகாய்ப் பொடியும் 
மிளகாய்த் துணுக்குகளும் தென்படுகின்றன..

உண்மையில் அவற்றுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.. நான் மிளகாயைத் துறந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன...

வளம் தரும்
வாழைக்காய் வறுவல்..

உணவில் துவர்ப்பு சேர்த்துக் கொள்வது நல்லது.. முயற்சிக்கவும்..

(ஒளிப்படங்கள் : நன்றி இணையம்)

(இங்கே, உணவின்
 படங்களுக்கும் பக்குவத்திற்கும் சம்பந்தம் இல்லை..  ஆனாலும் நன்றி..)


பாயும் நீர் அரங்கந் தன்னுள்  பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்வும்  மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும்  துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும்  அடியரோர்க்கு அகலல் ஆமே.. 891
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-
**

பால் திரட்டு

தேவையானவை :

பசும்பால்  1 ltr
பசு நெய் தேவைக்கு
பழுப்பு வெல்லம் 200 gr
ஏலக்காய் தூள் சிறிதளவு
வறுத்த முந்திரி  7

செய்முறை 
பால் கறந்ததாக இருப்பது நல்லது.. பதப்படுத்தப்பட்ட பாலைத் தவிர்க்கவும்..

கனமான வெங்கல உருளி ஒன்றில் சிறிது நெய் விட்டு பாலை ஊற்றி மிதமான சூட்டில் காய்ச்சவும்..

பால் நன்றாகக் கொதிக்கின்ற நிலையில் சுத்தமான    பழுப்பு வெல்லத்தைச் சேர்த்து - தொடர்ந்து  கிளறிக் கொண்டே இருக்கவும்.

கைவிடாமல் கிளறிக் கொண்டு இருக்கும் நிலையில் பால் வற்றி வெல்லத்துடன் சேர்ந்து திரண்டு வரும்.. 

இந்நிலையில் மேலும் சிறிது நெய்யுடன் உடைத்த முந்திரியைச் சேர்த்துக் கிளறவும்..  

பக்குவமாக இறக்கி  க்ருஷ்ணனுக்கு நிவேத்யம் செய்யவும்..

ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணம்
ஃஃ

நமது நலம்
நமது கையில்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வெள்ளி, ஜூலை 05, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 21  
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
-: திருத்தணிகை :-


தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்த தனதான


வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்
விட்டகணை பட்ட ... விசையாலே

வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி
ரித்தொளிப ரப்பு ... மதியாலே

பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை
பட்டதிகி ரிக்கு ... மழியாதே

பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர்
பச்சைமயி லுற்று ... வரவேணும்

நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி
னைக்குமன மொத்த ... கழல்வீரா

நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
நித்தமிறு கத்த ... ழுவுமார்பா

எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில்
எப்பொழுது நிற்கு ... முருகோனே

எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரர்
இட்டசிறை விட்ட ... பெருமாளே.
-; அருணகிரிநாதர் :-


வெற்றி தரக்கூடிய
கரும்பு வில்லை வளைத்து
மன்மதன் எய்த மலர்
அம்புகளின் வேகத்தினாலும்

வெட்ட வெளியில்
தெருக்களில், வட்டமாய் நெருப்பென  
ஒளி பரப்பும் நிலவினாலும்

வசை மொழிகளைப் பயின்று, 
அவற்றைப் பேசுகின்ற
பெண்களின் பேச்சாலும்
குழலின் இசையாலும் நான் நலிவுறாமல்

பக்தி நெறியை எனக்கருளி முத்தியையும்  அளிப்பதற்கு
பச்சை மயில் வாகனத்தில்  நீ வந்தருள வேண்டும்..

நெற்றி விழியால் மன்மதன் எரிந்து 
போகும்படி நடமிட்ட சிவபெருமானின் மனதில் நிலைத்திருந்த கழல்வீரனே

தேன் நிறைந்த தாமரை மலர் போன்ற 
தனங்களை உடைய,  குறவள்ளி 
அன்பு கொள்ளும்படி 
நித்தம் தழுவுகின்ற திருமார்பனே...

அலைகடல் சூழ்ந்த புவியின் 
திருத்தணி மலையில் என்றும் 
நின்றருள்கின்ற முருகனே..

எட்டுப் பெருமலைகள்  வரையிலும் 
எட்டிப் பரவி உலகெல்லாம் 
தங்கள் ஆட்சியைச் செலுத்திய 
அசுரர்கள் -

அடைத்து வைத்த 
தேவர்களை சிறையினின்றும்  
விடுவித்த பெருமாளே..
**


இன்றைய தணிகைத் திருப்புகழின் விளைவாக நமது தளத்தில் - 
தினையரிசி பால் கொழுக்கட்டை .. 

தேவையானவை:

1) தினையரிசி மாவு 250 gr
2) பால் 350 ml
3) தேங்காய் ஒரு மூடி
4) பழுப்பு வெல்லம் 250 gr
5) ஏலக்காய் 3
6) நெய் சிறிதளவு

செய்முறை:

பாத்திரம் ஒன்றில் அளவான  தண்ணீர் விட்டு வெல்லத்தை  ஊற வைத்து  வடிகட்டி
அடி கனமான பாத்திரத்தில் - வெல்லம் கரைத்த நீரைக் கொதிக்க வைக்கவும்..

வெல்ல நீர் கொதிக்கும் போது  அதனுடன்  தினை மாவு, 
தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் சேர்த்து - கை விடாமல் ஐந்து நிமிடங்கள்  கிளறவும்..

இறுகித் திரண்டு வரும் மாவை - சற்று ஆறிய நிலையில் சின்னச் சின்ன  உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்..

தொடர்ந்து, அடுப்பில் இட்லி பாத்திரத்தில்  தண்ணீர் ஊற்றி அந்த இட்லித் தட்டில்   உருண்டைகளை வைத்து நன்றாக வேக விட்டு எடுக்கவும்.

அடுத்ததாக 
சிறிதளவு நீரில் ஒரு தேக்கரண்டி தினை மாவைக் கரைத்து அத்துடன் பாலையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்..

மிதமான சூட்டில் கொதிக்க ஆரம்பித்தவுடன்  வேக வைத்திருக்கும் உருண்டைகள் ஏலப் பொடி சேர்த்து  ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்..

பால் கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம்..

தினையரிசி பால் கொழுக்கட்டை ..

முருகனுக்கு நிவேத்யம் செய்யவும்..

பாரம்பரியமாக வீட்டில் இடித்த - பச்சரிசி மாவில் செய்யப்படும் பால் கொழுக்கட்டை குறிப்பு ஒன்றும் உள்ளது.. அது பிறகு!..
ஃஃஃ


முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், ஜூலை 04, 2024

உவர்ப்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 20
வியாழக்கிழமை

உணவுத் திருவிழா 4

உவர்ப்பு..

உப்புத் தன்மையை குறிக்கின்றது..

சுவைகளைச் சமன் செய்து உணவுக்கு சிறப்பினை ஊட்டுகின்றது..

இதனால் தான்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.. - என்றனர் ஆன்றோர்..


தவிர்க்க இயலாத சுவை இது..
இனிப்பைப் போல அனைவராலும் விரும்பப்படுகின்ற ஒன்று. 

உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது..



கீரைகள், வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங் காய் ஆகியவற்றில் அதிகமாய் இருக்கின்றது...


பூசணிக்காய் சாம்பார் 

தேவையானவை :

துவரம் பருப்பு 150 gr
பூசணி 250 gr
தேங்காய் ஒருமூடி
சின்ன வெங்காயம் 15
தக்காளி ஒன்று
பச்சை மிளகாய் 2
மஞ்சள் தூள் 1⁄2   tsp  
சாம்பார் பொடி 2 Tbsp
பெருங்காயத்தூள் 1⁄2   tsp  
மல்லித் தழை சிறிது
கல் உப்பு தேவைக்கு

தாளிப்பதற்கு :

கடலெண்ணெய்  தேவைக்கு
கடுகு 1⁄2   tsp
சீரகம் 1⁄2   tsp  
உளுந்தம் பருப்பு 1⁄2   tsp  
கறிவேப்பிலை ஒரு இணுக்கு


செய்முறை :

பூசணிக் காயை தோல் சீவி விதைகளை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். 

வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாயை சுத்தம் செய்து வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாகவும்
 தக்காளியை நாலாகவும் நறுக்கிக் கொண்டு மிளகாயை நெடுக்காகக் கீறிக் கொள்ளவும்..

தேங்காயை கால் வாசி துருவிக் கொள்ளவும்..

துவரம் பருப்பை  அலசிய பின், 
சரியான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்..

பருப்பு வெந்ததும் மசித்துக் கொள்ளவும்.

அரை வேக்காடாக இருக்கின்ற நிலையில்
வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாயைச் சேர்க்கவும்..

தொடர்ந்து 
நறுக்கிய பூசணிக்காய் உப்பு சேர்த்து கிளறி விடவும். 

அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறவும்.. 

தேங்காய் விழுதைச் சேர்த்து - குழம்பின் தண்ணீர் அளவைப் பார்த்துக்  கொள்ளவும்..

ஏனெனில், பூசணிக்காய் வெந்து கொண்டிருக்கும் போது தண்ணீர் சுரக்கக் கூடியது... குழம்பில் எளிதாகக் கரைந்து விடும்..

அடுத்து மசித்து வைத்துள்ள பருப்பை அதனுடன் சேர்க்கவும். 

குழம்பு கொதித்து வாசம் வருகின்ற போது -
வாணலியில் எண்ணெய் காய வைத்து கடுகு, உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து ஊற்றி மல்லித் தழை தூவி இறக்கவும்..


கீரைத் தண்டு,  முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங் காய் ஆகியவற்றில் உப்புச்சுவை  இருப்பதால் தோலில் அரிப்பு ஒவ்வாமை உடையவர்கள் இவற்றை தவிர்ப்பது நல்லது..
(ஒளிப்படங்கள் : நன்றி இணையம்)

(இங்கே படங்களுக்கும் பக்குவத்திற்கும் சம்பந்தம் இல்லை..  ஆனாலும் நன்றி..)

நமது நலம்
நமது கையில்..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், ஜூலை 03, 2024

கார்ப்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 19
புதன்கிழமை

உணவுத் திருவிழா 3


கார்ப்பு..

இது காரம் எனப்படும்..
காரத்தன்மையைக் கொண்டது..

இந்தியர்களில் - இப்போது தமிழ் நாட்டவர்கள் அதிக காரம் நிறைந்த உணவை உண்கின்றனர்..

அதிகப்படியான காரம், 
உடலில் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகமாக்கும்..
குடல் எரிச்சலை உண்டாக்கும். குடலில் புண்கள் தோன்றக் கூடும்..

மிளகு, மிளகாய், இஞ்சி, பூண்டு, கடுகு வெங்காயம்
ஆகியவற்றில் அதிகப் படியான காரச்சுவை நிறைந்துள்ளது..
(நன்றி விக்கி)


பூண்டு வெங்காயக் குழம்பு 

தேவையானவை :

பூண்டு 25 பல்
சின்ன வெங்காயம் 25 
மணத்தக்காளி வற்றல் கையளவு
புளி தேவையான அளவு
(உள்ளங்கை உருண்டை)
தக்காளி ஒன்று
வறமிளகாய் 2
மஞ்சள் தூள் ½  tsp 
மிளகுத் தூள் 2 tsp
மல்லித் தூள் 4 tsp
காஷ்மீரி மிளகாய்த் தூள் 1 tsp
கல் உப்பு தேவைக்கு
நல்லெண்ணெய் 150 ml
பழுப்பு வெல்லம் சிறிதளவு

தாளிப்பதற்கு :

கடுகு சிறிது
உளுந்தம்பருப்பு சிறிது
கறிவேப்பிலை ஒரு இணுக்கு


செய்முறை :

விதை எடுக்கப்பட்ட புளியை 300  மிலி வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்து மூன்று தடவையாக பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்..

300  மிலிக்கு அதிகம் கூடாது..

இந்த புளிச்சாறை மிதமான சூட்டில் வைத்து கொதித்ததும் நல்லெண்ணெய் விட்டு இறக்கிக் கொள்ளவும்..

மணத்தக்காளி வற்றலை சற்று நேரம் ஊறவைத்து வடிகட்டிக் கொள்ளவும்..

வேறு ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் போட்டு 

தோல் நீக்கிய வெங்காயம் பூண்டு தக்காளி, மணத் தக்காளி வற்றல் சேர்த்து வதக்கவும். உப்பு போடவும். .

சுட வைத்திருக்கும் புளிச் சாற்றை ஊற்றி மஞ்சள் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், 
மிளகாய்த் தூள் பழுப்பு வெல்லம் இவற்றையும் சேர்க்கவும்.

வேறொரு வாணலியில்
நல்லெண்ணெய் காய்ந்ததும் - கடுகு வெந்தயம் மிளகாய் கிள்ளிப் போட்டு கறிவேப்பிலை தாளித்து பூண்டு குழம்பில் ஊற்றவும். 

சில வினாடிகளில் கொதித்ததும் கிளறி விட்டு இறக்கவும்..

குழம்பு இறுகலாக இருந்தால் ஒரு குவளை சுடுநீர் விட்டுக் கலக்கி குழம்பைத் தளர்த்தி உப்பு சரிபார்த்துக்  கொள்ளவும்..


குழம்பு சற்று தளர்வாக இருப்பதும் நல்லெண்ணெய் தாராளமாக இருப்பதுமே முக்கியம்.

எக்காரணம் கொண்டும் அலுமினிய, பித்தளைப் பாத்திரங்களில் இக்குழம்பு வைப்பதும் குழம்பை வைத்திருப்பதும் கூடாது..

காரக் குழம்பு வைப்பதற்கு
மண் சட்டி, இருப்புச் சட்டிகளே சிறந்தவை..

(இங்கே, உணவின் படங்களுக்கும் பக்குவத்திற்கும் சம்பந்தம் இல்லை..  ஆனாலும் நன்றி..)

பச்சை மிளகாயோ சிவப்பு மிளகாயோ  உணவில் மிளகாய் சேர்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.. முயற்சிக்கவும்..
(ஒளிப்படங்கள் : நன்றி இணையம்)

 நமது நலம்
நமது கையில்

சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஜூலை 02, 2024

புளிப்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 18
செவ்வாய்க்கிழமை

உணவுத் திருவிழா 2


இன்று புளிப்புச்சுவை

உணவில் நிகழும்  
மாற்றங்களுக்கு புளிப்புச் சுவையே காரணமாகின்றது..

இது அதிகமாயின், தாக உணர்வை அதிகரிக்கும். 
பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற இன்னல்களை உண்டாக்கும். உடல் தளரச் செய்யும்..
(நன்றி விக்கி)

எலுமிச்சை, புளிச்சக் கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி புளி,  மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது..


எலுமிச்சை  சாதம் 

தேவையானவை :
சீரகச் சம்பா சோறு  2 Cup
எலுமிச்சம் பழம் 2
மஞ்சள் தூள் 1⁄2 tsp
பச்சை மிளகாய் 2
பெருங்காயம்ஒரு சிட்டிகை
வறுத்த வேர்க்கடலை கையளவு

தாளிக்க :
நல்லெண்ணெய் தேவைக்கு
கடுகு - 1⁄2 tsp
உளுத்தம்பருப்பு - 1 tsp
கடலைப் பருப்பு - 1⁄2 tsp
சீரகம் - 1⁄2 tsp
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
உப்பு தேவைக்கேற்ப


செய்முறை :

எலுமிச்சம் பழத்தை நறுக்கி  சாறு  பிழிந்து விதைகளை  நீக்கி விட்டு சிறிது நீர் விட்டு உப்பு, மஞ்சள்  சேர்த்துக் கலக்கி வைக்கவும். 

வாணலியில் நல்லெண்ணெயைக் காய வைத்து, இவற்றுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து 

பெருங்காயம் மஞ்சள் தூள்  உப்பு - போட்டு எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் கலந்து தாளிப்பில் ஊற்றிக் கொதிக்க விடவும்..


எலுமிச்சையின் சாறு கொதித்ததும் இறக்கி -  
எடுத்து வைத்திருக்கும் சோற்றை, மேலும் சிறிது நல்லெண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வைத்து சில நிமிடங்கள் கழித்துப் பரிமாறவும்..:


புளியோதரை :


புளியோதரை செய்யும் போது சற்றே குழைய வடித்த சாதத்துடன் இறுக்கமான புளிக் காய்ச்சலைக் கலந்து விருப்பமான வேர்க் கடலையையோ முந்திரியையோ வறுத்துப் போட்டு நல்லண்ணெய் தளர விட்டுக் கிளற வேண்டியது..
அவ்வளவே... 

ஆனாலும்,
வேறு வேறு பக்குவங்களும் நிலவுகின்றன..

(இங்கே, உணவின் படங்களுக்கும் பக்குவத்திற்கும் சம்பந்தம் இல்லை.. காரணம் பிறகு சொல்கின்றேன்.. ஆனாலும் நன்றி..)

உணவுத் திருவிழா எனச் சொல்லி விட்டு  அரைத்த மாவைத் தானே!?... - என்று நினைக்க வேண்டாம்.. 

அரைக்கப்பட்ட மாவு தான்..
சுவையையும் சுவை சார்ந்த உணவையும் தன்மைகளையும் குறிப்பதே இதன் நோக்கம்..

உணவில் புளிப்பு சேர்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.. முயற்சிக்கவும்..
(ஒளிப்படங்கள் : நன்றி இணையம்)

நமது நலம்
நமது கையில்

சிவாய நம ஓம்
***

திங்கள், ஜூலை 01, 2024

இனிப்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 17 
திங்கட்கிழமை

உணவுத் திருவிழா 1

இறைவன் அளித்த இந்த உடலானது இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது.. 

இதில் ஏழாவது தாது ஆகிய மூளை சரிவர இயங்குவதற்கு முதல் ஆறு தாதுக்கள் தக்கபடி  அமைய வேண்டியது அவசியம். 

இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்க்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

இனிப்பு தசையை வளர்க்கின்றது

புளிப்பு கொழுப்பினை வழங்குகின்றது

கார்ப்பு எலும்புகளை வளர்க்கின்றது

உவர்ப்பு உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

துவர்ப்பு இரத்தத்தைப் பெருக்குகின்றது

கசப்பு நரம்புகளை பலப்படுத்துகின்றது

அக்காலத்தில் நமது பாரம்பரிய உணவு முறைகளும் மருத்துவங்களும்,  இதனை வலியுறுத்தி நின்றன.. 

இன்று மாற்று முறை உணவுப் பழக்கத்தால் நமது நாட்டில் நோயாளிகள் பெருகிக் கொண்டிருக்கின்றனர்..

அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், பழங்கள், காரட் போன்ற கிழங்குகள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்கள் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது..
(நன்றி விக்கி)

இந்த அளவில் இனிப்புச் சுவையுடன் கூடிய பொங்கல் இன்று அறிமுகம்...

மகிழ்ச்சிக்கு ஆதாரமாகிய சுவை இனிப்பு..

இது யாருக்கும் தெரியாதா என்றால் இது தான் மரபு..

இன்று தொடங்கி ஏழு நாட்களும்  சிறு சிறு உணவுக் குறிப்புகள் தங்களுக்காக...

சர்க்கரைப் பொங்கல்  


தேவையானவை:
பச்சரிசி 250 gr
வெல்லம் 500 gr
பசும்பால் 750 ml
ஏலக்காய் 3
நெய் தேவையான அளவு
முந்திரிப் பருப்பு  15
உலர்ந்த திராட்சை 20 

பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை
(விருப்பம் எனில்)

வாணலியில் நெய் விட்டு  தேவையான  முந்திரிப்பருப்பு உலர் திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். 

பாத்திரம் ஒன்றில்
பச்சரிசியை நன்றாக அலசி விட்டு ஒன்றுக்கு மூன்று என்ற அளவில் பால் சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும்.. 


வேறு ஒரு உருளியில்  வெல்லத்தைப் போட்டு
மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு சூடாக்கவும்..

வெல்லம் இளகிக்
கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

தளதள என்று குழைந்து இருக்கின்ற சாதத்தில் வெல்லப் பாகினைச் சேர்க்கவும்..

ஒன்றுக்கு மூன்று என்ற கணக்கில் பாலும் பாகும் அதிகமாகி விடக் கூடாது.. 

வெல்லப்பாகினைச் சேர்த்த பிறகு   ஏலக்காயைத் தட்டிப் போட்டு வறுத்த முந்திரி திராட்சையைச் சேர்த்துக் கிளறவும்..

முந்திரி திராட்சையைப் பொங்கலில் சேர்த்ததும் மேலும் சிறிது நெய் சேர்க்கவும்..

நெய்யின் முறுகலான வாசம்  வீடெங்கும் பரவி நிற்கும்...

மாதம் ஓரிரு முறை சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவதில் தவறேதும் இல்லை..


(விருப்பம் எனில் பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகை சேர்த்துக்  கொள்ளலாம்..)

உணவில் இனிப்பு சேர்த்துக் கொள்வது நல்லது.. அளவுடன் இருப்பது அவசியம்.. முயற்சிக்கவும்..

சர்க்கரை பொங்கல்..
(ஒளிப்படங்கள் : நன்றி இணையம்)
**

நமது நலம்
நமது கையில்

சிவாய நம ஓம்
***